“ப்ளீஸ்” என்று அவள் மேலும் மெசேஜ் பண்ண, அனைத்தையும் பார்த்தானே தவிர, எந்த பதிலும் அனுப்பவில்லை தயாகரன்.
அவளிடம் அவன் எதிர்பார்த்த திடமும் உறுதியும் இல்லாமல் போக, அவனின் வாழ்க்கையில் இருந்து முற்றிலும் ஒதுக்கி வைக்க எண்ணியே அவளை விட்டு நிரந்தரமாக செல்ல முடிவெடுத்து விட்டான்.
அதை புரிந்துக் கொண்டவளுக்கு பக்கென்று இருந்தது. ஆனால் எல்லாம் கை மீறிப் போன பிறகு அவளால் என்ன செய்ய முடியும்.. நேற்று இரவு கூடல் முடிந்த பிறகு இருவரும் அயர்ந்து உறங்கின பிறகு படக்கென்று முழிப்பு வந்து விட்டது அவளுக்கு.
முழிப்பு வரவும் தன் அருகில் படுத்து இருந்தவனை கண்டு காதலில் அவனின் முடியை கலைத்து விட்டு நெற்றியில் முத்தம் வைத்தவள் தன் மனதில் உள்ள திட்டத்தை கொட்டி விட்டாள். ஆனால் அவன் முழித்து தான் இருக்கிறான் என்று தெரியாமல் அவள் சொல்லி விட, இதோ இப்பொழுது அவளை விடுத்துவிட்டு அவன் மட்டும் தனியே...
தன் அவசர புத்தியால் வந்த விளைவை கண்டு தலையில் அடித்துக் கொண்டவள்,
“நான் சாக மாட்டேன். என்னை நம்புங்க” என்று அனுப்பினாள். அந்த பக்கம் அந்த மெசேஜை பார்க்க கூட இல்லை.
அவளிடம் அவன் எதிர்பார்த்த தைரியம் கொஞ்சம் கூட இல்லாததை எண்ணி பெருமூச்சு விட்டவன்,
“தாலியை எடுத்துட்டு வந்தது சரி தான்னு நீ நிரூபிச்சுட்டடி. இனி உனக்கும் எனக்கும் இடையில எதுவும் இல்லை. எதிர் காலத்துல எதுவும் இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன்.. மனசுக்குள்ள சின்னதா ஒரு ஆசை இருந்தது. இந்த மிஷன் முடிஞ்ச பிறகு உன் கூட வாழலாம்னு. ஆனா நீ தற்கொலை வரை யோசிச்சு வச்சுட்ட. அப்படி அவனுங்க உன்னை சீரழிச்சா தான் என்ன.. நான் கூட இருப்பேன் தானே.. அப்படியா உன்னை விட்டுடுவேன். சப்போஸ் சந்தர்ப்ப வசதுல உன்னை காப்பாற்ற முடியாம போனா கூட சத்தியமா உன்னை கை விட்டு இருக்க மாட்டேன்டி.. உன்னை என் உயிரா நேசிக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா நீ கோழையை மாதிரி உன்னை முடிச்சுக்க நினைச்சுட்ட.. இப்படி பட்ட கோழையை எப்படி நான் என் வாழ்க்கை துணையா நான் ஏற்பேன். இனி வரும் காலத்துல என் உயிருக்கு என்ன வேணாலும் நடக்கலாம். ஏன்னா நான் சாகிற வரைக்கும் ரா ஏஜென்ட் தான். அப்படி இருக்கும் பட்சத்துல இப்படி ஒரு கோழையை கல்யாணம் பண்ணி பிள்ளையை எப்படி பெத்துக்க முடியும்” என்று எண்ணியவன் அதன் பிறகு அவளை பற்றி எண்ணவே கூடாது என்று உறுதியாக முடிவெடுத்துக் கொண்டான்.
இவனும் வாயை திறந்து தன் காதலை சொல்லவில்லை. அவளும் காதலை சொல்லவில்லை. மனம் விட்டு பேசிக்கொள்ளவும் இல்லை. பிறகு எங்கிருந்து புரிதல் வரும்.
