அத்தியாயம் 11

 
Admin
(@ramya-devi)
Member Admin

வெயில் ஏற ஏற களைப்பு தட்டியதே தவிர ஒரு பாத்தி கூட முழுதாய் முடிக்க வில்லை இருவரும்.. சிவகொழுந்து அதை கடுப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தாரே தவிர எதுவும் பேசவில்லை. முகில் கூட நுணுக்கத்தை காத்துக்கொண்டு விறுவிறுப்புடன் வேலை செய்தாள்.

ஆனால் பாட்டியும் பேரனும் ஒருவரை ஒருவர் வம்பிழுத்துக்கொண்டு இருந்தார்களே தவிர வேலை செய்த பாடு இல்லை.

“டேய் நீ இப்படியே ஜொள்ளு விட்டுக்கிட்டு இருந்தீன்னு வை உங்கப்பன் மத்திய சாப்பாட்டுக்கு நம்மளை அனுப்ப மாட்டான் பாத்துக்க..”

“என்னை சொல்றீயே ஏன் நீ வேலை செய்யிறது.”

“அடேய் உன் வயசும் என் வயசும் ஒண்ணாடா.. உனக்கு ஓடுற பாம்ப மிதிக்கிற வயசுடா.. கட்டிளம் காலையும் கட்டையில போற கிழவியும் ஒண்ணாடா..”

“அதெல்லாம் எனக்கு தெரியாது.. வேலைனா ரெண்டு பேரும் தான் செய்யணும்.. நீ பெராக்கு பாத்துக்கிட்டு அப்படியே ஏய்க்கலாம்னு மட்டும் நினைக்காத தொலைச்சுடுவேன்” என்று இருவரும் ஊனுவதை விட்டு விட்டு வழக்கடித்துக்கொண்டு இருக்க சிவக்கொழுந்து இருவரையும் கோவமாய் பார்த்தார். ஆனால் அதையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் இருவரும் மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தார்கள்.. மத்தியம் இரண்டு மணி ஆக எல்லோரும் கரை ஏறினார்கள்..

“கிழவி எல்லாரும் சாப்பிட போய்ட்டாங்க வா நாமளும் போகலாம்..” என்று பொன்னியை அழைத்துக்கொண்டு பழமலை கரை ஏற சிவகொழுந்து பார்த்த பார்வையில் இருவரும் மீண்டும் வயலுக்குள்ளே இறங்கிக்கொண்டார்கள்.

இருவருமே பசி தாங்க மாட்டார்கள். அவர்களை பார்த்த முகிலுக்கு பாவமாய் போனது.. அவள் திரும்பி தன் மாமனை பார்த்து “பாவம் மாமா” என்க

“அவங்க பண்ற ரவுசுக்கு இன்னைக்கு அந்த வேலை செஞ்சுட்டு தான் மேல ஏறனும்.. நீ அவங்களுக்காக பரிதாப படாத மா போய் சாப்பிடு..” என்று தலையில் கட்டிய முண்டாசை எடுத்து வியர்வை வலிந்த முகத்தை துடைத்துக்கொண்டு பம்ப் செட்டுக்கு போய் முகத்தை கழுவ போனார்.

திரும்பி அத்தையை பார்த்தாள்.

“எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. நீ வா சாப்பிடலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு போக திரும்பி இருவரையும் பார்த்தாள்.

அவர்களின் முகத்தில் பசிக்கான களைப்பு தெரிய முகத்தை சுழித்து சிவகொளுந்தை முறைத்தார்கள் பாட்டியம் பேரனும்.

அவர் அதெல்லாம் கண்டு கொள்ளாமல் கரைத்து வைத்து இருந்த கம்மங்கூழை வாயில் சரித்துக்கொண்டார்.

“ஆனாலும் உன் மவனுக்கு இவ்வளவு காண்டு இருக்க கூடாது.. நீ தானே பெத்த.. உன் புள்ளைக்கு நல்லது சொல்லி வளக்க மாட்ட.. நீயெல்லாம் ஒரு நல்ல தாயே இல்ல..”

“அடேய் அவன் இப்படி எல்லாம் செய்வான்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்.. அதென்னவோ இன்னைக்குன்னு பாத்து என் புள்ள ரொம்ப கண்டிப்பா இருக்குறான்.. பசி வேற வயித்தை கிள்ளுது. எதாவது செஞ்சு கூழை ஆட்டைய போட்டு குடுடா.. வயசான காலத்துல இப்படியெல்லாம் தண்டிக்கிறான் இவன்..”

“ம்கும் தண்ணி போட்டாலே உன் மவனை ஏமாத்த முடியாது. இப்போ ரொம்ப தெளிவா இருக்காப்ல கிட்டக்க கூட போக முடியாது..” என்றான்.

“அடேய் பருவதத்துக்கிட்ட சொல்லி எதாவது ரெடி பண்ண சொல்லுடா..”

