யாசித்தாலும் இரைந்தாலும் சிலவை வழங்க
முடியா நிலையில் உயர்ந்து நிற்கிறது...!
சென்னை வந்து சேர்ந்தவள் யாரிடமும் பேசவில்லை. அதில் சுதிருக்கும் சக்திக்கும் வருத்தம் தான் என்றாலும் அவளிடம் போய் நிற்கவில்லை.
“பாடாத பாட்டெல்லாம்..” இன்னும் சில எபிசோட்களில் நிறைவடைய இருந்தது...! உதகை போய் வந்த எபிசோட்களை வரிசை படுத்தி ப்ரோமோ மாதிரி போட்டு விட்டார்கள். அதில் இன்னும் ஆர்வம் ஆன மக்கள் அதற்கு ஏகபோகமாக வரவேற்பை கொடுத்து இருக்க, மகேந்திரனை நக்கலாக பார்த்துவிட்டு கடந்து விட்டான் மிருதஞ்சயன்.
இவனுக்கு மட்டும் எப்படி எல்லாமே கைவசமாகிறது என்று பல்லைக் கடித்துக் கொண்டார். இப்போதைக்கு அவரால் இதை மட்டும் தான் செய்ய முடிந்தது. தன் மகனின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்த சம்பூர்ணவதிக்கு அதில் மிருதன் இலக்கை மீறி வெற்றி பெற்று விட்டதை கண்ணார கண்டவருக்கு மனம் பூரித்துப் போனது.
அலுத்து கலைத்து வந்த மகனை எதிர்க் கொண்டார் அவர். அவர் தன்னுடன் பேச காத்திருப்பதை உணர்ந்தவன் அவரின் அருகில் வந்து அமர்ந்தான்.
வந்தவனின் தலையை கலைத்து விட்டவர்,
“ரொம்ப டையர்டா தெரியிற மிருதன்” என்றார் வாஞ்சையாக.
அதுக்கென்னம்மா பண்ண முடியும். ஓடுற காலம் ஓடத்தானே வேணும். இல்லன்னா துரு பிடிச்சி போயிடுவேன்” என்றவன் அவரின் மடியில் படுத்துக் கொண்டான்.
அதில் இன்னும் அவருக்கு வாஞ்சை பெருக மெல்ல அவனின் தலையை கோதிக் கொடுத்தார். அந்த நேரம் அவனின் பாட்டி பெருவுடையாளும் வந்து பேரனின் காலை தன் மடியில் போட்டுக் கொண்டு அழுத்தி விட,
“பாட்டி அதெல்லாம் வேண்டாம்” என்று தடுத்தான்.
“ப்ச் நீ சும்மா இருடா... அதெல்லாம் எனக்கு தெரியும்” என்று சொல்லி காலை அழுத்தி விட ஆரம்பித்தார்.
“ஏங்கண்ணு ஊட்டிக்கு போயிட்டு வந்தியே எப்படி இருந்துச்சு...” என்று மெல்ல பேச்சை ஆரம்பித்தார் அவர்.
“எப்பொழுதும் போல தான் இருந்துச்சு பாட்டி... ம்மா அப்படியே இந்த கழுத்தை கொஞ்சம் அழுத்தி விடுங்க” என்று அப்படியே தாயின் மடியில் கவிழ்ந்து படுத்திக் கொண்டவன் வாகாக அழுத்தி விட காண்பித்தான். அவனது கழுத்தை மெல்ல அழுத்தி விட்டவருக்கு மெல்ல கண்கள் கலங்கியது.
பெருவுடையாள் கண்ணிலே கண்டிப்பை காட்ட சட்டென்று சுதாரித்து தன் அழுகையை அடக்கிக்கொண்டார். பாட்டி அவனது கெண்டை காலில் இருந்த இறுகிய சதையை அழுத்தி நீவி விட அதன் பிறகு எந்த சத்தமும் அங்கு இல்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு தாயின் மடியும், பாட்டியின் அருகாமையும் கிடைக்க அடுத்த சில நொடிகளிலே தூங்கி விட்டான்.
