Notifications
Clear all

அத்தியாயம் 16

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவன் முகம் அவள் புறம் திரும்பவில்லை தான். ஆனால் அவனின் தலைமுடி அவளின் வெற்று இடையில் உரசி கூச்சம் காட்டியது.

அதோடு அவள் கட்டி இருந்த புடவை மெல்லிய புடவை என்பதால் அவளின் புடவையின் வழியே அவனது தலை முடி ஊடுருவி அவளின் வயிற்றில் குத்திக் கொண்டு இருந்தது.

பெரும் அவஸ்த்தை பெண்ணவளுக்கு... ஆனால் அவனை விலக்கி வைக்கவும் அவளால் முடியவில்லை.

“இல்ல ஜஸ்ட் இன்பார்ம் பண்ணுனேன்” என்று யுவன் சொல்ல திரும்பி அவனை ஒரு முறை முறைத்தான். அதில் யுவன் சீண்டலாய் ஒரு பார்வை பார்த்து விட்டு வேலையில் கவனம் வைத்தான்.

“சரி செலரி யாருக்கு கிரிடிட் பண்ணனும்?” என்று பஞ்சவன் கேட்க, மகரா புரியாமல் முழித்தாள்.

“அவன் உன்னை நக்கல் பண்ணுறான் மகரா... உன் வேலையை நான் செய்யிறேன் இல்லையா? அதுக்கு தான் சார் இந்த கேள்வியை கேக்குறாரு” என்றான்.

புரிந்துக் கொண்டவள் தன் கணவனை முறைத்துப் பார்த்தாள்.

“இந்த பார்வையெல்லாம் இங்க செல்லாது.. ஒன்லி வாய் மொழி தான்” என்று பஞ்சவன் அவளை சீண்டி விட, இதழ்களை சுழித்தவள்,

“நான் இந்த குவேஷன குயிட் பண்றேன்” என்றாள்.

“ம்ம்ம் விவரம் தான்” என்று சொன்னவன் அவளின் மடியில் நன்றாக படுத்து தூங்க ஆரம்பித்தான். மடிகணினியில் வேலை செய்தால் அவன் தூக்கம் கெடுமே என்று அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

யுவன் அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் அவளின் எதிரில் இருந்த லேப்டாப்பை எடுத்துக் கொண்டு அவனுடைய அறைக்குப் போய் விட்டான்.

“தூங்கட்டும் டிஸ்ட்டப் பண்ணாத மகரா” என்று அவளுக்கு முதுகு புறமாக வைக்க ஒரு தலையணையை கொடுத்து விட்டு மகராவின் ப்ராஜெக்ட் ஒர்க்கை கம்ப்ளீட் பண்ண போய் விட்டான்.

இங்கே மடியில் படுத்து இருந்தவனை பார்த்தவளுக்கு என்ன செய்வதே என்றே தெரியவில்லை. நன்றாக தூங்குகிறான் என்று மடியை விட்டு கீழே இரக்கப் பார்க்க உடனடியாக முழித்துக் கொள்கிறான். அதனால் அவனை மடியில் வைத்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள் மகரா...

பஞ்சவனும் ஒருத்தி மடியில் படுத்து இருக்கிறோமே என்கிற எண்ணமே இல்லாமல் ஏதோ பட்டா போட்டு வைத்த இடம் போல நன்றாக படுத்து தூங்கிப் போனான்.

--

மாலை வரை நன்றாக தூங்கினான். இடையில் தாத்தா பாட்டி யுவன் பஞ்சவனின் அம்மா என எல்லோருமே வந்து பார்த்து விட்டுப் போனார்கள். ஆனால் அவன் எழவே இல்லை. அப்படி ஒரு தூக்கம்.

அவன் தூங்குவதை பார்த்து இருந்தவளுகும் தூக்கம் வர அவளும் பின்னடி இருந்த சுவரில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள். முதுகு வலிக்காமல் இருக்க தலையணையும் பின்பக்கம் இருக்க தூக்கம் நன்றாகவே வந்தது மகராவுக்கு.

“பாரு வனிதா எப்படி என் பிள்ளையை மயக்கி வச்சு இருக்கான்னு.. மடியிலேயே தூங்குறான்.. விட்டா அவ கால்லயே விழுந்து கிடப்பான் போல” என்று கவிதா தன் ஓர்படியாளிடம் கறுவிக்கொண்டார்.