“ம்கும் நீ என் ஆத்தாவை போட்டு படுத்துன பாட்டுல அது நம்மளை திரும்பி கூட பாக்காது..”

“சரி அப்போ உன்ற ஆளுக்கிட்ட கேளுடா..”

“அது அத விட மோசம்.. நீயும் நானும் பட்னி னா சந்தோச படுற முத ஆளு அவ தான்.. பத்தாததுக்கு நாம பேசி வச்சு அவளை எவ்வளவு கொடுமை படுத்தி இருக்கிறோம். கண்டிப்பா அவ நம்மளை கண்டுக்க மாட்டா”

“ச்சீ ச்சீ என் பேத்தி அப்படியெல்லாம் கிடையாது டா..”

“அதென்னவோ உண்மை தான். ஆனா உன் மகன தாண்டி அவ எதுவும் செய்ய மாட்டாளே..”

“நீ ஒரு கண் ஜாடை காட்டு.. பானையோட வருவாடா.”

“அப்படிங்கிற..”

“ஆமாண்டா இல்லன்னா இத்தனை நாலு நீயும் நானும் கரி சோறு தின்றுக்க முடியுமா. அதும் வக்கனையா”

“சரி விடு அவளை கரெக்ட் பண்றேன்..”

“செய்யி..செய்யி..” என்ற படி தன் முந்தானை தலைப்பை எடுத்து தலையில் போட்டுக்கொண்டு முகில் என்ன செய்கிறாள் என்று பார்த்தார்.

அவ்ளோ இவர்களை கண்டுக்கொள்ளாமல் தன் அத்தை மாமாவோடு கூழை குடித்துக்கொண்டு இருந்தாள்.

“ஏதோ நல்லவ வல்லவன்னு சொன்னியே அங்க பரு அவ நம்மள கொஞ்சம் கூட கண்டுக்காம வயித்தை ரொப்பிக்கிட்டு இருக்குறா..” காண்டுடன் பழமலை சொல்ல

“ம்ஹும் இவளுக்காவது கொஞ்சம் மனசு இறங்குதா பாரு. ஏலேய் கை காலெல்லாம் நடுங்குது டா.. பசியில கண்ணு கூட இருட்டுது..”

“எனக்கும் அப்படி தான் இருக்கு கிழவி..” என்று வரப்பில் அமர்ந்துக்கொண்டான்.

“எப்படியும் சாவ போரேன்.. ஆனா இப்படி பசியில செத்து போவேன்னு நான் நினைக்கல டா.. அப்படி செத்து போனா என் வரலாற பாத்து இந்த ஊரு சனம் காரி துப்பும்.. டேய் எனக்கென்னவோ நம்பிக்கையே இல்ல.. ஒரு கொலை பலிக்கு உ அப்பேன் காரணமா போக போறான் பாத்துக்க” என்று மூக்கை சிந்த

“கிழவி நீ கொஞ்ச நேரம் அமைதியா தான் இரேன்.. ஒரு நேர கூழுக்கு ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்குற.. மானத்தை வாங்காத.. அவ வரா, அவ முன்னாடி கெத்தா இரு..” என்று சொல்லி நிமிர்ந்து அமர்ந்துக்கொண்டான். கிழவியும் தன் முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு வரப்பில் கெத்தாய் அமர்ந்துக்கொண்டார்.

இருவரின் உடல் மொழியையும் தூரத்தில் இருந்தே படித்துக்கொண்டு வந்தவளுக்கு சிரிப்பு வந்தது. ஆனாலும் அதை அடக்கிக்கொண்டு அவர்களை எதிர் நோக்கி வந்தாள்.

வந்தவள் இருவருக்கும் மோரை கம்பு சாதத்தில் கரைத்துவிட்டு உப்பு போட்டு குடுக்க

“எங்களுக்கு ஒன்னும் வேணாம்.. எடுத்துட்டு போ..” என்று பழமலை சொல்ல

‘அடேய் அவளே கொண்டு வந்து குடுக்குறா.. நீயேண்டா இந்த நேரத்துல பவுசு காட்டிக்கிட்டு திரியிற.. முடியலடா உங்க கிட்ட..’ பாட்டி உள்ளுக்குள் கதற..

“இல்ல பசிக்கும் ல..” தயங்கி முகில் இழுக்க

“உன்கிட்ட வந்து நான் சொன்னனா.. எனக்கு பசிக்குதுன்னு..”

“இல்ல...”

“பொறவு நீ எதுக்கு தூக்கிட்டு வந்து இருக்குற..”

