வார இறுதி நாள் முடிந்தும் நாதன் அங்கேயே இருக்க
“என்ன பா வேலைக்கு போகலையா...” தோளில் இருந்த துண்டை உதறி கீழே விரித்து போட்டு அதில் தலை சாய்ந்த படி, அங்கு மடிகணினியின் முன் அமர்ந்து வேலை செய்துக்கொண்டு இருந்த நாதனை பார்த்து கேட்டார் கொழுந்து..
“ம்ம் போகணும் பா.. ரெண்டு நாள் லீவ் சொல்லி இருக்கிறேன்.. அதான்” என்றவன் அதிலே மூழ்கி போனான்.
பாட்டி ஒரு ஓரமாய் வெற்றிலை குதப்பிக்கொண்டு இருக்க அவரின் மடியில் படுத்து இருந்தான் பழமலை..
பருவதமும் முகிலும் அடுப்படியில் வேலையாக இருக்க அன்னம் மெதுவாக வந்து தன் அண்ணனின் அருகில் அமர்ந்து “அண்ணா சாந்திக்கு வயசு ஏறிக்கிட்டே இருக்கு... நாதனுக்கும் தான்.. பேசாம ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் செஞ்சு வச்சுடலாமே.. உங்க மாப்பிள்ளை வேற திட்டிக்கிட்டு இருக்காரு.. வாசுக்கு வந்த பொண்ணை இன்னும் எத்தனை நாள் வீட்டுல வச்சு இருக்குறதுன்னு.. ஏதாவது சொல்லுண்ணே” தன்மையாக கேட்டார்.
“நான் முன்னவே சொன்னது தான் அன்னம். முகில் வீட்டுல இருக்கும் போது இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வர்றது முடியாத காரியம்.. அவளுக்கு முடுச்சுட்டு வேணா நான் உன் பெண்ணை எடுக்குறேன்..” என்றார்.
“ஒரு அநாதை கழுதைக்கு நீ இப்படி என் பெண்ணை உதாசீன படுத்துவது நல்லதுக்கு இல்லண்ண.. அந்த கழுதைய பத்தி உனக்கென்ன வந்துச்சு..” சொல்லி முடிக்கும் முன்னவே
“அன்னம்..” என்று ஓங்கி ஒரு குரல் குடுத்து அவரின் பேச்சை நிறுத்தினார்..
“யாரை பாத்து அனாதைன்னு சொன்ன.. நான் இருக்குற வரையிலும் என் மருமக அனாதை இல்லை.. எல்லாம் எனக்கு தெரியும்.. என்ன செய்யனும்னு நீ சொல்லாத.. இங்க யாரும் உன் அறிவுரையை கேக்கல.. வந்தமா உன் அண்ணி ஆக்கி போட்டாத தின்னமான்னு செவேநேன்னு போகணும்.. அதை விட்டுட்டு என் வீட்டுல வந்து பஞ்சாயாத்து பண்ணிக்கிட்டு இருக்குற வேலையெல்லாம் வச்சுக்க கூடாது சொல்லிட்டேன்..” கொழுந்து கர்ஜிக்க
எல்லாருக்குமே சற்று பயம் வந்தது..
“யாரோ ஒருத்திக்காக என்னை இப்படி ஏசுரீள்ள.. எனக்கும் ஒரு காலம் வரும் அப்போ வச்சுக்குறேன் உன்னை..” அவர் கருவ
“ஏடி கூறு கெட்டவளே... யாரு கிட்ட வந்து என்ன பேசிக்கிட்டு இருக்குரவ... என்ன வாய் ரொம்ப தான் நீளுது... ஆருக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கன்னு தெரியுதா இல்லையா.. இன்னொரு முறை என் மவன எதாவது பேசுன பல்ல தட்டி கைல குடுத்துடுவேன்.. ஜாக்கிரத..” கிழவி வேகமாய் எழுந்து வந்து தன் மகளிடம் எகிற
“நீயும் இவுங்களோட சேந்து என்னை பகைச்சிக்கிட்டிள்ள.. இனி பாரு இந்த அன்னம் யாருன்னு.. இந்த குடும்பம் எப்படி நிம்மதியா இருக்க போகுதுன்னு” கருவ
“ஏண்டி உன்னை பத்தி எனக்கு தெரியாது.. இவ்வளவு நாள் நீ வந்து போயிட்டு இருக்குறத எதுக்கு தெரியுமா என் மருமவ உன்னை தடுக்கல.. உனக்கு பொறந்த வீட்டு உறவு அத்து போக கூடாதுன்னு தான்.. ஆனா நீ எங்களையே தூக்கிகணம் பாக்குற.. போடி... நீ பெரிய இவ... என் புள்ள உழைப்புல தாண்டி நீ இன்னைக்கு ஜம்பமா மினுக்கி கிட்டு இருக்குற.. இல்லன்னா உனக்கு இந்த பவுசு எது.. அது இதுன்னு வருசத்துல ஆறு மாசம் இங்க வந்து திண்ணுக்குட்டு பத்தாதுக்கு மூட்டை கட்டி எடுத்துட்டு போய் வாழுரவ உனக்கு இவ்வளவு ஜம்பமா..” என்று பொன்னி தன் மகளை பேச அதில் இன்னும் வன்மம் வளர்ந்தது அவருக்கு..
