நினைவு முழுவதுமாக இழந்து தோய்ந்து விழும் நேரம் அவளின் கரத்தை வலிமையான ஒரு கரம் பற்றியது. அந்த தொடுகையில் நழுவிய நினைவுகளை இழுத்துக் கட்டி ஒன்று கூட்டி விழிகளை அழுத்தமாக திறந்து பார்த்தாள்.
எதிரில் மிருதஞ்சயன் நின்றிருந்தான். அவனது அழுத்தமான பிடியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவள் தடுமாறாமல் நின்றுக் கொண்டாள். யாரை எதிர் பார்த்து இந்த நான்கு மாத காலங்களையும் ஓட்டினாளோ அவனே அவளின் எதிரில் முழுமையான ஆளுமையான தோற்றத்துடன்... விழிகளை அவனிடமிருந்து விலக்கவே முடியவில்லை அவளால்.
கம்பீரமான தோற்றத்தில் இளநீள நிற சட்டையில் டக் இன் செய்து சேன்டில் நிற பேண்ட்டில் கவர்ச்சியான தோற்றத்தோடு புது மண மகனுக்கான மிடுக்கான தோற்றத்தில் கழுத்தில் சங்கிலியும், கையில் தங்க காப்பும், விரல்களில் அவன் எப்பொழுதும் அணியும் சூரியன் பதித்த மோதரமும், விழிகளில் கூர்மையான பார்வையோடு நின்று இருந்தவனை காண காண தீரா மயக்கம் நொடியில் தீர்ந்துப் போனது போல இருந்தது...
காற்றில் ஆடும் சிகை, முறுக்கி விட்ட மீசை, கிளீன் சேவில் பச்சக்கென மனதில் ஒட்டிக் கொண்டான் மிருதன். கண்களை சிமிட்டவே முடியவில்லை அவளால். அவளின் விழிகளில் தெரிந்த பாவனைகளை படித்தவனின் விழிகள் அவளை மட்டுமே தீர்க்கமாய் பார்த்தது.
“நம்பலையா?” ஒரே ஒரு கேள்வியில் தன் ஒட்டு மொத்த கோவத்தையும் காட்டினான். அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு அவன் கேட்ட கேள்வியில் சுருக்கென்று உள்ளுக்குள் ஏதோ தைத்தது. அவனை வெறித்து பார்த்தாள்.
மிருதன் அவளை பற்றி இருந்த கரத்தை விடாமல் இடது கையை மட்டும் நீட்டினான் அவளை பார்த்துக் கொண்டே. அவன் கரத்தில் பிரெஷ் ஜூஸ் நீட்டினான் சக்தி.
அதை வாங்கி அவளிடம் நீட்டினான் மிருதன்.
“உண்ணாவிரதத்தை முடிச்சுக்கோ...” என்றான் ஏளனமாக. அவனது ஏளனத்தில் கண்கள் கலங்க, சட்டென்று தன் கண்ணீரை அவன் பார்க்க விடாமல் திரும்பிக் கொண்டாள். பட்டென்று கன்னத்தில் இறங்கியது கண்ணீர்.
அதை பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் மீண்டும் அவனது கண்களை பார்த்தவள் அவனது கரத்தை தன் மீது இருந்து எடுத்து விட பார்த்தாள்.
அது அவ்வளவு எளிதில் அவளால் செய்ய முடியவில்லை. கடுப்புடன் அவனை பார்த்தாள். அவன் கண்கள் ஜூசை காட்டியது. அவள் மாட்டேன் என்று தலையை ஆட்டினாள்.
அதற்குள் மிருளாணி அவளின் காதோரம்,
“எல்லோரும் இங்க தான் பார்த்துக்கிட்டு இருக்காங்க அண்ணி.. ப்ளீஸ்...” என்று சொல்ல அப்பொழுது தான் தாங்கள் எங்க நிற்கிறோம் என்றே புரிந்தது அவளுக்கு.
