அத்தியாயம் 16

 
Admin
(@ramya-devi)
Member Admin

 

கதவை திறந்துக் கொண்டு வந்த செஞ்சனை புரியாமல் பார்த்தாள் சங்கவை.

அவளது பாவனையை கண்டு கொள்ளாமல், மேசையில் சாய்ந்து நின்றவன் அவளை அழுத்தமாக பார்த்தான்.

அவன் அமராமல் போகவும் இவளும் படுக்கையில் இருந்து எழுந்து அவனுக்கு எதிராக சுவரில் சாய்ந்து கைகளை கட்டிக் கொண்டு நின்றாள்.

அவளது செயல்களை ஒரு பார்வை பார்த்தவன்,

“உண்மைய தான் சொல்றியா?” கேட்டான்.

“தெளிவா சொல்லுங்க... எதை பத்தி கேக்குறிங்கன்னே தெரியல...”

பெருமூச்சு விட்டவன், “வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க ஐடியா இல்லையா?” இறுதியாக அவளிடம் கேட்டான்.

“இல்ல..”

“அப்போ ரைட் நம்ம கல்யாணத்துக்கு ரெடியாகிடு” என்றவன் வெளியே போய் விட்டான்.

சங்கவைக்கு தான் பெரும் திகைப்பாய் இருந்தது. என்ன சொல்லிட்டு போறாரு இவரு... வேகமாய் அவனோடு பின்னே வந்தவள்,

“புரியல... என்ன திடீர் மாற்றம்” அவனிடமே கேட்டாள்.

அவள் புறம் அழுத்தமாக திரும்பியவன்,

“அதுதான் நீ வேற யாரையும் கல்யாணம் செய்துக்க மாட்டன்னு உடும்பு பிடியா இருக்கியே...”

“அதுக்கு” புருவம் சுருக்கினாள்.

“அதனால உன் வருங்கால மாமியார் பெண் பாவம் பொல்லாது... ஒரு பெண்ணை காதலிச்சு ஏமாத்துவது பாவம்னு கிளாஸ் எடுத்தாங்க”

“அதோட உங்க அம்மாவும் உன் வாழ்க்கையை நான் தான் கெடுத்துட்டதா சொல்றாங்க. சப்போஸ் நீ வேற யாரையாவது திருமணம் செய்துக்குறதா இருந்தா ஓகே. ஆனா நீ அதுக்கு கொஞ்சம் கூட ஒத்துக்க மாட்டிக்கிறன்னு உங்கம்மா ஒரே அழுகை. அது தான் உன்னை கட்டிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்று அவளின் மனதை சுக்கு நூறாக உடைத்துப் போட்டான்.

“செஞ்சா...” அதிர்ந்துப் போனாள். அவன் வாயில் இப்படி ஒரு வார்த்தை வரும். இந்த ஒரு காரணத்துக்காக தான் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முன் வந்தான் என்று அறிந்தவளுக்கு நெருப்பில் குளித்தது போல இருந்தது.

“எல்லோரும் சொல்றதுக்ககவா என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிற?” மனதுக்குள் பெரும் வலி எழுந்தது. நெஞ்சை பிடித்துக் கொண்டவள்,

“செஞ்சா” என்று அழைக்க,

“அது தான் இவ்வளவு நாளா சத்தமே இல்லாம இருந்து என்னை ஆணிவேரோட சாய்க்க வேர்ல வெண்ணி ஊத்திட்டியே... இனி சந்தோசமா இருப்பல்ல...” என்று ஆத்திரத்தின் உச்சியில் நின்று கேட்டவனை மனம் வெதும்பி போய் பார்த்தாள்.

அவனை சாய்க்க அவனது வேரில் வெந்நீர் ஊற்றினேனா.. அதுவும் நானா... கண்கள் சடுதியில் குளமாகியது...

