அத்தியாயம் 18

 
Admin
(@ramya-devi)
Member Admin

“வாம்மா வந்து சாமி கும்பிடு...” என்று சங்கவையை அழைத்தவர், “வா தம்பி” என்று செஞ்சனையும் அழைத்தார் வாசுகி.

இருவரும் ஒரு சேர சாமி கும்பிட்டு விட்டு வெளியே வர, கணவனின் கையை பிடித்து இழுத்து வாசுகியின் காலில் விழுந்தாள்.

“எதா இருந்தாலும் சொல்லிட்டு பண்ணுடி” என்றவன் அவளுக்கு கட்டு பட்டு தாயின் காலில் விழுந்தான்.

இருவரையும் மனமார ஆசீர்வாதம் செய்தவர்,

“நீ போப்பா” என்று செஞ்சனை மாடிக்கு போக சொன்னவர், சங்கவையின் கையை பற்றி அடுப்படிக்கு அழைத்து சென்றார்.

அங்கு அவளின் அத்தை பாலை குடுத்தார். வாங்கி கொண்டவளை மனமாற பார்த்த வாசுகி,

“அவன் பல நேரம் கிறுக்கு தனமா நடந்துக்கிட்டாலும் உன் மேல உள்ள காதல் மட்டும் எப்பயும் குறையாதுடா.. என்னோட ஒரே ஆசை அவன் என் கண்ணிறைய பொண்டாட்டி புள்ள குட்டியோட வாழணும்னு தான். அவனை எந்த காலத்திலும் கை விட்டுடாதடா... அவனுக்கு மட்டும் இல்ல எனக்கும் உன்னை விட்டா வேற யாரும் கிடையாது.. அவனோட சேர்த்து என்னையும் பார்த்துக்கோம்மா” என்ற வாசுகியின் கையை இறுகப்பற்றிக் கொண்டவள்,

கண்கள் கலங்க, “நிச்சயமா அத்தை... நீங்க ரெண்டு பேரும் என்னோட உயிர்.. உங்க ரெண்டு பேரையும் நல்லா பார்த்துக்குறது என்னோட பொறுப்பு. இதை நீங்க என்கிட்டே கேட்கவே வேணாம்... இது என்னோட கடமை. கடமைன்னு கூட சொல்ல கூடாது.. என்னோட பாக்கியம் இது” என்றவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் கொடுத்த வாசுகி,

“மனசு நிறைஞ்சி போயிருக்கு தங்கம்... மகிழ்ச்சியா இருங்க ரெண்டு பேரும்... காலையில அவசரமால்லாம் எழுந்துக்க வேணாம்.. பொறுமையாவே வா.. மருவீட்டுக்கு மத்தியத்துக்கு மேல தான். அதனால நேரம் எடுத்தே வா” என்று வாசுகி சொல்ல தலையை ஆட்டிக் கொண்டாள்.

“ஆனாலும் அவனுக்கு நீ ரொம்ப இடம் குடுக்காத தங்கம்.. அவன் உன் தலையில ஏறி உட்கார்ந்து விடுவான்” என்று சொல்ல, சங்கவையின் இதழ்களில் சின்ன புன்னகை அரும்பியது.

“கொண்டு போய் அவனோட அறையில விட்டுட்டு வாம்மா” என்று சங்கவையின் அத்தையிடம் சொன்னார்.

அவளை கூட்டிக்கொண்டு செஞ்சனின் அறையில் கொண்டு போய் விட்டவர்,

“உனக்கு நல்ல கணவனும் மாமியாரும் கிடைச்சு இருக்காங்க பாப்பா... நீ ரொம்ப குடுத்து வச்சவ” என்று ஒரு ஏக்கத்துடன் சொன்னார்.

அவருக்கு வாய்த்த மாமியார் வேறு மாதிரி ஆயிற்றே... அதனால் வந்த பெருமூச்சு அது.

“ஆமாங்க அத்தை” என்றாள்.

“சரி கவனமா இரு... எதாவது ஒண்ணுன்னா என்னை கூப்பிடு.. நான் கீழ தான் இருப்பேன். பயப்படாத” என்று தைரியம் சொல்லி விட்டு கீழே சென்றார்.

அவர் சென்றவுடன் கதவை சாத்திவிட்டு உள்ளே நுழைந்தாள் சங்கவை.

அங்கே வெற்றி இரு கைகளையும் மார்பில் கட்டிக் கொண்டு நின்றான். அவனது விழிகளில் தாபம் நிறைந்து இருந்தது. அவளை மேலிருந்து கீழாக பார்த்தவனின் விழிகள் ஏகத்தும் சிவந்துப் போய் இருந்தது.

அவனது முகத்தை ஏறெடுத்து பார்க்க முடியாமல் தடுமாறியவள், அவனிடம் சண்ட காய்ச்சிய பாதாம் பாலை நீட்டினாள்.

