மிருளாணி கதை இப்படி இருக்க இங்கே மகேந்திரனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. மனம் முழுக்க அமைதியே இல்லாமல் அதையும் இதையும் சுற்றி அலைந்துக் கொண்டே இருந்தது. அதற்கு ஏற்றவாறு அடுத்ததடுத்த சம்பவங்கள் நடந்துக் கொண்டு இருந்தது.
அதன் முதல் கட்டமாக மிருதியின் வீட்டுக்கு மிருதனின் மொத்த குடும்பமும் வந்து இறங்கினார்கள். மிருதனை தவிர.. கூடவே அவனது தோழமை கூட்டம் மூவரும் வந்து இருந்தார்கள்.
எல்லோரும் சேர்ந்து வரவும் திகைத்த பரவாசு சுதாவை அழைத்து என்ன விசயம் என்று கண் பார்வையாலே கேட்டார். சுதாவுக்கும் எதுவும் தெரியவில்லை. அவர் உதடு பிதுக்க,
“சரி வர்றவங்களை முதல்ல வரவேற்போம். பிறகு ஏதாவது என்றால் பேசிக்கலாம்...” என்று சொன்னவர் அனைவரையும் வரவேற்று உள்ளுக்குள் அமரவைத்தார்கள். எல்லோரின் முகமும் மலர்ந்து இருக்க மகேந்திரனின் முகம் மட்டும் பாறை போல இறுகி இருந்தது.
ஆனால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கொஞ்சம் கூட அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை என்பது தான் கவனிக்க வேண்டிய விசயம்.
சம்பூர்ணவதியே முதலில் பேச்சை ஆரபித்தார்.
“இப்படி சொல்லாம கொள்ளாம வந்ததுக்கு ..” என்று அவர் ஆரம்பிக்க,
“அதனால என்னங்க நீங்கல்லாம் எங்க வீட்டை தேடி வந்ததுல எங்களுக்கு தான் பெருமை... இதுல சங்கடப் பட எதுவும் இல்லை..” என்று சுதா அவர் மன்னிப்பு கேட்க வரும் முன்பே தன் பெருந்தன்மையை காட்டிவிட, சம்பூர்ணவதிக்கு மனதுக்கு அவ்வளவு நெகிழ்ச்சி.
மனம் விட்டு புன்னகைத்தவர் தன் அப்பாவை பார்த்தார். அவரின் முகத்திலும் அதே சாயல் தென்பட்டது. அதோடு அவர் விழிகளை மூடி திறக்க தலையை அசைத்து தன் சம்மதத்தை கொடுத்தார். அதன் பிறகு தன் தாயை திரும்பி பார்த்தார்.
அவரும் ஒப்புதல் கொடுக்க மகேந்திரனை ஒரு பார்வை பார்த்தார். அவர் வேண்டும் என்றே அவரின் பார்வையை பார்க்க மறுத்து இடித்து வைத்த புளியை போல அமர்ந்து இருந்தார்.
பெருமூச்சு விட்டவர் சுதாவின் பக்கம் திரும்பி,
“மிருதி என்ன பண்றா...? அவளை பார்க்கணும்” என்றார்.
“இப்ப தான் வேலையில இருந்து வந்தா.. மேல தூங்கிட்டு இருக்கா.. இருங்க வர சொல்றேன்” என்று அவர் மேலே போக பார்க்க, மிருளாணி,
“நீங்க இருங்க ஆன்டி, நான் போய் பார்த்துக்குறேன்” என்று அறையை விசாரித்துக் கொண்டு மேலே சென்றாள். அவளை தொடர்ந்து சம்பூர்ணவதியும் பெருவுடையாளும் இருவரும் சென்றார்கள்.
சுதா அனைவருக்கும் காபி போட உள்ளே சென்றார். கூடத்தில் ஆண்கள் மட்டும் இருக்க மகேந்திரன் இப்போதைக்கு எதுவும் வாயை திறக்க மாட்டார் என்று உணர்ந்து இயல்பு போல பெருவுடையாரே முதலில் பேச்சை ஆரம்பித்தார்.
அவரை தொடர்ந்து நண்பர்கள் கூட்டமும் தங்கள் தோழியின் அப்பாவிடம் பேச ஆரம்பித்தார்கள். அவர்களிடம் பெருவுடையாருக்கு தெரியாமல் என்ன விசயம் என்று கண் சாடையில் கேட்டார்.