அந்த மௌனத்தை கிழித்துக் கொண்டு,
“ம்ம்ம்... இப்படி நல்லா ரெண்டு பேரும் செல்லம் கொஞ்சி கொஞ்சியே அவனை உருப்பிட விடாம பண்ணிடுங்க..” என்றபடி வந்தார் மகேந்திரன்.
“என்ன மாப்பிள்ளை இப்படி பேசுறீங்க...?” அதிர்ந்து போனார் பாட்டி.
“பின்ன என்ன அத்தை.. இவனோட சேர்ந்த எல்லோரும் எத்தனை படங்களை டைரெக்ட் பண்ணி வெள்ளி திரையில பேரும் புகழும் வாங்கி குவிக்கிறாங்க... ஆனா இவனை பாருங்க.. இப்போ தான் டிவி ப்ரோக்ராமையே கட்டிக்கிட்டு அலையிறான். நானும் எத்தனை முறை சொல்றது. ஆனா இவன் காதுலையே வாங்க மாட்டிக்கிறான்..” என்று சொன்னவரை திட்டி வாயில் வறுத்து போட்டுக்கொள்ள பெருவுடையாள் துடித்தார்.
“என் பேரனோட வாழ்க்கையை நாசமாக்கிட்டு எங்களுக்கு முன்னாடி நல்லவனா வேசம் போட்டுக்கிட்டு திரியிறியா நாயே...! உன் முகத்திரையை என் பேரன் ஒருநாள் இல்ல ஒரு நாள் கிழிக்கத்தான் போறான். அதை நான் பார்க்க தான் போறேன்... அந்த திருநாள் ஒரு நாள் வர தான் போகுது...” என்று மனதில் வெந்துப் போனவர் வெளியே,
“அதுக்கென்ன மாப்பிள்ளை... என் பேரனுக்கு என்ன பிடிச்சி இருக்கோ அதை செய்யட்டுமே... அவன் பேர் புகழ் வாங்கி தான் இங்க நிறைய போகுதா என்ன...? ஏற்கனவே இந்த நிறுவனம் அசைக்க முடியாத இடத்துல தான் இருக்கு. என் பொண்ணு ஏற்கனவே அந்த உயரத்தை அடைஞ்சிட்டா. அதனால நீங்க எதையும் போட்டு குழப்பிக்காம போய் தூங்குங்க...” என்றார் நாசுக்காக..
‘என்கிட்டையவே இருக்கு கிழவி உனக்கு...’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவர், “அது அப்படி இல்லை அத்தை. அவங்க அம்மா சாதிச்சது எல்லாம் ஒகே தான். ஆன என் பிள்ளை தனிச்சு நின்னு பேர் எடுக்கணும்ல... அதுல தானே எனக்கு பெருமை” என்றவர் மிருதனை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் எழுப்பி விட்டார்.
அதில் துயில் கலைந்தவன் மிக நிதானமாக எழுந்து அமர்ந்தான்.
அமர்ந்தவனை யாருக்கும் தெரியாமல் வெறுப்புடன் பார்த்தாவர்,
“இப்படி தூங்கி தூங்கியே தான் கழிக்கிற பொழுதை.. கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா... வாழ்க்கையில முன்னேறணும்னு எண்ணம் ஏதாவது இருக்கா... உன்னால எப்படிட இப்படியே காலத்தை கழிக்க முடியுது. சொத்து சம்பாரிச்சு வச்சதை எல்லாம் இப்படி தின்னு தின்னே தீர்க்க போறியா...?” என்று கடும் கோவத்துடன் பார்த்தார்.
அவரது கேள்விக்கு எந்த பதிலையும் சொல்லாமல், அவனது அறைக்கு போக,
“போறதை பார்த்தியா சம்மு ஏதோ எரும மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி.. இவனெல்லாம் எங்க திருந்த போறான். பெத்தவங்கன்னு கொஞ்சமாச்சும் மதிக்கிறானா இவன்...” என்று பல்லைக் கடித்தார்.
போனவன் பாதி வழியிலே கரங்களை நெஞ்சுக்கு நேராக காட்டிக் கொண்டு,
“இப்போ என்ன மதிக்கல...?” நிதானமாக கேட்டான் மிருதஞ்சயன்.
