அத்தியாயம் 12

 
Admin
(@ramya-devi)
Member Admin

ஒருவழியாய் கூழை குடித்து முடித்துவிட்டு வேலை செய்ய ஆரம்பித்தார்கள். முகில் அங்கே செல்லாமல் அவர்களோடு வேலை செய்ய

“என்னடி இங்கணவே வேலை செய்யிற.. மாமன் மேல அம்புட்டு ஆசையா என்ன..” பழமலை ஆரம்பிக்க

“அடேய் சும்மான்னு இருடா நீ வேற அவளே நமக்கு உதவிக்கு வந்து இருக்கா அதை கெடுக்க பாக்காத”

“கிழவி அவ உதவி செஞ்சு தான் நாம முடிக்கணும்னு அவசியம் இல்ல.. நமக்கு கெத்து தான் முக்கியம்..”

“நீ செய்வடா தம்பி ஆனா நான் வயசானவ டா உடம்பு வளைய மாட்டிக்குதுடா..”

“இப்போ தானே ஒரு சட்டி கூழ அப்படியே முழுங்குன அதுக்குள்ள என்ன.. மரியாதையா கிழங்கு ஊனு.. அவளை உன் மகன் கிட்ட துரத்திவிடு சொல்லிட்டேன்..”

“டேய் பேராண்டி..”

“நீ அனுப்புறியா இல்ல நீ போட்டு இருக்குற தண்டட்டிய கழட்டவா..”

“உனக்கு கண்ணு எப்பவும் அது மேல தாண்டா..” கருவியவர் “சரி அப்போன்னா ஒரு டீலு..”

“சொல்லி தொலை..”

“வீட்டுக்கு வந்து காலு புடுச்சி விடுறியா..”

“எது நான் அழுத்தி விடணுமா.. இந்தா இவ சும்மா தானே இருக்குறா இவளை செய்ய சொல்லு..”

“இவளுக்கு அந்த அளவுக்கு கூறு இல்லடா..”

“கிழவி..”

“இல்லடா இவ அழுத்துனா உடம்புக்கு உனக்கையா இல்ல.. நீ புடுச்சு விட்டா அவ்வளவு சுகமா இருக்கும் டா..”

“உனக்கு நல்லா கொழுப்பு வச்சு போச்சு இரு என் அத்தா கிட்ட சொல்லி உனக்கு சாப்பாட்டை குறைக்க சொல்றேன்..”

“ம்கும் உன் ஆத்தா அப்படியே தட்டு தட்டா போட்டுட்டாலும் கிரகத்துல..”

“கிழவி எங்க ஆத்தா போட்டதுனாலா தான் நீ இந்த அளவு ஜம்பமா இருக்குற தெரியும்ல..”

“அடேய் உன் ஆத்தா காரிக்கே நான் போட்டா தாண்டா சோறே... அவ எனக்கு போடுறாலா...” இவர்கள் இருவரும் இங்க வழக்கடித்துக்கொண்டு இருக்க முகில் கீழே குனிந்து ஒரு பாத்தி முழுவதும் மஞ்சள் கிழங்கை ஊனி முடித்திருந்தாள்.

அதை அடுத்த வயலில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த கொழுந்து வேகமாய் அவர்கள் அருகில் வந்தார். அவர் வருவதை கண்ட இருவரும் ஜெர்க்காகி அப்படியே கீழே குனிந்து மஞ்சள் கிழங்கை ஊனுவது போல நடிக்க

“உங்க ரெண்டு பேத்தையும் என்ன தான் செய்யிறதுன்னு எனக்கு தெரியல.. எப்போ பாரு மாமியா மருமக மாதிரி சண்டை போட்டுக்கிட்டு வழக்கடிச்சுக்கிட்டே இருக்கீங்க.. அவனுக்கு தான் புத்தி இல்லன்னா உனக்கு எங்கமா போனுச்சு புத்தி.. வயசாச்சே தவிர கூறே கிடையாது.. என்ன பெத்தது தான் சரி இல்லன்னா.. நான் பெத்ததும் எனக்கு சரியில்ல.. கிரகம் எங்க இருந்து தான் ரெண்டும் வந்துச்சோ..” அவர் திட்ட தலையை நிமிர்த்தவே இல்லை இருவரும்.. கீழே குனிந்த படி இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு இருந்தார்கள்.

