Notifications
Clear all

அத்தியாயம் 19

 
Admin
(@ramya-devi)
Member Admin

எவ்வளவு பெரிய அரியாசனம் கிடைத்தாலும் தாயின் மடி அரியாசனத்துக்கு எதுவும் ஈடாகாது அல்லவா.. அந்த கதகதப்பு, அந்த பாதுகாப்பு, அதில் இருக்கும் மென்மை, அது கொடுக்கும் அரவணைப்பு, எங்கும் கிடைக்காத பேரன்பு, ஈடு இணையில்லா நேசம் இது அத்தனையும் கிடைக்கும் ஒரே இடம் தாயின் மடியான அந்த அரியாசனம் தான்.

அந்த அரியாசனத்தை மிருதனுக்கு தர மறுத்தார் மகேந்திரன். சிறு வயதில் இருந்தே தன் தாயை விட்டு எட்டி நிற்க வைக்கப்பட்டான். தூரத்திலிருந்தே உறவு வளர்த்தார்கள் தாயும் மகனும்.

எவ்வளவு தூர வைத்தாலும் விட்டு போகும் பந்தமா அது... தாலி கொடியை விட அதிக நெருக்கமானது தலை மகனின் தொப்புள் கொடி உறவு.

அதை வெட்டி போட பார்த்தார் மகேந்திரன். திருமணம் ஆன பத்து மாதத்திலே பிறந்து விட்டான் மிருதன். அதன் பிறகு கொஞ்சமே கொஞ்ச நாள் மிருதனை சம்பூர்ணவதியிடம் விட்டு வைத்தார். அதன் பிறகு மிருதனுக்கு ஆறு மாதம் ஆன உடனே அவரை அலுவலக வேலையில் பிடித்து வைத்துக் கொண்டார்.

அதோடு மட்டுமா பச்சை பிள்ளை இருக்கிறது என்று கொஞ்சம் கூட கவலை படாமல் சம்பூர்ணவதியை கூட்டிக் கொண்டு உல்லாச பயணம் அடிக்கடி சென்றார். அதில் தாயுக்கும் மகனுக்கும் இடையே நிறைய இடைவெளி விழுந்தது.

பெருவுடையாரும் தன் மகள் பழைய வாழ்க்கையில் இருந்து மீண்டு புதிய வாழ்க்கையில் மனம் நிறைய ஈடுபட்டால் போதும் என்று மகேந்திரன் சொன்ன எல்லாவற்றிற்கும் தலையாட்டினார்.

“இல்ல மாமா.. சம்மு இப்படி வீட்டுலையே இருந்தா அவளுக்கு பழசை மறக்க முடியாம உள்ளுக்குள்ளையே வேதனை பட்டுக் கொண்டு இருப்பா... இப்படி அவளை வெளியே கூட்டிட்டு போற நேரம் எங்களுக்குள்ள ஒரு பிடிப்பு வரும்..” என்று சம்பூர்ணவதியை முன்னிறுத்தி தான் காணாத இடங்களை எல்லாம் இலவசத்தில் கண்டு களித்தார்.

அதோடு சம்பூர்ணவதியை தன் ஆளுகைக்குள் கொண்டு வர இது நல்ல சந்தர்ப்பம். அதை விட தாயயைம் பிள்ளையையும் பிரிக்க அருமையான திட்டம் என்று ஒரே கல்லில் மூன்று மாங்காயை அடிக்க செய்தார்.

சம்பூர்ணவதிக்கும் தன் கணவன் தன் மேல் ஆசையாக இருப்பது ஒரு விதத்தில் மகிழ்ச்சியை கொடுக்க அவரது விருப்பப்படி வளைய வந்தார். ஆனாலும் அவர் மனதில் பிள்ளையையும் தூக்கிக்கொண்டு வந்து இருக்கலாம் என்று எண்ணாமல் இல்லை.

எங்கு சுற்றினாலும் அவரது எண்ணம் மிருதனிடமே இருந்தது. அதை தன் கணவனிடம் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருப்பதாக காட்டிக் கொண்டார்.

இருவரின் நெருக்கமும் முன்பை விட அதிகம் ஆனது. அடுத்த பிள்ளை பெற்றுக் கொள்ளலாமா என்று கேட்டவரிடம்,

“இன்னும் கொஞ்ச நாள் உன் கூட மட்டும் இருக்கனும்னு ஆசை படுறேன் சம்மு... ப்ளீஸ்... ஏற்கனவே மிருதன் இருக்கிறான். உனக்கு அவனை விட்டு வரவே மனது இல்லை. இதுல நீ இன்னொரு பிள்ளையை பெற்றால் என்றால் சுத்தம் பிறகு நீ என்னையை மறந்து போனாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.” என்றவரின் பேச்சில் தன் அவர் கொண்டுள்ள காதல் நன்கு புரிய வெட்க சிரிப்புடன் அவருக்கு ஒத்துழைத்தார்.

