Notifications
Clear all

அத்தியாயம் 37

 
Admin
(@ramya-devi)
Member Admin

கீழே வந்துப் பார்த்த தயாழினிக்கு ஒரு கணம் மூச்சே வரவில்லை. மணமேடை போல அலங்காரம் செய்து இருந்த இடத்தில் அவளின் இரு தங்கைகளும் கழுத்தில் மாலையோடு தயாகரனின் தம்பிகளோடு அமர்ந்து இருப்பதை பார்த்தாள்.

“இது இதெப்படி...” என்று அவள் தடுமாற,

“உன் தங்கைகளுக்கு என் தம்பிகளை விட வேற யாராலும் பாதுகாப்பு குடுக்க முடியாது. அதனால தான் இந்த ஏற்பாடு. நீ கேட்டியே உன் குடும்பத்தை செட்டில் பண்ண சொல்லி.. செஞ்சுட்டேன். இனியாவது மரியாதையா என் எல்லா கண்டிஷனுக்கும் ஒத்துழை..” என்றவன் தன் தாய்க்கு கண்ணை காட்ட,

“என்ன மசமசன்னு நிக்கிற தயாழினி.. வீட்டுக்கு மூத்த மருமகளா வந்து வேலையை பாரு” என்று அதட்டல் போட்டார் பொன்மாரி.

அதன் பிறகு எங்கும் தோய்வு இல்லாமல் வேலை விறுவிறுவென்று நடந்தது. இதற்கு இடையில் தங்கைகளிடம் தனிப்பட்ட முறையில் எதுவும் பேசமுடியவில்லை.

ஆனால் அவர்களின் சம்மதத்தை கேட்டுக் கொண்டாள்.

“எங்களுக்கு ஓகே தான் அக்கா” என்று இருவருமே சொல்லி விட அதன் பிறகே நிம்மதியானது அவளுக்கு. தன் பெற்றவர்களையும் ஒரு பார்வை பார்த்தாள்.

அவர்களின் முகம் கனிந்துப் போய் இருப்பதை பார்த்தவளுக்கு நெஞ்சில் நிம்மதி பிறந்தது. அதோடு பொன்மாரியும் கூடவே இருப்பார் இனிமேல். அதனால் இனி அவளின் குடும்பத்தை பத்தி எந்த கவலையும் தேவையில்லை.

விழிகளில் கண்ணீர் சுரந்தது.. அவள் கேட்டதை நிறைவேற்றிக் கொடுத்தவனை நிமிர்ந்துப் பார்த்தாள். அவன் அவளை பார்க்கவே இல்லை. வேலையில் பிசியாக இருந்தான்.

பெருமூச்சு விட்டவள் தன்னையும் அறியாமல் தயாகரனின் பின்னோடு அவளின் பார்வை மொத்தமும் அலைந்தது. அவள் கேட்டுக் கொண்டதற்காக அவனின் தம்பிகளையே  மணமகன் ஆக்கி விட்டதை எண்ணியவளுக்கு பெரும் ஆசுவாசம் எழுந்தது. தன் பெற்றவர்களின் முகத்தை பார்த்தாள். அதில் இருந்த மகிழ்ச்சியே சொன்னது அவர்களின் நிறைவை. இது போதும் எனக்கு.. நிறைவாக அவர்களின் திருமணத்தை பார்த்து இரசித்தவள் தனக்கு தேவையான உடைகளை எடுத்து வைக்க மேலே வந்து விட்டாள்.

நெஞ்சில் சொல்லொண்ணாத பாரம்.. என்ன இருந்தாலும் தன் குடும்பத்தை விட்டு பிரிந்துப் போக அவளால் முடியவில்லை. விழிகளில் நீர் நிரம்பி தளும்பியது. எல்லாம் இன்றோடு முடிவடையப் போகிறது.. என்று என்னும் பொழுதே நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.

“ப்ச்.. கண்டதையும் யோசிக்காத யாழி” தன்னை தானே தேற்றிக் கொண்டவளுக்கு காலுக்கு கீழ் நிலம் நழுவிய உணர்வு. எந்த பிடிமானமும் இல்லாமல் இங்கிருந்து கிளம்பியாக வேண்டும். இனி இவர்களை எல்லாம் பார்க்க முடியுமா முடியாதா என்று எதுவும் தெரியவில்லை.

சில உடைகளை மட்டும் எடுத்து வைத்துவிட்டு மீண்டும் கீழே இறங்கி வந்தாள். வந்தவளை தங்களுடன் வைத்துக் கொண்ட தங்கைகள் புகைப்படம் எடுக்க அழைத்துக் கொள்ள, சிறிது நேரம் அதிலே கரைந்தது.

