நிற்க இயலா நிலையில் கூட ஆழ விழுதாய்
வேரூன்றி ஆலமாய் நிமிர்ந்து நிற்கிறது நேசம்...
தூக்கமின்றி இரவு முழுவதும் காரிலே சுற்றினான். எங்கெங்கு சுற்றினானோ தெரியவில்லை. ஒரு கணம் கூட கண் மூடவில்லை. அவனது உள்ளம் எரிமலையாக வெடித்துக் கொண்டு இருந்தது. அவனது உள்காயங்களை இறக்கி வைக்க ஒரு மடி கிடைக்காமல் அலைந்துக் கொண்டே இருந்தான் பார் போற்றும் திறமை உள்ள மிருதஞ்சயன்.
அவன் ஆறுதலாக தலை சாய மடி இருந்தும் அவளை ஏறெடுத்து கூட பார்க்கவில்லை. ஏனோ அவளை தன்னை விட்டு ஒதுக்கியே வைத்திருந்தான். அவன் மனம் விரும்பும் மடி அவனுக்கு கிடைக்காமல் வேறு எதி அவன் தலை சாய்வான்.
காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு தலையை அழுந்த பிடித்துக் கொண்டான். தலையெல்லாம் அப்படியே வெடித்து சிதறுவது போல இருந்தது. அந்த அளவு பிரஷர் அவனுக்கு ஏறிக்கொண்டே போனது நொடி நொடிக்கு. இப்பொழுதே இந்த கணமே தன் தந்தை மகேந்திரனை கொன்னு போட வெறியே வந்தது. ஆனால் அதன் பிறகு... அவன் சிறையில்.
எப்படி தன் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்வான். அதனால் நிதானமாய் இருந்தான். இல்லை என்றால் மகேந்திரன் ஆடும் ஆட்டத்துக்கு எப்பவோ கொன்னு போட்டு இருந்திருப்பான் மிருதன்.
ஒவ்வொரு நிமிடமும் அந்த ஆளை பார்க்கும் போதெல்லாம் அதுவும் இவனது விசயத்தில் தேவையில்லாமல் மூக்கை நீட்டிக் கொண்டு இருக்கும் சமயம் எல்லாம் அந்த ஆளின் குரல்வளையை அப்படியே பிடித்து தன் கரங்களால் நெருக்கியே சாகடிக்க தோன்றும்...
இவ்வளவு நாள் செய்தது எல்லாம் பத்தாது என்று இன்னொரு காரியத்தையும் அதுவும் மிருதனை அடியோடு வெட்டி வீழ்த்தும் வேலையை மகேந்திரன் செய்ய இருக்கிறார். அதுவும் மிருதனின் கேரியரில் மிக மோசமாக கை வைக்க போகிறார். அதை எப்படி மிருதன் எதிர்க் கொள்ள போகிறான் என்று தெரியவில்லை.
“பாடாத பாட்டெல்லாம்...” செமி பைனலுக்கு தயாராகிக் கொண்டு இருந்தது...! இன்னும் இரண்டு வாரத்தில் பைனல். அதற்காக ஒட்டு மொத்த குழுவும் சிறப்பாக பணியாற்றிக் கொண்டு இருந்தது...!
செமி பைனலுக்கு ஒரு செட் அமைத்தார்கள். அதோடு இன்னொரு பக்கம் கிராண்ட் பைனலுக்கு தேவையான உள் அலங்கார வேலைகள் ஒரு பக்கம் நடந்துக் கொண்டு இருந்தது. அதனால் ஆர்ட் டிப்பார்ட்மென்ட் பரபரப்பாக இருந்தது. அதோடு எடிட் ஒரு பக்கம் சிறப்பாக போய் கொண்டு இருந்தது.
செமி பைனலுக்கு முன்பாக சில கருத்து கணிப்புகளை பொது மக்களுடம் எடுத்துக் கொண்டு இருந்தது மிருதனின் குழு. இன்று காலை பதினோரு மணி முதல் அடுத்த நாள் காலை வரை ஷூட்டிங் இருக்கும்.