இவனை பற்றி முழுமையாக ஒன்றுமே அவளுக்கு தெரியாது. நீ எந்த நிலையில் இருந்தாலும் உனக்காக நான் இருப்பேன் என்கிற நம்பிக்கையை அவளிடம் விதைக்காமல் அவள் கோழையாக இருக்கிறாள் என்று விட்டுட்டு வந்துட்டான்.
நம்பிக்கை கொடுத்த பிறகு அல்லவா அவளிடம் அந்த நம்பிக்கையை தேட முடியும். நம்பிக்கையே குடுக்காமல் என் மீது நம்பிக்கை வைக்கவில்லையே என்று அர்த்தமில்லாமல் கோவம் கொண்டு வந்து விட்டான் ரா ஆபிசர். இதுங்களை வைத்துக் கொண்டு ஒரு காதல் கதை கூட எழுத முடியாது போல..
மௌனமாக குணா மற்றும் பிரபாவோடு கிளம்பி விட்டாள். ஆனாலும் மனம் முழுக்க முழுக்க அவனின் நினைவை மட்டும் சுமந்துக் கொண்டு கிளம்பியவளுக்கு நிம்மதியே இல்லை கொஞ்சம் கூட.
கண்ணீருடன் படகில் ஏறியவளுக்கு மனமெங்கும் அவனின் நினைவு மட்டுமே.. அதுவும் தன்னை போலவே அவன் மாறி இருந்த கோலம் நெஞ்சை பிசைந்தது. தப்பித் தவறி அவன் என்று அறிந்துக் கொண்டால் அவனின் நிலை.. கொஞ்சமும் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.
சிறிது நேரம் படகில் அமைதியாக அமர்ந்து இருந்தவளுக்கு அதன் பிறகு அமைதியாக இருக்க முடியவில்லை. தொப்பென்று கடலில் குதித்து விட்டாள் எதையும் யோசிக்காமல்.
இவாள் இப்படி விழுவாள் என்று எதிர் பார்க்காத குணாவும் பிரபாவும் வேகமாய் நீருக்குள் பாய்ந்து அவளை தேடி கண்டு பிடித்து மீட்டு வருவதற்குள் ஒருவழியாகிப் போய் விட்டார்கள்.
“என்ன அண்ணி இது? இப்படி தான் கொஞ்சமும் யோசிக்காம நடந்துக்குறதா? உங்களுக்கு என்ன பைத்தியமா? எதுக்காக இப்படி எல்லாம் நடந்துக்குறீங்க”
“அண்ணன் எங்களை நம்பி தான் உங்களை விட்டுட்டு போயிருக்காங்க.. அதை கொஞ்சமும் யோசிக்காம தற்கொலை பண்ணிக்க பார்க்குறீங்க?” இருவரும் படபடத்துப் போய் கேள்வி மேல் கேள்வி கேட்க,
“உங்க அண்ணன் இருக்கிற இடத்துக்கு என்னை கூட்டிட்டு போங்க. இல்லன்னா என் உடம்பு கரையை பார்க்காதுன்னு உங்க அண்ணன் கிட்ட சொல்லிடுங்க” என்றவள் படகில் ஓரமாய் போய் நின்றுக் கொண்டாள்.
அவளின் இந்த பரிமாணத்தில் துணுக்குற்றவர்கள் வேகமாய் தயாகரனுக்கு போனை போட்டு விசயத்தை சொல்ல,
“அப்படியே அவ அங்கயே சாக சொல்லிடுங்கடா” என்று கடுப்படித்தவன் போனை வைத்து விட்டான்.
“இம்சையை கூட்டுறதுக்குன்னே வந்து சேர்ந்து இருக்கா.. எல்லோரையும் பதறவச்கிக்கிட்டு இருக்கா” கடுப்படித்துக் கொண்டவன் தன் வேலையில் ஆழ்ந்துப் போக, அடுத்த ஒரு மணி நேரத்தில் படகு நிற்க, வேகமாய் தன் அறையில் இருந்து வெளியே வர, இன்னொரு படகில் இருந்து இந்த படகுக்கு வந்துக் கொண்டு இருந்தாள் அவனின் அவள்.