“என்ன மதிக்கலையா? என்னைக்கு டா என்னை மதிச்சு இருக்க... எப்போ இந்த டிவி டெக்கு எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு மூவி மேக் பண்ண போற...” என்று அவனை பார்த்து நக்கலாக கேட்டார். அந்த பார்வையில் எங்க நீ சினிமா இயக்க வந்துடுவியா என்ன... அதுக்கு நான் விடணுமே உன்னை... என்ற பொருள் தாங்கி இருந்தது. அதை படித்தவன் அவரது ஏளன சிரிப்பை உள்வாங்கியவன், “சாரி எனக்கு அந்த ஐடியா எல்லாம் இல்லை” என்றான்.
“ஓ..! அப்போ குண்டு சட்டியிலே குதிரை ஓட்டலாம்னு இருக்க இல்லையா? இப்படி மலைமாடு மாதிரி உடம்பை வளர்த்து வச்சுக்கிட்டு இருக்கியே தவிர புத்தி எதுவுமே இல்லடா உன்கிட்ட. அவனவன் ஒண்ணுமே இல்லாம வந்து சாதிக்கிறான். நீ என்னன்னா இவ்வளவு பெரிய பேக்கிரவுண்ட் வச்சுக்கிட்டு, திறமை கடல் போல வச்சுக்கிட்டு இப்படி பயன்படுத்த மாட்டேன்னு அடம் புடிக்கிறியேடா. அப்படி என்னடா உனக்கு தடை...” கடுப்புடன் கேட்டார்.
“நீங்க தான்” என்றான் பட்டென்று. அவன் இப்படி ஒரு பதில் சொல்லுவான் என்று எதிர் பாராதவர் சட்டென்று வியர்த்து போய் விட்டார் மகேந்திரன்.
“நீ என்ன சொல்ற?” அவரின் நாக்கு தந்தியடித்தது...! அவரின் தடுமாற்றத்தை வெகு நிதானமாக இரசித்துப் பார்த்தான்.
அவருக்கு பேச்சு வரமால் அவனை அதிர்ந்த பார்வை பார்க்க, பயந்துட்டியா...? என்று நக்கலான பார்வையை அவர் மீது வீசியவன்,
“பின்ன நீங்க தான்” என்று மிகவும் அழுத்தி சொல்ல அதில் இன்னும் வியர்த்துப் போனது அவருக்கு. அவரின் பதட்டத்தை பார்த்து மனதுக்குள் கொண்டாடினான்.
‘இனி என்னை சீண்டி பார்க்க நீ அஞ்சணும் மிஸ்டர் மகேந்திரன். என்கிட்டையே உன் டபிள் கேம் விளையாட்டை ஆடி பார்க்கிற இல்ல... உனக்கு கூடிய சீக்கிரம் வைக்கிறேன் செக்...’ என்று கறுவிக்கொண்டான்.
“மிருதன்...” என்று அவர் முறைத்து பார்த்தார் தன் பயத்தை மறைத்துக் கொண்டு. அதில் அதிகம் எச்சரிக்கையே நிறைந்து இருந்தது. அதை கொஞ்சமும் சட்டை செய்யாமல்,
“மிருதஞ்சயன்....” என்று திருத்தினான். அந்த ஒன்றிலே தன்னை விட்டு அவரை விலக்கி நிறுத்தினான். பிறகே தன் விளக்கத்தை தொடங்கினான். “பின்ன எப்போ பாரு அடிப்படையை ஒழுங்கா கத்துக்கிட்டு அப்புறம் பெரிய காரியத்துல இறங்குன்னு சொல்லிக் கொடுத்துட்டு இப்போ பாதியில சினிமாவை இயக்குன்னா எப்படி...?” என்று அவரை சிறிது நேரத்திலே படுத்தி எடுத்து விட்டான் மிருதன். அதன் பிறகே மகேந்திரனுக்கு மூச்சு வந்தது.