“அத்தை என்ன இது.. வீட்டுக்கு வந்த புள்ளை கிட்ட இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க.. அன்னத்துக்கு நம்மள விட்டா வேற யாரு இருக்கா.. இல்ல நமக்கும் தான் அவளை விட்டா வேற யாரு இருக்கா.. பொம்பளை பிள்ளைக்கிட்ட போய் வம்புக்கு நின்னுக்கிட்டு... இங்க வாங்க நீங்க.. வந்து வெங்காயம் உரிச்சு குடுங்க.. ஏங்க நீங்க யாரையோ பாக்கனும்னு சொன்னீங்கள்ள.. அவங்களை போய் பாக்கலையா.. அவங்கள பாத்துட்டு வரும்போது கடையில துவரம்பருப்பு கேட்டு இருந்தாங்க.. அதையும் என்னன்னு விசாரிச்சுட்டு வந்து எடுத்துக்க சொல்லுங்க.. பின் கட்டுல உளுந்து மூட்டையோட அடுக்கி வச்சு இருக்கேன்..” அவருக்கும் வேலை கொடுத்தவர் நடந்த பிரச்சனையை ஒன்னும் இல்லாமல் ஆக்கிவிட்டு அடுப்படிக்கு திரும்பினார். அன்னத்துக்கு மனம் கொதித்துக்கொண்டு இருந்தது...
யாரோ ஒருத்திக்காக கூட பொறந்த தங்கச்சியை தூக்கி போட்டுட்டு போகும் அண்ணனை பழி வெறியோடு பார்த்துக்கொண்டு இருந்தார். என் பொண்ணு மட்டும் இந்த வீட்டுக்கு வரட்டும் பொறவு இருக்கு உங்க எல்லாருக்கும்..
பருவதம் பேசினார் என்றால் அதன் பிறகு அங்கு எந்த சத்தமும் இருக்காது.. அது அவருக்கு கொடுக்கும் மரியாதை.. பொன்னியும் சரி கொழுந்து சரி.. இருவரும் பருவதம் பேச்சுக்கு கட்டு பட்டு தான் இருப்பார்கள்.. இது அவருக்கு மட்டும் இல்லை.. குடும்பத்தில் யார் என்ன பேசினாலும் அதற்க்கு கட்டு பட்டு தான் நடப்பார்கள்.. அதில் தானே குடும்ப ஒற்றுமை இன்னும் நிலை கொண்டு இருக்கிறது..
அன்று இரவு சாப்பிட்டு முடித்ஹ்டு அனைவரும் தூங்க செல்ல முகில் மெதுவாக தன் மாமன் அருகில் அமர்ந்தாள்.
“என்ன கண்ணு உறங்கல..”
“கொஞ்சம் பேசணும் மாமா..”
“என்ன த்தா..”
“அது நாதன் மாமாவுக்கும் சாந்திக்கும் கல்யாணம் செஞ்சு வச்கிடலாமே மாமா..”
“நீ சொல்றது சரி தான் கண்ணு.. ஆனா நீ வீட்டுல இருக்கும் போது எப்படி த்தா செய்ய சொல்ற.. சாந்திக்கும் உனக்கும் ஒரே வயசு தான்.. உன்னை விட்டு செஞ்சா நல்லா இருக்காது..”
“மாமா நான் தான் பெருமாள் மாமா வீட்டுக்கு போக போறேனே.. பிறகு..”
“நீ எங்க போனாலும் என்ற மருமவ தான் ஆத்தா..”
“இப்படி சொன்னா எப்படி மாமா..”
“ஆத்தா.. உனக்கு அப்பன் ஆத்தா இருந்து இருந்தா நான் கவலை பட மாட்டேன்.. ஆனா அவுக என்னை நம்பி உன்னை விட்டுட்டு போயிட்டாக.. அப்படி இருக்கும் போது சாந்தி இங்க வந்து வாழும் போது அவல பாத்து நீ ஏக்கமா ஒரு பார்வை பாத்தா கூட உன் அப்பன் ஆத்தா உசுரு எண்ணி மன்னிக்காது த்தா..”
“மாமா நான் அப்படி எல்லாம்..”
“இல்ல த்தா.. அது சாத்திய பட்டு வராது.. வேற ஏதும் பேசுறதுன்னா பேசு..”