“இவ்வளவு சொல்றனே.. அப்பவும் இதுங்க.. இதுங்க வேலையை தான் பார்க்குதுங்க..”

“ஏங்க அங்க என்ன சத்தம் போட்டுக்கிட்டு இருக்கீக.. கிழங்கு தீந்து போச்சு.. மூட்டையை பிரிச்சு கொட்டுங்க.. இங்க ஊன கிழங்கு இல்ல..” பருவதம் சத்தம் போட

“அதானே உங்க ரெண்டு பேத்தையும் நான் எதுவும் சொல்லிட கூடாது உடனே அவளுக்கு பொறுக்காது..” பருவதத்தையும் சேர்த்து திட்டினார்.

“அடேய் அவளா இருக்க போயி உன்னை வச்சு இத்தனை வருஷம் குடும்பம் நடத்தி இருக்குறா.. இல்லன்னா உள்ளூர் சந்தையில கூட நீ விலை போய் இருக்க மாட்ட.. போடா போய் மூட்டைய பிருச்சி கொட்டு.. வந்துட்டான் பெருசா பேச..” கிழவி ஒரு போடு போட

“எனக்குன்னு எங்க இருந்து தான் இந்த கழிசடை கும்பல் வந்து சேர்ந்துச்சோ.. ஒன்னும் ஒன்னும் ஒவ்வொரு ரகம்..” திட்டிய படியே அவர் போக அவருக்கு முன் பழமலை அந்த மூட்டையை மாட்டு வண்டியிலிருந்து முதுகில் சுமந்துக்கொண்டு வயலுக்கு தூக்கிட்டு வந்தான். வந்து விரித்து இருக்கும் படுதாவில் கொட்டி ஒவ்வொருவருக்கும் தனி தனியாக அள்ளிக்கொடுத்தான்.

அவனது செயலை கண்ட கொழுந்துக்கு எப்பவும் போல இப்பவும் ஒரு பெருமை வந்தது.. அவரை எப்பவும் கடின வேலையை செய்ய விட மாட்டான் பழமலை.

பார்த்துக்கொண்டு இருந்த மூன்று பெண்களுக்குமே சிரிப்பு வந்தது.. பின்ன இத்தனை நேரம் அவரை திட்டியது என்ன.. இப்போ அவரை செய்ய விடாமல் நூறு கிலோ மூட்டையை முதுகில் சுமந்து வரப்பில் நடந்து அவ்வளவு தூரம் தூக்கி வந்தது என்ன.. வெளியே முரட்டு தனமாய் தோன்றினாலும் உள்ளுக்குள் அவ்வளவு பாசம் கொட்டி கிடந்தது அந்த குடும்பத்தினருக்குள்..

கொழுந்துக்கு தானாவே கைகள் மீசையை முறுக்கியது.. “எப்படி” என்பது போல பருவதத்தை பார்க்க

அவரோ “ம்கும் ரொம்ப பெருமை தான்..” என்று நொடித்துக்கொண்டாலும் அவரின் முகமும் சிரிப்பில் மிளிர்ந்தது..

முகில் வேளையில் மூழ்க.. கிழவியோ வேலை செய்யாமல் ஒப்பேத்திக்கொண்டு இருந்தார். பழமலையோ அவளை பார்வையால் மேய்ந்துக்கொண்டு இருந்தான். அவனது பார்வை அவளை துரத்திக்கொண்டே இருக்க

பருவதத்திற்கு தான் காண்டானது.. “அன்னைக்கு என்னவோ அப்படி பேசினான்.. இப்போ என்னன்னா அவ காலடியில விழுந்து கிடக்குறான்.. நாம கேட்டா மட்டும்.. அவ அந்த அளவுக்கு சீன் இல்லம்பான்.. இவன் மனசுல என்ன தான் ஓடுதுன்னே தெரியல.. எதுக்கும் மருமவளை கொஞ்சம் கவனமா பார்த்துக்கணும்.. இல்லன்னா எப்போ அவளை தோள்மேல தூக்கி போட்டுக்கிட்டு போவானே தெரியாது.. கிரகம் புடுச்சாவன்” என்று எண்ணியபடி வேலையை பார்த்தார்.

