மறுபடியும் மிருதனை தங்களை விட்டு ஒதுக்கி வைத்தார். அதாவது சம்பூர்ணவதி பார்க்கும் சமயங்களில் மட்டும் மிருதனை கொண்டாடுவது போல கொண்டாடுவார்.
“நான் இருக்கும் போது நீ மிருதனை பற்றி கவலையே படாத சம்மு.. நீ மிருளாணியை மட்டும் பார்த்துக்க போதும். அதுவும் கொஞ்சம் பெரிய பிள்ளை ஆன உடன் முழு பொறுப்பையும் நான் எடுத்துக்குவேன்.. நீ எப்பொழுதும் போல பிசினேசை கவனி...” என்று அவருக்கு மூளை சலவை செய்து தொழில் பக்கம் கவனத்தை திருப்பியவர், மிருளாணியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டவர், மிருதனை தன் மாமியாரிடம் விட்டு விட்டார்.
அப்படியே வருடங்கள் ஓடியது. மிருதன் யாருடனும் ஒட்ட மாட்டான். படிப்பில் முதலாவதாக வருவான். ஸ்போட்ஸ் சொல்லவே வேண்டாம்... எதிலும் முதலிடம் தான். தன் அன்னையிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வான். ஆனால் அவருடன் ஒட்ட மாட்டான்.
அவரே இழுத்து வைத்து பேசினாலும்,
“வேலை இருக்கும்மா கிளம்பனும்” என்று கிளம்பி விடுவான். தன்னிடம் அதிகம் அவரை சேர்த்துக் கொண்டது இல்லை. அதில் மகேந்திரனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. தன்னுடைய திட்டம் நிறைவேறி விட்டதில் ஒரே ஆட்டம் தான்.
ஆனால் மிருதன் தலை எடுத்த பிறகு மகேந்திரனின் ஆட்டங்கள் யாவும் மெல்ல மெல்ல ஆட்டம் கண்டது. ஆட்டம் காண வைத்தான் மிருதஞ்சயன்.
அவர் என்ன சொன்னாலும் அதற்கு நேர்மாறாய் நின்றான். அவனின் ஒவ்வொரு முடிவுக்கு பின்னிலும் பெருவுடையாரும் பெருவுடையாளும் சம்பூர்ணவதியும் நின்றார்கள் என்றால் மிகையில்லை.
மிருதனின் மாற்றங்களை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்த பெருவுடையார். முக்கியமாக தங்கையிடம் விளையாடமால் வெறுமென எட்டி நின்று சிரித்து விட்டு செல்லும் பேரனை நெஞ்சு உடைய பார்த்தார்.
“என்ன சாமி” என்று அவர் கண்கள் கலங்க கேட்க, அவரது கண்ணீரை அந்த சின்ன வயதிலே துடைத்து விட்டவன்,
“எல்லோருக்கும் எது நல்லதோ அதை தான் செய்யிறேன் தாத்தா. வேற ஒண்ணும் இல்லை... நீங்க எதுக்கும் கவலை படாதீங்க” என்று சொன்னவன் விலகி போய் விட்டான்.
வீட்டில் இருப்பதே அவன் அரிதான நிலை வந்தது. அந்த சின்ன வயதிலே தன்னை அவ்வளவு பிசியாக வைத்துக் கொண்டான். உறவு தானே தர மறுக்கிறாய். நான் எங்கு போனாலும் என் உறவுகள் என்னை நினைத்துக் கொண்டு இருக்கும் என்று மகேந்திரனை எள்ளலுடன் கடந்து விடுவான்.
கல்லூரியில் படிக்கும் பொழுதே சம்பூர்ணமும் பெருவுடையாரும் அவனை தொழில் இறக்கி விட்டார்கள். அதில் பெரும் எதிர்ப்பு மகேந்திரனிடம் இருந்து தான். அவனுக்கு என்ன தெரியும்னு நீங்க மேனேஜ் மென்ட்ல உட்கார வச்சு இருக்கீங்க.. அவன் முதல்ல அடிப்படையை கத்துக்கிட்டு வரட்டும்” என்றார்.
“என்னங்க சொல்றீங்க. அவன் எப்படி அடிப்படை வேலை எல்லாம் செய்வான். அவன் ...” என்று சம்மு குறுக்கே வர,
“அவன் என் மகனும் கூட தான் சம்மு. அவனது எதிர்காலம் குறித்த கற்பனை எனக்கும் இருக்கு” என்று அழுத்தமாக சொல்லிவிட அதற்கு மேல் அவரை மறுக்க முடியவில்லை.
