Notifications
Clear all

அத்தியாயம் 34

 
Admin
(@ramya-devi)
Member Admin

“அக்கா நீ மகிழ்ச்சியா தானே இருக்க?” குறிஞ்சி அவளின் முகத்தை கூர்ந்துப் பார்த்து கேட்க, உள்ளுக்குள் பதறிப் போனாள். அதுவும் அவளின் சிவந்து இருந்த கண்களை பார்த்து,

“ஏன் அக்கா உன் கண்ணு இவ்வளவு சிவந்துப் போய் இருக்கு?” சின்னவள் கேள்வி கேட்க, திணறிப் போனாள் தயாழினி என்ன பதில் சொல்வது என்று தெரியாது.

பொன்மாரி தான் உதவிக்கு வந்தார்.

“சரியான தூக்கம் இருந்து இருக்காது.. புதுசா கல்யாணம் ஆன பொண்ணுக்கிட்ட இதெல்லாம் ஒரு கேள்வின்னா கேட்டுட்டு இருப்பீங்க? அவளே இப்ப தான் கீழ வந்து இருக்கா. அவளை ஆற அமர விடுவீங்களா அதை விட்டுட்டு இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க தங்கச்சிங்க ரெண்டு பேரும்... மலரு என்ன இதெல்லாம்..” என்று அவர்களின் தாயிடம் கேள்வி கேட்க,

மலர் சுதாரித்து,

“பிள்ளைங்களா கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டீங்க? அக்காவுக்கு என்ன வேணும் எது வேணும்னு கவனிங்க. அதை விட்டுட்டு தேவை இல்லாமல்லாம் பேசிட்டு இருக்காதீங்க..” என்று மலர் ஒரு அதட்டல் போட, கப்பென்று வாயை மூடிக் கொண்டார்கள் பெண்கள் இருவரும்.

“ம்மா சும்மா தானே பாப்பாங்க விசாரிக்கிறாங்க.. அதுக்கு எதுக்கு அதட்டுறீங்க” என்ற பொழுதும் உள்ளுக்குள் ஒரு விடுதலை உணர்வு வந்தது.

சிவலிங்கம் யோசனையாய் தயாகரனை பார்த்தார்.

“இப்படி திடுதிப்புன்னு சொல்றியே தம்பி?” என கேட்க,

“போக வேணான்னு தான் பார்த்தேன்.. ஆனா இப்போ விட்டா பிறகு போக முடியாது அதனால தான் ஏற்பாடு பண்ணிட்டேன். நாளைக்கு காலையில கிளம்பணும். எப்படியும் திரும்பி வர பத்து பதினைஞ்சு நாள் ஆகும்” என்றான்.

“என்ன ஊரு?” பொன்மாரி கேட்டார்.

“மூனாறு” என்றான். எல்லோரும் ஒத்துக் கொண்டு தான் ஆகவேண்டி இருந்தது. வேறு வழியில்லை. அன்று மாலையில் இருந்து இரவு தொடக்கம் வரை கீழேயே இருந்தாள். கண்களாலே தயாகரனிடம் அனுமதியும் கேட்டுக் கொண்டாள்.

அவனும் பெருமூச்சுடன் தலையை ஆட்டி விட்டு கூடத்தில் அமர்ந்துக் கொண்டான். இருவரின் கண் சாடையை பார்த்த அனைவருக்கும் இருவரும் மிக ஒற்றுமையாய் வாழ்வது போலவே தோன்றியது.

ஆனால் உண்மை அது அல்லவே..

இரவு உணவையும் முடித்துக் கொண்டு மேலே வந்த தயாழினி நேராக அறைக்குள் நுழையாமல் மாடிக்கு சென்றாள். அவளிடம் தென்பட்ட இறுக்கத்தை பார்த்துக் கொண்டு இருந்த குணாவுக்கும் பிரபாவுக்கும் மனம் பாரமாகி போய் விட,

“அண்ணி கிட்ட பேசலாமா?” என்று கேட்டான் பிரபா. “நானும் அதை தான்டா நினைச்சேன். அவங்களை இந்த ஆப்ரேஷனுக்கு கொஞ்சமா ப்ரிப்பேர் பண்ணலாம்னு தோணுது.. ரொம்ப பயந்து போய் இருக்குற மாதிரி இருக்குடா” என்றான்.