ஓரளவு அன்றைய நடவு வேலை முடிய ஆளு காரர்கள் எல்லாரும் செல்ல, முகில் பருவதம் பாட்டி மூவரும் கிணற்றில் குளிக்க சென்றார்கள். சிவகொழுந்து மோட்டார் போட்டு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச பழமலை ஒவ்வொரு வயலுக்கும் கரை எடுத்து மடை மாற்றி விட்டுக்கொண்டு இருந்தான்.

பெண்கள் எல்லாரும் வெளியேற கொழுந்து குளிக்க சென்றார். பழமலை வேலையை முடித்துவிட்டு கம்பு சுத்த அவனோட இடத்துக்கு செல்ல

“அடேய் இருட்ட போகுதுடா.. இப்போ போற.. காலையில சுத்திக்கலாம் வாடா..”

“நீ போ ம்மா.. நான் வந்தர்றேன்.. உன் மருமவள மட்டும் இங்க அனுப்பி வய்யி” என்றவன்

“ஏட்டி இங்க வா..” என்று முகிலை அழைக்க ‘இவன் எதுக்கு என்னை கூப்பிடுறான்’ தயங்கிய படியே அவளை அழைத்தான்.

மெல்ல வந்தவளை ஏய் சீக்கிரம் வாடி.. இப்போ தான் ஆடி அசைஞ்சி வர்ற..”

அவனது அதட்டலில் அவள் வேகமாய் வர

“இந்தா இந்த கம்பை பிடி..” என்று அவளிடம் ஒன்றை தூக்கி போட அவள் திகைத்தாள்.

“எதுக்கு” என்றபடியே பிடித்தாள் அவள்.

“ம்ம் சும்மா தான்..” என்றவன் அவள் வைத்திருந்த கம்பில் அடிக்க அவனது நோக்கம் புரிந்து போனது.

“அய்யய்யோ எனக்கு கம்பு சுத்த தெரியாது..”

“அதுக்கு தான் கூப்பிட்டேன்..” என்றவன் அவளை அடிக்க அவளோ சின்ன முறைப்புடன் தான் வைத்திருந்த கம்பிலே தடுத்துக்கொண்டாள்.

தொடர்ந்து அவன் அடிக்க அவளோ அவனது அடியிலிருந்து தப்பிக்கொண்டே தட்டு தடுமாறி கம்பை சுத்திக்கொண்டு இருந்தாள்.

ஒரு கட்டத்தில் அவன் வேகமாய் அடிக்க ஆரம்பிக்க அவனது வேகத்தின் முன் அவளது கம்பு எங்கேயோ பறந்தது.

ஒரே சுழற்றில் அவளின் முதுகை தன் நெஞ்சோடு நெருக்கி இருந்தான். அவனது வேகம் கண்டு சற்றே மிரண்டு தான் போனாள்.

திகைத்து அவனை திரும்பி பார்க்க, அவன் அவளை தான் பார்த்தான். அவனது மூச்சு காற்றின் வேகம் அவளது செவியில் பேரிரைச்சலாக விழ அவனது நெருக்கம் மனதுக்குள் மத்தளம் கொட்ட

“இவனோட இதே வேலையா போச்சு..” எண்ணியவள் வேகமாய் அவன் உருவாக்கிய வளையத்தை உடைக்க முயன்றாள்.

அவனோ அவளை விடாமல் இன்னும் தன்னோடு நெருக்க “ப்ச் என்ன இது விடுங்க நான் போகணும்..”

“போலாம் போலாம்” என்றவன் ஒரு கையை மட்டும் கீழ இறக்கி இடுப்பில் சொருகி இருந்த அவளது முந்தானையை எடுத்து விட்டு புடவையை லேசாக விலக்கி அவளது வயிற்றில் கை வைத்து வருடி விட அவனது தொடுகையில் எழுந்த உணர்வை அடக்க முடியாமல் சட்டென்று அவனது கரத்தை பற்றிக்கொண்டாள்.