ஒரே குடும்பமாக ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை போனுக்கு அனுப்பினார்கள். அதை எடுத்துப் பார்த்துக் கொண்டவளுக்கு தன் அருகில் நின்று இருந்த தயாகரனை ஸ்க்ரீனில் தொட்டு தடவிப் பார்த்தாள்.

பெருமூச்சு மட்டுமே வந்தது அவளிடம் இருந்து. இனி எதுவுமே தனக்காக இல்லை என்று எண்ணியவளை சாப்பிட வரச்சொல்ல,

“எல்லாருக்கும் நான் பரிமாறுறேன்.. நீங்க உட்காருங்க” என்று எல்லோரையும் அமரவைத்து தயாழினியே பரிமாறினாள்.

அனைவருக்கும் பரிமாறும் நேரம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

ஆனாலும் அதை அடக்கிக் கொண்டு எல்லோருக்கும் இன்முகத்துடன் பரிமாறினாள். அவள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அண்ணன் தம்பிகள் மூவரும் மனம் கணக்க பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு மட்டும் தானே அவளின் உணர்வுகள் தெரியும்.

அவளை கலைக்க மனம் வராமல் அமைதியாக அவள் பரிமாறியதை உண்டார்கள்.

“என்னடா முகம் வாடி இருக்கு?” என்று கேட்ட தாய்க்கு புன் சிரிப்பை பதிலாக கொடுத்தவள் தொண்டையை அடைத்த உணவை கடினப்பட்டு உணவை உண்டாள்.

அப்படி இப்படி என்று அவள் கிளம்பும் நேரமும் வந்தது. உள்ளுக்குள் பல பிரளையம் ஏற்பட்டது. அதை எதையும் கட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் இருந்தும் விடை பெற்றுக் கொண்டாள்.

தன் குடும்பத்தை அனைத்துக் கொண்டு இருந்தவளுக்கு பார்வை மொத்தமும் பொன்மாரியிடம் தான் இருந்தது. வேகமாய் அவரிடம் வந்தாள்.

அவரையும் கட்டி பிடித்துக் கொண்டாள். அவளுள் இருந்த போராட்டத்தை கண்டு கொண்டாரோ என்னவோ..

“பத்திரமா போயிட்டுவா மருமவளே.. உன் குடும்பத்தை பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு” என்றார். சட்டென்று அவரின் தோளில் இருந்து விலகி அவரின் முகத்தை பார்த்தாள்.

சிரிப்புடன் அவளை பார்த்தவர்,

“இவ்வளவு சஞ்சலத்தோட போகாத.. போற காரியம் சிதறும். உன் பலத்தை நம்பி காரியத்துல இறங்கு. வெற்றி என்னைக்கும் என் மகன் பக்கம் தான்” என்றார்.

“ஹாங்” என்று அவள் அதிர்ந்துப் போனாள்.

“அத்தை” என்று அவள் திகைக்க,

“எல்லாமே தெரியலன்னாலும் ஓரளவு தெரியும்.. அதனால தான் உன் தங்கச்சிங்களுக்கு என் மகன்களை கட்டி வச்சேன். இப்போ உன் குடும்பத்தை பத்தின கவலை இருக்காது இல்லையா?” என்று கேட்டவரை இன்னும் திகைத்துப் போய் பார்த்தாள்.

“அத்தை” என்று அவள் தடுமாற, அவளின் கன்னத்தை தட்டிக் கொடுத்தவரின் விழிகள் கலங்கி இருந்தது.

“நீ நல்லபடியா திரும்பி வரணும்டி..” என்று குரல் அடைக்க சொன்னவர் அதன் பிறகு அவளை தவிர்த்து விட்டார். ஒரு தாயாய் தன் மகனின் செயலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் பொம்பளை பிள்ளையை பணையமாக வைத்து செய்ய இருக்கும் காரியம் எல்லாம் அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

தயாழினி மற்றும் அவளின் சகோதரிகளை கடத்திக் கொண்டு வைத்ததையே அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் தன் பெரிய மகனுக்கு தயாழினியை திருமணமே செய்து வைத்தார்.

இப்பொழுது அவர் கொஞ்சமும் எதிர்பாராத சூழல். அவ்வளவு வேதனை கொண்டார். அவரால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து விட்டார். ஆனால் மனம் பொருமியது தன் மூத்த மகனின் செயலில். இரவோடு இரவாக அவன் வந்து மேலோட்டமாக சொல்லியே செய்தியில் கலங்கிப் போனார்.

“நீயெல்லாம் மனுசனே இல்லடா.. போயும் போயும் உன்னை போய் என் மகனா பெத்தேன் பாரு” என்று எரிச்சலில் கத்தினார் பொன்மாரி.

