மிருதியின் கோவம் எதற்கு என்று புரிந்துக் கொண்டான் மிருதன். வீட்டில் இத்தனை வருடமாக அப்பன் தனக்கு பிறந்த பிள்ளை மீது சந்தேகம் கொண்டு வாட்டி வதைப்பதுக் கூட தெரியாமல் வீட்டில் அனைவரும் இருந்து இருக்கிறார்களே என்று அவள் கொண்ட வேதனை நன்கு புரிய தான் செய்தது. ஆனால் அதில் பாதி தவறு தன்னுடையதும் இருக்கிறதே... மிருதன் வெளிப்படையாக மகேந்திரனின் செயல்களை எல்லாம் காட்டிக் கொடுத்து இருந்தால் இந்த அளவு வந்து இருக்காதே...
இவ்வளவு வேதனையும் இருந்து இருக்காதே...! ஆனால் அதற்கு பிறகு சம்பூர்ணவதியின் வாழ்க்கை என்ன ஆகும். ஏற்கனவே முதல் கணவனோடு ஆறு மாத கால வாழ்க்கை. அதில் எந்த மாதிரி வாழ்ந்தார் என்று எதுவும் தெரியாது.
இப்பொழுது தான் மகேந்திரனோடு ஒரு வாழ்க்கை ஆரம்பம் ஆகி இருக்கிறது. அப்படி இருக்கையில் தன் தாயின் வாழ்க்கையை எப்படி அவனே சிதைக்க முடியும்.
ஓரளவு தனக்கு என்ன நடக்கிறது என்று தெரிய வரும் பொழுதே அவனுக்கு பெருவுடையார் சம்பூர்ணவதியின் வாழ்க்கையை பற்றி அடிக் கோடிட்டு காட்டி இருந்தார். எனவே அந்த வயதிலே அதிக பக்குவம் கொண்டு இருந்தான்.
அந்த பக்குவமே அனைவைருக்கும் நல்லதை செய்ய தூண்டியதோ என்னவோ..! எல்லாவற்றையும் தனக்குள் போட்டு புதைக்குக் கொண்டு வெளியே கம்பீரமாக நிமிர்ந்து நின்றான்.
அதோடு மகேந்திரன் சம்பூர்ணவதியிடம் காசுக்காக வேண்டியவது ஒழுக்கமாக அன்பாக இருந்தார். சம்முவை தவிர அவரது பார்வை வேறு எங்கும் நகராததை மிருதனே வயது வந்த பிறகு கவனித்து இருக்கிறான்.
அதே போல சம்பூர்ணவதியும் அவரிடம் அன்பாக தான் இருந்தார். எங்கும் அவரது மரியாதையை குறைய விட்டதே இல்லை. ஏன் பிள்ளைகள் கொஞ்சமே கொஞ்சம் குரல் உயர்த்தினாலும் சம்பூர்ணவதி கண்டித்து விடுவார்.
எனவே அவர்களின் இல்வாழ்க்கை எங்கும் வீறல் விட கூடாது என்பதற்காக தன் மீது மொத்த பாரத்தை தன் முதுகில் சுமந்துக் கொண்டான்.
தன் முதல் பிள்ளை முதல் கணவனுக்கு பிறந்ததா இல்லை இரண்டாவது கணவனுக்கு பிறந்ததா என்ற சந்தேகத்தில் வாழும் கணவனின் மனதை மட்டும் அறிய நேர்ந்தால் சம்பூர்ணவதியின் வேதனை நிறைந்த முகத்தை தாங்க முடியும்.
பெருவுடையாளின் உடல் நிலைக்கு இந்த விசயத்தை எல்லாம் ஏற்க இயலுமா என்று எண்ணினான். அதனால் எதுவும் எதையும் காட்டிக் கொள்ளாமல் பாறையை முழுங்கி தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கிறான்.