இல்லற வாழ்க்கையில் எப்படி ஒரு நல்ல மனைவியாக இருந்தாரோ அது போல தொழில் வட்டாரத்தில் அசைக்க முடியாத சிம்ம சொப்பனமாக தான் இருந்தார். அவரை தொழில் முறையில் எந்த சலுகையும் அளிக்க மாட்டார்.

அதுவும் மகேந்திரன் சில படங்களுக்கு சலுகை கேட்டு வருவார். அது எப்படி என்று ஆராய்ந்து பார்த்த பிறகே அதை ப்ரோடியூஸ் பண்ணுவதா இல்லையா என்று முடிவெடுப்பார்.

அதில் எப்பொழுதும் மகேந்திரனுக்கு எப்பொழுதும் கடுப்பு தான். எந்த சிபாரிசுக்கும் தலை அசைக்க மாட்டார். அவ்வளவு கெடுபிடி. அந்த நேர்மையையும் இரசிக்க தான் செய்தார் மகேந்திரன்.

மகேந்திரனுக்கு சம்பூர்ணவதியிடம் அதித காதல் தான். ஆனால் அந்த அன்பு மிருதன் மீது இல்லாமல் போனது தான் வருத்தம்.

அதன் பிறகு அடுத்த நான்கு வருடத்தில் மிருளாணி பிறந்தாள். அவரை கையில் வைத்து தாங்கதது தான் குறை. அந்த அளவுக்கு பார்த்துக் கொண்டார் மகேந்திரன்.

மிருளாணியை கீழவே விட மாட்டார். சம்மு பல முறை சொல்லி பார்த்தும் அவர் கேட்கவே இல்லை. “இப்படியே பலக்காதீங்கங்க... அப்புறம் கை சொகம் கண்டுகிட்ட போச்சு” என்று அலுத்துக் கொண்டார்.

“ப்ச் போ சம்மு... பிள்ளை பாரு எவ்வளவு அழகா சிரிக்கிறா இவளை போய் கீழ விட சொல்றியே... கண்ணு ரெண்டும் பாரு அப்படியே உன்னை மாதிரியே இருக்கு.. நெற்றி என்னை மாதிரி இருக்கு” என்று அவர் சொல்லிக் கொண்டே போக,

“மிருதன் பிறந்த போது இவர் இவ்வளவு மகழ்ச்சி அடையலையே...” நெஞ்சுக்குள் சுருக்கென்று ஒரு முள் தைத்தது...!

“உங்களுக்கு பொம்பளை பிள்ளை தான் ரொம்ப பிடிக்குமாங்க?” தன்னை ஆராய்வதை கண்டு கொள்ளாத மகேந்திரன்,

“அப்படி எல்லாம் இல்ல... ஆம்பளை பிள்ளைன்னா இன்னும் மகிழ்ச்சியா இருந்து இருக்கும். ஆனாலும் இந்த குழந்தையை எனக்கு பிடிச்சி இருக்கு” என்றார். அதன் பிறகு சம்பூர்ணவதி எதுவும் பேசவில்லை.

மகேந்திரனையும் மிருதனையும் சற்று எட்ட நின்று ஆராய்ந்து பார்க்க தொடங்கினார். இருவரிடமும் அப்பட்டாமாய் ஒரு இடைவெளி இருந்தது. இதை எப்படி கவனிக்காமல் போனோம்... என்று சம்மு வேதனை கொண்டார்.

அதை விட அந்த சின்ன பாலகன் தன்னையும் ஒதுக்கி வைத்து விட்டான் என்பது அவனது நடவடிக்கையில் கண்டு கொண்ட சம்பூர்ணவதிக்கு நெஞ்சே அடைப்பது போல இருந்தது.

எப்படி எப்படி என் மகனை நான் இப்படி தவிக்க விட்டு விட்டு இருந்தேன்... அபப்டி என்ன இல்லற சுகம்... என்று தன்னை தானே வெறுத்துக் கொண்டார். இருவரின் இடையே இருக்கும் பள்ளத்தை எதை கொண்டு நிரப்புவது என்று தெரியாமல் அல்லாடினர்.

அதை எப்படி சமன் படுத்துவது என்று புரியாமல் அப்படியே இருந்தார் சில நாட்கள்.

