“அவன் நண்பனையே தூக்கிட்ட.. புது மாப்பிள்ளை வேற... அவன் பொண்டாட்டியையே நீ விலை பேசி வர வச்சு இருக்க... அவன் வேற ரொம்ப காண்டாயிட்டான்..” என்று அசோகன் நிறுத்த,
அதிலிருந்து தயாகரன் தொடர்ந்தான்.
“ஆமா நான் காண்டாகிட்டா நான் நானாவே இருக்க மாட்டேன். இவன் என் ஹனிமூன கூட முழுசா கொண்டாட விடல மச்சான்... அதனால நான் ரொம்ப சூடாயிட்டேன்” என்று துப்பாக்கியை எடுத்து டப்பு டப்பு என்று சுட ஆரம்பித்து விட்டான் அவனை.
அசோகன் கர்வமான புன்னகையுடன் அதை பார்த்து இருந்தான்.
உலகையே ஆட்டிப் படைத்த இருள் நிழலின் தாதா, மாபியா கேங்கின் ஹெட், போதை மருந்தின் தந்தை, வயது பெண்களை பல பண முதலைகளுக்கு விலை பேசி அவர்களின் உடலை விற்றவன், என புகழ் கொண்டு வாழ்ந்தவன், உலகையே இருட்டில் தள்ளும் வேலையில் இருந்தவன், உலக நாடுகளுக்கு இடையே மறைமுககமாக ஆயுதங்களை கொடுத்து போர் வர காரணமாக இருந்தவன், கோடி பேரை தனக்கு கீழே வைத்து போதை, பெண்களை வைத்து பிசினெஸ் செய்தவன் இன்றைக்கு யாருமில்லாமல் அனாதையாக அடையாளம் கூட காண முடியாத அளவுக்கு சிதைந்து செத்து மடிந்தான் அந்த ஷின்.
அவனது உடலை அடையாள தெரியாத அளவுக்கு தயாகரனின் ஆட்கள் கிழித்து கூறு கட்டி நெருப்பில் சுட்டு விட்டார்கள்.
அவனது ஒரு எலும்பு கூட கிடைக்கவில்லை. போதை மருந்து உலகமே ஸ்தம்பித்து போனது ஷின் இல்லாததால். ஷின் தலை மறைவாகி விட்டான் என்று தான் கதை கட்டி இருந்தார்கள் அனைவரும். அதுவும் அவனோடு சேர்ந்த அனைவரையும் கொண்டு குவித்து விட்டதால் சாட்சி சொல்ல யாருமே இல்லை. ஆள் கடல் தான் அவனது வசிப்பிடம் என்பதால் புயல் அடித்து அவனது கப்பல் மூழ்கி இருக்கலாம் என்றும் அனுமானித்தார்கள்.
இப்படி அவரவர் விருப்பபடி ஷின்னின் மரணத்தை காரணம் காட்டினார்கள். ஆனால் அவனது மரணம் மிகவும் கொடூரமாக அல்லவா நிகழ்ந்து இருந்தது. தயாகரன் அவனை சுட்டு வீழ்த்தினாலும் அவனது இறுதி உயிர் மிகவும் கொடுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணி அவன் உயிரோடு இருக்கும் பொழுதே அவனின் உடலை வெட்டி எடுத்தார்கள்.
ஷின்னின் அத்தியாயம் முழுமையாக முடிந்து விட்ட பிறகே இருவரும் வீடு திரும்பினார்கள். அதோடு ஷின்னை பிடித்து தன் அண்ணனிடம் கொடுத்த பிறகு நாட்டின் எல்லையில் இருந்த பனிச்சிகரம் மழையின் காரணமாக உடைந்து மழையோடு மண் சரிவும் ஏற்பட்டு பல பாதிப்புகளை உண்டாக்கி இருக்க அதர்வனின் சேவை அங்கு தேவை படவும் இங்கிருந்த வாக்கிலே தன் படைகளை அழைத்துக் கொண்டு நாட்டுக்கு சேவை யாற்ற கிளம்பி விட்டான்.
போகும் பொழுது தன் தயா, பிரபா என இரு மாப்பிள்ளைகளையும் கட்டி தழுவிக் கொண்டு குடும்பத்தை பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.
குணாவை அவனால் பார்க்க முடியவில்லை. அவனுக்கும் வீட்டுக்கு வர ஆசையாக தான் இருந்தது. ஆனால் அவனுக்கு வேலை சுமை அதிகம் ஆயிற்றே.. அதனால் தன் மனதை இறுக்கிக் கொண்டு புன்னகையுடன் கிளம்பி விட்டான்.