“சரி அப்போ லேட் பண்ண வேண்டாம்.. வா பேசலாம்” என்று இருவரும் மாடிக்கு சென்றார்கள். அங்கே இலக்கில்லாமல் தூரத்தில் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளை பின்னிருந்து அழைத்தார்கள் இருவரும்.

“அண்ணி”

பட்டென்று அவள் திரும்பவெல்லாம் இல்லை. கைகளை கட்டிக் கொண்டு அசையாமல் அப்படியே தான் இருந்தாள்.

அவள் திரும்பாமல் போகவும், அவளின் இறுக்கத்தின் அளவை உணரந்தவர்களாய்,

“அண்ணி” என்றார்கள் மீண்டும்.

“ப்ளீஸ் நான் கொஞ்ச நேரம் தனியா நான் நானா இருக்க ஆசைப்படுறேன்” என்றவளின் குரலில் ஒரு கெஞ்சல் இருந்தது. அதுவும் அவள் சொன்ன நான் நானா என்பதில் இருந்த அழுத்தம் புரிந்தது. இவ்வளவு நாளும் அவள் சிந்தனை இழந்து தன் வயம் இழந்து போதையில் அல்லவா இருந்தாள். அதனாலே நான் நானா இருக்க என்கிற வார்த்தை பயன்படுத்தினாள்.

“அண்ணி உணர்வுகள் புரியுது... ஆனா நாங்க” என்று குணா ஆரம்பிக்க,

“ப்ளீஸ் குணா... இன்னும் கொஞ்ச நொடிகள் மட்டுமே நான் போதை இல்லாம இருக்க முடியும்.. எனக்கு கொஞ்சம் சிந்திக்கணும். நான் என்ன செய்யிறேன்.. என்ன செய்ய போறேன்னு யோசிக்கணும். உங்க அண்ணா போதை மருந்து ஏத்திட்டா என் சிந்தனைகள் எல்லாம் மறந்துப் போயிடும். மழுங்கிப் போயிடும்.. சோ ப்ளீஸ்” என்றாள் இறைஞ்சலாக.

அவள் அப்படி சொல்லவும் மனதளவில் இருவருமே கொஞ்சம் அடிவாங்கினார்கள்.

“சாரி அண்ணி” என்று இருவரும் அவளை விட்டுட்டு விலகப் போக,  

“உங்களுக்காவது தெரியுமா?” என்று கேட்டாள்.

“என்ன அண்ணி, எதை பத்தி கேக்குறீங்க?” போனவர்கள் திரும்பி வந்தார்கள்.

“எங்க அண்ணனை பத்தி தான்” என்றாள்.

“அது அண்ணி” என்று தயக்கமாக குணா இழுக்க,

“உன் அண்ணனை பத்தி உனக்கு என்ன தெரியணும்?” என்று கேட்டபடி அங்க வந்து நின்றான் தயாகரன்.

“என் அண்ணனுங்களை பற்றி எனக்கு தெரியனும். குறிப்பா உங்களுக்கும் அவனுங்களுக்கும் என்ன சம்மந்தம்னு தெரியணும்” என்றாள்.

“இப்ப இந்த நிமிடம் இது அவசியமா?” என்று கேட்டான் அவளின் கணவன்.

“இனிமே கேட்கவே முடியாத அளவுக்கு இந்த சூழ்நிலை மாறிப்போனாலும் போகலாம்னு ஒரு எண்ணம் வலுக்குது. அதனால தான் ஒரேடியா போறதுக்கு முன்னாடி எனக்கு நடந்த எல்லாமே தெரிஞ்சுக்கணும்னு தோணுது.. அட்லீஸ் தெரிஞ்சுக்கிட்டா ஒரு வேலை நிம்மதியா செத்துப் போவேன் இல்லையா?” அவளின் குரல் கமறலாக ஒலித்தது.