“நானா உன்னை பெத்துக்க சொன்னேன்” என்று இவன் வாய் பேச,

“வாயிலையே போட்டேனா தெரியும். சின்னப்புள்ளடா அவ.. ஒண்ணுமே தெரியாம மலரு அவளை வளர்த்து இருக்கா” என்றார் கலங்கிப் போய்.

“அதுக்காக ஒன்னும் செய்ய முடியாது..” என்றான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.

“தோளுக்கு மேல வளர்ந்துட்டியேன்னு பார்க்கிறேன்.. இல்லன்னா அடி பின்னி இருப்பேன்” என்றவருக்கு அவ்வளவு ஆற்றாமையாக வந்தது.

“ப்ச் அதை விடு.. நைட்டோட நைட்டா எல்லா ஏற்பாடும் செஞ்சிடு.. அப்போ தான் உன் மூத்த மருமவ சாந்தி அடைவா.. இல்லன்னா பேயா இங்க தான் சுத்திட்டு இருப்பா” என்றான் நக்கலாக.

“கொழுப்பு கூடின் போயிடுச்சுடியோய்.. என் பெரிய மருமவ மட்டும் உயிரோட வராம போவட்டும். அப்புறம் அவளுக்கு துணையா உன்னையும் அவக் கூடவே அனுப்பி வைக்கிறேனா இல்லையான்னு பாரு” என்றார் கடுப்பாக.

“ரொம்ப ஆசை தான் கிழவி உனக்கு” என்றான் தயாகரன்.

“டேய் தம்பி” என்றார் கலக்கமாக.

“ப்ச் நான் பார்த்துக்குறேன்” என்று அவரின் கையை பற்றிக் கொண்டு ஒரு அலுத்தம் கொடுத்து விட்டு விலகிக் கொண்டான்.

அவன் என்ன சொன்னாலும் பொன்மாரியால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தயாழினி கொஞ்சமும் சேதாரம் ஆகாமல் மீண்டும் அவரின் கைக்கு வந்தால் மட்டுமே அவர் கொண்ட சஞ்சலம் நீங்கும். அதுவரை அவருக்கு நிம்மதி என்பதே இருக்காது.

பொன்மாரி கொஞ்சம் ஓய்ந்துப் போனார். அவரால் நேற்று மகன் சொன்னதை கேட்டு அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனமெல்லாம் காந்தி எடுத்தது அவருக்கு. ஆனாலும் வெளியே சொல்ல முடியவில்லை.

தன் ஒட்டு மொத்த வேண்டுதலையும் ஆசீர்வாதத்தையும் தன் மருமகளுக்கு கொடுத்து விட்டு ஓய்ந்துப் போய் அமர்ந்து விட்டார்.

எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்ப ஆயத்தம் ஆனாள். தங்கைகளை கட்டிக் கொண்டவளுக்கு விழிகளில் நீர் நிறைந்துப் போனது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சிரித்தாள்.

“எத்தனை நாள் க்கா. நாலு நாளா, இல்ல ஒரு வரமா?” ஆர்வத்துடன் கேட்ட பிறையை பார்த்து மனம் கனக்க, சிரிப்புடன் எந்த பதிலும் சொல்லாமல்,

“வரேன்” என்றாள்.

“சீக்கிரம் வந்திடு க்கா” என்றாள் குறிஞ்சி. தலையை ஆட்டியவள் தயாகரனோடு வெளியே வந்தாள். அவளை வழியனுப்ப வந்த குணா மற்றும் பிபராகரனிடம்,

“என் தங்கைகளை நல்லா பார்த்துக்கோங்க.. ப்ளீஸ்” என்று கேட்டுக் கொண்டவள், விழிகளை முட்டிய நீருடன் காரில் ஓடிப்போய் அமர்ந்துக் கொண்டாள். அவளால் இயல்பாக மூச்சு எடுக்கவே முடியவில்லை.

தொடரும்..

சாரி தோழமைகளே..

தங்கைக்கு ஆறு மாதத்திலே குழந்தை இறந்தே பிறந்ததில் பயங்கர அப்செட். மனமெல்லாம் அவ்வளவு பாரமா இருக்கு. அதுல இருந்து இன்னும் வெளியே வரவே முடியவில்லை. மேக்சிமம் அடுத்த வாரத்தில் இருந்து ரெகுலரா குடுக்க முயற்சி பண்றேன்.. வெரி சாரி 

 

 

Loading spinner

This topic was modified 4 weeks ago by Admin
Quote
Topic starter Posted : August 21, 2025 1:41 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top