வீட்டுக்கு ஒரு முறை போனாலும் திரும்பி அவனால் பணிக்கு செல்ல முடியாது. அவனது குடும்பம் அவனுக்கு அப்படி ரொம்ப பிடிக்கும். அதனால் தான் பெரியவனை போல இவனும் தன் குடும்பத்தை விட்டு தள்ளியே இருந்தான்.
பெருமூச்சுடன் தன் குடும்பத்து புகைப்படத்தை பார்த்துக் கொண்டே விமானத்தில் பயணம் மேற்கொண்டான்.
“அவனுக்கும் நம்மோட இருக்கணும்னு ஆசைடா” என்று அசோகன் சொல்ல,
“ஆமாம் மச்சான்.. அது அவனோட கண்ணுலையே நல்லா தெரிஞ்சுது.. இன்னும் எத்தனை வருடம் செர்வீஸ் இருக்கு...” கேட்டுக் கொண்டான்.
அசோகன் சொல்ல,
“முடிஞ்ச உடனே முதல்ல அவனுக்கு ஒரு கால் கட்டு போடணும்டா”
“ஆமாம் டா” என்றான் அண்ணனாய்.
“அதுக்கு முன்னாடி உனக்கு ஒரு கால் கட்டு போடணும்டா” என்றான். தயாகரன்.
“என்னடா விளையாடுறியா..? அதுக்கெல்லாம் நான் ஒர்த் இல்ல.. நீ சின்னவனுக்கு பொண்ணு பாரு” என்று நழுவிக் கொண்டான்.
நலுவியவனை நக்கலுடன் பார்த்த தயாகரன்,
“நீ மட்டும் உன் அடங்காப்பிடாரி தங்கச்சியை கொஞ்சம் கூட ஈவு இறக்கம் இல்லாம எனக்கு கட்டி வச்சு என் உயிரை எடுத்ததல்ல.. அதுக்கு பதிலா உன்னை ஒரு கொக்கில சிக்க வைக்கல என் பேரு தயாகரன் இல்ல மச்சான்...” கறுவினான்.
“நீ என்னை வேற எப்படி வேணாலும் பழிவாங்குடா. ஆனா இந்த கல்யாணம் மட்டும் வேணாம்” அவன் அலற,
“அதுக்கு வாய்ப்பு இல்லடா மச்சான். யான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் தான்.. நீ அனுபவித்தே ஆகணும்” என்று அவனின் கழுத்தோடு கைக் கொண்டு இறுக்கிப் பிடித்தவன் தன் சின்ன தம்பி பிரபாகரனையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்.
மூவரும் வீட்டுக்கு வருவதை பிரபா தன் தாய்க்கு அழைத்துக் சொல்ல, அவரோ ஆரத்தி தட்டோடு தயாராக காத்துக் கொண்டு இருந்தார் வாசலில். அதோடு வீட்டில் இருந்த அத்தனை பேரையும் பம்பரமாக சுழற்றி எடுத்தார்.
“யோவ் உள்ள என்ன பண்றீக அடைக்கோழி மாதிரி.. இங்க வெளியே வந்து இந்த சோபாவை ஒழுங்கா போடலாம்ல..” என்று கணவன் சிவலிங்கத்தை கூட விட்டு வைக்கவில்லை.
அந்த நேரம் பக்கத்து வீட்டு செவ்வந்தி,
“எதுக்கு அயித்த இம்புட்டு அளப்பரையை கூட்டிக்கிட்டு இருக்குறவ.. ஏதோ தெக்கத்தி சீமையில இருந்து மகராசன் வர மாதிரி” நக்கலாக கேட்க,
“அடியேய் இடுப்பு ஓடிஞ்சவளே நீ சொன்னாலும் சொல்லாட்டியும் வரவன் தெக்கத்தி சீமையை ஆரசாண்ட மன்னவன் மகராசன் தான்டி” என்ற பொன்மாரி,
“உனக்கு என்னடி தெரியும் அந்த மவராசனை பத்தி.. எடுபட்டவ காலங்காத்தால வந்துட்டா அடுத்த வீட்டுல என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு... போடி போய் உன் புருசனுக்கு முதல்ல காபி தண்ணி வச்சு குடு. அதை விட்டுட்டு அடுத்தவ வீட்டுல அடுப்பு எரியுதா குழம்பு கொதிக்கிதான்னு வந்துட்டா” திட்டி அவளை அனுப்பியவர்,
“எனக்குன்னே காலங்காத்தால எங்க இருந்து தான் வருவாளுங்களோ” பொறுமியவரை பார்த்துக் கொண்டே வேலை செய்துக் கொண்டு இருந்தார்கள் அக்கா தங்கச்சி மூவரும்.