அதனால் மகேந்திரன் சொன்னதற்கு ஒப்புதல் கொடுத்தார்கள் அப்பாவும் மகளும். எல்லா துறையிலும் அசிஸ்டென்ட்டாக இருந்து பழகட்டும் என்று சொன்னார். ஆனால் அவர்களிடம் சொன்னது எல்லாம் வெறும் கண் துடைப்பு தான். உண்மையில் ஒவ்வொரு துறையிலும் அவனை அடிமட்ட வேலையை செய்ய பழக்கினார்.
மிருதணும் தன் தாயிடமும் தாத்தவிடமும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. இதை பற்றி எல்லாம் தெரிந்துக் கொள்ள அவனுக்கும் ஆர்வம் இருந்தது. அதனால் தந்தை தன்னை அவமானம் செய்வதாக உணர்ந்தாலும் வேலை மீது இருந்த ஆர்வத்தில் அனைத்தையும் திறமையுடன் கற்றுக் கொண்டான்.
ஆரம்ப கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார் மகேந்திரன். அதன் பிறகு தான் இப்படி வேலை செய்வதை தாயும் தாத்தாவும் பார்க்க நேர்ந்தால் மிகவும் வேதனை படுவார்கள் என்று அறிந்து அவனே அவர்களிடமிருந்து மறைக்க ஆரம்பித்தான்.
ஓய்வுக்கு அவனது உடல் கொஞ்சினாலும் மசியமாட்டான். விடாமல் ஓடுவான். அவனது அந்த ஓட்டம் தான் இன்று மூன்று நாள் ஆனால் கூட தூக்கத்தை தொலைத்து வேலை வேலை என்று இருக்க முடிகிறது.
மிருதனின் நிலையை ஒரு கட்டத்தில் பார்க்க நேர்ந்த குடும்பத்தாருக்கு நெஞ்சில் இடி விழுந்தது போல ஆனது. அதுவும் ஒரு கடை நிலை நடிகருக்கு செருப்பை மாட்டி விட்டுக் கொண்டு இருந்ததை கொஞ்சமும் அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
மிருதனும் எவ்வளவோ சொல்லி பார்த்தும் யாரும் கேட்கவில்லை. அடுத்த ஒரு மணி நேரத்தில் போர்ட் மெம்பர்ஸ் மீட்டிங் ஏற்பாடு ஆனது. ஏற்கனவே அவனுக்கு பதினெட்டு வயது ஆனதில் இருந்தே அவனுடைய பெயருக்கு ஒரு குறிப்பிட்ட பங்கை எழுதி வைத்தார்கள். ஆனாலும் அவனை போர்ட் மெம்பரா அறிவிக்கவில்லை. அதை செய்ய தடுத்து விட்டார் மகேந்திரன்.
அது தவறு என்று யாராலும் சொல்ல முடியவில்லை. ஆனால் இன்று இருபத்தி மூன்று வயது ஆன பிறகும் இப்படி எடுபிடி வேலையில் மிருதன் இருந்ததை அவர்களால் சீரணிக்கவே முடியவில்லை.
எனவே மிருதனுடைய பழைய பங்கோடு சேர்த்து பெருவுடையாரின் பாதி பங்கும், பெருவுடையாளின் முக்கால்வாசி பங்கும், சம்பூர்ணவதியின் பாதி பங்கும் என மூவரின் பங்கையும் மிருதனின் பங்கோடு சேர்த்து அவனை அசைக்க முடியாத இடத்தில் வைத்து விட்டார்கள் அன்றே...
அதை தடுக்க நினைத்த மகேந்திரனின் பேச்சை அங்கு யாரும் காது கொடுத்து கேட்கவில்லை. அவருக்கு ஜால்ரா தட்டும் கூட்டமும் தடுக்க பார்க்க பெருவுடையாரின் முடிவுக்கு முன்னால் நிற்க முடியவில்லை.
அன்றிலிருந்து மிருதனை வெள்ளி திரையில் படம் இயக்க சொல்ல, அவனும் ஒத்துக் கொண்டான். ஆனால் அவனை தனியாக சந்தித்த மகேந்திரன் என்ன சொன்னாரோ தெரியவில்லை. இப்போதைக்கு அதில் விருப்பம் இல்லை என்று சொன்னவன் சின்ன திரையில் தன்னுடைய முத்திரையை நன்கு பதித்துக் கொண்டு இருக்கிறான்.