“பொறுங்க ப்பா... அவங்களே சொல்வாங்க” என்று அவரி அருகில் வந்து அமர்ந்த சக்தி சொன்னான்.
“டேய் என்னடா நடக்குது இங்க... ஒண்ணுமே புரியல..” என்று அவனின் காதை கடித்தார்.
“கொஞ்சம் பொறுமையா இருங்க ப்பா.. தாத்தாவே சொல்லுவாரு. அதுக்குள்ள என்ன வசரம்.. போய் உள்ள சாப்பிட எதுவும் இருந்தா எடுத்துட்டு வாங்க. ஷூட்டிங்ல இருந்து அப்படியே வந்துட்டேன்” என்று சொன்னான்.
அவனை முறைத்து பார்த்தவர், வேறு வழியின்றி இரண்டு தோசையை ஊற்றி எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினார்.
“அப்போ எங்களுக்கு...?” என்று இசையமைப்பாளரும் சுதிரும் அவரிடம் எகிற,
“இருங்கடா ஒவ்வொருத்தனுக்கா ஊத்திட்டு வந்து தரேன்..” என்று மீண்டும் உள்ளே சென்றவர் இருவருக்கும் இரண்டு தோசையை ஊற்றிக் கொண்டு வர, சக்தி அதற்குள் இரண்டு தோசையை காலி செய்து விட்டு அடுத்த தோசைக்கு தட்டை அவர் முன்பு நீட்டினான்.
வழிந்த வியர்வையை தோளில் போட்டு இருந்த துண்டில் துடைத்து விட்டு அவனது தட்டை வாங்கிட்டு போய் இன்னும் இரண்டு தோசையை சுட்டு எடுத்துக் கொண்டு வந்தார்.
அதற்குள் இவர்கள் இருவரும் வெறும் தட்டை நீட்ட, கொஞ்சமும் அலுத்துக் கொள்ளாமல் முகம் சுழிக்காமல் தோசை சுட்டுக் கொண்டு வந்து கொடுத்தவரை பெருவுடையாரின் விழிகள் ஆர்வமாய் தழுவியது.
ம்ஹும்.. இது போல இந்த மகேந்திரன் இருந்து இருந்தால் எப்படி இருக்கும் என்று அவரின் எண்ணம் ஒரு பக்கம் அலைந்தது. அது எந்த பிறப்பிலும் நடக்காது என்று எண்ணியவருக்கு பெருமூச்சு எழுந்தது. அந்த நேரம் சுதா அனைவருக்கும் காபியை போட்டுக் கொண்டு வந்து நீட்ட,
அனைவரும் எடுத்துக் கொண்டார்கள். மகேந்திரன் வேண்டா வெறுப்பாக எடுத்துக் கொண்டார். அதன் பிறகு மேலே சென்றவர்களுக்கு சுதா எடுத்துக் கொண்டு போனார்.
“உள்ளே வரலாமா...?” என்ற சத்தத்தில் சட்டென்று எழுந்து அமர்ந்தாள் மிருதி. அறையின் வாசலில் மூன்று பெண்களும் நிற்க ஒரு கணம் அதிர்ந்துப் போனாள்.
தான் என்ன கனவா காண்கிறோம் என்று திகைத்துப் போனாள். அவளின் அதிர்ந்த தோற்றம் கண்டு,
“மிரு கால் வலிக்கிது. உள்ளே கூப்பிடு” என்று மிருளாணி சொல்ல வேகமாய் எழுந்து வந்தவள் மூவரையும் உள்ளே கூப்பிட்டாள்.
“உள்ள வாங்க... உட்காருங்க... இதோ ஒரு நிமிடத்துல வந்துடுறேன்...” என்றவள் குளியல் அறைக்குள் சென்று முகம் கழுவி தன்னை ஓரளவு புத்துணர்வாக மாற்றிக் கொண்டவள் வெளியே வந்தாள்.
வந்தவர்களை பார்த்து சிநேகமாக சிரித்தாள். அவளின் கண்களிலே அவளது அயர்வு நன்றாக தெரிந்தது. கண்கள் எல்லாம் தூக்கத்துக்கு கெஞ்சிக் கொண்டு இருந்தது... அவளின் அலைச்சலை அவளின் சிவந்த கண்கள் நன்றாகவே பறை சாற்றியது.