“எதுக்குடி இந்த அத்தை இவ்வளவு பில்டப் பண்ணிட்டு இருக்காங்க? அப்படி யாரு தான் வீட்டுக்கு வராங்களாம்.. இவங்க குடுக்குற பில்டப்பை பார்த்தா ரொம்ப ஓவரா இருக்கு” பிறை குறிஞ்சியிடம் எரிச்சலுடன் கேட்டாள்.
“எனக்கு மட்டும் என்னடி தெரியும்? நானும் உன் கூட தானே இருக்கேன்” என்றவள், தன் அக்காவை பார்த்து, “ஏன் அக்கா உனக்கு எதுவும் விசயம் தெரியுமா?” கேட்டாள்.
“உங்க மாமா வருவாரா இருக்கும். ஆனா அவருக்காக இப்படி எல்லாம் அத்தை பில்டப் பண்ண மாட்டாங்களே..” சொன்னவளுக்கு தன் அண்ணன் வருவானோ என்று தோன்றியது. ஆனால் அதை சொல்ல முடியாதே. ஒருவேளை வரவில்லை என்றால் எல்லோருக்கும் ஏமாற்றமாக போய் விடுமே.. ஆசை காட்டி மோசம் செய்தது போல ஆகிவிடுமே என்று எண்ணியவள்,
“வந்தா யாரு என்னன்னு விசயம் தெரியப்போகுது... அப்போ பார்த்துக்கலாம்.. இப்போ இந்த வடையை தட்டிப் போடுங்க ரெண்டு பேரும். கருகாம எடுங்க. இல்லன்னா அத்தை அதுக்கு ரெண்டு பேச்சு பேசுவாங்க.. நான் போய் நாட்டு கோழி வறுவல் ரெடியான்னு பார்க்கிறேன்” என்று பின் பக்கம் போய் விட்டாள் தயாழினி.
பெரிய விருந்துக்கே ஏற்பாடு செய்து இருந்தார் பொன்மாரி.
“யாரு அண்ணி வரா.. இவ்வளவு பரபரப்பா இருக்கீங்க? இவ்வளவு ஏற்பாடு பண்ணி இருக்கீங்க” மலர் விசாரிக்க,
“எல்லாம் ரொம்ப வேண்டியவங்க தான் மலர்... வந்தா தெரியாப் போகுது” என்று பெரிய மருமகள் சொன்னதையே தன் சம்மந்திக்கும் சொன்னவர் தெருவையே பார்த்துக் கொண்டு இருந்தார்.
அவருக்கு மட்டும் தான் தெரியும் அசோகன் வீட்டுக்கு வருவது. வேற யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று பிரபா சொல்லி இருக்க, இவரும் இரகசியம் காத்தார்.
கல்லூரி காலங்களில் அசோகன் தயாகரனோடு அவனின் வீட்டுக்கு வந்து பொன்மாரியிடம் நெருக்கமாக பழகி இருந்தான்.
அவனது வீட்டில் யாரிடமும் பழகாதவன் இங்கே பொன்மாரியின் கவனிப்பிலும் இழுத்து வைத்து அவர் பேசும் பேச்சிலும் அவரிடம் பழகாமல் அவனால் இருக்க முடியவில்லை.
விலகினாலும் அவர் விடாமல் இழுத்து வைத்து பேசுவார். அன்பு காட்டுவார். அவரின் அன்பில் இவனும் இன்னொரு மகனாகிப் போனான் அவருக்கு. அதனால் தான் இந்த ஏற்பாடு. அதுவும் இத்தனை மாதங்களாக எவனோ ஒரு அயோக்கியனிடம் சிறை இருந்ததை கேட்டு மனம் துடித்துப் போனவர், அவனை சிறப்பகா வரவேற்கவே இத்தனை ஏற்பாடு.
அசோகனும் அவருக்கு ஒரு மகன் தானே. பிறகு இந்த கவனிப்பு கூட இல்லன்னா எப்படி.
தெருவை பார்த்துக் கொண்டு இருந்தவரின் கண்களில் கார் தென்பட, பரப்பு ஆனார்.
