அத்தியாயம் 17

 
Admin
(@ramya-devi)
Member Admin

“ப்ச் இதென்னடா கொஞ்ச நேரம் கூட காதலிக்க விட மாட்டிக்கிறாய்ங்க” அங்கலாய்த்தவளை மறுபடியும் தன்னுள் சுருட்டிக்கொண்டான் பழமலை..

“கொஞ்ச நேரம் சும்மா தான் இரேண்டி..”

“நான் ஏன் சும்மா இருக்கணும்.. என்னால முடியாது..” என்று அவள் எகுற, வேறு வழியில்லாமல் தன் இதழை அவளின் இதழில் பூட்டினான்.. ஆனாலும் வழியில் தன் விழியை வைத்து யார் என்று பார்க்க கூடத்தின் விடிவிளக்கு வெளிச்சத்தில் வெறும் நிழல் மட்டும் தெளிவாக தெரிய அது யார் என்று அறிந்துக்கொண்டவனுக்கு ஐயோ என்று வந்தது..

‘ப்ச் யாருக்கு தெரிய கூடாதுன்னு இவ்வளவு நாள் மறைத்து பொய் வேஷம் போட்டேனோ இப்போ அவங்களுக்கே தெருஞ்சிடும் போலவே..’ இவளையும் குறை சொல்ல முடியாது.. ஆனால் ‘இவள் என் கைகளுக்குள் இருப்பது தெரிந்தால் அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ’ மனம் அதுபாட்டுக்கு அடித்துக்கொண்டது..

அவனது இதயம் அதிகமாக படபடப்பதை உணர்ந்தவள் அவனிடமிருந்து விலகி அவன் பார்க்கும் திசையை பார்த்தாள்.

அங்கு வெறும் நிழல் மட்டும் தெரிய சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“இதுக்கு தான் என்னை இத்தனை நாள் பாடா படுத்துநீங்களா..”

“முகில் கொஞ்ச நேரம்..” என்று அவளை இன்னும் தன் கைகளுக்குள் பதுக்கிக்கொண்டான்.

அவனது பதட்டம் புரிய எதுவும் பேசவில்லை அவள்.. அவளும் தொடர்ந்து அந்த நிழலையே பார்க்க அந்த நிழல் கொஞ்சமும் அசையாமல் அடுப்படி சுவரிலே சாய்ந்து இருக்க அவளுக்கு பயம் எல்லாம் இல்லை..

ஆனால் பழமலையின் உழைப்பு வீணாகிடுமே என்று அமைதி காத்தாள். அப்படி என்ன தான் ரகசியம் இருக்குமோ என்று மண்டை காய்ந்தாள்.

“எது வந்தாலும் பரவாயில்லை அதை எதிர்நோக்க தயார் நிலையில் இருக்கணும்..” தனக்குள்ளே உரு போட்டுக்கொண்டாள் முகில்.

கொஞ்ச நேரம் இருந்த அந்த நிழல் பின் விலகி செல்ல பழமலை யோசனையுடன் அவளை இழுத்துக்கொண்டு இன்னொரு வாசல் வழியாக தோட்டத்துக்கு சென்றான்.

“என்ன மாமா யாரு அது..”

“உனக்கு அதை பத்தி எதுவும் தெரியவேணாம்டி.. எல்லாம் மாமன் பாத்துக்குறேன்..” அவளை அழைத்துக்கொண்டு பதுங்கி பதுங்கி கிழவியின் அறைக்கு சென்றான்..

“இங்க எதுக்கு மாமா..”

“ஷ்.. கொஞ்ச நேரம்டி..” என்றவன் அங்கேயே அவளை தூங்க சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

இவளுக்கு ஒரு பக்கம் பயமாய் இருந்தது.. பொன்னி குறட்டை விட்டு நன்றாக தூங்க, அவர் அருகில் வந்து அமர்ந்தவள் வாசலையே பார்த்தாள்.. அவன் வெளியே தாள் போட்டுவிட்டு செல்ல எப்படி இங்கிருந்து போவது என்று யோசித்தாள். அந்த நேரம் ஜன்னலின் ஓரம் ஏதோ சத்தம் கேட்க காதை தீட்டிக்கொண்டு சுவரோரம் சென்று கேட்க

வந்த சத்தம் அப்படியே நின்றது..