“நீங்க சொன்னதுக்கு பிறகு தான் நானும் போய் பார்த்தேன் அக்கா... அப்படி தாங்கிக்கிட்டு இருக்கா... அதனால தானே அந்த சாமார்த்தியம் இருக்கப் போய் தானே இரண்டாவது ஆம்பளையை பிடிச்சு இருக்கா... உன்னால தான் முடியுமா க்கா இல்ல என்னால தான் முடியுமா...?” என்றாள் வனிதா அதற்கு மேல்.

“ஆமான்டி.. அதை சொல்லு... அந்த சாமார்த்தியம் இருந்ததுனால தானே வந்த முதல் நாள்லயே தனிக்குடித்தனம் பண்ண வச்கிட்டா... இந்தா நாமலும் தான் இவ்வளவு நாளா இவ்வளவு வருடமா இங்க குடித்தனம் பண்ணிட்டு இருக்கோம். புருசன் கிட்ட ஒரு சலுகை வாங்க முடியுதா...” என்று கவிதாவும் வனிதாவும் மாறி மாறி மகராவை பேசி தங்களின் உள்ளக்கிடங்கை ஆற்றிக் கொண்டு இருந்தார்கள்.

அதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த ரூபாவுக்கு மகராவின் மீது அளவுக்கு அதிகமாக வெறுப்பு மண்டியது. மகராவை பார்க்கும் பொழுதே அவளை ஏளனமாக பார்க்க ஆரம்பித்தாள் அவள்.

இரண்டாவது கல்யாணம் என்று கேள்வி பட்ட உடனே அவளின் மீது அண்ணி என்கிற பிடிப்பு எல்லாம் அந்துப் போனது. என்னவோ பெண்கள் எல்லாம் மறுமணமே செய்துக்கொள்ளக் கூடாது என்பது போலவும் அப்படி அவர்கள் செய்துக்கொண்டாள் அது உடல் இச்சைக்காக மட்டுமே என்பது போலவும் அவளின் கருத்து இருந்தது.

அந்த கருத்தை வைத்துக் கொண்டு யாரை பார்த்தாலும் அவர்களின் குணநலன்களோ பாங்கும் பத்திரமுமோ எதுவுமே தெரியாமல் தான் போகும். ரூபாவும் கண்ணை மூடிக்கொண்டு அன்னைமார்களின் பேச்சை செவிக்கொடுத்து கேட்க ஆரம்பித்தாள். போனை நோண்டுவது போல அவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று தான் கேட்டுக் கொண்டு இருப்பாள்.

மகள் போன் தானே நோண்டுகிறாள் என்று இவர்கள் இன்னும் ஊரு கதை உலகத்து கதை வந்த கதை போன கதை என்று பேச அவளுக்கும் அதெல்லாம் மண்டையில் ஏறி இருந்தது.

பெரியவர்கள் பேசினால் அவ்விடத்தில் சின்ன பிள்ளைகள் இருக்க கூடாது என்று விரட்டி விடுவார்கள் அந்த காலத்து பெரியவர்கள். ஆனால் இப்பொழுது அப்படியே எல்லாம் எதுவும் இல்லை.

பெரியவர்களுக்கு மேல சின்ன பிள்ளைகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். வயதுக்கு தகுந்த முதிர்வு எல்லாம் கடந்து அனைத்தையும் அலசி ஆராய்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். எதுவும் சொல்வதற்கு இல்லை.

இடையில் எழுந்த பிள்ளைகளையும் யுவனும் தாத்தாவும் வைத்துப் பார்த்துக் கொண்டார்கள். அவர்களும் எவ்வளவு தான் தாங்குவார்கள். நீண்ட நேராம் ஆகியும் அப்பாவையும் காணோம் அம்மாவையும் காணோம் என்றவுடன் பிள்ளைகள் இருவரும் அழ ஆரம்பித்தார்கள்.

வேறு வழியில்லாமல் மகராவிடம் தூக்கிக்கொண்டு வந்தான் யுவன்.

பிள்ளை சத்தம் கேட்டு விழித்தவள் எழப்பார்க்க அவளால் கொஞ்சமும் எழவே முடியவில்லை. குனிந்துப் பார்த்தாள். அவளின் மடியில் பஞ்சவன் படுத்து இருந்தது அப்பொழுது தான் உணர்ந்தாள்.

அவளிடம் கையைக்காட்டி பிள்ளையை கொடுத்தவன் பஞ்சவனின் தலையை தூக்கி அருகில் வைக்க வர, பஞ்சவனே முழித்து விட்டான்.

“என்னடா பண்ணவர” என்று தன் கழுத்தை நோக்கி நீண்டு இருந்த யுவனின் இரு கைகளையும் பார்த்து கேட்டான்.