யாரும் அசைக்க முடியா இடத்தில் அவன் இருந்தும் அவனை அசைத்து பார்த்தே தருவேன் என்று மகேந்திரன் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார். யார் யாரை வெல்லுவார்களோ தெரியவில்லை...!
இன்றைக்கும் மிருதனை விஞ்ச முடியாமல் அவனது முடிவுக்கு தலை அசைக்க வேண்டி இருந்ததை எண்ணி மனதினுள் குமைந்துப் போனார் மகேந்திரன்.
ஆனாலும் தன் வஞ்சகத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் அன்றைக்கு சத்தம் இல்லாமல் இருந்தவர், அடுத்த இரண்டு நாளில் மறுபடியும் போர்ட் மீட்டிங்கை அரேஞ் பண்ணினார். அதில் சலித்துக் கொண்டாலும் யாரும் எதுவும் பேசவில்லை.
“உன் விருப்பத்துக்கு நீ இங்கேயே நம்ம செட்டிலே ஷூட் பண்ணிக்கோ மிருதன். ஆனா நான் சொல்ற கேண்டிடேட்டை தான் வின்னர்னு அறிவிக்கணும்” என்றார்.
“காட்...” என்று நெற்றியை நீவி விட்டுக் கொண்டவன்,
“என்ன பிரச்சனையை இப்போ உங்களுக்கு..?” என்று அத்தனை பேரின் மத்தியிலும் கேட்டு விட்டான். அவனும் எவ்வளவு தான் பொருத்து பொருத்து போவான். தலைக்கு மேல் வேலை அவ்வளவு குவிந்து கிடக்கிறது... சும்மா இருந்தால் பரவாயில்லை. அடிக்கடி மீட்டிங் மீட்டிங் என்று இழுத்து வைத்தால் குவிந்து கிடக்கிற வேலையெல்லாம் யார் செய்வதாம்... அதனால் குரல் உயர்த்தியே கேட்டு விட்டான்.
அதில், “மிருதன்...” என்று சம்பூர்ணவதி குரல் கொடுக்க,
“மாம்...” என்றான் தன் கோவத்தை வெளியே காட்டிக் கொல்லாத குரலில்.
“அப்பா என்ன சொல்ல வரார்னு ஒரு நிமிடம் கேளு.. பிறகு உன் முடிவை சொல்லு...” என்று அவர் நாசுக்காக அவர் உன் தந்தை. அவரின் மரியாதையை காப்பது உன் பொறுப்பு. மற்றவர் முன்னிலையில் அவரை அவமானப்படுத்துவது போல குரல் உயர்த்தாதே என்கிற கண்டிப்பு இருக்க “ப்ச்...” சளித்தவன்,
“சொல்லுங்க... டாட்” என்றான் அழுத்தமாக. அவனை ஏளன பார்வையுடன் ஏறிட்டார். எத்தனை பிள்ளை பெற்றாலும் தாலி கொடி உறவு அவ்வளவு எளிதில் விட்டு போகாதுடா என்பது போல அவனை பார்த்தார்.
அவரது பார்வையை கண்டு பல்லைக் கடித்தான்.
“நமக்கு ரொம்ப வேண்டியப் பட்டவரோட மகன் இந்த பைனல் லிஸ்ட்டுல இருக்கான். சோ அவனை நீ முதல் வின்னரா அறிவிக்கணும் மிருதன்.”
“முடியாது..” என்று நிதரிசனமாக மறுத்துவிட்டான்.
“அவர் நமக்கு எவ்வளவோ பேவர் பண்ணி இருக்காரு. சோ நாம கைமாறா இருந்த உதவியை பண்ணி தான் ஆகணும் சம்மு...” என்று அவர் மகனிடம் பேசுவதை விட்டுவிட்டு தன் மனைவியிடம் பேச ஆரம்பித்து விட்டார்.
யார் காலை பிடித்தால் காரியம் ஆகும் என்று அவருக்கா தெரியாது. அதனால் மிருதன் யார் பேச்சை கேட்பாரென்று அவருக்கு தான் நன்கு தெரியுமே. எனவே அங்கு போய் விட்டார்.