“அபாண்டமா பேசாதீங்க செஞ்சா”

“யாருடி நான் அபாண்டமா பேசுறனா? எல்லோரும் ஒன்னு சேர்ந்து என்னை பாலுங் கிணற்றுள தள்ளி விட பார்க்குறீங்க... அது உனக்கு அபாண்டமா தெரியல. ஆனா நான் பேசுறது மட்டும் உனக்கு அபாண்டமா தெரியுதா?” சீற்றத்துடன் கேட்டவனை நொறுங்கி போய் பார்த்தாள் சங்கவை.

உயிருக்கு உயிராய் காதலித்தவனின் வாயால் இப்படி ஒரு அவச்சொல் கேட்க நேரிடும் என்று அவள் கனவில் கூட எண்ணி இருந்தது இல்லை.

ஆனால் செஞ்சன் அதையும் பேசிவிட்டான். விழிகளை அழுந்த துடைத்துக் கொண்டவள்,

 “சாரி மிஸ்டர் செஞ்சன்.. அப்படி ஒன்னும் நீங்க பாலும் கிணற்றுல விழணும்னு எந்த அவசியமும் இல்லை. என்னை கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு துளி கூட ஆசை இல்லைன்னு இந்த ஒரு உரையாடலிலே நல்லா தெரிஞ்சிக்கிட்டேன்... உங்களுக்கும் எனக்கும் இடையே இனி கல்யாண பேச்சோ காதல் பேச்சோ எதுவும் நடக்காது.. எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்” என்றவள், வேகமாய் வெளியேறி தன் தாயின் முன்பு வந்து நின்றாள்.

அவளது கண்களில் இருந்த அடிபட்ட உணர்வை பார்த்தவருக்கு இதயத்தில் சுருக்கென்று தைத்தது. “பாப்பா” என்று அவர் அழைக்க,

“ஏன்ம்மா நான் உங்களுக்கு பாரமா இருக்கேனா?” கேட்டு முடித்த நேரம், அவளின் கையோடு தன் கையை கோர்த்துக் கொண்ட செஞ்சன்,

“எங்க ரெண்டு பேருக்கும் திருமணம் செய்துக் கொள்ள பூரண சம்மதம்” என்று அறிவித்தான். அதை கேட்டவள் அதிர்ந்து போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவளின் காதுக்கருகே குனிந்து,

“ஓவரா சீன் போடாதடி.. உன் மேல கொலை காண்டுல இருக்கேன்... நீ மட்டும் கையில கிடைச்சா உன்னை என்ன பன்னுவேன்னே தெரியாது” என்ற நேரமே அவளின் கையை தன் கையால் நெரித்தான்.

அவனாக தொட்ட முதல் தொடுகை... அந்த முதல் தொடுகையே வலிக்க வலிக்க இருந்தது. இன்னும் போக போக அவன் அவளை என்னவெல்லாம் செய்வானோ... விக்கித்துப் போனாள் சங்கவை. கை விரல்கள் எல்லாம் அவனது கையில் சிக்குண்டு நெரித்து எடுக்க, வலி உயிர் போனது.

“இதுக்கு தான் இத்தனை நாளா உன்னை விட்டு விலகியே இருந்தேன். ஆனா என்னை எல்லோரும் சேர்ந்து கார்நர் பண்ணி உன்னை என்கிட்டே கொண்டு வந்துட்டாங்க... இனி நோ யூஸ்.. கேட் ரெடி பார் தான் மேரேஜ்... அதுக்கு பிறகு தெரியும் இந்த செஞ்சனை பற்றி உங்க எல்லோருக்கும்.. அதுவரை எல்லோரும் சேர்ந்து ஆடுங்க...” கறுவியவன் சிரித்த முகமாய் எல்லோரையும் பார்த்து திருமணத்துக்கு ஒப்புதல் கொடுத்தான்.

“ஆனா நான் தான் கல்யாணம் வேணான்னு சொல்றனே?” புரியாமல் அவனிடமே கேட்டாள். எதற்கு இவன் திருமணத்துக்கு சம்மதித்தான் என்று.