“என்ன தான் நடக்குது இங்க.. ஒண்ணுமே புரியல கடவுளே இதென்ன இவ்வளவு மர்மமா இருக்கு.. பழமலைக்கு எதுவும் நடந்துட கூடாது சாமி..” கடவுளிடம் வேண்டியவள் இன்னும் அங்கேயே நிற்க, அப்போதும் ஒரு நிழல் அங்கே தெரிய லேசாய் பயந்து தான் போனாள்.

அதற்க்கு மேல் அன்றிரவு பழமலை அங்கு வரவே இல்லை.. அடுத்த நாள் காலையிலே பழமலை தண்ணி போட்டுக்கொண்டு வர முகில் நொந்து போனாள்.

கொழுந்தும் ஏதும் சொல்லாமல் வயலுக்கு செல்ல பருவதம் மட்டும் திட்டிவிட்டு சென்றார்.

சாந்தியும் அன்னமும் அவனிடம் முகம் குடுத்து கூட பேசவில்லை. நாதன் மட்டும் அவன் வாந்தி எடுத்திருந்த சட்டையை அவிழ்த்து தலைக்கு தண்ணி ஊற்றி வீட்டுக்குள் கூட்டிட்டு வந்து, முகிலை சாப்பாடு குடுக்க சொன்னான்.

“ஏண்டா இப்படி வாழுற வயசுல உன்னை நீயே கெடுத்துக்கிட்டு நிக்கிற உன்னை இப்படி பார்க்க முடியல டா தம்பி” வேதனையுடன் சொன்னவனை கண்டுக்கொள்ளாமல்

“அடேய் அண்ணா மதுல இருக்குற சந்தோஷம் மாதிரி எதுலயும் இருக்காது டா... இன்னொன்னுளையும் இருக்கு அது..” என்றவன் முகிலை துகில் உரிக்கும் பார்வை பார்த்தான். கூடவே சுற்றிலும் இருந்த அனைவரையும் பார்த்தான். சாந்தி அங்கு தான் அமர்ந்து இருந்தாள். அன்னமும் அவன் அடிக்கும் கூத்தை பார்த்துக்கொண்டு இருந்தார்.

முகிலுக்கு பத்திக்கொண்டு வந்தது.. இவ்வளவு நாள் தனியாய் இருக்கும் நேரம் மட்டுமே இப்படியெல்லாம் பேசுவான். ஆனால் இன்று அனைவரின் முன்னிலையிலும் பேச கண்கள் கலங்கி போனது முகிலுக்கு..

‘இப்படியெல்லாம் வேணாம்’ என்று நேற்று சொன்ன தன் பேச்சை கேட்காமல் மறுபடியும் இப்படி செய்துக்கொண்டு இருந்தவனை கண்டு ஆத்திரமாய் வந்தது.. அவன் மீது காதல் இருக்கு தான் அதற்காக இப்படி அனைவரின் முன்னிலையிலும் இவன் அசிங்க படுத்துவதை கண்டு அவளால் பொருக்க முடியவில்லை..

அதுவும் சாந்தியும் அன்னமும் அவளை இளக்காரமாய் பார்க்க

“இதுக்கு மேல ஏதாவது பேசுனீங்க மரியாதை கேட்டு போயிடும் பாத்துக்கோங்க.. அதென்ன எப்போ பாரு ரொம்ப மட்டம் தட்டிக்கிட்டே இருக்கிறது.. இல்லன்னா பொருக்கி தனமா நடந்துக்கிறது.. உங்க வீட்டுக்கு அடைக்கலம் தேடி வந்தேனே தவிர தொழில் பண்ண வரல மிஸ்டர்..”

“என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க.. கேக்க ஆளு இல்லன்னா நீங்க என்ன வேணாலும் பேசுவீங்களா..” அவள் கத்த, அவள் கத்துவதை அங்கிருந்த ஒருவர் ரசித்து பார்த்தார்.

முகிலின் பேச்சை கேட்டு பதறி போனான் நாதன்.