தயாகரனுக்கு கண்கள் சிவந்துப் போனது அவளின் பேச்சில். அது கோவத்தாலா? இல்லை அவளின் மீது கொண்ட காதலாலா என்று கேட்டால் அவனால் பதில் சொல்ல முடியாது.

“நான் யாருன்னு தெரியும் தானே?” அவன் மனதை திறந்தான்.

அவள் தலையை ஆட்டினாள்.

“என்ன வேலை பார்க்கிறேன்னு தெரியும் தானே?” அடுத்த கேள்வியை வீசினான். அதற்கும் அவள் தலையை ஆட்ட,

“நான் மட்டும் இல்ல உன் பெரிய அண்ணனும் தான்” என்றான் அடுத்து.

“வாட்?” என்று முன்பை விட இன்னும் அதிகமாக அதிர்ந்துப் போனாள் அவள்.

“உன் சின்ன அண்ணன் அவனுக்கு உதவியா உளவு படையில இன்னொரு பிரிவுல இருக்கான்” என்று மேலும் சொல்ல தலை கிறுகிறுத்தது அவளுக்கு தயாழினிக்கு.

இதுவரை தன் அண்ணன்களின் மீது கொண்டு இருந்த பிம்பம் முற்றும் முழுதுமாக உடைந்த நொடி அது... தயாகரன் மேலும் மேலும் சொல்ல அவளால் தன் தான் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வரவே முடியவில்லை. தான் கேட்பது எல்லாம் உண்மை தானா? இல்ல கனவு எதுவும் காண்கிறோமா? என்று தவித்துப் போனாள்.

அவளின் தவிப்பை பெருமூச்சு விட்டுப் பார்த்த தயாகரனின் தம்பிகள் அசையாமல் நின்று இருந்தார்கள்.

குரலில் எந்த மாறுதலும் இல்லாமல், “நானும் உன் பெரிய அண்ணனும் ஒண்ணா தான் கல்லூரி படிச்சோம். அங்க வச்சு தான் எனக்கு அவனை தெரியும். அப்போதுல இருந்தே எங்க ரெண்டு பேருக்கும் ரால சேரணும்னு ஆசை. வெரின்னே சொல்லலாம்..”

“அதுக்கான ட்ரைனிங் எல்லாம் எடுத்து ரெண்டு பேரும் டீம்ல சேர்ந்தோம். அவனுக்கு ஒரு நாடு எனக்கு ஒரு நாடு.. பிரிச்சு குடுத்த பிறகு நாங்க ரெண்டு பேரும் அதுக்கு பிறகு எங்கயும் பார்த்துக்கல. ஒரு சீக்ரட் மிஷன் அப்போ தான் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ண வாய்ப்பு வந்தது...” என்றான்.

“அதுல உன் அண்ணனை ஒரு தீவிரவாத கும்பல் அரெஸ்ட் பண்ணிடுச்சு.. என்னோட கூட வந்த இன்னொருவரையும் பிடிச்சுட்டானுங்க.. தப்பிச்ச ஒரே ஆள் நான் மட்டும் தான்” பெருமூச்சு விட்டான்.

“அப்போ எங்க அண்ணன்” என்று வீறிட்டாள்.

“உன் அண்ணன் இன்னும் அவனுங்க பிடியில தான் இருக்கான்” என்றான் எந்த உணர்வும் இல்லாமல்.

“இப்படி அசால்ட்டாக சொல்றீங்க?” வேதனையுடன் கேட்டவளை எந்த உணர்வும் இல்லாமல் தான் இந்த முறையும் பார்த்தான்.

“எப்படி இப்படி மரம் மாதிரி இருக்கீங்க? உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சேயே இல்லையா? யாரோ தானே அங்க சிக்கி இருக்கிறது.. நீங்க இங்க ஜாலியா ராஜா மாதிரி இருக்கீங்க. உங்களுக்கு என்ன கவலை இருக்கு இல்ல...?” ஆதங்கத்துடன் அவனின் சட்டையை பிடித்து கேள்வி கேட்டவளை முறைத்துப் பார்த்தான்.