கடற்கரை காற்றில் மனதில் உள்ள புழுக்கம் எல்லாம் கரைந்துப் போக அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். “வேற எங்கும் போகனுமா?” கேட்டான்.
“இல்ல வேணாம்... வீட்டுக்கு போகலாம்” என்றாள்.
அதன் பிறகு இருவரும் வீட்டுக்கு வந்தார்கள். பதினோரு மணி வீட்டுக்கு திரும்பும் போது. எல்லோரும் ஏதோ ஒரு வகை வேலையில் பிசியாக இருக்க இவர்கள் இருவரும் வெட்டியாக இருந்தார்கள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சிரிப்பு தான் வந்தது.
“ஒரு மூவி வந்து இருக்கு பார்க்கலாமா?” என்று கேட்டான்.
“ம்ம்...” என்றவள் அவனது பயன் பாட்டுக்கு இருந்த நூலகத்தில் டிவியை ஆன் பண்ணி பார்க்க ஆரம்பித்தார்கள். நீள் இருக்கையில் அமர்ந்து பார்க்க அவனை இழுத்து தன் மடியில் போட்டுக் கொண்டவள் அவனது முடியை கோதி விட்டுக் கொண்டே இவள் படம் பார்க்க அவன் நிமிர்ந்து அவளை பார்த்தான்.
“என்னவாம் டைரெக்டர் சாருக்கு?”
“ப்ச்..” என்றான். “ம்கும் இதை சொல்லலன்னா அது மிருதஞ்சயன் இல்லையே..!” என்று சொன்னவள் அவனின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் குடுத்தாள்.
அவன் இன்னும் நன்றாக நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டான். படம் ஓடிக்கொண்டு இருந்தது. இருவரும் அதில் லயித்துப் போனார்கள். எவ்வளவு நேரம் அப்படி இருந்தார்களோ அந்த நேரம் மகேந்திரன் உள்ளே நுழைந்தார்.
“ம்ம் புருசனும் பொண்டாட்டிக்கும் வேலை இல்லாம நல்லா தான் பொழுது போக்கிக்கிட்டு இருக்கீங்க போல..” என்று நக்கல் பேச்சுடன் வந்தார்.
அவர் வரவும் அவனை எழுப்பி விட துடித்த கரங்களை அடக்கிக் கொண்டு மிருதி அப்படியே இருக்க மிருதன் தானாகவே எழுவான் என்று பார்த்தாள்.
ஆனால் அவன் எழவே இல்லை... இன்னும் வாகாக சொகுசாக படுத்துக் கொண்டு வந்தவரை ஒரு பார்வை பார்த்தான். அவனது ரியாக்ஷன் அவ்வளவு தான். மீண்டும் படத்தில் தன் பார்வையை பதித்துக் கொண்டான்.
அன்றைக்கு தாய் மடியிலும் பாட்டி மடியிலும் படுத்து இருந்தவனை எழுப்பி விட்டவருக்கு இன்று என்ன சொல்லி அவனை எழுப்பி விட முடியுமாம். அந்த தெனாவட்டு அவனுக்கு மிக அதிகமாகவே இருந்தது.
இவர்கள் இருவரும் இருவரும் இப்படி இவ்வளவு நெருக்கமாக இருப்பதை பார்த்து ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. மிருதன் நன்றாகவே இருக்க கூடாது என்று என்னும் ஒரே ஆள் இவர் மட்டும் தான்.
அதுக்காக எனென்ன வேலையெல்லாம் செய்து இருக்கிறார் என்று மிருதனுக்கு மட்டுமே தெரியும். மிருதனை காதலிக்கும் பெண்ணை வைத்தே மிக மோசமாக மிருதனை பழி வாங்கினார்.
மிருதனின் திறமைக்கு அவன் என்றைக்கோ சினிமா இயக்குனராக மாறி இருக்க வேண்டும். ஆனால் அவனை அவ்விடம் செல்ல விடாமல் தன் மனைவியை வைத்தே அவனை பிளாக்மெயில் செய்து அவனை மூலையில் முடக்கிப் போட்டார்.
