Notifications
Clear all

அத்தியாயம் 26

 
Admin
(@ramya-devi)
Member Admin

படம் ஓடிக்கொண்டு இருக்க கால் வாசி நேரத்திலே எழுந்துக் கொண்டவளை நண்பர்கள் தடுக்க,

“ஏற்கனவே பார்த்தது தானே... வெளிய நிக்கிறேன்” என்றவள் எழுந்து வெளியே நின்றாள். அந்த காரிடர் முழுவதும் யாருமில்லை. இடைவேளைக்கு கூட இன்னும் அதிக நேரம் இருந்ததால் கேண்ட்டீன் கூட கூட்டமில்லாமல் சேல்ஸ் மேன் கூட ஒருவர் தான் இருந்தார். அவரும் போனில் மூழ்கி இருக்க நீண்ட அகண்ட பெரிய குறுங்கண் அருகே சென்று நின்றாள். கதவு திறந்து இருக்க அதன் வழியாக காற்று சில்லென்று வந்தது...!

அதிகாலை நேரம் என்பதால் காற்று நன்றாகவே ஈரப் பதத்தோடு இருந்தது...! ஆனால் அதை இரசிக்க கூட முடியாமல் அவளின் நெஞ்சு கனத்துப் போனது. அவ்னுக்ககான இருக்கை காலியாக இருந்ததை கடந்து வரும் பொழுது இன்னுமே பாரமாகிப் போனது.

அப்படியே அந்த கம்பியில் சாய்ந்தாள். அவனிடம் சண்டை போட்டு, அவனது சட்டை பட்டனை அறுத்து போட்டு, தலையை பிடித்து ஆட்டி தன் மொத்த கோவத்தையும் அவனிடம் காட்ட வேண்டும் என கண்கள் கலங்கியது. ஆனால் என்னவென்று சண்டை போட முடியும்.

அந்த அளவுக்கு இருவரும் இன்னும் மனம் விட்டு பேசிக்கொள்ளவில்லையே... அவனிடம் ஏகப்பட்ட தயக்கம் தன் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த... அதனால் கோவத்தை கூட அவன் மீது காட்ட முடியா நிலையில் அவள் இருக்கிறாள்.

சண்டை கூட போட வேண்டாம். கண்ணார அவனை பார்த்தாள் போதும் என்று இருந்தது அவளுக்கு. ‘எனக்கு இருக்கிற தவிப்பும் உணர்வும் ஏன் மிருதன் உங்களுக்கு இல்லை...?’ என்று கண்களில் இருந்து நீர் இறங்க, மூக்கு நுனி சிவந்து அவளின் தவிப்பை அப்பட்டமாய் எடுத்து காட்டியது அவளது முகம்.

அதிக விளக்கு வெளிச்சம் இல்லாமல் போனதில் அவள் அங்கு நின்று இருப்பது யாருக்கும் தெரியவில்லை. முதலில் அங்கு யாருமில்லை. அதன் பிறகு தானே யாராவது பார்க்க நேரிடும்...!

காற்று வந்து அவளை மென்மையாக தீண்டிப் போக அந்த தீண்டல் கூட அவளுக்கு வேதனையாக இருந்தது... ஏனோ தென்றல் கூட அவளை தொந்தரவு செய்வது போல இருக்க அவ்விடம் விட்டு போகப் பார்த்தாள்.

அந்த நேரம் வலிய கரம் ஒன்று அவளின் கரத்தை பின்னிருந்து இறுக்கிப் பிடிக்க, ஒரு கணம் திகைத்துப் போனவள் பட்டென்று திரும்பிப் பார்த்தாள்.

பார்த்தவளின் கண்கள் இரண்டும் தெரித்து விழாத குறைதான். எதிரில் இருந்தவனை பார்த்த உடனே மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது அவளுக்கு. விழிகள் காட்டிய காட்சியை நம்ப முடியாமல் திகைத்து நின்றாள் சில கணங்கள்.

எஸ் நம்ம மிருதன் தான்... முகம் முழுவதும் அடர்ந்த தாடி, கசங்கிப் போன ஒரு சட்டை, விழிகளில் தூக்கமின்மை, கலைந்து போன தலை கேசம், ஓய்ந்துப் போன தோற்றம். ஆனாலும் அவனது கம்பீரம் இன்னும் கூடிப் போனது போல அவளுக்கு தோன்றியது.

ஏற்கனவே அவனது உடம்பு படிக்கட்டு தேகம் தான். இப்பொழுது இன்னும் இறுகிப் போய் இருந்தது... அது அவனது சட்டை வழியே நன்கு தெரிந்தது.

விழிகளை திறந்து, மனதை நேர் செய்து யாருக்கு தவம் இருந்தாளோ அவனின் வருகை எப்பவோ நிகழ்ந்து இருந்தது...!