“எனக்கு இருக்கிறது ஒரே ஒரு உறவு என் அம்மா மட்டும் தான். எனக்கு அவங்க வேணும். அதனால தான் இந்த திருமணம்” என்றான்.

அவனது இந்த பேச்சில் இன்னும் அடி வாங்கியவள் அதன் பிறகு அவனை பார்ப்பதை கூட தவிர்த்து விட்டாள். அன்றைக்கே நிச்சயம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல சின்னதாய் அக்கம் பக்கம் பழகியவர்கள், மற்றும் வாசுகியின் அண்ணன் குடும்பத்தை மட்டும் வர செய்து நண்பகல் போல வெற்றிலை பாக்கு மாற்றிக் கொண்டார்கள்.

அவசர அவசரமாய் அவளுக்கு ஒரு புடவை எடுத்து வந்தான் செஞ்சன். அவ்வளவு அவசரத்திலும் அவளுக்கு பிடித்த வண்ணமாக எடுத்து வந்திருந்தான்.

கூடவே அளவு சரியாக தைக்கப்பட்டு இருந்த ரவிக்கை. எல்லோருமே ஆச்சரியமாய் பார்க்க அவன் யாரையும் கண்டு கொள்ளாமல் தன் போனில் ஆழ்ந்து விட்டான்.

“அது எப்படி மச்சான்.. கல்யாணமே வேணான்னு சொன்ன.. ஆனா அரை மணி நேரத்துல அதுவும் தங்கச்சியோட அளவு துணி கூட இல்லாம கச்சிதமா ரவிக்கை தைச்சிட்டு வந்த...” பரவாசு தலையை சொறிந்துக் கொண்டே கேட்டான்.

“அவசியம் சொல்லனுமா?” புருவத்தை தூக்கி அவன் ஒரு முறை முறைக்க, கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.

அதன் பிறகு அவனிடம் வாயை குடுத்து வாங்கி கட்டிக் கொள்ள அவனுக்கு என்ன ஆசையா?

கொஞ்சமும் உறுத்தாத அந்த காலத்து பட்டு புடவையாக இருந்தது. சிவப்பும் பாசி பருப்பு வண்ணமும் சேர்ந்தார் போல இருந்த அந்த பட்டு புடவை கொஞ்சமும் கனமாக இருக்கவில்லை. தங்க சரிகை அதிகம் இல்லாமல் அங்கும் இங்குமாய் இருப்பது போல வடிவமைப்பில் எல்லோரின் கண்களையும் கவர்ந்து இழுத்தது.

அந்த புடவை அவளுக்கு இன்னும் அழகு சேர்த்தது. தட்டில் வைத்து அவளுக்கு குடுக்க சொல்லி தன் அண்ணனை பணித்தார் வாசுகி.

ஆனால் “நீங்க உங்க கையாள குடுங்க அத்தை” என்று வாசுகிக்கு மரியாதை செய்து அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

அவளுக்கு உதவி செய்ய அவளின் அக்கா வர,

“இல்லக்கா நானே பார்த்துக்குறேன்” என்று சொல்லி தானாகவே புடவை கட்ட ஆரம்பித்தாள். அப்படி பாதி புடவை கட்டிக் கொண்டு இருந்த நேரம் கதவு தட்டப்பட,

“இன்னும் முடிக்கல.. ஒரு பத்து நிமிடம்” என்றாள்.

“ஒரு நிமிடம்..” என்று செஞ்சனின் குரல் அழுத்தமாய் கேட்க, புடவையை அள்ளி தோளில் போட்டு மார்பை மூடிக் கொண்டவள், கதவை திறந்தாள்.

அவளை அரைகுறை உடையுடன் பார்த்தவன்,

“பூ” என்று சொல்லி அவளிடம் ஒரு பந்து பிச்சி பூவை நீட்டினான். அவளது கையில் மொத்தமும் புடவையை பிடித்துக் கொண்டு இருந்ததால் அவளால் வாங்க முடியவில்லை.