“என்னமா நீ அவன் பேசுறதெல்லாம் கணக்குல எடுத்துக்கிட்டு.. அவனுக்கு சுய நினைவே இல்லை.. இப்போ போய் கத்திக்கிட்டு இருக்குற.. அப்பாவுக்கு தெருஞ்சா இன்னும் வேதனை படுவாரு”

“ம்கும் இப்போ மட்டும் அவரு குளிர்ந்து போய் தான் இருக்குராறக்கும்.. இவுங்க பண்ணி வைக்கிற வேலையில அந்த முனுசன் உள்ளுக்குள்ளே மருகிக்கிட்டு இருக்குறாரு.. இவரெல்லாம் மனுசனே கிடையாது.. சரியான சுய நலம் பிடுச்ச மிருகம்” என்று மேலும் முகில் கத்த பழமலை அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“என்னடி சத்தம் சாஸ்த்தியா வருது.. என் ஆத்தா பருவதம் அது மருமவளுக்கு சோத்தை அதிகம் போட்டுடுச்சா என்ன..” அதற்கும் அவன் நக்கல் பண்ண சாந்தி சிரித்தாள். முகிலுக்கு கண்கள் கரித்துக்கொண்டு வந்தது.

அனைவரின் முன்னிலும் தன்னை இவன் இப்படி அவமான படுத்துவதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.. கோவம் கண்ணை மறைக்க அங்கிருந்த சிலம்பை எடுத்து அவன் மண்டையிலே போட வர அவன் சட்டென்று சுதாரித்து இன்னொரு சிலம்பை எடுத்து அவளை தாக்க இருவரிடமும் சின்னதாய் போர் நிகழ்ந்தது..

ஊரு கதை பேசிட்டு அப்போது தான் உள்ளே வந்த பொன்னி இருவரும் தீவிரமாய் சண்டை போடுவதை பார்த்து திகைத்து போனார். நாதன் இருவரிடையே உள்ளே நுழைந்து சண்டையை தவிர்க்க பார்க்க அதற்கு இருவருமே அனுமதிக்க வில்லை..

கிழவி வந்து கத்த அதையும் காதிலே வாங்கி கொள்ளாமல் இருவரும் மும்மரமாய் சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்கள்.

நீயா நானா என்கிற போட்டி அங்கு பலமாக நடந்துக்கொண்டு இருந்தது... போதையில் இருப்பது போல தள்ளாடிக்கொண்டே அவன் அவளை சமாளித்துக்கொண்டு இருந்தான் பழமலை.. அவள் வந்த நாளில் இருந்து அவன் கத்துக்கொடுத்த வித்தையை அவனிடமே காட்ட ‘ம்ம் தேறிட்டா..’ என்று மனதுக்குள்ளே மெச்சினான்..

“என்ன மா நீ நம்ம புள்ளைய போட்டு அடுச்சுக்கிட்டு இருக்குறா பாத்துக்கிட்டு சும்மா இருக்குற.. இப்படி தான் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யிறதா.. நல்ல பாம்புக்கு இப்படி பாலை வார்த்து வச்சு இருக்கீங்களே.. முதல்ல அவளை வீட்டை விடு விரட்டுங்க..” அன்னம் தன் அன்னை வரவும் வேகமாய் சொல்ல அவரை ஒரு பார்வை பார்த்தவர்

இருவரிடயே உள்ளே புகுந்து இரு குச்சிகளையும் வாங்கி அந்த பக்கம் வீசி எறிந்தவர் இருவரையும் முறைத்து பார்த்தார்.

முக்கியமாய் முகிலை..

“என்னடி நினைச்சுக்கிட்டு இருக்குற.. இருக்க இடம் குடுத்தா இடத்தையே தீ வச்சு கொழுத்த பாக்குற.. அவ்வளவு ஏத்தமா உனக்கு.. முதல்ல நீ வயலுக்கு கிளம்பு.. இன்னைக்கு என் பிள்ளை வரட்டும் உன்னை வீட்டை விட்டு வேரட்டுரனா இல்லையான்னு பாரு.. என் பேரனையே அடிக்க வந்துட்டல்ல.. இனிமே தெரியும்டி இந்த பொன்னி யாருன்னு..” கர்ஜித்தவரை கண்டு கொஞ்சமும் பயம் கொள்ளாமல்