தாய் சொல்லி தான் மறுக்க முடியாது என்று அறிந்தவன் அவர் பேசும் முன்பே,
“மாம் இதுல நீங்க தலையிடாதீங்க... மற்ற சேனல்ல நடக்குற ஊழல் உங்களுக்கே நல்லா தெரியும். எவ்வளவு அருமையா பாடினாலும் அவங்களுக்கு யாரு முதல்ல வரணுமோ அவங்களை தான் சூஸ் பண்றாங்க. இவ்வளவு முறைகேடு நமக்கு தேவையில்லை. நம்ம சேனல் எப்பவும் உண்மையா தான் இருக்கும். அதனால தான் நம்ம மக்கள் நம்ம சேனலை அதிகம் புகழ்றாங்க. அந்த புகழுக்காக யாரை வேணாலும் பகைச்சிக்கலாம். அதோட உங்க தலைமுறைக்கு பிறகு என் தலை முறையும், என் பிள்ளைகளின் தலைமுறையிலும் இந்த சேனல் நிலைச்சி நிற்கணும்னு நீங்க நினைச்சீங்கன்னா இந்த முறைகேடுக்கு அலவ் பண்றதை விடுங்க” என்று ஒரே மூச்சில் பேசிவிட்டான்.
யாராலும் அவனது பேச்சை மீற முடியாத அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டான். மகனுக்கே சபோர்ட் பண்ற நிலையில் தள்ளிய தன் மகனை மெச்சாமல் இருக்க முடியவில்லை சம்பூர்ணவதியால்.
இதழ்களில் குறுநகையோடு தன் கணவனை எதிர் கொண்டவர்,
“மிருதன் சொல்றதும் சரி தானேங்க.. அவன் தலைமுறைக்கும் சரி, அடுத்து வர்ற அவனோட சந்ததிக்கும் சரி நாம நல்லதை விட்டு செல்லனும் இல்லையா?” என்றவர் தன் அப்பாவை ஒரு பார்வை பார்த்தார்.
“என் பேரன் முடிவு என்னைக்கும் சோடை போகாது சம்பூரணி... என் பேரன் மேல முழு நம்பிக்கை இருக்கு” என்று அவர் ஒப்புதல் கொடுக்க, மன நிறைவுடன்
“உன் விருப்பம் மிருதன். உனக்கு என்ன செய்ய தோணுதோ செய்...” என்ற தாய் அவனின் நெற்றியில் முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.
ஒவ்வொரு முறையும் அவனை வெட்டி வீழ்த்த போராடிக் கொண்டு இருந்த மகேந்திரனுக்கு அதிகம் கிட்டியது என்னவோ அவமானம் தான். பெரிதான மூக்குடைப்பு தான். அதை எல்லாம் மனதில் கொண்டு மிருதனை வெஞ்சினத்தோடு நோக்கியவர், அமைதியாக அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.
அனைவரின் எதிர்பார்ப்பையும் கிளப்பிய கிரேன்ட் பைனல் ஷூட்டிங் இனிதே ஆரம்பம் ஆனது...! அத்தனை பேரிடமும் ஒரு பரபரப்பு... சக்தியும் மிருதியும் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டு இருந்தார்கள்.
சுதிர் தன் கேமராவை இயக்கி முன்னோட்டம் பார்த்துக் கொண்டு இருந்தான். அதோடு இன்னும் சில பிளையிங் கேமராவை பறக்க விட்டுக் கொண்டு இருந்தான். அதை மானிட்டர் பண்ண ஒரு க்ரூப், அதோடு டாப் ஆங்கில், சைட் ஆங்கில்ஸ், பாட்டம் ஆங்கில்ஸ் என எல்லாவற்றையும் சோதித்துக் கொண்டு இருந்தான்.
தன்னுடைய அசிஸ்டென்ட் எல்லோருக்கும் எப்படி எப்படி என்று சில பல இன்ஸ்ட்ரெக்சன் சொல்லிக் கொண்டு இருந்தான். சுதிருக்கு கீழ் வசந்த் இருந்தான். வசந்தனுக்கு கீழ் இன்னும் சிலர் இருந்தார்கள். அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தான்.
சக்தி ஸ்க்ரிப்ட்டை செக் பண்ணிக் கொண்டு இருந்தான். கடைசி நிமிடம் வரை எதாவது மாற்றம் இருந்துக் கொண்டு தான் இருந்தது. இடை இடையே சில கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தலாம் என்று ப்ளான் பண்ணி இருந்தார்கள்.