“மேசையில வச்சிடுங்க”

“முதல் முறையா வாங்கிட்டு வந்து இருக்கேன்டி” என்று பல்லைக் கடித்தான். மேசையில் வைக்கவா அத்தனை பேரையும் மீறி அவளின் அறைக்குள் நுழைந்தது.

அதுக்காக புடவையை விட்டுட்டு பூவை வாங்க முடியுமா...? உள்ளுக்குள் கேட்டுக் கொண்டாலும் அவனது அழுத்தத்தில் வேறு வழியில்லாது ஒரு கையால் புடவையை பிடித்துக் கொண்டு வலது கையை அவன் புறம் நீட்டினாள் சங்கவை.

அவளது கையில் கொடுத்தவன், “கை வலி எப்படிடி இருக்கு?” என்று கேட்டான். நசுக்குறதையும் நசுக்கிட்டு நலம் வேறு அவன் விசாரிக்க, தலையை மட்டும் ஆட்டினாள்.

அப்பொழுதும் அவன் மேல் அவளுக்கு கோவம் வரவில்லை. எதோ காரணம் இருக்கும் அதனால தான் செஞ்சன் இப்படி நடந்துக் கொள்கிறான் என்று புரிந்துக் கொண்டாள். அவளின் கோவம் இல்லாத முகத்தை பார்த்து விட்டு, கண்களை கீழே இறக்கிய நேரம், சரியாக பிடிக்காமல் போன புடவை அவளின் தோளில் இருந்து சரிந்தது.

அவனது கண்களுக்கு விருந்து ஆக, அவளின் இரவிக்கையை கூர்ந்து பார்த்து விட்டு,

“அளவு சரியா தான் சொல்லி இருக்கேன் போல... எக்ஸ்ட்ரா கொஞ்சம் கூட லூசா இல்ல போல” சொல்லி விட்டு வெளியே போக சங்கவை மூச்சடைத்து நின்றாள்.

பட்டென்று முகம் சிவக்க தன் சேலையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டாள். உடலில் ஒரு நடுக்கம்... பட்டென்று அவளின் தேகத்தில் நூதன உணர்வுகள் பொங்க தொடங்கியது..

புடவையை ஒரு வழியாக கட்டி முடித்து நான்கு முழப் பூவை அழகாக வைத்துக் கொண்டவள் எல்லோரும் அழைக்க சபைக்கு குனிந்த தலையோடு வந்தாள் சங்கவை.

சரியாக அந்த நேரம்,

“தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை

அங்கத்தில் யார் தந்தது...

சந்தத்தில் மாறாத நடையோடு

என் முன்னே யார் வந்தது...

ஆடை ஏன் உன் மேனி அழகை

ஆதிக்கம் செய்கின்றது..

நாளைக்கே ஆனந்த விடுதலை காணட்டும்

காணாத உறவில்...

கை தொட்டும்...

மெய் தொட்டும்....” என்ற பாடல் வரிகள் சற்றே சத்தமாக ஒலிக்க அத்தனை பேரும் ஒருங்கே திரும்பி செஞ்சடையனை பார்த்தார்கள். அவன் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.

அந்த பாடலின் வரிகளில் இருந்த பொருளை அங்கிருந்த அத்தனை பேருக்கும் புரிந்தது. அதோடு சற்று முன்புதானே சங்கவையின் அறைக்கு சென்று வந்தான்.

சங்கவைக்கு முகத்தை எங்கு வைப்பது என்றே தெரியவில்லை. குனிந்த தலையை கொஞ்சமும் நிமிர்த்தவில்லை. முகம் மருதாணியாய் சிவந்துப் போனது.