“யாரு யாரை விரட்டுராங்கன்னு நானும் பாக்குறேன் கிழவி.. அதென்ன சும்மா எப்போ பார்த்தாலும் அதட்டிக்கிட்டே இருக்குற.. வயசுக்கேத்த கூறு இல்லாம எப்போ பாரு அவனோட சேர்ந்துக்கிட்டு ரொம்ப தான் ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்குற.. உன் பேரன் ரொம்ப ஒழுங்கு.. இல்லாத கெட்ட பழக்கம் ஏதாவது ஒன்னு இருக்கா சொல்லு.. இப்படியா பட்டவனுக்கு நீ இவ்வளவு சப்போட் பண்ற.. இன்னும் உன் பேரன் மட்டும் ரொம்ப ஒழுக்க சீலனா இருந்துட்டா அவ்வளவு தான்.. அதனால தான் ஆட்டுக்கு வால அளந்து வச்சு இருக்குறாரு கடவுள்..

இதோ பார் எனக்கா எப்போ இந்த வீட்டை விட்டு போகணும்னு தோணுதோ அப்போ தான் நான் போவேன்.. அதை விட்டுட்டு சும்மா வீட்டை விட்டு துரத்துவேன்னு சவால் விட்டுக்கிட்டு இருக்காத கிழவி.. இது என் அத்தை வீடு.. எனக்கு புல் ரைட்ஸ் இருக்கு..” என்று நிஜமான கோவத்துடன் சொன்னவளை கண்டு பொன்னி ஸ்டன்னாகி அப்படியே நின்றார்.

“என்னடா இது இவ இப்படி பேசுறா..” பழமலையிடமும் நாதனிடமும் சொல்ல

“அங்க என்ன பேச்சு. பேசுனது நான்.. என் கிட்ட பேசு” முகில் மீண்டும் கிழவியை அரட்ட அவர் லேசாய் பயந்து தான் போனார்.

“ஏய் அனாதை நாயி. நீ போய் தங்க ஒரு இடம் இல்ல உனக்கு. நீ என் அம்மாவை மிரட்டுறியா.. இப்பவே வெளியே போடி..” அன்னம் வேகமாய் வந்து அவளது கழுத்தை பிடித்து வாசலில் தள்ள வர

“அன்னம் அவளை விடு” என்று பொன்னி அவரின் கையிலிருந்து முகிலை விடுவிக்க பார்க்க

“அம்மா நீ கொஞ்ச நேரம் சும்மா இரு இந்த சிறுக்கி என்ன பேச்சு பேசுறா பாத்தியா.. இவளை ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்.. நீ கொஞ்சம் தள்ளி இரு..” என்றவர் பொன்னியை விலக்கிவிட்டு முகிலை வெளியே தள்ள பார்க்க

நாதன் “அத்த இதென்ன இப்படி மிருகமா நடந்துக்குறிங்க விடுங்க முகிலை..” என்று அன்னத்திடம் பேசிக்கொண்டு இருக்க அன்னம் அவளை பிடித்து வெளியே தள்ளிவிட்டார். அதற்குள் வேகமாய் ஓடி வந்து பழமலை அவளை தாங்கி பிடித்தான்.

அவன் இப்படி செய்வான் என்று யாருமே எதிர் பார்க்காத அனைவருமே திகைத்து பார்த்தார்கள்.

அதிலும் வெகுவாய் அதிர்ந்தது அன்னமும் சாந்தியும் நாதனும் தான்..

பழமலை பிடித்து அவளை நிலை நிறுத்த வேகமாய் அவனது கைகளை தள்ளிவிட்டாள்.

“என்னை தொட்டீங்க அடுத்த நொடி உங்க மண்டையை உடைச்சுடுவேன்..” முகில் கத்த

“உனக்கு எதுக்குடா இந்த வேண்டாத வேலை.. கிரகம் போய் தொலையுதுன்னு விட வேண்டியது தானே.. காப்பாத்தி இருக்க கூடாதுடா அவளை அப்படியே வாசல்ல கிடந்து இருக்கணும்” அன்னம் ஒரு பக்கம் கத்த

“அப்படியே விட்டு இருக்க வேண்டியது தானே.. நான் கேட்டனா உன் மருமகனை என்னை தாங்கி பிடிக்க சொல்லி..” அவரிடம் மரியாதை இல்லாமல் பேசிய முகிலை கண்டு நாதன்

“முகில் அவங்க உன்னை விட வயசுல பெரியவங்க இப்படி தான் பேசுறதா..” அதட்ட

“வாடா நல்லவனே...” என்று முகில் அவனை பார்த்து சொல்ல

“முகில்..”