அவளை பார்த்த உடன் ஏகத்துக்கும் கோவம் உச்சிக்கு ஏற,
“ஏய்.. அறிவு இல்ல” என்று அவன் ஆரம்பிக்கும் முன்பே, யார் யார் இருக்கிறார்கள், யார் யார் பார்க்கிறார்கள் என்று எதையும் கண்டு கொள்ளாமல் அவனின் இதழ்களை தன் இதழ்களுக்குள் எடுத்துக் கொண்டு மின்சார முத்தத்தை பதிக்க ஆரம்பித்து விட்டாள் தயாகரனின் தயாழினி.
“ஹாங்” என்று அவன் செயல் இழந்து நின்றான் ஒரு கணம். அந்த ஒரு கணத்தை தனக்கு சாதகமாக பையன் படுத்திக் கொண்டவள், இதழ்களின் வழியே அவனின் உயிரை உறிஞ்சி எடுத்துக் கொண்டவள், அவனின் கையை எடுத்து தன் இடையில் வைத்துக் கொண்டவள் அவனின் பிடரியை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
அவளின் இந்த அதிரடியான முத்தத்தில் திகைத்துப் போய் விட்டான். அதுவும் வந்த உடனே அவள் எதை பற்றியும் யோசிக்காமல் முத்தம் வைக்க, இவனுக்கு தான் ஐயோ என்று வந்தது.
அதுவும் அங்கு சுத்தி இருந்த ஆட்கள் எல்லோரும் அவனின் அசிஸ்டென்ட். அவனது டீம் ஆட்கள். அவர்களின் முன்பு இப்படி ஒரு சம்பவம் நிகழ்த்தியவளை என்ன முயன்றும் அவனால் கோவப்பட முடியவில்லை. அவளுக்கு வாகாக தன்னை ஏந்திக் கொடுத்தவன் அவள் கைப்பிடித்து வைத்த அவளின் இடையில் தன் கையை இறுக்கமாக வைத்து பற்றிக் கொண்டான்.
அவனுக்கு மட்டும் என்ன.. இந்த இரண்டு மூன்று மணி நேரப் பிரிவு வலி எடுத்தது தானே.. அவளே வழிய வந்து கொடுக்க அவனுக்கு கசக்குமா என்ன.. அதும் அவளே முன் வந்து குடுக்க இரசனையுடன் வாங்கிக் கொண்டான் தயாகரன்.
மூச்சு முட்டியைப் பிறகே அவனிடம் இருந்து விலகியவள், அவனை முறைத்துப் பார்த்தாள். அதோடு கூடவே கை தட்டும் சத்தம் படபடவென்று கேட்க, திகைத்துப் போனவள் அதிர்ந்து சுற்றிலும் பார்க்க, மொத்த பேரும் இவர்களை சுற்றி தான்.
சட்டென்று தன்னவனின் பின்னால் மறைந்துக் கொண்டாள்.
“பெண்ணும் பெண்ணும் முத்தம் குடுத்துக்குற காட்சியை நான் இன்னைக்கு தான் லைவா பார்க்கிறேன்” என்று செந்தமிழ் கலாய்க்க, அவனை முறைத்துப் பார்த்தான் தயாகரன்.
“சாரி பாஸ்” என்று சிரித்தவன்,
“இருந்தாலும் பையர் செம்ம” என்று விட்டு அவன் ஓடிப் போய் விட்டான். எல்லோரின் முகத்திலும் மையமிட்டு இருந்த சிரிப்பை பார்த்து ஐயோ என்று வந்தது இவளுக்கு.
அவனின் முதுகோடு முகத்தை புதைத்துக் கொண்டவள்,
“அச்சோ... மானம் போச்சு” என்று முணகினாள்.
“இப்ப வருத்தப் பட்டு என்னத்துக்கு ஆகப் போகுது” என்றவன்,
அவளை கூட்டிக் கொண்டு அவள் முன்பு இருந்த அறைக்குள் நுழைந்தான். வந்த உடனே முகம் இறுகிப் போய்,
“எதுக்காக இங்க வந்த” என்று கேட்டான். சற்று முன்பு இருந்த இளக்கம் அவனிடம் இப்பொழுது இல்லை.