அதை இரண்டு கட்டமாக எடுக்க முடிவு செய்து இருந்தான் மிருதன். என்னென்ன எப்படி எப்படி என்பது எல்லாம் கிளியர் சாட் போட்டுக் கொண்டார்கள் மிருதன், மிரு, சக்தி மற்றும் சுதிர் ஆகிய நால்வரும்.
பாடகர்களின் வரிசையை தாயார் செய்து கொடுத்த மிருதன் மிருவை முறைத்த படி “போன முறை மாதிரி உன் விருப்பத்துக்கு ஏற்ப எந்த கிறுக்கு வேலையும் பார்க்க கூடாது... நான் சொன்னது சொன்னபடியே இருக்கணும். ஏதாவது ஒண்ணு பிசகு ஆனாலும் அப்புறம் அவ்வளவு தான்... இதுல எந்த செஞ்சஸும் இருக்க கூடாது காடிட்...” என்று உறுமினான்.
அவனது கண்களை காணாமல் வெறுமென தலையை மட்டும் ஆட்டினாள் மிரு. இப்பொழுது எல்லாம் அவனை நேரடியாக பார்ப்பதே இல்லை...! பார்க்கும் சந்தர்ப்பத்தில் கூட பார்வையை விலக்கி விட்டு நகர்ந்து விடுவாள். அதைவிட அவனின் அருகில் நிற்பது கூட இல்லை. ஆனால் அவனது தேவை எங்கு இருந்தாலும் அவளுக்கு தான் தெரியுமே.. அதனால் யாரின் மூலமாவது அவனது தேவையை நிறைவேற்றி விடுவாள்.
அதனால் மிருதனும் பெரிதாக அவளை எதிர்பார்க்கவில்லை. விட்டு போனால் சரி தான் என்கிற நிலையில் இருந்தான் அவன். ஆனால் அவனது தேவையை சரியாக செய்யாமல் போனால் அவ்வளவு தான் எங்கு இருந்தாலும் அவளை கடித்து குதறாத குறையாக ஆடி தீர்த்து விடுவான்.
அத்தனை பேரின் முன்னிலையிலும் அவன் அப்படி தான் கடிப்பான். அதற்கு சாரி கூட கேட்கமாட்டான். சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவளை பாவமாக பார்ப்பார்கள். ஆனால் அவனது பழக்கம் அது தான் என்று தெரிந்த எதற்கும் அலட்டிக் கொள்ள மாட்டாள். பரிதாபப் படுகிறவர்களை கடந்து போய் விடுவாள்.
பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்தான் மிருதன். இதில் லவலேசாக பிசகினாலும் மிருதன் மிருகமாய் ஆகிவிடுவான் என்று புரிய அவரவர் அசிஸ்டென்ட்டிடம் இந்த சாட்டை கொடுத்து பக்காவாக அனைவரையும் ப்ரிப்பேர் செய்தார்கள்.
உடை முதற்கொண்டு மேக்கப் என எல்லாவற்றையும் ஒப்புதல் வாங்கிக் கொண்டார்கள். செமிக்கு தனியாகவும் பைனலுக்கு தனியாகவும் அந்த லிஸ்ட்டும் ரெடியாக இருந்தது... இன்னும் கொஞ்சம் லைட்ஸ் இருக்கட்டும் என சொல்லி விட எலக்ட்ரீஷியன்ஸ் ஒரு பக்கம் வேலை செய்துக் கொண்டு இருந்தார்கள்.
மிரு தூக்கி போட்ட கொண்டையுடன் த்ரீ போர்த்தில் தலை முடியில் லெட் பென்னை சொருகியபடி அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டு இருந்தாள். பரதனிடம் சில விசயங்களை ஆலோசித்துக் கொண்டு இருந்தாள்.