“ப்ளீஸ் வீட்டுக்கு போகனும்..”

“ம்ம் போகலாம்..” என்றவன் கீழே விட்டிருந்த முந்தானையை எடுத்து மறுபடியும் அவளது இடுப்பில் சொருகியவன் அவளை மறுபடியும் சுழற்றி தன் எதிர் புறம் கொண்டு வந்து நிறுத்தினான். பின் அவளது கம்பை எடுத்து கொடுக்க அவனது நோக்கம் புரிந்து போனது. அவனது தாக்குதலை எதிர் நோக்க ஆரம்பித்தாள் முகில்..

அவன் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை. ஆனால் கண் அசைவிலே அவளுக்கு சிலம்பு சொல்லி கொடுக்க அவனது திறமையை கண்டு வியந்து தான் போனாள். ஓரளவு அன்றைய பயிற்சி அவனது சில பல லீலைகளுடனே நடந்தது.

அதன் பின் இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். சொல்லி சொல்லாமல் இருவரிடயே ஒரு வித உணர்வு படலம் படர்ந்து இருந்தது..

அதை இருவரும் கண்டுக்கொள்ளவில்லை என்றாலும் அதை உணர்ந்தே தான் இருந்தார்கள்..

அதை அதிகரிக்கும் நோக்கு யாருக்கும் இல்லை.

“பெரியவன் எப்போ வரன்னு கேட்டீங்களா..” பருவதம் கேட்க

“போனு போட்டேன் அவன் எடுக்கல பருவதம்.. எடுத்த இந்த வாரம் வர சொல்றேன்..” என்றார்.

“ம்ம் அவனுக்கு தான் எம்புட்டு வேலை பாவம்.. சீக்கிரமா அவனுக்கு ஒரு பொண்ண பாத்து முடுச்சு வச்சா தேவலை..”

“எனக்கும் அப்படி தான் தோணுது..” என்றவர் “ஆத்தா நீ என்ன சொல்ற...” தன் தாயிடம் கருத்து கேட்டார்.

“இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு கொழுந்து பொண்ணு பாக்க ஆரம்பி.. நல்லதா அமையனும்.. எப்படியும் இப்போ பாக்க ஆரம்பிச்சா தான் இன்னும் ஆறு மாசத்துக்குள்ள வாவது முடியும்.. அதுக்கு பொறவு புரூட்டிக்கு பாக்கலாம்..” என்றார் தன் இரண்டாவது பேரனை பார்த்த படி..

“கிழவி நீ பழமலைனே கூப்பிடு.. தயவு செஞ்சு என் பேரை கொலை பண்ணதா சொல்லிட்டேன்..”

“போடா கன்றி ப்ரூட்.. இங்குலீசு தெரியாதவனே..” என்று அவனை வாரிவிட

இதுக்கெல்லாம் காரணமான முகிலாம்பிகையை முறைத்து பார்த்தான்.

“ஐயையோ இந்த பாட்டியோட.. எனக்கு முடியல.. இப்படியா அவன் கிட்ட மாட்டி விடும்..” அவனை நிமிர்ந்தே பாராமல் அப்படியே தன் அறைக்குள் போக பார்க்க வேகமாய் அவளை இடை மறித்தான்.

“என்னடி இதெல்லாம்.. நீ கேட்டு போறது பத்தாதுன்னு கிழவியையும் கெடுத்து வச்சு இருக்குற..”

“அடேய் அவ இப்போ என்ன பண்ணிட்டான்னு அவ கிட்ட போய் மல்லுக்கு நின்னுக்கிட்டு இருக்குற.. இங்க வா.. கொஞ்சம் வேலை இருக்கு” பருவதம் அவனை அழைக்க

“வச்சுக்குறேன் உன்னை..” எச்சரித்தவன் அவரிடம் போக “என்ன மா.. இதுல பெரியவன் ஜாதகம் இருக்குடா.. காலையில வெள்ளன போய் நம்ம தரகர் கிட்ட குடுத்துட்டு வா.. அப்படியே குடுக்குறதுக்கு முன்னாடி கோவில்ல போய் அவன் பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிடு..” என்றார்.