அதை வாங்கியவன் காலில் விழ,

“ப்ச் என்ன கண்ணம்மா இது..” என்றவன் வேகமாய் அவளை நிமிர்த்தினான்.

“இல்ல அத்தை தான் சொன்னாங்க” என்றாள் அவனது முகம் பார்க்காமல். அவளின் வெட்கத்தை உணர்ந்தவன் மீசைக்கு அடியில் சிரித்துக் கொண்டான். ஆனாலும் அவளை அதிகமாக சீண்டாமல்,

“இதெல்லாம் நமக்குள்ள வேணாம்” என்றவன், “ஆமா போகும் பொழுது உன் அத்தை உன்கிட்ட என்ன சொன்னாங்க?” என்று கேட்டான்.

“அது...” என்று தயங்கினாள்.

“பரவாயில்ல சொல்லு” என்று ஊக்கினான்.

“பயப்படாத... நான் இங்கதான் இருப்பேன். ஏதாவதுன்னா கூப்பிட சொன்னாங்க” என்றாள்.

“ஏன் நான் உன்னை பார்த்துக்க மாட்டனா?” சற்றே கோவம் வந்தது அவனுக்கு.

அவனது கோவத்தில் பதறியவள், “அப்படி இல்லங்க... உங்களை விட வேறயாரு என்னை நல்லா பார்த்துக்க முடியும்.. அவங்க ஒரு பேச்சுக்கு சொன்னாங்க” என்று அவனை நிதானப் படுத்தினாள்.

“அது தானே..” என்று மீசையை நீவியவன்,

“ஆமா பூ வெயிட்டா இருக்கா?” என்று கேட்டான்.

“இல்லங்க...”

“அப்போ ஓகே... வா கொஞ்ச நேரம் பாரதியார் கவிதை படிக்கலாம்” என்று அவளை படுக்கைக்கு அழைத்து சென்று உட்கார வைத்தவன் எப்பொழுதுமே அவனது அறையில் வைத்திருக்கும் சின்ன புத்தக அலமாரியில் இருந்து பாரதியார் கவிதை தொகுப்பை எடுத்து வந்து அவளுடன் அமர்ந்தான்.

“நீ படிக்கிறியா நான் படிக்கட்டுமா?” கேட்டான்.

அவள் இருக்கிற நிலைக்கு படிக்க முடியும் என்று தோன்றவில்லை. “நீங்களே படிங்க செஞ்சா... நான் கேட்கிறேன்” என்றவள் கட்டிலின் பின்னாடி சாய்ந்து அமர்ந்துக்கொண்டாள்.

அவளுக்கு அருகில் இவனும் சாய்ந்து அமர்ந்துக் கொண்டவன், புத்தகத்தை பிரித்தான்.

“என்ன கவிதைடி வேணும்?” கேட்டான்.

“கண்ணன் என் காந்தன். இது படிங்க செஞ்சா” என்றவள் கண்களை மூடிக்கொண்டாள். அவள் ஆழ்ந்த இரசனைக்கு போய் விட்டாள் என்று புரிந்துக் கொண்டவன், குரலை கவிதைக்கு ஏற்றார் போல குழைத்து,

“கனிகள் கொண்டு தரும் கண்ணன்

கற்கண்டு போலினிதாய்,

பனிபெய் சந்தனம்..” என்று அவன் வாசிக்க வாசிக்க பெண்ணவளின் கண்களுக்கு முன்பு அந்த கண்ணனாய் அவளின் கணவனே விரிந்தான்.

“குங்குமங் கொண்டு வரும் கண்ணன்

குழைத்து மார்பெழுத,

சங்கையி லாதபணம் – தந்தே

தழுவி மையல் செய்யும்

பங்கமொன் றில்லாமல் முகம்

பார்த்திருந் தாற்போதும்

மங்கள மாகுமடி! பின்னோர்

வருத்த மில்லையடீ...”

என்று அவன் படிக்க படிக்க மெய்யுருகிப் போனாள் சங்கவை.. பாரதியார் கவிதைகள் எப்பொழுதுமே அவளுக்கு பிடிக்கும். ஆனால் அதை விட செஞ்சன் அந்த கவிதைகளை படிக்க கேட்க ரொம்ப ரொம்ப பிடிக்கும்...

“விளக்கம் வேணுமாடி?” பக்கவாட்டாக திரும்பி அவளின் முகம் பார்த்தான்.

“ம்ஹும் எனக்கு தெரியும்” என்றாள்.

“சரி பொழிப்புரை சொல்லு” என்றவன் புத்தகத்தை மூடி வைத்து விட்டு பின் பக்கமாய் இரு கைகளையும் கட்டிலின் விளிம்பில் வைத்துக் தலையை சாய்ந்துக் கொண்டான்.