ஆனாலும் அவன் தனக்கு கிடைத்த வேலையை சிறப்பாக செய்து சிங்கம் எங்குப் போனாலும் சிங்கம் தான் என்பதை நிருபித்து இருந்தான். அதில் பாதி காண்டு அவருக்கு.
அவனையே சுற்றி வரும் மிருதியை இயக்குனராக மாற்ற முடிவெடுத்ததன் பின்னணி, மிருதன் மிருதியை திருமணம் செய்ய அவர் இட்ட முட்டுக் கட்டை.
அதாவது மிருதனை அடுத்து வெள்ளி திரையில் பார்க்க வேண்டும் என்ற பெருவுடையார் அதற்கு ஏற்பாடு செய்ய, அதை எப்படிதடுக்க என்று யோசித்த மகேந்திரன் உடனடியாக மிருதியை அழைத்து, இரண்டு வருட ஒப்பந்தம் போட்டு அவளை இயக்குனராக மாற்றி விட்டார்.
அதன் பிறகு மிருதனை அழைத்து, தங்களின் நிறுவனத்தில் என்று இல்லை தென் மாநிலங்களின் எங்கும் அவன் இயக்குனராக வேலை செய்ய கூடாது என்று கூறி விட்டார்.
இல்லை என்றால் மிருதி இரண்டு வருட ஒப்பந்தம் போட்டு இருந்த பைலை காட்டி “அவள் மீது பொய்யை கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவேன். உன்னோட நெருங்கிய தோழியாச்சே” என்று நக்கல் பேசினார்.
அவரை கூர்ந்துப் பார்த்தவன் ஒன்றும் இதழ்களை நக்கலாக வளைத்து விட்டு வெளியே போய் விட்டான். அவரோடு அவன் பேசுவதே இல்லை. பதிலடியாக அதுவும் எல்லோரும் இருக்கும் பொழுது பேசுவானே தவிர தனிப்பட்ட முறையில் அவனது வாய் முத்துக்கள் அவருக்காக சிந்தவே சிந்தாது.
ஏற்கனவே ஒருதலை காதலில் இருக்கும் பெண்ணவள் அவளின் உயரத்தை அதிகப்படுத்தி விட்டால் இவருவருக்குள்ளும் இன்னும் முட்டிக்கும். ஈகோ க்லாஷ் ஆகும் என்று எண்ணினார்.
ஆனால் மிருதன் ஆறு மாதம் சத்தமில்லாமல் இருந்து விட்டு அவளோடு திருமணத்தை நிச்சயம் செய்துக் கொண்டான். நீ எங்களை பிரிக்கணும்னு நினைக்கும் முன்னாடியே நாங்க இன்னும் அதிக வலிமையோடு ஒற்றுமையா இருப்போம் எனபது போல காட்டி விட்டான். அதோடு நீ போடும் சின்ன கோட்டை அழிக்காமலே அதை விட பெரிய கோட்டை போட்டு என் வலிமையை உனக்கு காட்டாமலும் போக மாட்டேன் என்பது போல அவனது அனைத்து செயல்களும் இருந்தது.
சரி திருமணம் ஆகிவிட்டது என்று அவர் அமைதியாக இருக்காமல் இருவருக்கும் வேலை இல்லாமல் செய்ய பார்த்தார். ஆனால் மிருதன் சும்மா இருப்பானா தன் மனைவிக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துக் கொடுத்தான்.
இதோ இன்னொரு படத்துக்கு அவளை இயக்குனராக சீக்கிரம் பணிகளை பார்க்க வைத்து விட்டான். அதை எதிர் பார்க்காத மகேந்திரன் பல்லைக் கடித்தார். ஆனால் இதையும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்த எண்ணியவர் மறுபடியும் இருவருக்குள்ளும் கலகத்தை திணிக்க வந்து இருக்கிறார்.