சுற்றிலும் ஏகப்பட்ட பேர்.. எல்லோருமே தென்னிந்தியா பிரபலங்கள்... அவர்களோடு தொழில் துறை வட்டாரங்கள்... ஐந்து மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், உயர் காவலதிகாரிகள், சினிமா வட்டார ஆட்கள், அது போக இரு வீட்டாரின் நெருங்கிய சொந்தங்கள் என எல்லோருமே அங்கு கூடி இருந்தார்கள்.
அவர்களின் மத்தியில் இந்த இழுபறி வேண்டுமா என்று மிருளாணி பொருளோடு உரைக்க, வேறு வழியின்றி மிருதன் நீட்டிய ஜூசை வாங்கிக் கொண்டாள்.
“குடி...” என்று பார்வையாலே கட்டளை இட்டான். அவனது இந்த அதிகாரத்தில் உள்ளம் கோவப்பட்டாலும் வெளியே அதை காட்டிக் கொள்ளாமல் அவனின் பொல்லாத பேச்சுக்கு தலையசைக்கிறேனே என்று உள்ளம் குமுறியது. ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சுற்றி இருக்கும் கேமராக்களுக்கு புன்னகை முகமாக காட்சி அளித்தவள் அவன் நீட்டிய ஜூசை வாங்கி பருகினாள்.
குடித்தவள் மீதி பாதியை அவனிடம் நீட்டினாள். அதை யாருமே எதிர் பார்க்கவில்லை. ஏனெனில் மிருதன் யாருடைய எச்சிலையும் சாப்பிட மாட்டான். அப்படி பட்டவனிடம் பாதி குடித்து விட்டு மீதியை நீட்டவும் அவனை தெரிந்த அத்தனை பேருக்கும் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.
ஏனெனில் அத்தனை பேரின் மத்தியிலும் அவனால் மறுக்க முடியாது. கட்டாயமாக குடித்து தான் ஆகவேண்டும். அதை விட மறுத்தால் இந்த ஒரு நீயூசே ஆயிரம் வதந்திகளுக்கு விதையாகிப் போகும். தனக்கு ஒவ்வாததை மிருதஞ்சயன் செய்யவும் மாட்டான். அது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தினாலும் சரி. தன்னை மாற்றிக் கொள்ளவே மாட்டான்.
அப்படி பட்டவனை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்தி இருந்தவளை கண்டு எல்லோருக்குமே வியப்பு தான்.
சம்பூர்ணவதி, பெருவுடையார், பெருவுடையாள், மகேந்திரன், மிருளாணி, மற்றும் நண்பர்கள் அதோடு அவனது குணம் அறிந்த மற்றவர்கள் என அங்கு நடக்கும் நிகழ்வுகளை விழிகள் எடுக்காமல் பார்த்தார்கள்.
தன்னை பற்றி நன்றாக தெரிந்திருந்தும் தன்னிடம் அவளின் வாய் பட்ட எச்சில் ருசி படிந்த ஜூஸை தன்னிடம் நீட்டுகிறாள் என்பதை ஆழ்ந்த விழிகளுடன் அவளை பார்த்தான்.
அந்த கண்களில் படிந்த பாவனையை இப்பொழுது இவள் படித்தாள் மிக நிதானமாக. தன் விழியில் படிந்ததை அவள் படிக்கிறாள் என்று உணர்ந்தவன் அவள் படிக்கவே தன் உணர்வுகளை படரவிட்டான் போலும்.
ஒற்றை புருவத்தை உயர்த்தி அவனிடம் ம்ம்ம் என்பது போல பாவனை செய்தாள்.
“அண்ணி நீ என்ன பண்ற..? காட் இத்தனை பேருக்கு மத்தியிலும் இதென்ன..?” என்று அவள் படபடக்க,
சக்தி கூட சிறிது நேரத்தில் டென்ஷன் ஆகி விட்டான்...