“வாம்மா இப்படி உட்காரு...” என்று பாட்டி அவளின் கரத்தை பிடித்து படுக்கையில் அமரவைத்தார். நால்வரும் சுற்றி படுக்கையில் தான் அமர்ந்து இருந்தார்கள்.
“வாங்க ஆன்டி...” என்றவளுக்கு அதற்கு மேல் அவரிடம் கேள்வி கேட்க சங்கடப்பட்டுக் கொண்டு வார்த்தையை அப்படியே முழுங்கி விட்டாள். அதோடு ஒருவித படபடப்பு வேற... எதற்காக இவர்கள் மூவரும் வந்து இருக்கிறார்கள் என்ற யோசனை ஒரு பக்கம் ஓடிக் கொண்டு இருந்தது.
அதை உணர்ந்தவர் புன்னகைத்து,
“நேரடிய விசயத்துக்கு வரேன்டா... மிருதனுக்கு உன்னை பெண் கேட்டு வந்து இருக்கோம்” என்று போட்டு உடைத்தார். அதை கேட்டு பட்டென்று எழுந்து நின்றே விட்டாள்.
அவளின் செயலில் மூவருக்குமே ஒரு வித புன்னகை மலர்ந்தது. பாட்டி அவளின் கரத்தை பிடித்து மீண்டும் கட்டிலில் அமரவைத்தவர்,
“என் பேரனை கட்டிக்க சம்மதமாடா? என் பேரன் உன்னை ரொம்ப பத்திரமா பர்ர்த்துக்குவான். வர்றியாடா எங்க வீட்டுக்கு.” என்று கேட்டவரின் வார்த்தையில் அவளுக்கு இன்னும் அதிர்ச்சியாகிப் போனது.
“பாட்டி நீங்க என்ன சொல்றீங்க...?” அவளால் இந்த வார்த்தைகளை கூட சரிவர உச்சரிக்க முடியவில்லை. ஒருங்கே வந்து தாக்கிய மின்சாரம் போல அப்படியே திகைத்துப் போனாள் மிருதி.
“ஆமாம் மிருதி... என் மகனுக்கு உன்னை பெண் கேட்டு வந்தேன். உனக்கு சம்மதம் தானே என் மகனை கட்டிக்க...” என்று நேரடியாக சம்பூர்ணவதியே கேட்க, அவளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.
இன்னும் மிருதனை காணவில்லை... கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கடந்து இருந்தது. இடைப்பட்ட நாளில் சக்தியின் படத்துக்கு வேணும் என்கிற அளவுக்கு உதவி செய்து விட்டு, அதன் பிறகு தன்னுடைய படத்துக்கு முன்னேற்பாடுகள் எல்லாம் செய்து எல்லோரிடமும் ஒப்புதல் வாங்கி ஷூட்டிங்கும் ஆரம்பம் ஆகி இதோ இன்னும் சில நாட்களில் நிறைவடைந்து விடும்.
அடுத்தது எடிட்டிங் மட்டுமே என்கிற நிலையில் இருந்தது. இப்பொழுது வந்து கல்யாணம் அது இது என்றால் அவள் என்ன தான் சொல்லுவாள்.
குறிப்பாக மிருதன்... போய் இத்தனை நாள் ஆன பின்னும் இன்னும் ஒரு நாள் கூட அவளை அழைத்து பேசி இருக்கவில்லை. எங்கு இருக்கிறான் என்ன செய்கிறான் என யாருக்கும் தெரியவில்லை. இந்த சமயம் இவர்கள் இப்படி பெண் கேட்டு வருவது எந்த அளவுக்கு சரியாக வரும் என்று தெரியவில்லை அவளுக்கு. அதனால் அவளால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
“இல்லங்க ஆன்டி மிருதன்...” என்று அவள் பேச்சை ஆரம்பிக்க,
“ஒன் மினிட்...” என்றவர் ஏதோ ஒரு நம்பரை போட்டு அவளிடம் நீட்டினார்.
கேள்வியுடன் வாங்கி காதில் வைக்க, அந்த பக்கம் ரிங் போய்க்கொண்டு இருந்தது. அவளையும் அறியாமல் ஒரு பதட்டம் உள்ளுக்குள் நிலவ உள்ளங்கை வியர்த்துப் போனது.