“நான் பழ மாமாவ காதலிக்கிறேன் மாமா.. அவரும் என்னை..” முடிக்கும் முன்னாடியே
“கண்ணு இது அதைவிட மோசம் நான் உசுரோட இருக்குற வரை இது நடக்காது..” என்றார் உறுதியாக..
“மாமா..” என்றாள் தவிப்பாக..
“நீ நாதனை சொல்லி இருந்தா கூட நான் ஒத்துக்கிட்டு இருப்பேன் ஆனா பழமலை உனக்கு ஒத்து வர மாட்டான் மா..”
“மாமா எனக்கு அவன் தான் வேணும்..”
“நீ தலை கீழா நின்னாலும் என்னால அவனுக்கு உன்னை கட்டி தர முடியாது.. நீ படுச்ச படிப்பென்ன.. அவன் இருக்குற இருப்பேன்ன.. தெருஞ்சே உன்னை அவன் கிட்ட மாட்டி விட என்னால முடியாது.. உனக்கு கூடிய சீக்கிரம் உனக்கேத்த பையனா பாத்து கல்யாணம் முடிக்கிறேன்.. இது தான் விசயம்னா இனி இத பத்தி என் கிட்ட பேச வராத த்தா.. என் முடிவு என்னைக்கும் மாறாது” என்று திரும்பி படுத்துக்கொள்ள முகிலுக்கு கண்கள் கலங்கி போனது..
எழுந்து சென்றவளுக்கு பழமலையின் மீது அவ்வளவு ஆத்திரம் வந்தது.. “செய்யிறதெல்லாம் செஞ்சுட்டு இப்போ எல்லாம் என் தலையில வந்து விழுது.. என்னால இப்போ நாதன் சாந்தி கல்யாணமும் தடை பட்டு நிக்குது.. இவனையும் எனக்கு கல்யாணம் செஞ்சு தர மாட்டேன்னு சொல்றாரு..” கடுப்படித்துக்கொண்டு இருந்தவளை இடையோடு யாரோ அணைக்க எங்கிருந்து தான் அவ்வளவு ஆத்திரம் வந்ததோ வேகமாய் அவனை பிடித்து தள்ளிவிட்டு அவனை முறைத்து பார்த்தாள்.
“எல்லாம் உங்களால தான்.. இப்போ இப்படி வந்து நிக்கிறேன்..” கலங்கிய கண்களுடன் சொன்னவளை முறைத்து பார்த்தான்.
“என்னடி ரொம்ப தான் பண்ற.. என்ன பயம் விட்டு போச்சா”
“ம்கும் இப்படியே பேசிக்கிட்டு இருங்க சீக்கிரமா என்னை வேற ஒருத்தனுக்கு உங்க அப்பா கல்யாணம் செஞ்சு வைக்க போறாரு.. அதான் நடக்க போவுது” சொல்லி முடிக்கும் முன்னவே விட்டான் ஒரு அரை அவளது கன்னத்தில்..
“இன்னொரு முறை இப்படி பேசிக்கிட்டு என் முன்னாடி வந்த பொண்டாட்டின்னு கூட பார்க்க மாட்டேன்.. விட்டு வாங்கி தள்ளிடுவேன்.. பாத்துக்க” கர்ஜிக்க அவன் அடித்ததை ஒரு பொருட்டாக கூட கண்டுக்கொள்ளவில்லை அவள்..
“இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல... நீங்க செஞ்சு வச்ச செயல்ல இப்போ நான் தான் தள்ளாடிக்கிட்டு இருக்கேன்” என்றவள் சொல்ல அவள் சொல்வதை கொஞ்சம் கூட காதில் வாங்காமல் எழுந்து சென்றவனின் செயலில் கண்ணீர் முட்டியது.
“எதையாவது காதுல வாங்குதா பாரு..” அழுகையுடன் படுத்து இருந்தவளை மீண்டும் ஒரு கரம் அணைக்க வெறுத்து போனது அவளுக்கு..
‘இப்ப என்னவாம்..’ மனதிலே எண்ணிக்கொண்டாள்.
“என்ன சொன்னாரு உங்க மாமனாரு...” அவளின் காதோரம் தன் மீசையை உரசிக்கொண்டு கேட்டவனை கண்டு ஆத்திரம் தான் வந்தது..
அவள் பதில் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க
“ப்ச் சொல்லுடி..” மேலும் அவளோடு நெருக்கமாக பிணைய அவனை தள்ளிவிட்டவள் எழுந்து அமர்ந்து அவனை முறைத்து பார்த்தாள்.