சக்தி வேறு அவளை அவ்வப்பொழுது கூப்பிட்டுக் கொண்டு இருந்தான். அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே வசியை அழைத்து,
“ஒத்திகை எப்படி போய் கொண்டு இருக்குன்னு பார்த்துட்டு வா வசி...” என்று அவனை பணித்தாள்.
இன்னும் இரண்டு மணி நேரத்தில் செமி பைனல் ஆரம்பிக்க உள்ளது. எத்தனையோ நிகழ்ச்சிகளை இயக்கி விட்டாலும் ஒவ்வொரு முறையும் ஒரொரு நிகழ்ச்சி முடியும் தருவாயில் ஒரு பரபரப்பு வந்து ஒட்டிக் கொண்டு விடுகிறது...!
அதோடு அடுத்தது என்ன என்று ஒரு வினாவும் இயல்பாக வந்து விடுகிறது. மிருதன் எப்பொழுதும் ஒரு நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே அடுத்தது என்று பார்த்து அந்த வேலையின் ஆரம்ப கட்டத்தை தொடங்கிவிடுவான்.
இந்த முறை அப்படி எதுவும் தொடங்காமல் இருக்க அவளுக்கு கொஞ்சம் எங்கோ இடறியது. ஆனாலும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. கேட்டால் மட்டும் அப்படியே அவன் சொல்லிவிட்டு தான் மறுவேலை பார்ப்பான் பாரு நொடித்துக் கொண்டவள் தற்போதைய வேலையில் கவனமனாள்...
இரண்டு கட்டமாக எடுத்த ஷூட்டிங் மிக சிறப்பாக நடந்து முடிய, அடுத்த வாரம் வைல்கார்ட் ரவுண்ட் ஆரம்பம் ஆனது. அதை தொடர்ந்து பைனல்ஸும் ஆரம்பம் ஆனது...!
ஐந்து பேர் தேர்வாகி இருந்தார்கள் இறுதி கட்டத்துக்கு. அதில் மொத்தம் மூன்று சுற்று. அதன் படி முதல் சுற்று விருப்ப பாடலாக, அதுவும் ஜட்ஜ் கூட சேர்ந்து பாட வேண்டும். அதை தொடர்ந்து இரண்டாவது சுற்று அது கெஸ்ட் சிங்கர்ஸுடன் பாட வேண்டும்.
அதை தொடர்ந்து மூன்றாவது சுற்று அதில் தனி தனியாக பெர்பாம் பண்ண வேண்டும். இந்த மூன்று சுற்றில் யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு முதலிடம். இப்படி ப்ளான் செய்துக் கொண்டார்கள்.
இந்த கிராண்ட் பைனல்ஸ் நடத்த மகேந்திரன் மீண்டும் பிரச்சனையை தொடங்கினார். ஆனால் மிருதன் எதற்கும் வளைந்துக் கொடுக்கவே இல்லை.
“நம்ம காலேஜ் கிரவுண்ட்சே நிறைய இருக்கு. அதில் பொது மக்களை வர செய்து ஒப்பனிங் டிக்கெட்ஸ் போட்டா இன்னும் களை காட்டும். அதைவிட அவங்களுக்கு மத்தியில் ஷூட்டிங் வச்சா சூப்பரா இருக்கும். டப்புக்கு டப்பும் ஆச்சு... டிஆர்பியும் இன்னும் கூடும்.” என்றவரை ஆழ்ந்து பார்த்தான் மிருதன்.
சுற்றிலும் அதே போர்ட் மெம்பர்ஸ். அவர்களின் கண்ணிலும் ஆசை மின்னியது.
“இப்போ இதெல்லாம் ரொம்ப சர்வ சாதரணமா ஆயிடுச்சே மிருதன். நீங்க ஏன் இதை பண்ண கூடாது... அதோட நிறைய சேனல் ஷூட்டிங் செட்ல பொது மக்கள் இல்லாம வெறும் அட்டையை வச்சு பார்வையாளர்கள் இருக்கிற மாதிரி செட் பண்ணி ஷூட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு மத்தியில நீங்க பொதுமக்கள் இருக்கிற கூடுற இடத்துல நிகழ்ச்சி பண்ணா மகேந்திரன் சார் சொல்ற படி கூட்டம் அள்ளும்” என்றனர்.