“மிருதி...” என்று ஆளுமையான அழுத்தமான மிருதஞ்சயனின் குரல் செவியில் பட காது மடல் எல்லாம் சிலிர்த்துப் போனது. ஐந்து மாதங்களுக்கு பிறகான அவனது குரல் அவளை வந்து தீண்ட, நெஞ்சம் அப்படியே அடைத்துக் கொண்டு வந்தது.
கண்கள் எல்லாம் கலங்கி விடுமோ என்று பயந்தவள் சட்டென்று குறுங்கண்ணோரம் திரும்பிக் கொண்டாள்.
இந்த பக்கம் இருந்து எந்த சத்தமும் இல்லாமல் போக மீண்டும் “மிருதி...” என்று அழைத்தான். அவனது குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை வேரோடு வெட்டிப் போட, வெடித்துக் கொண்டு வந்த அழுகையை இதழ்களை கடித்து அடக்கிக் கொண்டு வெறுமென,
“ம்ம்ம்” என்றாள்.
“ஒத்துக்கோ...” என்றான் மொட்டையாக. அதில் இன்னும் மிரண்டவள்,
“ஆங்...” என்றாள்.
“ப்ச்...” என்று சளித்தவன்,
“கல்யாணத்துக்கு ஒத்துக்கோ” என்றான் அழுத்தம் திருத்தமாய்.
“நீ... நீங்க...” பெரிதாக தடுமாறினாள்.
“வரேன்.. கண்டிப்பா வரேன்... நான் வர்ற நாள் நமக்கு கல்யாண நாளா இருக்கும்” என்றான். அவனது உணர்ச்சியற்ற குரலில் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. கல்யாணத்துக்கு வீட்டில் பேசி இருக்கிறான். ஆனால் அந்த மகிழ்ச்சி அவனது குரலில் கொஞ்சம் கூட இல்லையே என்று குழம்பிப் போனாள்.
“பிடிக்காம பண்றாரா...? இல்லை பிடித்து பண்றாரா? ஒண்ணும் புரிலையே...” என்று அவள் குழம்பிப் போக,
“பை...” என்று வைத்து விட்டான். அவ்வளவு தானா என்று கட்டாகிப் போன போனையே வெறித்துப் பார்த்தாள். அவள் போனை பார்க்கவும்,
“என்னம்மா மிருதன் பேசினானா...? இப்போ சம்மதம் தானே...?” என்று சம்பூர்ணவதி அவளை நெருங்க, சட்டென்று தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டவள் அவருக்கு வெறுமென தலையை மட்டும் ஆட்டினாள்.
அதன் பிறகு அங்கு மகிழ்ச்சியை பற்றி சொல்லாவே வேண்டாம். பெருவுடையாளும் மிருளாணியும் அவளை ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்துக் கொண்டு தங்களின் மகிழ்ச்சியை சொல்ல, சம்பூர்ணவதி மிருதியின் நெற்றியில் முத்தம் கொடுத்து தன் மகிழ்ச்சியை தெரிவித்தார்.
அந்த நேரம் சுதா அனைவருக்கும் காபி கொண்டு வர அவரிடம் விசயத்தை சொல்ல பெரிதாக மகிழ்ந்துப் போனார். ஏனெனில் இத்தனை நாள் தன் மகள் நெஞ்சில் சுமந்த காதலுக்கு பலன் கிட்டிவிட்டது இல்லையா? அது போதாதா அந்த தாய்க்கு...
நடக்காது என்று இருந்த ஒரு விசயம் கைக்கூடி வர மனமெங்கும் வெள்ள நீரோட்டமாய் பொங்கி தழும்பியது.. வேகமாய் தன் கணவரை கூப்பிட்டு இவர்கள் அனைவரும் வந்த விசயத்தை சொல்ல அவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது...!
காபியோடு கொஞ்சமாய் ஸ்நேக்ஸ் வைத்து பரிமாறினார் சுதா. அனைவரும் சாப்பிட்டுவிட்டு கீழே வந்தர்கள். வரும் பொழுது மிருதி புடவை கட்டிக்கொண்டு வர எல்லோருக்கும் வந்ததன் நோக்கம் புரிந்துப் போனதை உணர்ந்த மகேந்திரன் உதட்டை சுளித்துக் கொண்டு அங்கு நடக்கும் கூத்தை வெறித்துப் பார்த்தார்.