அன்றைக்கு கூடத்தில் அமர்ந்து இருந்தவர் மகன் பள்ளிக்கூடத்துக்கு கிளம்பி இருப்பதை பார்த்து, “மிருதன் இங்க வா... பாப்பா பாரு...” என்றார்.

புன்னகையுடன் வந்தவன்,

“குட் மார்னிங் ம்மா...” என்று விஷ் செய்தவன், அவரின் மேல் கொஞ்சம் கூட உரசாமல் சற்று எட்டி நின்றே,

“குட் மார்னிங் பாப்பா... அண்ணா ஸ்கூல் போயிட்டு வந்து பாப்பாக்கிட்ட விளையாடுறேன்... ம்மா வரேன் ம்மா. ஸ்கூலுக்கு நேரமாச்சு..” என்று சென்றவனை நெஞ்சடைக்க பார்த்தார். ஏதோ ஒரு உந்துதல் வர மேலே பார்த்தார். அங்கே மகேந்திரன் கேலி புன்னகையுடன் வெளியே போய் கொண்டு இருந்த மிருதனை பார்த்தார்.

“அப்போ என் மகன் என்னை அண்டாததுக்கு காரணம் இவர் தானா?” என்று காலம் கடந்து யூகித்துக் கொண்டார்.

அன்று மாலை மிருதன் பள்ளி விட்டு வந்தவுடன் அவனது பாட்டியை தேடி அவரின் மடியில் அமர்ந்துக் கொண்டவன், அவரின் கையாலே சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

சம்பூர்ணவதி தன் தாயிடம் இருந்த கிண்ணத்தை வாங்கிக் கொண்டு மகனை தன் மடியில் வைத்துக் கொண்டு ஊட்டி விட ஆரம்பிக்க மிருதன் அவரை அதிசயமாக பார்த்தான்.

அவருக்கு அவனது பார்வையில் உடல் மொத்தமும் கூசி போய் விட கண்கள் அவன் அறியாமல் கண்ணீரை சிந்தியது. என் பிள்ளை மனசுக்குள்ளே எல்லாவற்றையும் வைத்து மறுகிக் கொண்டு இருக்கிறான் என்று புரிந்துக் கொண்டவருக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.

“இப்ப தான் பிள்ளை பெத்து இருக்க... அதுக்குள்ள அவனை தூக்கி மடியில வச்சு இருக்கியே உன் உடம்புக்கு ஏதாவது வந்தா என்ன பண்றது...? ஏன் அத்தை இதெல்லாம் நீங்க என்னன்னு கேட்க மாட்டீங்களா?” என்று எங்கிருந்து தான் வந்தாரோ... மிருதனுக்கு ஒரே ஒரு வாய் தான் ஊட்டி இருந்தார் சம்மு.

அதற்குள் மகேந்திரன் வந்து விட்டார் காக்காய்க்கு மூக்கு வேர்த்த மாதிரி. வந்தவர் கொஞ்சமும் இரக்கமில்லாமல் சம்முவின் மடியில் இருந்து மிருதனை இறக்கி விட்டுவிட்டு,

“எத்தனை முறை சொல்லி இருக்கேன் மிருதன் அம்மாவை தொந்தரவு பண்ண கூடாதுன்னு. முன்ன அப்படி தான் அம்மா வயித்துல பாப்பா இருக்கும் போது எட்டி உதைக்க வர்ற.. இப்போ என்னனா பாப்பா பெத்து அம்மா வயிறு புண்ணா போய் இருக்கும் இப்போ போய் உன் மொத்த வெயிட்டையும் அம்மா மடியில வச்சா எப்படி ஆறும்...” என்று நியாயமாக பேசுவதை போலவே பேசி மிருதனை சம்முவிடம் இருந்து பிரித்து வைத்தார்.

“நான் சொன்னேன் மாப்பிள்ளை. சம்மு தான் இன்னைக்கு ஒரு நாள் நானே என் மகனுக்கு ஊட்டுறேன்னு வாங்கி ஊட்டுனா” என்றார் வெள்ளந்தியாக.