“அதெல்லாம் சரி தான் சார். பட் எனக்கு அதுல இன்ட்ரெஸ்ட் இல்லையே..” என்று தோள் குலுக்கினான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
“மிருதன் இப்படி சொன்னா எப்படி... நீங்களும் ஒன் ஆப் த போர்ட் மெம்பர்... சோ இந்த நிறுவனத்தோட நல்லது கேட்டது எல்லாத்துலையும் உங்களுக்கும் பங்கு இருக்கு. கூடுதலான ஒரு விசயம்” என்று இடைவெளி விட்டவர்கள் மிருதனை ஆழ்ந்து பார்த்து,
“போர்ட் மெம்பர்ஸ் என்ன முடிவு எடுக்குறாங்களோ அதுக்கு நீங்க கட்டுப் பட்டு தான் ஆகணும் மிஸ்டர் மிருதன்” என்றார்கள் அதில் அப்பட்டமாய் ஒரு மிரட்டல் இருக்க,
அதுவரை நார்மகாலக அமர்ந்து இருந்தவன் அவர்கள் இப்படி சொல்லவும், பின் பக்கம் நன்றாக சாய்ந்து அமர்ந்து கால் மேல் கால் போட்டவன் மேசையில் தாளம் போட்டான்.
அவனது இந்த மேனரிசத்தில் லேசாக பயம் வந்தது பேசியவருக்கு.
“எவ்வளவு பெர்செண்டேஜ் இருக்கு?” என்று நிதானமாக கேட்டான். அதில் அவருக்கு வயிற்றில் புளியை கரைக்க, மிருதனை பயத்துடன் பார்த்தார் அவர். வேகமாய் ஏதாவது உதவி செய்ங்க என்று மகேந்திரனை வேறு பார்த்தார்.
“இப்போ எதுக்கு நீ அவரை பயமுறுத்துற மிருதன்” பாய்ந்துக் கொண்டு வந்தார் மகேந்திரன்.
“நான் உங்க கிட்ட பேசலையே”
“ப்ச்... மிருதன்...” என்று அவர் அசூசை ஆகினார். மிருதனை எதிர்த்தால் மகேந்திரனுக்கு ஜால்ரா தட்டும் ஆட்களை போர்ட்ல இருந்து தூக்கி விடுவான் என்று புரிய, தனக்கும் நாலு பேர் வேண்டும் என்று எண்ணிய மகேந்திரன் அதற்கு மேல் அவனிடம் வம்புக்கு நிற்க வேண்டாம் என்று அந்த போர்ட் மெம்பருக்கு கண் காட்ட சட்டென்று அவர் பணிந்து போய் விட்டார்.
ஏனெனில் மிருதன் மனது வைத்தால் போர்ட் மெம்பராக இருக்கும் ஆளை அடுத்த நொடியே ஒண்ணும் இல்லாமல் செய்து விடுவான். அந்த வல்லமை அவனிடம் இருக்கு.
அதை அறிந்தவர் உடனடியாக, “உங்க விருப்பப்படியே பண்ணுங்க மிஸ்டர் மிருதன்... எங்களுக்கு நோ அப்ஜெக்ஷன்... கோ டு யூயர் வே...” என்றார்.
அவரை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் பின் மீதம் இருந்த அத்தனை பேரையும் ஒரு பார்வை பார்த்து,
“மத்த யாருக்கும் எந்த அப்ஜெச்ஷனும் இருக்கா?” என்று நிதானமாக கேட்டான்.
“அதெல்லாம் இனி யாருக்கும் வராது மிருதன். நீ உன் வழியில போ... பக்க பலமா நானும் என் பொண்ணும் இருப்போம்” என்றார் பெருவுடையார். அவரை பார்த்து புன்னகைத்தவன், தன் தாயை பார்த்தான்.