இந்த முறை அவன் கண்களை மூடிக் கொண்டான். அவன் கேட்க ஏதுவாகி விட,

“கண்ணன் அவனோட காதலிக்கு அவன் கையுறைகளை எல்லாம் கொண்டு வந்து குடுக்கிறான்.. அதாவது குறைவில்லாத பணத்தை கொட்டி அவனோட காதலிக்கு உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை அலங்கரிக்க கொண்டை முடிக்க நறுமணம் வீசும் தைலமும், கண்ணுக்கு மையும், கால்களுக்கு செஞ்சாந்து குழம்பும், பொட்டும், அத்தரும், குங்குமமும், அதோடு அவள் உண்ண கனிகளும் கொண்டு வருகிறான் கண்ணன். மற்ற பெண்களுக்கு தான் அவன் மிகப்பெரும் தெய்வம்.. ஆனா காதலிக்கு அவன் சிறந்த காதலன்.”

“என் கண்ணன் இவ்வளவும் செய்யணும்னு இல்லை... இது எதுவும் செய்யலன்னாலும் அவனை தழுவி மையல் கொள்ள பங்கம் எதுவும் இல்லை. முகம் பார்த்து இருந்தாலே மங்களம் ஆகும். பிறகு வேறன்ன வருத்தம் இருக்கப் போகிறது... என்று காதலி சொல்ற மாதிரி பாரதியார் எழுதி இருக்கார்..” என்று மிகைப்படுத்தாத சிருங்கார குரலில் அவள் பொழிப்புரை வழங்க,

மெய்மறந்து கேட்டான் செஞ்சன்..

“அடுத்து என்ன பாட்டு வேணும்” விழிகளை திறந்து அவளை பார்த்து கேட்டான்.

“கண்ணம்மா என் காதலி” என்று அவள் சொல்ல,

“எத்தனாவது பாடல்”

“பாயுமொளி நீ எனக்கு... பார்க்கும் விழி நானுனக்கு” அவளே அடி எடுத்துக் கொடுத்தாள். அவன் வாசிக்க ஆரம்பித்தான்.. சங்கவை மீண்டும் விழிகளை மூடிக் கொண்டாள்.

அந்த பாடலை இருவரும் ஒருங்கே உணர்ந்து இரசித்து படித்து கேட்டுக் கொண்டார்கள்.

இப்படியே கவிதை வாசித்து, இரசித்து, பொழிப்புரை குடுத்து என நேரம் அழகாக சென்றது...

“பசிக்கிற மாதிரி இருக்குடி” என்றான்.

“அத்தை பால் குடுத்து விட்டாங்க. இருங்க எடுத்துட்டு வரேன்” என்றவள் எழுந்து செல்ல அவளின் முந்தானை அவனின் முகத்தில் மோதியது.

அவளின் வாசனை அதில் வர அவளின் முந்தானையை பிடித்தான். முந்தானை இழு படவும் திரும்பி பார்த்தாள்.

“புடவை பிடிச்சு இருக்கா?” கேட்டவன் அவளின் புடவையின் மிருது தன்மையை சோதித்துப் பார்த்தான்.

“ம்ம் நல்லா இருக்குங்க” என்றவள், படுக்கை அருகில் மேசை இருக்கவும் அவனிடம் இருந்து முந்தானையை விலக்கிக் கொள்ளாமல் சொம்பை எடுத்துக் கொண்டு அவனிடம் வந்தாள்.

அவள் அருகில் வரவும் முந்தானை இன்னும் அதிகம் அவனிடம் வந்தது. இன்னும் சேர்த்து எடுத்துக் கொண்டவன் அவளின் புடவையை அதிகமாக சோதனை செய்ய,

“இந்தாங்க” என்று அவனிடம் நீட்டினாள். வாங்கிக் கொண்டவன் ஒரு கையால் புடவையை பிடித்துக் கொண்டான்.

“இதை விடுங்க” என்றவள் அவனின் கையில் இருந்த புடவையை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டவள் தேவையில்லாமல் எதையும் பேச வேண்டாம் என்று முன்பே தீர்மானித்து வைத்ததால் காலையில் அவன் நடந்துக் கொண்ட விதத்தை கேள்வி எதுவும் கேட்கவில்லை. எப்படியும் தன் கையை மீறி போக மாட்டான் என்று எண்ணிக் கொண்டாள்.

இந்த இதமான மனநிலையை இருவருமே விரும்பியதால் அதை பற்றி செஞ்சனும் பேசவில்லை.

“மேல மாடிக்கு போகலாமா?” கேட்டான்.

“ம்ம்” என்றவளின் கையை பிடித்துக் கொண்டு மாடிக்கு கூட்டி சென்றான். ஊதக்காற்று மெதுவாக வீச, பனி படர்ந்த இரவில் தூரத்து விளக்குகள் மின்மினி போல தெரிந்தது.