“அறிவு இல்லமா பேசாதடி..” பல்லைக் கடித்தான்.

“என்ன அறிவு இல்லமா பேசுறாங்க... அங்க எங்க அண்ணன் என்ன நிலையில இருக்கான்னு கொஞ்சம் கூட அக்கரை இல்லாம இங்க பொண்ணுங்களை வச்சு பிசினெஸ் பண்ணிட்டு இருக்கீங்க இல்ல.. ச்சீ.. உங்களை எல்லாம்...” என்று கண்ணீருடன் அறுவெறுத்துப் போனவளை அடக்க முடியாத கோவத்துடன் பார்த்து நின்றான்.

“லுக் மை ஐஸ்” என்று சீற்றத்துடன் கர்ஜித்தான். அவனது கர்ஜனையில் தூக்கிவாரிப் போட வெடவெடத்துப் போய் அவனை கண்களில் நீர் நிரம்ப பார்த்தாள்.

கண்ணீர் பார்வையை தடுக்க, சட்டென்று அதை துடைத்து விட்டு அவனை பார்த்தாள். அவனின் கண்களை நேருக்கு நேராக பார்த்தாள்.

“என் கண்ணுல பொய் இருக்கா?” என்று கேட்டான். அவனின் குரல் ஆளுமையிலும் அவனின் கண் பார்வையிலும் கொஞ்சம் கூட பொய் என்பதே இல்லாமல் போக. தானாகவே தலையை ஆட்டினாள் இல்லை என்று.

“உங்க அண்ணனை காப்பாத்த தான் இந்த சீக்ரெட் ஆப்ரேஷன்” என்றவன், “உங்க அண்ணன் சிக்கி இருக்குறது இண்டர்னாஷ்னல் கிரிமினல் கிட்ட... அவன் யாரு எப்படி இருப்பன்னு யாருக்கும் தெரியாது.. ஆனா அவனை நானும் உன் அண்ணனும் ரொம்ப கிட்டக்க வச்சு பார்த்து இருக்கோம்.. வெளி ஆளுங்கல்ல அவனை பார்த்தது நாங்க மட்டும் தான். அவனை நெருங்குறது அவ்வளவு ஈசி கிடையாது. ஒன்னு பொம்பளை பிசினெஸ் பண்ணனும், இல்லையா கஞ்சா விற்கணும். அதுவும் பல வருசமா.. அவனுக்கு நம்ம மேல சந்தகம்னு வந்துட்டா ஒரு நொடி கூட யோசிக்க மாட்டான். போட்டு தள்ளிக்கிட்டு போயிட்டே இருப்பான். அவனை ஏமாத்தி அவன் கிட்ட போறது எல்லாம் நடக்காத காரியம். நான் வட்டி தொழில் பண்றதே என் மேல தவறான அபிப்ராயம் மக்கள் மத்தியில க்ரியேட் பண்ண தான்... அதை செஞ்சா அவன் கிட்ட என்னால ஈசியா நெருங்க முடியும். ஏன்னா ஒரு கிரிமினலுக்கு இன்னொரு கிரிமினல் தான் தோஸ்த்” என்றவன்,

“அது போல உன் அண்ணனுங்க என் கிட்ட கடன் வாங்குனது, அவனுங்க கல்யாணம் பண்ணது எல்லாமே ஒரு செட்டப் தான்... அப்போ தானே உன் குடும்பத்தை தொக்கா தூக்கி என் இடத்துல வைக்க முடியும். வெளிப்பார்வைக்கு உங்களை நரக கொடுமை பண்ற மாதிரி இருக்கும். ஆனா உங்களுக்கு முழுமையா நான் பாதுகாப்பு குடுத்த மாதிரியும் இருக்கும்...” என்றான்.

“அப்போ என் அண்ணன் நிலைமை?” வேதனையுடன் கேட்டவளை கூர்ந்துப் பார்த்தான்.

 

தொடரும்..

 

Loading spinner

Quote
Topic starter Posted : August 14, 2025 4:53 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top