‘ஐயோ இவனுங்களுக்கு இடையில நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே.. அடேய் எனக்கு இந்த தூக்கு வாலியை மட்டும் குடுத்துட்டு அப்படி ஒரு ஓரமா போய் சண்டை போடுங்கடா.. முடியலடா உங்க அக்க போறு.. கெத்து கெத்துன்னு சொல்லி சாவடிக்கிராய்ங்க’

கிழவி பாவமாய் தூக்கு வாலியை பார்க்க அவரது பார்வையை கண்ட முகிலுக்கு இதழ் கடையோரம் சிரிப்பு வந்தது..

அவளது சிரிப்பை பார்த்த பழமலை கிழவியை முறைத்து பார்த்தான். அவனது முறைப்பில் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டார் பொன்னி.

“அதெப்படி கிழவி சோத்தை பாத்தா மட்டும் உன் ரோசம் எல்லாம் காணாம போவுது.. இவ்வளவு நேரம் கெத்து கெத்துன்னு சொல்லிக்கிட்டு இருந்தனே.. கொஞ்சமாச்சும் காதுல வாங்கி மனசுல வச்சுக்கிட்ட.. தனியா மாட்டு காதுல இருக்க லோலாக்க அத்து விடுறேன்.. அதை போட்டு இப்படி ஒரு ஆட்டு அப்படி ஒரு ஆட்டு ஆட்டுரீல இனி தோடு போட முடியாம பண்றேன்..” பல்லை கடித்துக்கொண்டு சொன்னவனின் கோவத்தில் ஜெர்க்கானார் பாட்டி.

உடனே தன்னை சரி செய்துக்கொண்டு “இதோ பாரு புள்ள நாங்க வந்து உன் கிட்ட எங்களுக்கு பசிக்குதுன்னு சொன்னமா.. நீ எதுக்கு எங்களுக்கு பசிக்கும்னு சோறை தூக்கிட்டு வந்து இருக்குற.. அப்படியே எங்களுக்கு பசிச்சாலும் நாங்க உன் கையாள கரைச்ச சோத்தை திங்க மாட்டோம்.. இப்படியே பசியோட செத்தாலும் சாவமே தவிர இந்த கூழை குடிக்க மாட்டோம்.. என்னடா பேராண்டி நான் சொன்னது சரி தானே..” என்று சொல்லி தன் பேரனை கெத்தாய் பார்க்க அவனோ தலையிலே அடித்துக்கொண்டான்.

“ஏண்டா பசின்னு கூட பார்க்காம பக்கம் பக்கமா வசனம் பேசி இருக்கிறேன்.. அதுக்கு பாராட்டாம முறைக்கிற” பாவமாய் தன் பேரனிடம் கேட்க

“கிழவி வந்தேன்னு வை.. உன்னை..” பல்லை கடித்தான்.

“ஏண்டா..”

“ம்ம் பக்கம் பக்கமா பேசுனியே.. அதுல மொத்தமும் பசி பசின்னு தான் பேசி வச்சு இருக்குற.. அதுலயே அவ கண்டு புடுச்சுட்டா..”

“ஆகா மண்ட மேல இருக்குற கொண்டைய மறந்துட்டேண்டா.. ஜோரி” என்றவரை கொலை வெறியுடன் பார்த்தான் பழமலை.

“நீ தனியா மாட்டு உன்னை வச்சு இருக்கிறேன்..” கருவினான்.

“அடேய் வயசானவடா தாங்காது டா எதா இருந்தாலும் பாத்து பண்ணுடா..” என்றவரை முறைத்து பார்த்தான்.

“பாவம் பாட்டி வெயில் வேற அதிகமா அடிக்கிது.. இந்த கூழை குடிச்சுட்டு வேலை பார்க்கட்டுமே.. பார்க்கவே ரொம்ப சோர்ந்து போய் இருக்காங்க”

“இந்த கரிசனம் காட்டுற வேலையெல்லாம் இங்கன வேணாம்..”

“டேய்... போடா உன் வீராப்பும்.. கெத்தும்..” என்றவர் முகிலின் கையிலிருந்த வாலியை வாங்கி வாயில் ஒரேடியாய் கவித்துக்கொள்ள

அதுவரை கெத்துக்காட்டிக்கொண்டிருந்த பழமலை “கிழவி எனக்கும் கொஞ்சம் வை..” என்று அவரிடமிருந்து பிடுங்கி இவன் குடிக்க

“அடேய் நான் இன்னும் குடிக்கலடா.. எனக்கும் கொஞ்சம் வை..” என்று அவனிடமிருந்து இவர் பறிக்க அந்த இழுபறியை பார்த்துக்கொண்டு இருந்த முகிலுக்கு சிரிப்பு தான் வந்தது..

Loading spinner
Quote
Topic starter Posted : April 17, 2025 9:57 am
(@gowri)
Estimable Member

இந்த பாட்டி & பேரன் காம்போ அல்டி😂😂😂😂

செம்ம காமெடி🤣🤣🤣🤣🤣

 

Loading spinner
ReplyQuote
Posted : April 17, 2025 10:55 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top