“என்னம்மா வேலையை இன்னும் ஆரம்பிக்கலையா? ரொம்ப ரிலக்ஸ்டா இருக்க மாதிரி இருக்கு” என்று கேட்டபடி அவர்களின் எதிரில் வந்து அமர்ந்தார்.
“என்ன வேலைங்க சார்” என்றாள். ஏனோ அவரை மாமா என்று அழைக்க அவளால் முடியவில்லை. சம்பூர்ணவதியாயை முதலில் மேடம் என்று தான் அழைத்தாள். ஆனால் அவர் அத்தை என்று கூப்பிடு என்று சொல்லி விட அதன் பிறகு இயல்பாக அவரை அழைத்து விட்டாள்.
ஆனால் இவரை அப்படி அவள் என்றைக்கும் உரிமையாகவே அழைக்கவே மாட்டாள் என்பதை அறிந்த மிருதனின் இதழ்களில் ஏளன புன்னகை வந்தது மகேந்திரனை பார்த்து.
அதை பார்த்து அவருக்கு கோவம் வர,
“நான் உன் மாமனார் ம்மா” என்றார் நிதானமாக.
“என் புருசன் முதல்ல உங்களை அப்பான்னு கூப்பிடட்டும் சார். பிறகு வாய் நிறைய என்ன என் மனம் நிறைய உங்களை மாமான்னு கூப்பிடுறேன்” என்றாள் விருட்டென்று.
அதை கேட்டவர் சட்டென்று அதிர்ந்துப் போனார். மிருதஞ்சயனை பார்த்தார் அதிர்வாக. அவன் அதை சிறிதும் கண்டுக் கொள்ளாமல்,
“ஏய் முறுக்கு எடுத்து ஊட்டி விடுடி...” என்று அதிகாரம் செய்தான்.
“ம்கும்... அதை கூட எடுத்து சாப்பிட தெரியாதா...? இதையும் நான் தான் ஊட்டி விடணுமா? வரவர உங்களுக்கு ரொம்ப சோம்பேறி தனமா போயிடுச்சு மிஸ்டர் மிருதன்” என்று சொன்னவளின் கரங்கள் அவனுக்கு முறுக்கை சிறிய சிறிய துண்டாக உடைத்து ஊட்டி விட்டுக் கொண்டு இருந்தது.
“இங்க என்ன நடக்குது... அப்போ இந்த பொண்ணுக்கு எல்லாமே தெரியுமா?” லேசாய் வேர்க்க ஆரம்பித்தது. ஆனாலும் மிருதனை பற்றி அவருக்கு நன்றாக தெரியுமே அவன் யாரிடமும் வாயே திறக்க மாட்டானே... என்று சிந்தனை வயப்பட்டார்.
“நீங்க முறுக்கு சாப்பிடுறீங்களா சார்...” அவரிடம் கேட்டாளே தவிர இந்தாங்க என்று எடுத்து நீட்டவில்லை. எல்லாவற்றையும் மிருதனுக்கே ஊட்டி விட்டுக் கொண்டு இருந்தாள்.
அவர்களின் மகிழ்ச்சியை பார்த்துக் கொண்டு இருந்தவருக்கு மனதில் நமநமவென ஒரே அறிப்பாக இருக்க என்ன செய்வது என்று யோசித்தார்.
அதற்கு ஒரே வழி மிருதியை ஷூட்டிங் ஸ்பாட்டக்கு வர வைப்பது தான் என்று யோசித்தவர்,
“நாளையில இருந்து ப்ராஜெக்ட்டை ஸ்டார் செய்திடு மிருதி... இன்னும் பதினைந்து நாள்ல படத்துக்கு பூசை போடனும்” என்று சொன்னவரை நிமிர்ந்து பார்த்தவள்,
“இல்ல சார் நானும் என் கணவனும் அமெரிக்கா போகப் போறோம். ஒரு மாதம் ஹனிமூன் பேக்கேஜ் போட்டு இருக்காரு. சோ அது முடிஞ்சா பிறகு தான் நான் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணுவேன்.” என்றவளை என்ன செய்வது என்று தெரியாமல் அவர் தடுமாறினார்.