அவளது மடியில் படுத்துக்கொண்டவன் அடித்த அவளது கன்னத்தை வருடி விட்டான். வேகாமாய் அவனது கையை தட்டி விட்டவள்
“அது தான் எதையும் கேக்காம எழுந்து போநீங்கள்ள இப்போ மட்டும் எதுக்காக வந்தீங்க..” என்றபோதே அவளின் அறை வாசலில் நிழல் ஆட ‘இவனுக்கு இதே வேலையா போச்சு’ கருவியவன் எழுந்து சென்று கதவை மூடி தாளிட்டு விட்டு வந்தான்.
“சொல்லுடி..” என்று மறுபடியும் அவளின் மடியில் படுத்துக்கொண்டு கேட்க
சிவகொழுந்து சொன்னதை எல்லாம் சொல்ல பாவமாய் அவளை பார்த்தான்.
“என்னடி இப்படியாயி போச்சு..”
“ம்கும் இப்போ பீல் பண்ணுங்க..” நொடித்தவள்
“இப்போ என்னங்க பண்றது.. மழை விடும் தூவானம் விடாத குறையா சாந்தியும் நாதனும் சேர்ந்து கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் மாமா அதை விட மாட்டாரு போல”
“ஆமாண்டி..” யோசித்தான் என்ன செய்வது என்று.
“ஒன்னு பண்ணலாம் நான் என் மாமா வீட்டுக்கு போறேன்.. அதுக்குள்ள நீங்க உங்க வேஷத்தை எல்லாம் களைச்சி உங்க உண்மயான முகத்தை மாமாக்கு காண்பிங்க.. நானும் இந்த நாதன் தொல்லை இல்லாம கொஞ்ச காலம் இருக்கேன்.. அதோட உங்களுக்கு வேளைக்கு அப்லே பண்ணும் போது நானும் அப்லே பண்ணி இருக்கேன்.. நானும் வேலைக்கு போறேன்.. மாமாவும் எனக்கு எந்த மாப்பிள்ளையும் பார்க்க மாட்டாங்க.. இந்த நேரத்தை நாம சரியா பயன் படுத்திக்கிட்டா தான் ஒழுங்கா நாம ஒன்னு சேர முடியும்.. இல்லன்னா அவ்வளவு தான்.. எல்லாமே இப்போ உங்க கையில தான் இருக்கு.. சொதப்பாம ஒழுங்கா இருங்க மாமா..” என்றவளை கோவத்துடன் பார்த்தான்.
“அப்பவும் நீ உன் மாமா வீட்டுக்கு போறேன்னு தானே சொல்ற.. அப்படி என்ன இருக்கு அங்க.. ஏன் ரெண்டு மாமன் பசங்க இருக்கானுங்க.. அப்படியே எங்கப்பன் அவனுங்களை வளைச்சி போட்டு உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சுட பாப்பாரு.. நீயும் தோதா அங்க போய் உக்காந்துக்க.. என்னை அப்படியே அம்போன்னு விட்டுட்டு” சரியா என்று எரிந்து விழவேகமாய் அவனை தள்ளி விட்டாள் தன்னிடமிருந்து..
“போகுது பாரு புத்தி.. உங்க அப்பா சொன்னா நான் அப்படியே கேட்டுக்குவனா”
“ஏய் நிறுத்து டி.. உன்னை பத்தி எனக்கு தெரியாது..”
“வார்த்தைய அளந்து பேசுங்க.. சொல்லிட்டேன்..”
“ஏய் யாரடி பாத்து பேச சொல்ற..அதும் அளந்து வேற பேச சொல்ற.. அவ்வளவு திமிரா உனக்கு.. போகணும்னா போடி.. ரொம்ப தான் பண்ற.. உனக்கா எண்ணைக்கு என் கிட்ட வரணும்னு தோணுதோ அப்போ வா.. ஆனா நானா உன்னை கூப்பிட வர மாட்டேன்..” சவால் விட
“அதயும் பாப்போம்.. நீயா கூப்பிட்டா தான் நான் உன் வீட்டுக்கே வருவேன்.. போடா” என்று கண்ணீருடன் சொல்லிவிட்டு எழுந்து பருவதத்தோடு படுத்துக்கொண்டாள் முகில்..
அவளது விலகல் அவனுக்கு இன்னும் கோவத்தை கிளறி விட அவனும் கோவத்துடன் எழுந்து காலில் பட்ட எல்லா சாமானையும் உதைத்து தள்ளிவிட்டு போய் படுத்துக்கொண்டான்..
நாதனுக்கு கொண்டாட்டமாய் இருந்தது.. இருவரும் சண்டை போட்டுக்கொண்டு தனி தனியாக வருவதை கண்டு..
இந்த நாதன் பைய, சரியான பூனைக்கு பிறந்தவனா இருப்பான் போல....
எப்பா பாரு, பூனை போல மெதுவா வந்து ஒட்டு கேட்க்கரது 😏😏😏😏
ஆகா, ரைட்டர் உங்க வேலையை பார்த்து விட்டீங்க போலவே.....