நில்லாமல் வழிந்த கண்ணீரை மிருதனின் கரம் துடைக்க வர, பட்டென்று அவனது கரத்தை தட்டி விட்டவள், அதை விட வேகமாய் அவனது நெஞ்சில் வந்து ஓட்டினாள். தன் கண்ணீரை அவனின் சட்டையிலேயே கொட்டி தீர்த்தாள்.

அவளை அணைத்து ஆறுதல் சொல்ல எழுந்த கரம் அப்படியே பாதியில் நின்றது. தன்னை இவ்வளவு நேரமும் அணைக்காமல் இருந்த அவனை நிமிர்ந்து முறைத்துப் பார்த்தாள்.

அவளின் பார்வையில் சட்டென்று அவனின் இதழ்கள் மெல்லிய கீற்றாக வளைந்தது.

அதற்காக தான் காத்து இருந்தானோ என்னவோ பட்டென்று அவளின் முதுகோடு இரண்டு கரங்களையும் சேர்த்து தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

அதில் மன புழுக்கம் முழுவதும் கரைந்துப் போக, அவனில் சாய்ந்தபடியே அவனது முகத்தை அண்ணார்ந்து பார்த்தாள்.

அவளின் பார்வையை உணர்ந்தவன் என்ன என்பது போல புருவம் உயர்த்தி கேட்டான். அவனது அந்த மேனரிசத்தில் தொலைந்துப் போனவள் அவனின் முதுகோடு இரு கரங்களையும் கோர்த்து இன்னும் நெருக்கிக்கொண்டாள். அவளின் அந்த செயலில் தன்னை எவ்வளவு தேடி இருக்கிறாள் என்று புரிய பெருமூச்சு விட்டான்.

“ரொம்ப தேடுனியா?”

“ம்ஹும்... நீங்க யாரு..? நான் எதுக்கு உங்களை தேட போறேன்..?” வாய் தான் பேசியதே தவிர கரங்கள் அவனது முதுகை வருடி விட்டு பிடரியை பற்றி இறுக்கியது...

“ம்ஹும்...” என்று அவன் நக்கல் பண்ண,

“உண்மையா தான்... நான் எதுக்கு உங்களை தேடணும்..” இன்னும் பிகு பண்ணிக் கொண்டாள். அவளின் பேச்சில் இன்னும் மெலிதாய் சிரிப்பு வர,

“வெளியே எங்காவது போகலாமா?” கேட்டான். அவள் விழிகள் வியப்பில் விரிய,

“எஸ் ஆர் நோ...” என்றான் அழுத்தமாய்.

“ம்ம்ம் போகலாம்” என்றாள். படம் முடிந்து முதல் ஷோ எப்படி போய் இருக்கு என்று பார்க்க ஆர்வமில்லை. பலதரப்பட்ட மீடியாக்கள் அவளை இண்டர்வியூ செய்ய வரும். அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. அவன் கூப்பிட்ட உடன் சரி என்று விட்டாள்.

அதை உணர்ந்தவன் அவளின் கரத்தை பற்றிக் கொண்டு கீழே இருந்த காருக்கு அழைத்துச் சென்றான். முதல் முறை இருவரும் கரம் கோர்த்து நடந்த சில நிமிடங்கள் பெண்ணவளின் நெஞ்சில் அடி அழாமாய் பதிந்துப் போனது...!

அவள் ஆசைப்பட்ட சில விசயங்களில் இந்த கரம் கோர்ப்பதும் ஒன்று. அதை அவள் சொல்லாமலே கரம் பிடித்து அழைத்து சென்றவனை அதித காதலுடன் பார்த்தாள் மிருதி.

ஏறி அமர்ந்தான். அவனின் அருகில் மிருதியும் வந்து அமர்ந்தாள் காரில்.

நீண்ட பயணமாக இது இருக்காது என்று அறிந்தாலும் அவனுடன் செல்லும் இந்த பயணம் அவளை மகிழ்வுற தான் செய்தது. எங்கே என்று எதுவும் கேட்கவில்லை. கேட்க தோன்றவில்லை.

சிலப்பல நிமிடங்களிலே வர வேண்டிய இடம் வந்து விட, வா... என்பது போல தலை அசைத்து அழைத்தான். அவனோடு அவளும் எழுந்து காரை விட்டு வெளியே வந்தாள்.

வந்தவளின் முன்பு ஒரு வீடு இருக்க, அவனை திரும்பி பார்த்தாள்.

“என்னோட கெஸ்ட் ஹவுஸ்.. வா” என்று அவளை கூட்டிக்கொண்டு உள்ளே சென்றான். அவனோடு உள்ளே நுழைந்தவள் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.

