மிக புத்துணர்வாக உணர்ந்தவன் மிருதியை விட்டு எழுந்து அமர்ந்தான். அவன் விலகவும் ஆங்காங்கே மிக லேசாய் கலைந்து இருந்த சேலையை சரி செய்தபடி மிருதனின் முகத்தை பார்த்தாள்.
தன் முகத்தை பார்த்தவளை ஆழ்ந்து பார்த்தான் மிருதன். இது போல ஒரு பார்வை அவன் இதுநாள் வரை பார்த்ததே இல்லை. அவனது அந்த பார்வையில் திகைத்துப் போனாள்.
“என்ன மிருதன் என்ன ஆச்சு...? ஏன் என்னவோ ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றவளுக்கு உள்ளுக்குள் ஒரு குற்ற குறுகுறுப்பு ஏற்ப்பட,
“இந்த படத்தை நீங்க செய்து இருக்கணும் இல்லையா?” என்று அவள் பேச்சை ஆரம்பிக்க, தன் கரம் கொண்டு அவளின் வாயை பொத்தினான்.
“அப்போ அது இல்லையா?” விழியாலே கேட்டாள்.
“இல்லை...” என்பது போல இவனும் தலை அசைத்தான். அதில் அவனது கரத்தை விலக்கியவள்,
“வேறு என்னங்க...? ஏன் இப்படி?” என்று அவனது கோலத்தையும் மன உணர்வுகளையும் கேள்வி கேட்டாள். அவன் பதிலே சொல்லவில்லை. மாறாக அவளது மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.
அவனை மடி தாங்கியவள் அவனை மேலும் கேட்டு வேதனை படுத்தாமல் வெறுமென அவனது நெஞ்சை நீவி விட்டுக்கொண்டு இருந்தாள். சட்டை பட்டன்களை அவிழ்த்து விட்டு வெற்று மார்பை நீவி விட்டாள். அவளின் கரிசனையில் விழிகளை மூடிக் கொண்டான்.
அவளின் விரல் கொடுக்கும் இதம் இன்னும் வேண்டும் என்று தோன்ற அவளின் விரல்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டான் சில கணங்கள். அதன் பின் விடுவித்து விட்டு மீண்டும் வருட சொல்லி அவளது கரங்களை அவனே வழிநடத்த அவனின் மார்பை வருடி விட்டபடியே கீழே குனிந்து அவனின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.
அதில் கண்களை பட்டென்று திறந்தான் மிருதன். அவனது பார்வையில் அவள் ஒரு கணம் அதிர்ந்து தான் போனாள்.
“என்ன ஆச்சு...” என்று கேட்டாள். ஒன்றுமில்லை என்பது போல தலை அசைத்தவன் லேசாக ஒரு பக்கமாய் புரண்டு அவளின் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டான். அந்த செயலில் பதறிப் போனவள் அவனை பார்க்க, அவளை அழுத்தமாய் பார்த்துக் கொண்டே அவளின் புடவைக்குள் தலையை விட்டுக் கொள்ள முதுகு தாண்டி மின்னல் வெட்டிப் போனது.
அவளின் இடையிலும் வயிற்றிலும் படுத்து இருந்தவன் கூடாரமாய் அவளது மாராப்பு இருக்க விழிகளை மூடிக் கொண்டான். போதாதற்கு இரண்டு கரங்களும் அவளை சுற்றி வளைத்துக் கொள்ள அவனிடம் மோகம் என்பது மருந்துக்கும் இல்லாமல் போனதை உணர்ந்தவளுக்கு எதையோ உள்ளுக்குள் போட்டு மருகுகிறார் என்பது புரிந்துப் போனது...!
அவனின் தலைக்குள் இடக் கரத்தை நுழைத்து முடிகளை நெரித்து இறுக்கி பின் வேறிடம் மாற்றி அதே போல இறுக்கி பிடித்து பின் நெரித்து அவனுக்கு இடத்தை கொடுத்தாள். இன்னொரு கையால் அவனின் நெஞ்சை பதமாக நீவி விட ஆறுமாத பிள்ளையை மடியில் போட்டு கொஞ்சம் தாயாய் அவனுக்கு அவள் மாற இதை தானே அவளிடம் அவன் தேடியது. அதை வஞ்சமில்லாமல் வாரி வழங்கினாள் மிருதி.