“மிரு... நீ என்ன பண்றன்னு உனக்கு தெரியுதா?” அவன் கடுப்பாகி விட்டான். அத்தனை பேரையும் நொடியில் டென்ஷன் பண்ணிவிட்டாள் மிருதி. குறிப்பாக தன்னை இத்தனை நாள் டென்ஷனிலே சுத்த விட்ட மிருதனை தானும் சில கணங்கள் டென்ஷனில் ஆழ்த்தி விடவே இப்படி செய்தாள்.
பின்னே இத்தனை நாள் ஒரு வார்த்தை பேசவில்லை, நேரில் தான் வரவில்லை. அட்லீஸ்ட் போனாவது செய்வான் என்று எதிர் பார்த்தால் அதுவும் கிடையாது. அட்லீஸ்ட் ஒரு டெக்ஸ்ட் மெஸ்சேஜ் கூட கிடையாது.
இப்படி ஒவ்வொரு நாளும் தன்னை அலைக்கழிக்க விட்டவனை நொடியில் தடுமாற செய்ய வேண்டும் என்று நொடியில் திட்டமிட்டு அவனிடம் நீட்டி விட்டாள்.
ஆழ்ந்த நிதானமான மூச்சை இழுத்து விட்டான் மிருதன்... அவளது கண்களில் தெரிந்த சவாலை மிச்சம் மீதமில்லாமல் உணர்ந்தவன் அவளது கண்களை பார்த்துக் கொண்டே அவள் நீட்டிய பழச்சாறை வாங்கினான்.
அதை கீழே போடுவானா இல்லை குடிப்பானா என்று அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். மிருதிக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது. இக்கட்டான இந்த சுழலை அவன் எப்படி எதிர்கொள்ள போகிறான் என்ற ஆர்வம் அவளிடம் இருந்ததை கண்டு பல்லைக் கடித்தான் மிருதன்.
அவனது பார்வையில் தெரிந்த வீரியத்தில் உள்ளுக்குள் மின்னல் வெட்டியது என்றாலும் சமாளித்துக் கொண்டு அவனையே பார்த்தாள். நெஞ்சுக் கூடு படபடவென்று அடித்துக் கொண்டது. ஒரு உந்துதலில் அவனிடம் நீட்டிவிட்டால் தான் ஆனால்... அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் துணிந்து நின்றாள் மிருதி.
அவளை அழுத்தமாக பார்த்தான் மிருதன்... வாங்கிய ஜூஸை கைத்தவறி கீழே போடுவது போல போட்டான். அனைவரின் நெஞ்சிலும் அப்பாடா யாருக்கும் எந்த பாதகமும் இல்லை என்று எண்ணினார்கள்.
மிருதியும் “நீங்க இதை தான் செய்வீங்க என்று தெரியும்...” என்பது போல பார்த்தாள். ஆனால் அடுத்த நொடி அதை கேட்ச் பிடித்தான் மிருதஞ்சயன். அதை யாருமே எதிர் பார்க்கவில்லை. மிருதிக்கு கண்கள் விரிந்தது வியப்பில்.
அவளின் வியப்பை பார்த்துக் கொண்டே மீதம் அவள் வைத்து இருந்த ஜூஸை சொட்டு விடாமல் பருகியவன் அவளின் கையிலே காலி கோப்பையை திணித்தான்.
மிருதனா இது என்று அனைவருமே வியந்து தான் போனார்கள். அவன் கோப்பையை கைத்தவறி கீழே போடும் பொழுது எப்படியோ நிலைமையை சமாளித்தானே என்று எண்ணியவர்கள் அவன் அதை கேட்ச் பிடித்து குடிக்கவும் மிருதியை போல திகைத்துப் போனார்கள்.