“ம்ம் சரி மா..” என்றவன் ஜாதகத்தை வாங்கிக்கொண்டான்.

அடுத்த நாள் காலையில் எழுந்து பருவதம் சொன்ன வேலையை செய்துவிட்டு வீட்டுக்கு வர முகில் வீட்டில் இல்லை.. கிழவியை பார்க்க கிழவி வெப்ப மரத்தின் அடியில் கயித்து கட்டிலில் ஒய்யாரமாய் சிலுசிலுன்னு காத்து வாங்கிய படி நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேகமாய் அவரின் முகத்தில் நீரை வாரி இறைத்தான்.

அதில் அடித்து பிடித்துக்கொண்டு எழுந்தவர் “யாவடி அவ என் மூஞ்சில தண்ணிய ஊத்துணவ.. தில்லு இருந்தா நான் முழிச்சு இருக்கும் போது வாங்கடி.. அதென்னடி தூங்கும் போது தண்ணிய ஊத்துரீக எடுபட்ட சிருக்கீகளா..” அவர் பாட்டுக்கு ஏச

“ஏய் நிறுத்து கிழவி உன் பாட்ட, நான் தான் ஊத்துனேன்.. இப்ப அதுக்கு என்னங்குற.. அவனவன் வெயில்ல போயிட்டு காஞ்சி கருவாடா வந்தா நீ ஜம்பமா காத்து வாங்கிக்கிட்டு தூங்கிக்கிட்டு இருக்குற.. உனக்கு எவ்வளவு ஏத்தம்..”

“அடேய் உன் அப்பன் உனக்கு தானேடா வேலை வச்சான் எனக்காடா வச்சான்..”

“அதுக்கு நீ நல்லா குறட்டை விட்டு தூங்குவியா..”

“அடேய் நீ வேலை செஞ்சதுக்கும் நான் தூங்குனதுக்கும் என்னடா சம்மந்தம்..”

“இல்ல தான் ஆனா நான் வரும் போது அவ வீட்டுல இல்லையே..”

“எவடா..”

“நீ என் கிட்ட நல்லா வாங்க போற” அவரை முறைத்து பார்த்தான்.

“ஈஈஈ முகிலாடா”

“ஆமா அவ தான்..”

“அவ உன் அப்பன் ஆத்தாவுக்கு சோறு எடுத்துக்கிட்டு போனா டா..”

“அவளை எதுக்கு அனுப்பிவிட்ட.. நீ போக வேண்டியது தானே..”

“அடேய் நான் வயசானவ டா..”

“அதுக்கு..”

“கை காலெல்லாம் நடுங்குது.. என்னால எப்படி இந்த வெயில்ல அதும் சோறு கூடைய தூக்கிக்கிட்டு போக முடியும்.. யூ நோ ஐ ஆம் ரிட்டேய்டு எம்ப்ளாயி.. சோ ஐ டு நாட் வொர்க்”

“கிழவி என் கிட்ட இங்கிலீசு பேசாத.. அப்புறம் தலை உடைஞ்சி போய்டும் பாத்துக்க..”

“அன் எஜுக்கேட்டடு பெல்லோ.. கன்றி ப்ரூட்..” மேலும் பேச

அதில் கோவம் வந்தவனுக்கு “செத்த வா..” என்று அருகில் இருந்த கம்பை எடுத்து பாட்டி தலையில் போட வர அவரோ எகிறி குதித்து அவனிடமிருந்து விலகி ஓடினார்.

Loading spinner
Quote
Topic starter Posted : April 17, 2025 9:59 am
(@gowri)
Estimable Member

பாட்டி ஓட இங்கிலீஷ் வேற லெவல் 🤩🤩🤩🤩🤩

இவனுக்கு அண்ணன் வேற இருக்கானா????

வேலையில் இருக்கான் போலவே...அப்ப படிச்சவனா இருப்பானா???

அப்படி இருந்தா முகிக்கு தான் கஷ்டம்.....

அவன் என்னமோ எனக்கு வில்லன் வர போரான் போலவே இருக்கு😳😳😳😳

Loading spinner
ReplyQuote
Posted : April 17, 2025 11:34 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top