பொழுதுகள் சற்றே நகர அவளின் நெருக்கத்தில் அவன் எல்லாவற்றையும் மறந்து போனான் சிறிது நேரம். அவனை கலைக்கவும் அவளுக்கு மனம் வரவில்லை. எனவே பின் பக்கம் அப்படியே சாய்ந்துக் கொண்டவள் அவனை தன்னோடு நெருக்கிக்கொள்ள மறக்கவில்லை.
அவள் தந்த நெருக்கம் அவனை புத்துணர்வு பெற வைக்க நீண்ட நெடிய நிமிடங்களுக்கு பிறகு எழுந்துக் கொண்டான். அவளின் புடவையை விளக்கி விட்டு வெளியே வந்து அவளின் முகத்தை பார்க்க அவளின் கண்களில் தூக்கத்தில் சொருகியது.
அவளை பார்க்க கொஞ்சம் பாவமாய் போனது. அவன் எழும் அரவம் உணர்ந்து அவளும் சுதாரித்து எழுந்துக் கொண்டாள்.
“இப்போ பரவாயில்லையா?” அவனது கண்களை பார்த்து கேட்டாள். ம்ம்ம்... என்றவன் அவளை தன்னிடம் இழுத்துக் கொண்டான். அவனது நெஞ்சில் வந்து விளுந்தவ்ளின் தலையோடு தலை முட்டி அவளின் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தவன் அவள் உணரும் முன்பே தன் கழுத்தில் கிடைத்த தடிமனான சங்கிலியை எடுத்து அவளின் கழுத்தில் அணிவித்து இருந்தான்.
அதை எதிர் பாராதவள் அவனை தடுக்க முனைய,
“நீ தெரிஞ்சி செஞ்சியா இல்ல தெரியாம செஞ்சியான்னு எனக்கு தெரியலடி... ஆனா நீ குடுத்த கிப்ட்டுக்கு எனக்கு எப்படி பதில் கிபிட் குடுக்குறதுன்னு தெரியல... சோ இப்போ இந்த நிமிடம் நான் அவ்வளவு ஹேப்பியா இருக்கேன். சோ அதோட வெளிபாடு தான் இது. எப்படியும் பின்னாளில் இது உனக்கு உரியதாக தானே இருக்கு.” என்று சொன்னவனை புரியாமல் பார்த்தாள்.
“நான் அப்படி என்ன பண்ணேன்... எனக்கு எதுவும் தெரியலையேங்க”
“உனக்கு எப்பவும் எதுவும் தெரிய வேணாம்... அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். நீ ப்ரீயாகு..” என்று சொன்னவன் தன் தயக்கத்தை லேசாக உடைத்துப் போட்டான் அவளிடம்.
அவள் எதுவும் புரியவில்லை. ஆனால் தான் செய்த ஏதோ ஒரு செயல் அவனை மிகவும் மகிழ்ச்சியுற செய்து இருக்கிறது என்று மட்டும் புரிந்தது.
ஒரு வேலை அவனோட பெயரை படத்தில் போட்டு இருந்ததால் வந்த மகிழ்ச்சியோ என்று சிந்தித்தாள். மிருதன் அப்படி பெயருக்காக புகழுக்காக அலைபவன் இல்லையே...! வேறு என்னவாக இருக்கும் என்று அவள் மனம் சிந்திக்க அதை தடுத்தான் மிருதன்.
“பசிக்கிது வெளியே சாப்பிட்டுட்டு கிளம்பலாமா?” கேட்டான்.
“ம்ம்ம்..” என்றவளுக்கு அவன் படத்தை முழுமையாக பார்க்கவில்லையே என்று மனதில் சுணக்கம் எழுந்தது. ஆனால் அவன் இவ்வளவு நேரம் தன்னோடு இருந்ததே பெரிது என்பதால் அவனிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
அதன் பிறகு இருவரும் ஒரு உணவு விடுதிக்கு சென்று சாப்பிட ஆரம்பிக்க இருவரும் ஒருவரை ஒருவர் நிமிர்ந்து பார்த்துக் கொண்டார்கள். கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு கடையில் அமர்ந்து அவன் சாப்பிட்டுக் கொண்டு இருக்க இவள் அவனிடம் ஊட்டி சுற்றுலாவை பற்றி பேச வந்தது நினைவுக்கு வர மிருதி அவனை சின்ன சிரிப்புடன் ஏறிட்டாள்.