மேகத்தின் இடையில் மறைந்து இருந்த நிலாவை காட்டினான் செஞ்சன்.

“அழகா இருக்குல்ல செஞ்சா..?”

“ம்ம்ம் ஆனா அதை விட என் நிலா தான் அழகு” என்றான்.

வானத்தை நிமிர்ந்து பார்த்திருந்தவள் கணவனின் முகத்தை பார்த்தாள்.

“இந்த என் நிலா” என்று சுட்டு விரலை அவள் புறம் நீட்டி காண்பித்தான். லேசாக கன்னங்கள் சிவந்துப் போனது அவளுக்கு.

காற்று வந்து அவளின் கூந்தலை கலைத்து, முந்தானையை படபடக்க செய்ய, அந்த முந்தானையை பிடித்து அவளின் தோளோடு சுற்றி போர்த்தி விட்டவன் பின்னாடி நின்று அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான். அவனது அணைப்பில் கட்டுண்டு நின்றவள் அவனின் நெஞ்சோடு சாய்ந்துக் கொண்டாள் சங்கவை.

அவளின் கழுத்தில் தன் தாடையை பதித்தவன்,

“ஆர் யூ ஹேப்பி கண்ணம்மா?” கேட்டான். லேசாக திரும்பி அவனது கன்னத்தில் மிருதுவாக முத்தம் வைத்தவள்,

“ரொம்ப ஹேப்பி” என்றாள்.

“ம்ம்” என்றான்.

“நீங்க?” கேட்டாள்.

“உண்மையா சொல்லணும்னா மனசுல ஹெப்பியே இல்ல... ஆனா உன் காதல்ல நான் மெய்யுருகி போய் இருக்கேன்டி... உன்னை மாதிரி யாரைளையும் காதலிக்க முடியாதுன்னு நீ நிரூபிச்சுட்ட... உன் காதல் கிடைக்க நான் தவம் செய்து இருக்கணும்டி”

“நீங்க இன்னைக்கு ஏன் கிட்ட போட்ட ஒப்பந்தத்துக்கு ஈடா நான் என்னத்தை குடுக்குறது. என் மேல இவ்வளவு காதலை வைக்க முடியுமான்னு நீங்க இன்னைக்கு காட்டல... அது மாதிரி தான்” என்றவள்,

“போதும் செஞ்சா... இதை பத்தி எல்லாம் பேசவேணாம்.. ஆரம்பிக்கும் பொழுது காதலா தான் ஆரம்பிப்போம். ஆனா இறுதியில் முடிக்கும் போது ஆற்றாமையும் கோவமும் தான் வரும். அதனால ப்ளீஸ்... நாம எல்லாத்தையும் மறந்துட்டு இந்த நாளை கொண்டாடனும்..” என்றாள்.

“நீ சொல்றதும் சரி தான் கவி” என்றவனின் செல்ல பெயரில் வியந்து போய் அவனை பார்த்தாள். அவளது பார்வையில் மனம் கரைந்தவன்,

அவளை வளைத்து அவளின் நெற்றியில் செல்லமாய் முட்டி அவளின் நெற்றியில் முத்தமும் வைத்தான். அவனது முத்தத்தில் நெகிழ்ந்தவள் அவனின் மார்போடு ஒன்றிக்கொண்டாள்.

ஒன்றியவளை வளைத்துக் கொண்டவன் அவளை கைகளில் அள்ளிக் கொண்டு கீழே அறைக்கு சென்றான் செஞ்சடையன்.

Loading spinner
Quote
Topic starter Posted : April 8, 2025 11:02 am
(@gowri)
Estimable Member

அடெய்களா என்னடா பண்றீங்க🙄🙄🙄🙄🙄

எங்களை பார்த்தா எப்படி டா இருக்கு உங்க ரெண்டு பேருக்கும்🤨🤨🤨🤨

இந்தாமா ஏய் 🤦🤦🤦🤦🤦

Loading spinner
ReplyQuote
Posted : April 8, 2025 12:17 pm
(@mrsbeena-loganathan)
Trusted Member

கடந்தவை 

கடந்தவையாக போகட்டும்

கடந்த காலத்தை 

கடந்து வருவோம் காதலோடு....

காதலில் கரைந்தவர்கள் கவிதையில் கரைகிறார்கள்...

காரிருளில்

கணவனின் தோளில் 

கண் மூடி நிற்க 

காற்றில் எங்கும்

காதல் வாசம் வீசட்டுமே...

Loading spinner
ReplyQuote
Posted : April 8, 2025 2:42 pm
(@mathy)
Eminent Member

🙄🙄🙄🙄🤥🤥🤥

நைஸ் அப்டேட்......

Loading spinner
ReplyQuote
Posted : April 10, 2025 7:07 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top