அவர் செய்த ஒவ்வொரு காரியமும் மிருதன் மிருதியின் மூலம் முறியடிக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறதே யோசித்தவர் அவர்களை வெறிக்க வெறிக்கப் பார்த்தார்.
“அண்ட் இன்னொரு விசயம் சார்...” என்று அவள் தயங்க,
“இன்னும் என்ன...?” என்று எரிச்சல் பட்டார்.
“அது வந்து நாங்க புதிதா திருமணம் ஆனவங்க”
“அதுக்கென்ன...?” என்றார் வெடுக்கென்று.
“அதுல தான் சார் மேட்டரே இருக்கு. நீங்க இப்படி அடிக்கடி வர்ரதுனலா எங்க ப்ரைவசி ரொம்ப பாதிக்கிறது. சோ ப்ளீஸ்...” என்று அவள் வாசலை கைக் காட்ட மிருதனே அதிர்ந்து விட்டான். அவளை நிமிர்ந்து பார்த்தான். ஆனால் அவள் அவனை பார்க்க வில்லை.
மகேந்திரனுக்கு முகம் கருத்துப் போய் விட,
‘எப்படியும் உன் குடுமி என் கையில தான் இருக்க போவுது. அப்போ பார்த்துக்குறேன் உன்னை. ப்ரொட்யூசர் ன்ற பேர்ல உன்னை ஆட்டி வைக்கல என் பெயரை நான் மாத்திக்கிறேன்’ என்று கருவிக் கொண்டவர் அங்கிருந்து நொடி கூட தாமதிக்காமல் கிளம்பி விட்டார்.
“இதை உன் கிட்ட நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலடி” என்று பல்லைக் கடித்தான்.
“உங்களுக்கு எப்படியோ எனக்கு தெரியாதுங்க. ஆனா எனக்கு எல்லாமே நீங்க தான். உங்களை வேதனை படுத்துற யாரும் என் உறவா நான் என்னைக்கும் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். தெரிந்தே உங்க ப்யூச்சரை ஸ்பாயில் பண்ணிக்கிட்டு இருக்குறவரை என்னால என்னைக்கும் மன்னிக்கவே முடியாது. உங்களுக்கும் எனக்கும் நடுவுல பிரிவு வரணும்னு தானே எனக்கு இயக்குனர் பதவியை குடுத்தாரு. இது கூடவா எனக்கு தெரியாது...” என்று கலங்கிய கண்களுடன் சொன்னவளை ஆழ்ந்துப் பார்த்தான்.
“உங்களை உயரத்துல கொண்டு போய் உட்கார சொல்லல... ஆனா எனக்காக உங்க உயரத்தை நீங்க கூட்டி சிகரம் தொடணும். இதோ இப்படி காலடியில போட்டே வச்சு இருக்கணும்னு நினைக்கிறவர் முன்னாடி உங்களை நீங்க நிரூபிக்கணும் ங்க. என் புருசன் யாருக்கும் சளைச்சவர் இல்லைன்னு காட்டணும். நீங்க என்ன தான் எவ்வளவு தான் முட்டுக் கட்டை போட்டாலும் என்னவர் எல்லாவற்றையும் தாண்டி முரியடிச்சி வெற்றியை நிலை நாட்டுவார்னு காட்டணும்” என்று விழிகளில் நீர் நிறைய சொன்னவளை ஒரு இதழ் வளைவுடன் ஏறிட்டான். அவ்வளவு தான் அவனது வெளிப்பாடு.
அதில் அவளுக்கு மனம் சுணங்கிப் போனாலும் எதுவும் பேசவில்லை...
அடுத்த சில நாட்களில் இருவரும் அமெரிக்காவுக்கு ஹனிமூன் கிளம்பினார்கள்.