“அச்சோ மானத்தை வாங்குறார்” இதழ்களை கடித்துக் கொண்டாள். சங்கவை அவளோட பெயர்.. அந்த பெயரோடு வந்த பாடல் வரியும் சரி, அதை தொடர்ந்து சற்று முன்பு நடந்த நிகழ்வுகளும் சரி மிகச்சரியாக ஒத்துப் போக தலையை நிமிர்த்தவே முடியவில்லை அவளால். கூடவே தமிழ் தலை சங்கத்தின் புலவர் விரிசடை கடவுள் சிவன். இவனது பெயரும் செஞ்சடையன்(சிவன்)... எல்லாமே ஒத்துப் போனது பாடலை தேர்வு செய்தவனின் காதலில் பித்தம் கொள்ளாமல் அவளால் இருக்கத்தான் முடியுமா என்ன...

“டைமிங்கல அடிக்கிற மச்சான்” பரவாசு காதோரம் சொல்ல,

வாசுகிக்கு பத்திக் கொண்டு வந்தது. “கல்யாணம் செய்ய மாட்டானாம்... ஆனா மத்ததெல்லாம் நல்லா செய்வானாம்... ஊரை ஏய்க்கிற கேப்மாரி” என்று மகனை முறைத்தார்.

ஆனால் செஞ்சன் எதையும் கண்டு கொள்ளாமல் தன் பெண்ணவளையே விழி எடுக்காது பார்த்து இரசித்தான்.

சங்கவையை சபையில் விழுந்து எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்க சொல்ல, அவளோடு அவனும் வந்து நின்றான்.

“டேய்.. மானத்தை வாங்காதடா” வாசுகி அதட்டினார்.

“கம்பெனி குடுக்கிறேன்” என்றவன் அவளோடு தானும் சேர்ந்து ஆசீர்வாதம் வாங்கினான்.

ஒரு நேரம் சுட்டெரிக்கும் சூரியனாய் இருந்தான். மறு நேரம் குளிர்கின்ற நிலவாய் இருக்கிறான்.

இருந்த இரு வேறு மனநிலை கொண்டவனை சங்கவை தான் பொறுத்து போகணும்.. இன்னும் என்னவெல்லாம் செய்ய போகிறானோ.. காதலிலும் கோவத்திலும் சரி விகிதமே இருக்கும் தன்னவனை எண்ணி பெருமூச்சு விட்டவள் அடுத்து வந்த முகூர்த்தத்துக்கு தயார் ஆனாள்.

Loading spinner
Quote
Topic starter Posted : April 5, 2025 12:00 pm
(@mrsbeena-loganathan)
Trusted Member

தள்ளி இருந்தாய் துடித்துக் கொண்டிருந்தேன்

துணையாய் இருக்கிறாய்   

தவித்துக் கொண்டிருக்கிறேன்...

பார்வையில் படாமல் ஏங்க வைத்தாய்

பக்கம் இருந்து ஏனடா பரிதவிக்க வைக்கிறாய்...

காதலும் இருக்கிறது கோபமும் இருக்கிறது

முறைத்தும் பார்க்கிறாய்

மறுகியும் நிற்கிறாய்...

 

 

 

 

 

Loading spinner
ReplyQuote
Posted : April 5, 2025 2:24 pm
(@gowri)
Estimable Member

அடேய் இதெல்லாம் நல்லா செய்....

ஆன, அவளை திரும்ப திரும்ப காயம் செய்துட்டே இரு....

என்ன தான் நியாயம் உன் பக்கம் இருந்தாலும்....

இது எல்லாம் டூ மச்....

பாவம் அவ😤😤😤😤😤

Loading spinner
ReplyQuote
Posted : April 5, 2025 4:25 pm
(@mathy)
Eminent Member

Accident ல தலையில எங்கயோ பலமா அடிபட்டுடுச்சு போல அதான் நேரத்துக்கு ஒரு மாதிரி பண்ணிட்டு இருக்கான் 🤭🤭🤭🤣🤣🤣🤣🤣

Loading spinner
ReplyQuote
Posted : April 5, 2025 6:09 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top