“ரொம்ப டையர்டா இருக்கு.. ஒன் ப்ளாக் காபி..” என்றான் அவளிடம்.

“ஹாங்...” என்று அவள் விழித்தாள்.

“ப்ச்... போட்டுட்டு வாடி...” என்றான்.

“இந்த கருப்பு காபி குடிக்க தான் என்னை இவ்வளவு தூரம் கூட்டு வந்தீங்களா?” என்று வாய்க்குள் முணகியவள் அவனின் ஓய்ந்த தோற்றம் கண்டு மறுக்க முடியாமல் கிட்சன் எங்கே என்று தேடி ப்ளாக் காபி போட ஆரம்பித்தாள்.

“அவங்கவங்க காதலிச்சா அது இதுன்னு என்னென்னவோ பண்ணுவாங்க.. ஆனா எனக்கு மட்டும் இப்படி..” என்று முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு தண்ணீரை கொதிக்க வைத்தாள். பிறகு காபி பொடி, வெள்ளம், சுக்கு எதுவும் இருக்கா என்று தேட ஆரம்பித்தாள்.

அந்த நேரம் அவளின் இடையில் அழுத்தமாய் ஒரு கரம் பட, தேடிய கரங்கள் அப்படியே நின்றது. அவள் அசையவே இல்லை. முதுகில் அவனது மூச்சுக் காற்று பட, கண்களை மூடிக் கொண்டாள். அவனின் தொடுகையில் மொத்த உடம்பும் சிலிர்த்தது...!

அவளை பலவீனப்படுத்தும் ஒரே கருவி மிருதனின் மூச்சுக் காற்றும், தொடுகையும் தான். லேசாக நடுங்க ஆரம்பித்தது அவளின் உடல். அவளின் உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பை உணர்ந்தவன் மெல்ல அவளின் கழுத்தில் தன் இதழ்களை புதைத்தான்.

அம்மாடி... ஆணவனின் முரட்டு இதழ்கள் அவளின் தேகத்தில் படிந்த உடனே எங்கிருந்து தான் பீரிட்டு வருமோ இந்த இளமை உணர்வுகள்... அந்த உணர்வுகள் மொத்தமாய் அவளை அடித்து வீழ்த்த, இதழ்கள் தானாக பிளந்துக் கொண்டது...

இரண்டு கரங்கள் கோர்த்து அவளின் இடையை இறுக்கிப் பிடிக்க அதற்கு மேல் தாங்க மாட்டேன் என்பது போல அவளின் நிலை இருந்தது.. மெல்ல மெல்ல அவனின் இதழ்கள் அவளின் கழுத்தை சுற்றி சின்ன சின்ன முத்தம் வைக்க மூச்சு அடைத்துக் கொண்டது மிருதிக்கு...

அதுவும் அவனின் அடர்ந்த தாடியும், முரடு மீசையும் அவளின் தேகத்தோடு உராய்ந்து அவளை இன்னும் கிழறச்செய்ய ஏன் இப்படி ஒரு அவஸ்த்தை என்று கண்கள் சிவந்தாள்...

சண்டை போட இருந்த உள்ளம் எங்கும் போனது என்று தெரியவில்லை. முற்றும் முழுதாக அவனின் கைப்பாவையாக மாறி இருந்தாள்.

அடுப்பில் வைத்த நீர் அதுபாட்டுக்கு ஒரு பக்கம் கொதித்துக் கொண்டு இருந்தது...! வந்த வேலையை செய்யாமல் இருவரும் வேறு ஏதோ வேலை செய்ய அதிகாலை நேர காற்று இருவரையும் தழுவி சென்றது குறுங்கண் வழியாக.

மென்மை கொஞ்சம் மாறிப்போய் சற்றே வன்மையாக அவளை தொட, அவனின் மாற்றம் கண்டு உள்ளுக்குள் லேசாக அதிர்ந்தாள். அவனின் முகம் பார்க்க விளைய, அவனோ முகத்தை அவளின் மார்பில் புதைத்துக் கொண்டான். இடுப்பை இறுக்கி பிடித்தவனின் கரத்தின் வலிமை அவளை நோகச் செய்ய,

இதில் காதலும் இல்லை, காமமும் இல்லையே...! அவளின் உள்ளம் உணர்ந்துக் கொண்டது சடுதியில். வேகமாய் அவனது முகத்தை தன்னிடமிருந்து நிமிர்த்தி அவனை பார்க்க முனைய, அவளை இன்னும் இறுகக் கட்டிக் கொண்டானே தவிர தன் முகத்தை அவளுக்கு காட்டினான் இல்லை.