மிருதன் இப்படி தான் மிச்சம் வைத்த ஜூஸை குடிப்பான் என்று எதிர் பாராதவள் திகைத்தாள். அவளின் திகைப்பை பார்த்துக்கொண்டே அவளை நெருங்கியவன் அவளின் காதோரம்,
“என்ன டெஸ்ட் வைக்கிறியா?” கேட்டவன் அவளின் கரத்தை விடுத்து அப்படியே அவளின் இடையில் கைக்கொண்டு அலேக்காக தூக்கியவன் சபையின் நடுவில் கொண்டு வந்து இறக்கி விட்டான். அதில் பிரம்மை பிடித்தவள் போல ஆகினாள்.
அங்கு நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகளையும் படம் எடுத்துக் கொண்டு இருந்தவர்களுக்கு இந்த மாதிரி சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் அவர்களின் காதலை சொல்வது போல அமைய அழகாக படமாக்கிக் கொண்டார்கள். அவர்களுக்கு மட்டும் இல்லை. வந்தவர்கள் அத்தனை பேருக்கும் மிருதன் மிருதியின் காதல் சேட்டைகள் போலவே இதெல்லாம் அமைந்தது தான் கூடுதல் சிறப்பு.
தாய்மாமன் மாலை போட்டு முகூர்த்த புடவை கொடுத்து கட்டி வர சொல்லி அவளது கையில் தாம்பூலத்தை கொடுத்தார்கள்.
அவளுக்கு எதுவுமே புரியவில்லை. அவளின் மொத்த கவனமும் மிதனிடம் மட்டுமே இருந்தது. அவனுக்கும் தாய்மாமன் மாலை போட்டு முகூர்த்த உடை கொடுத்து மாற்றி வர சொல்லி சொல்லி இருக்க அவளை பார்த்தபடி அவனது அறைக்குச் சென்றான்.
அவளையும் கூட்டிக்கொண்டு புடவை உடுக்க சென்றார்கள். புடவை மாற்றி நகை மாற்றி என்று நேரம் செல்ல எல்லா வேலைகளும் முடிக்க பெண்ணை வரச்சொல்லுங்கோ என்று குரல் வர, வேகமாய் அவளை அழைத்துக் கொண்டு சென்றார்கள்.
மணமேடையில் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்து இருந்தான் மிருதஞ்சயன். அவனுக்கு அருகில் அவளை அமரவைத்தார்கள் பெண்ணவளை. வந்தவுடன் அவளை திரும்பி பார்த்தான் மிருதன்.
அரக்கு நிற விலை உயர்ந்த பட்டுப் புடவையில் ஆண்டிக் நகைகள் ஒளிர அழகுக்கே அழகு சேர்ப்பது போல சூடி இருந்த பூக்கள் எல்லாம் அவளுக்கு இன்னும் அழகு சேர்த்தது. கண்ணில் வைத்திருந்த மை அவளின் விழிகளுக்கு கவர்ச்சியை கூட்டி இருக்க மிதமான ஒப்பனையில் அம்பாளே நேரில் வந்து நின்றது போல தோன்றியது அனைவருக்கும்.
மாலையை பெண் கழுத்தில் போட சொல்ல அவளை பார்த்துக் கொண்டே அவளின் கழுத்தில் அணிவித்தான் மிருதஞ்சயன். அவளையும் மாலை போட சொல்ல சற்று எக்கி அவனுக்கு அணிவித்தாள்.
இருவரின் பார்வையும் ஒரு நேர்கோட்டில் சந்திக்க பார்வைகளை விலக்கிக் கொள்ளவே முடியவில்லை. கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று சத்தம் வர அத்தனை பேரையும் சாட்சியாக வைத்து அவளின் கழுத்தில் அவளை பார்த்தபடி தாலியை அணிவித்தான்.
இந்த நொடிக்காக தானே அவள் ஏங்கியது. இதோ கைத்தலம் பற்றிய கனவுகள் எல்லாம் இந்த நொடியில் அரங்கேறிக் கொண்டு இருக்கிறதே...! இதை விட வேறு என்ன வேண்டும் பெண்ணவளுக்கு...