மிருதன் சிரித்தால் தானே.. கல்லுளி மங்கன் மாதிரி எந்த ரியாக்ஷனும் குடுக்காமல் அப்படியே அமர்ந்து இருந்தான். அதில் நொடித்துக் கொண்டவள் வந்த உணவை அவனுக்கு பரிமாறி அவளும் சாப்பிட்டாள்.
மிருதன் இப்படி தான் என்று தெரியுமே பிறகு எதற்கு அவனிடம் எதிர்பார்ப்புகள். எனவே அவனுக்கும் சேர்த்து அவனை காதலித்தாள் இத்தனை நாட்களும். இனி அவனும் காதலிப்பான். ஆனால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டான் என்று உணர்ந்தவளுக்கு அவனின் மீது உள்ள காதல் எந்த கணத்திலும் குறையாது என்று புரிந்தது..!
சாப்பிட்டு முடித்தவன், “டேக்சி புக் பண்ணவா?” கேட்டான். இவன் கொண்டு போய் விட மாட்டான் என்று தெரிய,
“ம்ம்ம்” என்றாள். பின் அவளுக்கு டேக்ஸி புக் பண்ணியவன் வண்டி வந்தவுடன் அவளை அதில் ஏற்றிவிட்டு அவளிடம் விடை பெற்றான்.
அவனிடம் “நீ மறுபடியும் எப்போ வருவாய்?” என்று கேட்க துடித்த இதழ்களை பற்களை கொண்டு கடித்து கட்டுப் படுத்திக் கொண்டு அவனுக்கு புன்னகை முகமாய் விடை கொடுத்தாள்.
தன் கார் கதவை திறந்தவன் ஒரு கணம் ஆழ மூச்செடுத்து தன்னை சரி செய்துக் கொண்டவன் பட்டென்று கார் கதவை அறைந்து சாற்றினான். அவனது செயல்களை கண்டு அதிர்ந்தவள் “இவருக்கு என்ன ஆச்சு?” முணகினாள்.
மீண்டும் அவளின் அருகில் நெருங்கினான். அவன் வருவதை பார்த்து கேள்வியாக முகம் சுருக்கினாள்.
தன் கையில் உள்ள சாவியால் காரை லாக் செய்தவன் அவளை ஒரு பார்வை பார்க்க சட்டென்று எழுந்த உவகையோடு தன் இருக்கையில் இருந்து தள்ளி அமர்ந்தாள்.
அவளின் அருகில் பொத்தென்று அமர்ந்தவன் அப்படியே பின்னால் சாய்ந்து கண் மூடி கொண்டான். அவனிடம் கேள்வி கேட்டு வதைக்க தோன்றாமல் வெறுமென அவனது முகத்தை பார்த்துக் கொண்டு வந்தாள்.
கார் வேகமாக சென்றது...! இருக்கையில் வைத்திருந்த அவனது கரத்தை எடுத்து தன் மடியில் வைத்துக் கொள்ள, அவன் விழிகளை மட்டும் தாழ்த்தி அவளை பார்த்தாள்.
“இல்ல சும்ம்மா..” என்று தடுமாற, “ம்ம்ம்” என்று விட்டான் வேறு எதுவும் சொல்லவில்லை.
சிறிது நேரத்திலே அந்த தியேட்டர் வந்து விட, இந்த நொடியில் இருந்து அவனை பிரிய வேண்டுமே என்று நெஞ்சில் பாரம் எழுந்தது... அவளை உணர்ந்தவன் போல அவளின் கரத்தில் இருந்து தன் கரத்தை உருவிக் கொண்டு அவளின் கரத்தை இறுக்கிப் பற்றினான்.
அந்த சின்ன தொடுகையே அவளுக்கு ஆயிரம் யானை பலம் கொடுக்க, பாரம் இருந்த நெஞ்சில் மயிலிறகு வைத்தது போல இருந்தது அந்த இறுகிய தொடுகை.
“அடுத்த ப்ராஜெக்ட் உன்னோட ஓன் ப்ராஜெக்ட்... இன்னும் பத்து நாள்ல தொடங்கு.. கொட்டேஷன் ரெடி பண்ணி தாத்தாக்கிட்ட குடு...” என்றான்.
அவள் அதிர்ந்து பார்த்தாள். “என்ன இன்னும் பத்து நாள்லையா?”
“இப்போவே எவ்வளவு வேணுமோ அவ்வளவு ஓடிக்கோ. பிறகு நேரம் இருக்காது..” என்று எந்த அர்த்தத்தில் சொன்னானோ அவனுக்கே வெளிச்சம். சரி என்று தலையை ஆட்டினாள்.