எப்பொழுது மகேந்திரன் அவரிடம் வந்து பேசினாரோ அப்பொழுது இருந்தே மிருதனை பெருவுடையாள் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

“அத்தை உங்க பொண்ணு மனசுல இன்னும் பழைய வாழ்க்கை யோட காயங்கள் எதுவும் ஆறல... அதுக்குள்ள உங்களுக்கு ஒரு வாரிசு வேணும்னு சொல்லிட்டீங்க அதனால தான் நான் அதுக்கு ஒத்துக்கிட்டு சம்முவின் மனதை கூட பொருட் படுத்தாம மிருதனை உங்களுக்கு பெத்து குடுத்தோம். ஆனா சம்மு மனசு இன்னும் முழுசா மாறல.. அதுக்கு நீங்க தான் உதவி பண்ணனும் என்று சொல்ல” அவர் சொல்ல வந்த காரணத்தை நன்கு புரிந்துக் கொண்ட பெருவுடையாள்

“நீங்க கவலை படாதீங்க மாப்பிள்ளை. என் பெண்ணை நீங்க பார்த்துக்கோங்க. உங்க மகனை நான் பார்த்துக்குறேன்” என்று வாக்கு கொடுத்து விட்டார். இதோ இந்த ஐந்து ஆண்டு காலமும் அப்படியே தான் போகிறது...

ஆனால் இப்பொழுது சம்பூர்ணவதி முழித்துக் கொள்ள மகேந்திரன் அதற்கு விடுவாரா என்ன...? வஞ்சகம் கொண்ட குணம் அவ்வளவு எளிதில் தன் குணங்களை மாற்றிக் கொள்வது இல்லையே..! அதற்கு நல்ல உதாரணம் மகேந்திரன் தான்.

சம்பூர்ணவதி அவரை தடுத்து “நான் தான் அவனை தூக்கி என் மடியில வச்சுக்கிட்டேன்.. அவனும் என் பிள்ளை தான். அவன் உட்கார்றதுனால நான் எங்கும் குறைஞ்சிட மாட்டங்க... இதுல எனக்கு எந்த சிரமும் இல்லை. பிரச்சனையும் இல்லை. அவனை விடுங்க...” என்று ஆளுமையுடன் சொல்லி மீண்டும் தன் மகனை வாரி எடுத்துக் கொண்டவர் அனைத்து உணவையும் அவனுக்கு ஊட்டி விட்டு, தன் முந்தானையாலே தன் மகனின் வாயை துடைத்து விட்டு செல்லம் கொஞ்சி முத்தம் கொடுத்து, முத்தாடி, பாடமும் சொல்லிக் கொடுத்து தன் அருகிலே தூங்கவும் வைத்துக் கொண்டார்.

தங்களின் அறையில் மிருதனை கொஞ்சமும் எதிர் பார்க்காதவர் இரவு தூக்கத்தை தொலைத்து வெளியே உப்பரிகையில் நடை பழகினார். இது நாள் வரை மிருதன் அவர்களின் அறையில் இருந்ததே இல்லை. வருவான் ஏதாவது சொல்லிவிட்டு உடனே போய் விடுவான். அவனது வாசம் எப்பொழுதும் தாத்தா பாட்டியுடன் தான்.

அவன் வருகையில் ஏதோ இழக்க கூடத்தை இழந்தது போல தவித்துப் போனவரின் இந்த ஒட்டாத தன்மையில் மனம் துண்டாடி போனாலும் சட்டை செய்யாமல் மகனை அனைத்து தூங்கிப் போனார் சம்பூர்ணவதி. மிருளாணி அருகில் இருந்த தொட்டியில் உறங்கிக் கொண்டு இருந்தாள்.

அடுத்த நாள் காலையில் மகனை பள்ளிக்கு தயார் செய்ய கீழே வந்த சம்பூர்ணவதி முழு உடையுடன் கீழே தயாராக இருந்த மகனை கண்டு நெஞ்சம் சற்றே வலித்தது.

“அதுக்குள்ள கிளம்பிட்டியா கண்ணா...?”

“ஆமாம்மா... அப்பா தான் கிளப்பி விட்டார்..” என்று சொன்னவனுக்கு மகேந்திரன் உணவை ஊட்டி விட ஆரம்பிக்க தன் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை.

“நீ எதுக்கு அடிச்சி பிடிச்சி வர்ற... மிருதனை நான் பார்த்துக்க மாட்டனா? அத்தை பார்த்துக்குறாங்கன்னு தான் நான் இருந்தேன். எப்போ நீயே உடம்பு முடியாம இதெல்லாம் செய்ய ஆரம்பிச்சியோ அப்புறம் நான் எதுக்கு இருக்கேன்... இனி நானே மிருதனை பார்த்துக்குறேன் சரியா? நீ எதுக்கும் அலட்டிக்காத...” என்று சொன்னவர் அழகாக காய் நகர்த்தினார்.

Loading spinner

Quote
Topic starter Posted : September 2, 2025 9:58 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top