“என்னடா முகில்.. இல்ல என்ன முகில்னு கேக்குறேன். நீயெல்லாம் மனுசனாடா.. பொறுக்கி பொறம்போக்கு..” சகட்டு மேனிக்கு நாதனை வைத்து வாங்க

“ஏய் என்னடி உன் இஷ்ட்ட படிக்கு பேசிக்கிட்டு இருக்குற.. அன்னம் சப்போட்டுக்கு வர

“ஏய் ச்சீ வாய மூடு.. இது எனக்கும் அவனுக்கு உள்ள டீல் இதுல தேவை இல்லாம உள்ள வந்த வயசுல பெரியவன்னு கூட பாக்க மாட்டேன்.. ஒழுங்கா தள்ளி நில்லு..” எச்சரித்தவள் நாதனிடம் திரும்பினாள்.

“ஏய் யாரை பார்த்து பொறுக்கின்னு சொல்ற..” அவளிடம் நெருங்கி சென்றான் நாதன்.

“உன்னை பார்த்து தாண்டா சொன்னேன்.. பொறம்போக்கு”

அவளது  பேச்சில் கோவம் வர வேகமாய் அவளை பிடிக்க வர பழமலை அவளை தன்னுள் இழுத்துக்கொண்டான்.

“நாதன் வேணாம் விடு அவளை..” பழமலை பொறுமையாக சொல்ல

“அதை நீ என்னடா சொல்றது.. விடு அவளை..” என்றவன் முகிலை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்க்க சட்டென்று பழமலையின் கையிலிருந்து வெளியே வந்தாள் முகில்.

“இந்தா வந்துட்டேன்.. உன்னால என்ன செய்ய முடியுமோ செய்யிடா பரதேசி..” தைரியமாய் தன் முன் வந்து நின்றவளை காம பார்வை பார்த்து

“சும்மா சொல்ல கூடாதுடி.. இவ்வளவு சீக்கிரமா கண்டு புடுச்சுட்ட..”

“நல்லவனுக்கும் பொறுக்கிக்கும் வித்யாசம் தெரியாத அளவு நான் ஒன்னும் அவ்வளவு கேனைச்சி கிடையாது டா.. நீ என்னை என்னன்னு நினைச்ச.. உன் பொருக்கி தனம் எனக்கு தெரியாதுன்னா.. எவ்வளவு நல்லவனா நடிச்சவன் கடைசில ரொம்ப மோசமா நடுச்சுட்ட டா..” நக்கலாய் அவனை பார்த்து சொன்னவளை கண்டு மனம் வெஞ்சினத்தில் சிவந்து நின்றான் நாதன்..

“என்னடா மாட்டிக்கிட்டோம்னு பயமா இருக்கா..”

“ஹா ஹா எனக்கு எதுக்குடி பயம்.. உனக்கு தான் பயம் வரணும். வர வைப்பேன்.. உன்னை என் கிட்ட இருந்து யாரு காப்பாத்துவாங்கன்னு நானும் பாக்குறேன்” என்ற படி பழமலையை குறிவைத்து ஒரு பொருளை வீச, சட்டென்று அவன் கீழே குனிந்து அதிலிருந்து தப்பித்தான்.

“என்னடா நிதானமா இருக்குற..” நக்கலாய் அவனை பார்த்து கேட்ட படி மேலும் ஒன்றை எடுத்து வீச, இப்போதும் அவன் குறியிலிருந்து தப்பினான் பழமலை.

“நாதன் போதும் மேற்கொண்டு மேற்கொண்டு தப்பு செஞ்சுகிட்டே போற...” பழமலை அவனை எச்சரிக்க நாதனின் கவனம் முழுவதும் பழமலையின் பக்கம் இருக்க “கிழவி” என்று முகில் கண்சாடை காட்ட வேகமாய் ஒரு சிலம்பத்தை எடுத்து அவளின் கையில் கொடுத்தார்.

Loading spinner
Quote
Topic starter Posted : April 17, 2025 10:06 am
(@gowri)
Estimable Member

அப்பவே நினைச்சேன்....இவன் தான் வில்ல பைய அப்படினு🙄🙄🙄🙄🙄🙄

Loading spinner
ReplyQuote
Posted : April 20, 2025 11:06 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top