“ஓகே பை..” என்று விட்டு அவன் காரிலே அமர்ந்துக் கொண்டான். அவள் மட்டும் இறங்கிக் கொண்டாள்.
“யார் கிட்டயும் நான் வந்ததை சொல்லாத. குறிப்பா மிருளாணிக்கிட்ட” என்றான்.
“வாட்... அப்போ இவர் வந்தது யாருக்கும் தெரியாதா? எனக்காக எனக்காக மட்டும் என்னை பார்க்க மட்டும் வந்து இருக்காரா..?” உண்மையாகவே மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது அவளுக்கு.
ஏனெனில் மிருதன் யாருக்காகவும் எதையும் செய்ய மாட்டான். அவன் தலை முடி கூட அசையாது. அப்படி பாட்டவன் இன்று தனக்காக இவ்வளவு தூரம் வந்து இருக்கிறான் என்றால் அவன் கொண்ட காதலின் வீரியம் தான் எவ்வளவு இருக்கும் என்று மலைத்துப் போனாள்.
மிருதன் காதலை வாய் மொழியாக சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அவனின் செயலில் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறான். அலங்காரமான சொல் மூலம் வெளிப்படுத்துவதா காதல்... இல்லையே எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், எந்த வாய் ஜாலமும் இல்லாமல், சொல்லற்ற, ஒலியற்ற, சத்தமே இல்லாமல் உணர்த்திக் கொண்டே இருக்கிறானே மிருதஞ்சயன்.
இதல்லவா காதல்... இக்காதலுக்கு உயிர்ப்பே இருவரின் உணர்வுகள் மட்டும் தான் அல்லவா? உணர்வு பூர்வமான காதல்கள் என்றும் தோற்றதே இல்லை. தோற்றாலும் மனதின் ஓரத்தில் என்றுமே நீங்காமல் இதமாய், பதமாய், வலியாய், வேதனையாய், சுகமாய், நேசமாய், இன்பமாய், துன்பமாய், கண்ணீராய், புன்னகையாய் என வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கும்.
அக்காதல்களில் ஒன்று மிருதி மிருதனின் காதல்...!
சரியாக படம் நிறைவடையும் நேரம் மிருதி வந்துவிட்டாள். பத்திரிகை, ஊடகவியலாளர்கள், சமூக வலைத்தளங்கள் என எல்லோரும் அவளின் பேட்டியை கேட்டு நிற்க எந்த அலட்டலும் இல்லாமல் கேட்டவற்றிற்கு தக்க பதிலை கொடுத்தாள்.
எல்லாமே சிறப்பாக நடை பெற்றது. தென்னகத்து வசூலில் முதல் நாளே சாதனை செய்தது படம். பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் பக்காவாக இருந்தது.
மகேந்திரன் கணித்ததை விட அதிக வசூலை தேடி தந்தது படம்...! எனவே அடுத்த ப்ராஜெக்ட்டை அவளிடம் கொடுக்க சம்மதித்தார்.
அதற்கு பெருவுடையார் பக்கபலமாக இருந்தார் என்றால் மிகையில்லை. அதோடு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கேட்டவள் சக்தி தொடங்கி இருக்கும் ப்ராஜெக்ட்டுக்கு உதவ வந்தாள்.
அவனும் முழு மனதாக ஏற்றுக் கொண்டான். அவனின் படத்துக்கும் அவர்களின் தோழன் தான் இசையமைப்பாளர் தான் மியூசிக்.
அதில் வரும் பாடல்கள் அனைத்தும் மிருளாணி தான். மிருதி இயக்கிய படத்தில் பாடல்கள் ஏற்கனவே எழுதி வைத்திருந்தாள்.
ஆனால் இதில் அப்படி இல்லை. எனவே ஸ்டுடியோ போய் தான் அகனும். அதுவும் அவனின் முன்பு எழுத வேண்டும் மிருளாணி... நினைக்கும் பொழுதே அடி வயிற்றில் பயம் பிடித்துக் கொண்டது.
மிருளாணி கதை இப்படி இருக்க, இங்கே மகேந்திரனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. மனம் முழுக்க அமைதியே இல்லாமல் அதையும் இதையும் சுற்றி அலைந்துக் கொண்டே இருந்தது.
உயிர் கோர்வையாகும்...