அதனால் அந்த வேலையையும் சேர்த்து மிருதி பார்த்துக் கொண்டு இருந்தாள். அதற்குரிய ஆக்ட்ரஸ், பாடகர்கள் என எல்லோரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு இருந்தாள்.
ஆடியன்ஸ் வந்த வண்ணமாகவே இருக்க, அவர்களை அழைத்து செல்ல அமரவைக்க என ஒரு க்ரூப் இருந்தது.. ஸ்பெஷல் கெஸ்ட் இன்னும் சில நொடிகளில் வர இருந்தார்கள்.
அதற்குள் அனைவரும் ஸ்டேஜில் வந்து விட்டார்கள். ஆடியன்ஸில் பெரும்பாலும் அவர்களது மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்கள், ஆங்கர்ஸ், ஆக்டர்ஸ் என அனைவருமே வருகை தந்து இருந்தார்கள். அவர்களை அடுத்து ஒரு தடுப்பு வைத்து அதன் பின்பே பொது மக்களை அமரவைத்து இருந்தார்கள்.
அதனால் அங்கு பெரும் கூட்டம் திரண்டு இருந்தது... சமாளிக்க வெளியே இருந்து பவுன்சர்ஸ்களை வர வைத்து இருந்தார்கள். சுதிர் தன் கேமராவில் அனைத்தையும் பதிந்துக் கொண்டான்.
ரெடி டேக்... என்ற பிறகு நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது...! நேரலை என்றாலும் அதை எடிட் பண்ணி அடுத்த வரம் தான் லைவுக்கு அனுப்புவார்கள்.
மானிட்டர் பக்கம் வந்து அமர்ந்தான் மிருதஞ்சயன். அவனுக்கு பின்னாடி மிருதி வந்து நின்றாள். அவளிடம் கண்ணை காண்பிக்க, ஆங்கர்ஸ் பக்கம் திரும்பி ஓகே என்று காட்டை விரலை தூக்கி காட்டினாள்.
அவளிடம் இருந்து சமிஞ்சை வர... ஆண் பெண் என இரு ஆங்கர்சும் பேச ஆரம்பித்தார்கள்.
“பாடதா பாட்டெல்லாம்... தே கிரேன்ட் பினாலி” என பேச நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. யார் யார் வந்து இருக்கிறார்கள். ஜட்ஜஸ் யாரு, கெஸ்ட் யாரு, சீஃப் கெஸ்ட் யாரு என பட்டியல் நீண்டது..
மிதனின் கடுகடுப்பில் ஒருவாறு முதல் சுற்று மிக இனிதாக நடந்து முடிந்தது.. அடுத்த கட்ட ஷூட்டிங் இடைவெளியில் மிருதியை மகேந்திரன் கூப்பிடுவதாக சொல்ல,
“தன்னால் இப்பொழுது வர முடியாது” என்று சொல்லிவிட்டு மிருதன் சொன்ன வேலைகளை எல்லாம் செய்தாள். இப்பொழுதும் மிருதனின் முகத்தை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
மிருதன் அதற்கு அலட்டிக்கொள்ளவில்லை என்பது தான் அவளின் வேதனையை உச்சத்துக்கு கொண்டு வந்தது...! நெஞ்சில் அடைக்கும் துக்கத்தை அடக்கிக் கொண்டு வேலையில் ஈடு பட, விடாமல் மகேந்திரனிடம் இருந்து அழைப்பு வந்தது.
அதில் அவள் போனை எடுத்து பார்க்க பார்க்க, இங்கே மிருதன் கோதி நிலைக்கு போனான். அவனது பார்வையில் எரிய வெப்பத்தை உணர்ந்து இவர் இப்பதைக்கு விட மாட்டார் போல... என்று உணர்ந்து வேறு வழியின்றி சக்தியிடம் தன் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றாள்.
போனவள் சிறிது நேரத்திலே கண்ணீரை துடைத்துக் கொண்டு மிருதனின் பின்னால் வந்து நின்றாள்.
எவ்வளவு துடைத்தும் நிற்காத கண்ணீரை என்ன செய்வது என்று அறியாமல் அவள் தவிக்க, மிருதன் தலை நிமிர்ந்து அவளை பார்த்தான்.
அவனை எதிர் கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்தவளுக்கு எங்கே கேவல் வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்சி தன் கரங்களால் வாயை இறுக பொத்திக் கொண்டாள்.