மிருதிக்கு தாங்கள் கொண்டு வந்த பூச்சரத்தை எடுத்து தலையில் வைத்து உறுதி செய்த சம்பூர்ணவதி, பெருவுடையாளிடம் ஐந்து பவுன் சங்கிலியை கொடுத்து மிருதிக்கு போட்டு விட சொல்லி இன்னும் உறுதி செய்தவர்கள்,
பரவாசுவிடமும் சுதாவிடமும் மேற்கொண்டு செய்ய இருக்கும் ஏற்பாடுகளை எல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தார்கள் பெரியவர்கள்.
சிறியவர்கள் அனைவரும் உள் பக்கம் இருந்த கூடத்தில் மாநாட்டை போட்டு கச்சேரியை ஆரம்பித்தார்கள். அனைவரும் சேர்ந்து மிருதியை ஓட்டி எடுக்க, சப்போர்ட்டுக்கு வந்த கம்போசரையும் சேர்த்து ஓட்ட ஆரம்பித்தார்கள் மிருளாணி, சக்தி மற்றும் சுதிர் மூவரும்.
கூட்டத்தில் மிருளாணியை ஒன்றும் சொல்ல முடியாமல் பல்லைக் கடித்து அவளை முறைத்துப் பார்த்தான் கம்போசர். அவனது பார்வையை கண்டுக் கொள்ளாமல் அவள் வள் பாட்டுக்கு இருந்தாள்.
உள்ளுக்குள் இருந்தாலும் மிருதியின் கண்கள் மகேந்திரனை பார்த்துக் கொண்டு தான் இருந்தது. அவரின் முகத்தில் நன்றாகவே தெரிந்தது இந்த திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லை என்று. ஆனால் அதை யாரும் கண்டுக் கொள்ளாமல் இருப்பதையும் உணர்ந்துக் கொண்டாள்.
உணர்ந்தவளுக்கு நெஞ்சில் பாரம் ஏறியது. கொஞ்சம் கூட இந்த வீட்டில் அவர் ஒட்டுதலோடு இருக்கவில்லை. ஏதோ வேண்டாத தகாத வீட்டில் அமர்ந்து இருப்பது போல இருந்தார். அதை பார்த்து நெஞ்சில் சுருக்கென்று ஒரு வலி எழுந்தது.
இவங்களோட வசதிக்கு கொஞ்சமும் ஈடுக்கு வர முடியாது நாங்க. ஆனா நாங்களும் ஒன்றும் இல்லாதவங்க இல்லையே...! மனம் ஒரு பக்கம் குமுறிக் கொண்டு இருந்தது..!
எதற்கு எடுத்தாலும் பணத்தையே அளவீடாய் கொண்டு அளக்கும் மனிதன் என்று இப்போ சமீப காலமாக தான் தெரிய வந்தது. அதற்கு முன்பு வரை அவருக்கும் இவளுக்கும் நேரடியான சந்திப்புகள் எதுவும் இல்லையே..!
இப்பொழுது தானே படம் தயாரிப்பாளர் என்கிற முறையில் அடிக்கடி சந்திக்க வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு சந்திப்பின் பின்னாடியும் பணத்தை வைத்தே அவளை மட்டம் தட்டிக் கொண்டு இருக்கிறார் மகேந்திரன்.
அதை இப்பொழுது எண்ணிப் பார்த்தவளுக்கு நெஞ்சில் மலையை தூக்கி வைத்தது போல பாரமாக இருந்தது. ஒருவரின் இயலாமையை மேலும் மேலும் குத்திக் காட்டி பேசி பேசியே அவர்களின் கவனத்தை முழுவதுமாக சிதறடிக்க செய்வது எந்த வகையில் நியாயம். அதை தான் இப்பொழுது மிருதிக்கு மகேந்திரன் செய்துக் கொண்டு இருக்கிறார்.
இது வெளியே யாருக்கும் தெரியாது. சில சமயம் பெருவுடையாருக்கு தெரிய வரும். அப்படி தெரிய வரும் பொழுது எல்லாம் அவர் மிருதிக்கே சாதகமாக பேச, அதில் அவளின் மீது வஞ்சம் இன்னும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது மகேந்திரனுக்கு.