“இல்லைடா பையன் ரொம்ப நேரமா அழுதுட்டு இருந்தான். அது தான் உன்னை கீழ படுக்க வச்சுட்டு மகனை மடியில் போடலாம்னு” என்று அவன் சொல்ல, அவனை முறைத்தவன்,

“நோ நீட்.. எழுப்பி விடு. நானே எழுந்துக்குவேன்..” என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு எழுந்துக் கொண்டான். அதன் பிறகு காலை மடக்கப் பார்த்தாள். அவளால் மடக்க முடியவில்லை. காலெல்லாம் மறுத்துப் போய் இருந்தது.

“அவுச்...” என்று சத்தமிட்டாள். வலி எடுத்தது கால்கள்.

“கால் வலிக்கிறதா?” என்று கேட்டான் பஞ்சவன்.

“பின்ன வலிக்காதா...? வயலுக்கு போயிட்டு வந்து மதியம் போல படுத்த... இந்த இப்போ விளக்கு வைக்கும் நேரமே வந்திடுச்சு... இப்போ தான் எழற... இதுல வலிக்குதான்னு கேள்வி வேற கேக்குற” என்று யுவன் சிரித்தான்.

“ப்ச்...” நெற்றியை நீவி விட்டவன்,

“சொல்லி இருக்கலாம்ல” என்று மகராவிடம் கேட்டான்.

“இல்ல நானும் தூங்கிட்டேன்” என்றாள் அவள் உள்ளடங்கிப் போன குரலில். அவளை ஒரு கணம் ஆழ்ந்துப் பார்த்தவன், அவளின் காலை தூக்கி தன் மடியில் வைத்து அழுத்தி விட ஆரம்பிக்கப் பதறிப் போனாள் பெண்ணவள்.

“அச்சோ என்ன பண்றீங்க?” என்று பதறி அவனது மடியில் இருந்து கால்களை எடுத்துக் கொள்ளப் பார்த்தாள். அவனின் உடும்பு பிடியில் அவளால் கால்களை அசைக்க கூட முடியவில்லை.

“ப்ளீஸ் ங்க” என்று அவள் கெஞ்ச,

“இவ்வளவு நேரம் எனக்கு பார்த்தல்ல... இப்போ உனக்கு பார்க்கிறேன் அவ்வளவு தான்” என்றவன் அவளுக்கு கால் அழுத்தி விட ஆரம்பித்தான்.

யுவன் சிரிப்புடன் காபியும் கொறிக்க தீனியும் எடுத்து வந்து கொடுத்து விட்டுப் போனான்.

அறையில் இவர்கள் மூவரும் மட்டும் தான். மகனை மடியில் போட்டு அவனை வருடிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள். அவளின் கால்களை அழுத்தி விட்டுக் கொண்டு இருந்தான் பஞ்சவன். என்னவோ வருடக்கணக்காக வாழ்ந்து பார்த்த ஒரு உணர்வு இருவரின் நெஞ்சிலும் தோன்றியது.

மெல்ல அசையாது விழிகளை மட்டும் தூக்கி பஞ்சவனை பார்த்தாள். அவன் கால்களை அழுத்தி விடுவதில் மும்மரமாக இருக்க, அவனது முகத்தை வரிவடிவத்தை மெல்ல இரசித்துப் பார்க்க ஆரம்பித்தாள்.

அவளின் பார்வையை உணர்ந்தவன் சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தான். அவன் அப்படி பார்ப்பான் என்று அறியாதவள் ஒரு கணம் தடுமாறி பின் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

அவளின் பார்வையில் வந்த தடுமாற்றத்தை கண்டவனுக்கு சிரிப்பு வர அதை மீசைக்கு அடியில் மறைத்துக் கொண்டு அவளின் கால்களை மிக லேசாக அழுத்தி விட்டான்.

முதலில் முரட்டுத்தனமாக தான் அழுத்த ஆரம்பித்தான். ஆனால் அவனது பிடியில் அவள் முகம் சுறுக்கவும் பின் மெதுமெதுவாக அழுத்தி விட ஆரம்பித்தான்.

அது மிக சுகமாக இருக்க பின்னால் வாகாக சாய்ந்துக் கொண்டு அவன் செய்வதை அனுபவிக்க ஆரம்பித்து விட்டாள். எப்படி இப்படி ஒரு இயல்பு இருவருக்குள்ளும் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இருவருமே அதை இரசித்துக் கொண்டார்கள்.