விழிகள் லேசாக கலங்க அவளின் கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டான் அழாதே என்பது போல... மெதுவாக தலையாட்டியவள் என்ன கட்டுப் படுத்தி பார்த்தும் அவளால் முடியாமல் சட்டென்று அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
அவள் அணுஅணுவாய் சேர்த்து வைத்த காதல் இந்த நொடியில் உண்மையானதை அவளால் கொஞ்சம் கூட நம்பவே முடியவில்லை. அவன் தந்த மகிழ்ச்சியை தாங்க முடியாமல் அவன் மீதே சாய்ந்துவிட்டாள்.
பெண்ணவளின் உணர்வுகளை அப்பட்டமாய் உணர்ந்தவன் அவளை சுற்றி தன் கரங்களை போட்டு அணைத்துக் கொண்டான் தன்னோடு... அதை பார்த்துக் கொண்டு இருந்த பெற்றவர்களுக்கும் நண்பர்களுக்கும் மெய் சிலிர்த்துப் போனது.
ஒருதலையாய் இருந்த பெண்ணவளின் காதல் இன்று ஊர் மெச்ச திருமணம் வைபவம் கண்டு, பார்ப்பவரின் கண் படும் அளவுக்கு மாறி இருந்த தருணத்தையும் யாராலும் மறக்கவே முடியாது. அதை விட அவளின் காதலுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்து தன்னோடு சேர்த்து நிறுத்தி இருந்த மிருதனை மெச்சாமல் இருக்க முடியவில்லை அவர்களால்..!
அனைவரின் மனத்திலும் அசைக்க முடியா நிகழ்வாக இது மாறிப் போனது. நேசமுடன் தன்னவனை ஏறெடுத்துப் பார்த்தாள். அவளின் விழிகளை பார்த்துக் கொண்டே அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தம் கொடுத்தவன் அவளின் வகிட்டில் குங்குமத்தையும் அழுத்தமாக வைத்து விட்டான்.
தன் பிறகு பெரியவர்களிடம் ஆசீர்வாதம், கிப்ட், போட்டோ ஷூட் என நேரம் சென்றது... ஜூஸ் வந்த வண்ணமாகவே இருந்தது மிருதிக்கு. எப்படியும் இப்பொழுதே சாப்பிட போக முடியாது. ஏனெனில் ஐந்து மாநில முதலமைச்சர்கள் வந்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது அவர்களை விடுத்து போக முடியாது. அவர்களை தொடர்ந்து விவிஐபி எல்லோரும் இருக்க எங்கிருந்து போவது...!
அதனால் முதலில் அவர்களோடு போட்டோ எடுத்து வாழ்த்துக்களை வாங்கிக் கொண்டார்கள். மிருதிக்கு இதெல்லாம் ஒரு மிரட்சியை கொடுத்தது என்றாலும் எல்லாவற்றையும் அழகாகவே கையாண்டாள்.
அவளின் மேச்சுருட்டியை கண்களிலே பாராட்டியவன் அவளுக்கு தேவைப்படும் பொழுது உதவியும் செய்தான். தனிப்பட்ட முறையில் ஒரு வார்த்தைக் கூட இருவரும் பேசிக் கொள்ளவில்லை. பேச நேரம் வாய்க்கவில்லை அது தான் உண்மை. தனிப்பட்ட போட்டோக்களை பிறகு ஒரு நாள் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட வந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவே அன்றைய பொழுது சரியாக இருந்தது.
அவனது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை ஒரு வித குரோதத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தார் மகேந்திரன். ஆசீர்வாதம் செய்ய கூட அவருக்கு மனம் வரவில்லை. ஆனால் சபை நாகரீகம் கருதி சம்பூர்ணவதியின் அருகில் வந்து நின்றார் அவர்.
ஆனால் அவரை பற்றிய எண்ணம் சிறிதும் இல்லமல் மிருதஞ்சயன் தன் பெண்ணவளினருகில் முகத்தில் வழிந்த சோபையோடு நின்றிருந்தான் மணமேடையில்.