“ஏய் மருமக பொண்ணுகளா உள்ள என்ன பண்றீங்க? வெளில வாங்க. அப்படியே உங்க ஆத்தா காரியையும் அழைச்சுட்டு வாங்க. உங்க அப்பா எங்க போனாரு.. அவரையும் வர சொல்லுங்க” என்று சத்தம் போட்டவர், கையில் ஆராத்தி தட்டுடன் வாசலில் இறங்கி நின்றார்.
அவரை தொடர்ந்து எல்லோரும் ஈரக் கையை முந்தானையில் துடைத்துக் கொண்டு வந்தார்கள் பெண்கள்.
“இந்த கற்பூரத்தை ஏற்று..” தயாழினியிடம் சொன்னவர்,
“இந்தா மூணு பேரும் சேர்ந்து சுற்றுங்க” என்று மூணு மருமகள்களிடமும் குடுத்தவர், புன்னகை முகமாக நகர்ந்து மலரின் அருகில் நின்றுக் கொண்டார். அதே போல தன் கணவனுக்கு கண்ணை காட்ட, அவரும் வேகமாய் சந்தானம் அருகில் நின்றுக் கொண்டார்.
“அடேய் மகனே” என்று குணாவை விரட்ட,
“நான் ஆல்ரெடி இன்னைக்கு வேலைக்கு லீவ் போட்டுட்டேன் ம்மா.. அதே போல கதவையும் திறந்து விட ரெடியா இருக்கேன்” என்று அவனும் வாசலில் அவர்களோடு வந்து நின்று விட்டான். இல்லை என்றால் பொன்மாரி சும்மாவா இருப்பார். அரட்டி எடுத்து விடுவாரே. அதோடு வருவது அவனின் மூத்த மச்சான்.. கூடவே அவனது சகோதரர்கள். அவனுக்குள்ளும் இந்த ஒரு மாத காலமாக அவர்களை பார்க்காமல் விட்டதில் உள்ளுக்குள் அலை இருக்கும் தானே..
கார் வந்து நின்றவுடன் அதில் இருந்து முதலில் பிரபாகரன், அடுத்து தயாகரன் இறங்க எல்லோரின் முகத்திலும் மகிழ்ச்சி நிரம்பியது.
ஆனால் தயாழினி மட்டும் முகத்தை திருப்பிக் கொண்டாள். பிறை ஆசையாக பிரபாகரனை பார்த்தாள். அவனின் விழிகளில் ஏகத்துக்கும் மின்னல் வந்துப் போனது மனைவியின் பார்வையில்.
அதை கடுப்புடன் பார்த்த தயாகரன் தன் மனைவியை முறைத்துப் பார்த்தான்.
“நீ முறைச்சா முறைச்சுக்க.. நான் கோவமா தான் இருப்பேன்” என்று முகத்தை வெட்டிக் கொண்டாள் தயாழினி.
“வசமா மாட்டுடி.. அப்புறம் வச்சுக்குறேன் உன்னை. என்கிட்டையே முகத்தை திருப்புற இல்ல” கடுப்படித்துக் கொண்டான்.
ஆராத்தி சுற்ற ரெடியாக பெண்கள் மூவரும் முன்னே வர,
சரியாக அந்த நேரம் இன்னொரு கதவு திறந்து அதில் இருந்து அசோகன் இறங்கினான்.
அவன் இறங்கவும் பார்த்துக் கொண்டு இருந்த அவனின் குடும்பத்தார்களுக்கு பெரும் அதிர்வு.. அதுவும் அவனை பல வருடங்களுக்கு முன்பு பார்த்தது. இப்போ இந்த நிமிடம் எதிர்பார்க்காத அதிர்ச்சியில் உறைந்துப் போனார்கள்.
மலர் மயங்கி சரிந்தார். பொன்மாரி அவரை தாங்கிக் கொள்ள, சந்தானம் தடுமாறினார். அவரை சிவலிங்கம் பிடித்துக் கொண்டார்.
தங்கைகள் மூவரும் தங்களின் அண்ணனை பார்த்த நொடியில் கையில் இருந்த ஆரத்தி தட்டு கீழே விழுந்து கொட்டியது.
ஹேய் என்று குணா தான் அதை கீழே விழாமல் இடையில் பிடித்துக் கொண்டான். அவனும் இப்படி தான் நிகழும் என்று எண்ணி இருந்தானே. அதனால் சுதாரித்து தாவி வந்து பிடித்துக் கொண்டான்.
அனைவரின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்த அசோகனுக்கு குற்ற உணவர்வாய் போனது..
இவர்களிடம் எல்லாத்தையும் சொல்லிட்டு செய்து இருக்கலாமே என்று தோன்றியது.
தொடரும்..