கண்கள் மூடி அவன் தொடுகையை அவள் அனுபவிக்க அவள் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை பார்த்தவனுக்கு இன்னும் மெதுவாக அழுத்திவிட ஆரம்பித்தான். அதையும் உள்ளுக்குள் இரசித்தாள்.

அவனது கை அழுத்தம் போக போக குறைந்து வெறும் வருடலாக மாறி இருந்தது. அதை இருவருமே உணரவில்லை. புடவையின் மீது தான் அவன் முதலில் அழுத்தி விட்டுக் கொண்டு இருந்தான். ஆனால் எப்பொழுது அவனது கைகள் அவளின் புடவையை விலக்கியது என்று இருவருக்குமே தெரியவில்லை.

மகராவின் வெற்றுக் காலில் பஞ்சவனின் முரட்டுக் கை மெல்ல மெல்ல படிந்துப் பரவ இருவருக்குள்ளும் ஒரே லயம்... அவனது வருடல்களில் இவளுக்கு கண்களை சொருகிக்கொண்டு வந்தது.

அவனுக்கு கால்களின் மென்மையை இன்னும் கொஞ்சம் தெரிந்துக் கொள்ள வேட்கை பிறந்தது... இன்னும் முன்னேற அவனின் ஆண் மனம் கிடந்து தவித்தது.

ஒவ்வொரு வருடளுக்கும் அவளின் முகம் சிவந்து தவித்துப் போனது. எங்கே கால்களை எடுத்துக் கொண்டாள் தவறாக ஆகி விடுமோ என்று பயந்து அவனின் மடியிலே வைத்து இருந்தாள் பெண்ணவள்.

அவனுக்கோ இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும் என்று துடிப்பு... மூச்சு முட்டிப் போக அவனுக்கு ஆசை வந்தது. இதுநாள் வரை இப்படியெல்லாம் தோன்றவில்லை. ஆனால் இந்த நொடி அவளை முழுவதுமாக தெரிந்துக் கொள்ள ஆசை பிறந்தது.

அவளின் மார்பு சூட்டில் தான் தொலைந்துப் போக அடங்காத ஆசை எழுந்தது. அங்கேயே அவனின் உலகம் விடியவும் முடியவும் பேராசை எழுந்தது. பிள்ளைகளுக்கு போட்டியாய் தானும் அவளிடம் மல்லுக்கட்ட தோன்றியது..

பல ஆசைகள் வேர்விட தொடங்கியது அவனுக்கு. அதை எல்லாம் கட்டி வைத்தவன் அவளின் கால்களை மென்மையாக அழுத்தி விட்டுக் கொண்டு வருடி விட்டுக் கொண்டு என இருந்தான்.

ஒரு கட்டத்தில் அவனால் அவனையே கண்ட்ரோல் பண்ண முடியாமல் விரல்களுக்கு நெட்டி எடுத்து விட்டவன் குனிந்து அவளின் கால்களில் முத்தம் கொடுத்து விட்டான்.

காலில் அவனது மீசை முடி உரசிச்செல்ல விக்கித்துப் போய் விழிகளை திறந்தாள் மகரா. அவளின் காலில் முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்த ப்ஞ்சவனை அதிர்ந்துப் போய் பார்த்தாள்.

அவனும் நிமிர்ந்துப் பார்த்தான். இருவரின் பார்வையும் ஒரு கணம் சந்தித்து நிலையாகக் கவ்விக் கொண்டது.

எவ்வளவு நேரம் அப்படி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தார்களோ தெரியவில்லை. அப்படியே பார்த்த வண்ணமாகவே இருந்தார்கள் இருவரும்.

யுவனும் தாத்தாவும் வரும் அரவம் கேட்க சட்டென்று முட்டிக்கு அருகில் இருந்த அவளின் புடவையை இழுத்து கீழே விட்டான். அவன் அப்படி செய்யவும் முகம் சிவந்துப் போனவள் கால்களை எடுத்துக்கொள்ள பார்க்க ஒருமுறை அழுத்திப் பிடித்தவன் பின் பெருமூச்சு விட்டு தன் கைகளை விலக்கிக் கொண்டான்.

முகச்சிவப்புடன் அவனது மடியில் இருந்து தன் கால்களை எழுத்துக் கொண்டாள் மகரா. தன் கொலுசை வருடி விட்ட அவனது நரம்பேரிய கைகள் அவளை அடிமனம் வரை சிலிர்க்க வைத்து இருந்தது.

Loading spinner
Quote
Topic starter Posted : July 25, 2025 11:36 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top