“என்னை வச்சு தான் இந்த மிஷனை ஸ்டார்ட் பண்ணீங்க. இப்போ என்னன்னா என்னை விட்டுட்டு நீங்க பாட்டுக்க போறீங்க. அது தான் என்ன ஏதுன்னு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்” என்று சட்டமாக அங்கிருந்த படுக்கையில் அமர்ந்து விட்டாள்.
“மரியாதையா எழுந்து வெளில போடி.. உன்னை பார்த்தா கோவம் கோவமா தான் வருது. ஒழுங்கா என் கோவத்தை கிளப்பாம வெளில போயிடு. இல்லன்னா உன்னை அடிச்சு வெளில துரத்த ரெண்டு நிமிடம் கூட ஆகாது” என்றவனை முறைத்துப் பார்த்தவள், எழுந்து அவனின் அருகில் வந்தவள் அவன் தலையில் வைத்து இருந்த நீண்ட தலை முடி கொண்ட டோப்பாவை அவிழ்த்து போட்டு விட்டு, அவனின் முகத்தோடு முகமாக ஒட்டி இருந்த அவளின் முக அச்சுக் கொண்ட முக மூடியை கழட்டி விட்டவள், அவனின் முகத்தில் எந்த முடியும் இல்லாமல் மொழுக்கென்று இருந்த அவனின் முகத்தை இரு கையாளும் பற்றி அவனின் முகத்தில் ஒரு இடம் விடாமல் முத்தம் வைத்தாள்.
“ஹேய் என்னடி பண்ற?” அவளின் பிடியில் இருந்து விலகி வெளியே வரப் பார்க்க,
“நோ அசையக் கூடாது” என்று கட்டளை போட்டவள், அவனின் புடவையை வேறு உருவ,
“ஏய்” என்றவனின் வார்த்தை எல்லாம் அவளின் வாய்க்குள்ளே அடங்கிப் போனது. முத்தம் ஒரு பக்கம் போய்க்கொண்டு இருந்த பொழுதும், அவளின் கைகள் அவன் மேனி மீது ஓடி அவனின் பெண் உடையை கலைத்துக் கொண்டு இருந்தது.
திரும்பிப் போன சொர்க்கம் மீண்டும் அவன் கையில் விழுந்தது போல இருக்க, இறுக்கிப் பிடித்துக் கொண்டான் அவளை. அவளுக்கும் போன உயிர் திரும்பி வந்தது போல இருக்க, இனி செத்தாலும் இவன் மடியில் தான் சாகனும் என்ற முடிவுடன் தானே திரும்பி வந்தாள்.
இனி யாராலும் இவர்களை பிரிக்க முடியாத அளவுக்கு ஒருவருக்குள் ஒருவர் இறுகிப் போனார்கள். ஹரிணிக்கு தான் தயாகரன் முழுவதும் கைநழுவிப் போனது போல இருந்தது.
அப்படி என்ன அவளிடம் இருக்கிறது என்று மனதுக்குள் குமைந்துப் போனாள். அதுவும் எல்லோரும் பார்க்கும் பொழுதே தயாகரனை கிஸ் பண்ணின பொழுது அவளால் அந்த கட்சியை எல்லோரையும் போல கைத்தட்டி வரவேற்க முடியவில்லை.
அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் இங்கே இருவரும் தங்களின் உலகுக்குள் தேங்கினார்கள். அவனின் உடைகளை கலைத்து விட்டு, அவன் உடையை நீட்டினாள்.
அதை வாங்காமல்,
“நீ தான் சாகப் போறியே. பிறகு எதற்கு இந்த ட்ராமா?” என்று கேட்டுக் கொண்டே உடை மாற்றினான்.
“இப்போ மாத்திக்கிட்டேன்” என்றாள்.
“ஏனாம்”
“செத்தாலும் என் ஊயிர் என்னை விட்டு போகாது... என்னை பழிவாங்கிய உங்களை பழி வாங்காமல் போனா எப்படி. அது தான் பழிவாங்க மறுபடியும் வந்துட்டேன்” என்றவள் அவனின் நெஞ்சில் புதைந்துக் கொண்டாள்.
“சொல் ஒண்ணா இருக்கு செயல் ஒண்ணா இருக்கேடி” என்றவனின் கைகள் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டது.