“யாரு எப்படி படம் எடுத்தா என்ன மாப்பிள்ளை. என் பேரன் இயக்குர நிகழ்ச்சியில எவ்வளவு பெரிய பட்ஜெட் படம்னாலும் பிரமோஷனுக்கு கேட்டுக்கிட்டு இருக்காங்க... எத்தனை ப்ரோமொஷனுக்கு அவனை அணுகி இருக்காங்கனு தான் உங்களுக்கே நல்லா தெரியுமே... அதுலையே தெரியலையா என் பேரனோட திறமை. வெள்ளி திரைக்கு போய் தான் அவன் பேரும் புகழும் சம்பாதிக்கணும்னு அவசியம் இல்லை. இப்போ அவன் இயக்கிக்கிட்டு இருக்கிற நிகழ்ச்சியை தமிழ்லையே பல தொலைக்காட்சி நிறுவனம் எடுத்துக்கிட்டு இருக்காங்க.”
“அதோட மற்ற மொழி நிறுவனங்களும் காபி ரைட்ஸ் வாங்கி இருக்கு. ஏன் நம்ம மற்ற லாங்குவேஜ் சேனலுமே இந்த நிகழ்ச்சியை ஷூட் பண்ணி வெளியிட ஆரம்பிச்சுட்டாங்க... இந்த பாடாத பாட்டெல்லாம் நிகழ்ச்சியை தவிர மற்ற எல்லாமும் கூட எல்லா சேனலிலும் அந்தந்த லாங்குவேஜ்ல ஒளிபரப்பு ஆகிட்டு தான் இருக்கு” என்றார் பேரனின் பெருமையை தாங்கி.
அதில் பெரிய காண்டு மகேந்திரனுக்கு. இவன் எடுத்து நடத்திய எல்லா ப்ரோக்ராமும் செம்ம ஹிட். பெரிய பெரிய ப்ரோமோஷன்ஸ். இவன் ஈவேன்ட்ல கலந்துக் கொண்ட அத்தனை பேரும் வெள்ளி திரையில் மின்னிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆனால் இவனை தான் அப்படி மின்ன விடாமல் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலே பிடித்து வைத்து இருக்கிறார் மகேந்திரன். அதை அறிந்தும் எதையும் காட்டிக் கொள்ளாமல் தனக்கு குடுத்த வேலையை நூறு சதவீதம் சரியாக செய்துக் கொண்டு இருக்கிறான். எங்கே அவரது திருகுதாளத்தை சொல்லி விடுவானோ என்று ஒரு கணம் பயந்து தான் போனார்.
ஆனால் மிருதன் அதை சொல்லாமல் அவருக்கு ஒரு கணம் பயம் காட்டி விட்டு நிற்க அவன் மீது பொல்லாத கோவம் எழுந்தது. அந்த கோவம் பெருமூச்சாக வர மகேந்திரனின் பெருமூச்சை பார்த்த மிருதன் ஏளனமாக சிரித்து விட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்.
படுக்கையில் படுத்தவனுக்கு தூக்கம் என்பதே சிறிது கூட இல்லாமல் போனது. விழிகள் இரண்டும் அப்பட்டமாய் சிவந்து போய் இருந்தது. தாயின் மடி அனைத்தையும் மறக்க வைத்தது. ஆனால் இந்த அறையின் தனிமை அவனுக்கு மூச்சு முட்டிப் போக வைத்தது.
எழுந்து உப்பரிக்கைக்கு வந்தான். நீண்ட நாட்களுக்கு பின்னால் ஒரு தனிமை. அதை தாங்க முடியாமல் செட்டுக்கு போய் விட்டான்.
அர்த்த ராத்திரியில் காரை எடுத்துக் கொண்டு போனவனை வெறுப்புடன் பார்த்தார் மகேந்திரன்.
“உன்னை இப்படியே அலைய வைக்கல நான் மகேந்திரன் கிடையாதுடா... எவ்வளவு தூரம் ஓடுறியோ ஓடு... உன் வாழ்நாள் முழுமைக்கும் உன்னை ஒரு இடத்தில் கூட நிற்க விடாமல் ஓட வைக்கிறேன்டா” என்று கறுவிக் கொண்டவரின் கரம் நெற்றியின் ஓரம் இருந்த வடுவை தொட்டு தடவியது...!