அவரது பார்வையில் இருந்த பெருமிதமே அவனுக்கு ஒரு நிறைவை தர, அனுமதியாய் அவனது தலை அசைய,
“ம்ம்ம்” என்று அவனது உச்சியை எட்டி கலைத்து விட்டார் சம்பூர்ணவதி. அவனுக்கு இந்த ஒற்றை தொடுகை போதுமே... ஆயிரம் யானையின் பலம் கிடைத்தது போல உணர்ந்தான்.
அவரது காலில் விழுந்து ஆசி வாங்கினான் அனைவரின் முன்னிலையிலும்.
“என் மகன் என்னக்கும் தோற்க மாட்டான்...” என்று அவர் நெஞ்சு நிறைய பெருமையுடன் சொன்னவர்,
“ஏன்னா அவன் என் மகன்...” என்றார் அதை விட பெருமையாக. சட்டென்று மகேந்திரனை ஒரு பார்வை பார்த்தான் மிருதன். அதில் அவ்வளவு ஏளனம் நிறைந்து இருந்தது.
“லவ் யூ மாம்...” என்று அவரது நெற்றியில் முட்டி தன் மகிழ்ச்சியை தெரிவிக்க அவனது நெற்றியில் அழுத்தமாக தன் முத்தத்தை பதித்து லேசாக விழிகள் கலங்க,
“லவ் யூ மை சைல்ட்...” என்றார் கரகரப்பான குரலில். அதை மிக அழகாக பதிவு செய்துக் கொண்டார் பெருவுடையார்.
மிருதனும் சம்பூர்ணவதியும் அதிகம் சந்தித்துக் கொள்ளவே சந்தர்ப்பம் வாய்க்காது. வாய்க்க விட மாட்டார் மகேந்திரன். ஆனால் அப்படி சந்தர்ப்பம் வாய்த்து விட்டால் தாய் மகன் இருவரையும் யாராலும் பிரிக்க முடியாது.
அவர்களை தாண்டி தான் மற்ற உறவுகள் எல்லாம். அதில் எப்பொழுதும் மகேந்திரனுக்கு காண்டு ஆகும். தாய்க்கு மட்டுமே கட்டுப்பட்ட மகன். மகனை உற்றாய் உறவாய் அனைத்துமாய் பார்க்கும் தாய்...
இருவரின் நேசமும் கட்டுக்குள் அடங்காதது. கட்டுப்படுத்த நினைத்தால் நினைப்பவர் தான் வெடித்து சிதற வேண்டும்..! அப்படி ஒரு பிணைப்பு இருவருக்கும். தாய்க்கு தலை பிள்ளைன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க... ஆயிரம் உறவு வந்தாலும் தலை பிள்ளைக்கு தாய் தான். ஒருவர் மேல் ஒருவர் கொண்ட நேசம் காவேரி நதியாய் வற்றாமல் உயிர் ஊற்றாய் பொங்கிக்கொண்டே இருக்கும்...
அதில் அடிக்கடி கல் வீசிக் கொண்டே இருக்கிறார் மகேந்திரன். என்றைக்கு ஒட்டு மொத்தமாய் அவருக்கு ஆப்பை சொருக போறானோ தெரியவில்லை. இப்படியே அவனை சீண்டி விட்டுக் கொண்டு இருந்தால் நிச்சையம் என் பேரன் மிருதஞ்சயன் அந்த செயலையும் செய்வான்.
அன்றைக்கு இருக்கு வான வேடிக்கை என்று ஏளனமாக மகேந்திரனை பார்த்து சிரித்து விட்டு, நிமிர்வாக கம்பீரமாக தாய் மகன் இருவரையும் பார்த்து ஆசையுடன் வீரமாக மீசையை முறுக்கினார் மிருதஞ்சய பெருவுடையார்.