“என்னங்க..” அவனை உசுப்ப அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. எட்டி அடுப்பை அணைத்தவள், அவனை தன்னோடு சேர்த்து இறுகிக் கட்டிக் கொண்டாள். ஏனோ சிறு பிள்ளையாய் அவனை அவள் மனம் உணர, அவனின் தலையைக் கோதிக் கொடுத்தாள்.

அவனின் முடியை ஒதுக்கி அவனின் பரந்த நெற்றியில் அழுத்தமாக முத்தம் இட்டாள். அந்த ஒற்றை முத்தம் அவனை என்னவோ போல உணரவைக்க நிமிர்ந்து அவளை பார்த்தான்.

அவனது பார்வையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அவனையே பார்த்தாள்.

“இந்த முத்தம் எனக்கு இன்னும் வேணும்... தாடி..” என்றான்.

அவள் அதிர்ந்து பார்த்தாள் மிருதனை. கணவன் மனைவி, காதலன் காதலி யாராக இருந்தாலும் இதழ் முத்தத்தை தான் அதிகம் விரும்புவார்கள். ஆனால் மிருதஞ்சயனோ அதற்கு நேர்மாறாய் நெற்றி முத்தம் கேட்க உள்ளுக்குள் என்னவோ உடைந்துப் போனது மிருதிக்கு.

அப்போ ஏதோ வெளியே சொல்ல முடியாத வேதனையில் இருக்கிறான் என்று புரிய அடுத்த நொடி அவன் முகம் முழுவதும் முத்தம் கொடுத்தவள் அவன் கேட்ட நெற்றி முத்தத்தை இன்னும் அழுத்தமாக கொடுத்தாள்.  

“இன்னும் வேணும்” என்றான். அவள் கொடுத்த முத்தம் எதுவும் போதாமல்.. அவன் கேட்க கேட்க இன்னும் அழுத்தம் சேர்த்து கொடுத்தாள். அப்படியே அவன் மண்டி போட அதிர்ந்துப் போனவள் தானும் அவனோடு மண்டிபோட, அவன் தலை அசைத்து வேண்டாம் என்று சொல்லி அவளை போட விடாமல் தடுத்து அவளின் வயிற்றில் முகத்தை புதைத்துக் கொண்டான்.

அவனின் இந்த வித்தியாசமான செயலில் ஒவ்வொரு முறையும் அதிர்ந்துப் போனாள். மிக மிக அழுத்தமாக அவளின் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டான். அவள் ஏதோ பேச வர வயிற்றில் கடித்து வைத்தான் எதுவும் பேசாதே என்று..

அதில் வயிற்றில் சுருக்கென்று வலி எழுந்தாலும் அவனது இதழ்களே மருந்து போட்டு விட பெருமூச்சு விட்டவள் அவனது தலையை கோதி விட்டாள். அவளின் வாசத்தில் தாய்மையை உணர்ந்தவன் “உன் மேல படுத்துக்கட்டுமா?” என்று கேட்டான்.

அவனது கேள்வியில் கொஞ்சமும் அதிராமல்,

“படுக்கை எங்க இருக்கு” என்று கேட்டாள்.

“பயமா இல்லையாடி..?” என்றவன் அவளை தன் கரத்தில் தூக்கிக்கொண்டான்.

“எனக்கென்ன பயம்..” என்றவளை படுக்கையில் படுக்க வைத்தவன் அடுத்த நொடி அவளின் மீது கவிழ்ந்துக் கொண்டான்.

அவளின் மீது படுத்து இருந்தானே தவிர, அவளை வேறு எந்த தொந்தரவும் செய்யவில்லை. அவள் தான் அவனின் தலையை கோதிக் கொடுத்தாள். முதுகை நீவி விட்டாள். ஆனால் அவனிடம் எந்த அசைவும் இல்லை. படுத்தவன் படுத்த படியே இருந்தான்.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானோ தெரியவில்லை. அவளின் வாசத்தை நாசியில் ஏற்றிக் கொண்டவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான். சிறிது நேரம் கழித்து அவளின் மார்பில் தலை வைத்துக் கொண்டான். இறுதியாக அவளின் வயிற்றில் முகம் வைத்து படுத்துக் கொண்டான். வேறு எந்த மாற்றமும் அவனிடம் இல்லை.

பேச வந்தவளையும் பேச அனுமதிக்கவில்லை. அவனை பொறுத்த வரை இந்த நிமிடம் மீண்டும் கிடைக்காத நல்லின்ப நேரம். அதை வீண் வார்த்தைகளால் பேசி கலங்க விட அவனுக்கு மனமில்லை.

நேரம் அப்படியே செல்ல செல்ல எந்த அலைப்புருதலும் அவனிடம் இல்லை. எல்லாமே ஓடி ஒழிந்துப் போனது போல இருந்தது.

 

Loading spinner

Quote
Topic starter Posted : September 6, 2025 5:16 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top