Notifications
Clear all

அத்தியாயம் 15

 
Admin
(@ramya-devi)
Member Admin

பஞ்சவன் சட்டென்று மகரா மீது சாய்ந்துக் கொள்ள அதிர்ந்துப் போனாள். என்ன இது... என்று ஒரு கணம் மூச்சடங்கிப் போனது அவளுக்கு.

ஆனால் அவன் கொண்ட வேதனை அதிகம் என்பதால் அவனை எதுவும் சொல்லவில்லை. தன்னிடம் அவன் கேட்பது ஆறுதல் மட்டுமே என்று புரிய அவனை தோளில் தாங்கிக்கொண்டாள் மகரா.

அவளின் தோளில் சாய்ந்து இருந்தவனுக்கு அவனது சிறுவயது நினைவுகள் எல்லாம் கண் முன் வந்தது. தாத்தா கைப்பிடித்து முதல்முறை வயலுக்கு சென்ற காட்சி விரிய மனம் கலங்கிப் போனது.

இதற்கு மேலும் எத்தனையோ நிலங்களை வாங்கலாம் தான். ஆனால் இது அவனது மனதோடு மிக நெருங்கிய நிலம். அதோடு வழி வழியாக வந்த நிலம். அதை எப்படி விட்டுக் கொடுப்பது.

வேறு யார் என்றாலும் இந்நேரத்துக்கு சட்டையை பிடித்து கேள்வி கேட்டு இருப்பான். ஆனால் செய்வது அத்தனையும் அவனின் அப்பா சித்தப்பாவாக இருக்க என்ன செய்வது என்று வருந்தினான்.

நாளைக்கு அவனது மகனுக்கு இந்த நிலத்தை கொடுக்க வேண்டும் அல்லாவா.. இது இன்னும் வழிவழியாக தொடர வேண்டும் இல்லையா? பாதியில் விட்டு விட சொன்னால் எப்படி விட்டு தர இயலும். தாய் மண்ணாயிற்றே..

இந்த மூன்று வருடத்தில் பார்க்காத துயரம் இல்லை பஞ்சவன். அத்தனையையும் அனுபவித்து விட்டான். இப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறான். நிம்மதி என்பது கொஞ்சம் கூட இல்லை...

எங்காவது இளைப்பாறுதல் கிடைக்குமா என்று ஏங்கினான். அவன் ஏங்கிய ஏக்கத்துக்கு இதோ விடையாய் அவளின் முன்பு அவனை தாங்கியபடி மகரா நின்றுக் கொண்டு இருக்கிறாள்.

அவள் இருக்கவுமோ என்னவோ அவள் மீது சாய்ந்துக் கொண்டான். இருக்க இருக்க அவளின் மீது முழு பாரத்தையும் போட்டு நின்றான். தன்னை சுமப்பதே அவனுக்கு அவ்வளவு பெரிய பாரமாக இருப்பதை போல உணர்ந்தான்.

தன்னை தாங்கிப்பிடிக்க ஒருத்தி இருக்கவும் அவளின் மீது முற்றும் முழுதுமாக குடை சாய்ந்துவிட்டான்.

இருக்க இருக்க அவனது பாரம் தன் மீது மிக அதிகமாக இருக்கக் கண்டு தவித்துப் போனாள். அவனை விலக்கவும் முடியவில்லை. தாங்கி நிற்கவும் அவளுக்கு வலு இல்லை.

பெருமூச்சு விட்டவள் மிகுந்த தயக்கத்தோடு அவனின் பின்னந்தலை முடியை லேசாக பற்றி கோதி விட்டாள். அந்த ஆறுதலில் மனம் இன்னும் நெகிழ்ந்தவன் சிறு பிள்ளையாய் அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான்.

அவனது முரட்டு உதடுகளும் ஊசியாய் குத்தும் கற்றை மீசையும், அலைபாய்ந்து கூச செய்யும் தலை முடியும் அவளின் கன்னம், கழுத்து, கழுத்துக்கு கீழ் என்று படிய அடிவயிற்றில் பட்டாம்பூச்சியை பறக்க வைத்து இருந்தது.

இது போல மெல்லிய உணர்வுகள் எல்லாம் அவளுக்கு கிடைத்தது இல்லை. அவளின் திருமண வாழ்க்கையில் எல்லாமே வேகம் தான். மிக வேகமாக தான் அனைத்தும் நடந்தது. நடந்து முடிந்து இருந்தது.

படுக்கையில் கூட வேகம் தான். அவளின் மெல்லிய உணர்வுகள் எல்லாம் தூண்டப்படவே இல்லை. அவனது தேவையை தீர்த்து விட்டு விலகிவிடுவான். அவனின் மார்பில் கூட அவள் படுத்தது இல்லை. என்னவோ கடமை என்பது போல இல்லறவியல் அவளுக்கு அமைந்து இருந்தது.

அதனாலோ என்னவோ பஞ்சவனின் கற்றை மீசையும் அடர் கேசமும் மிருதுவாக அவளை தீண்டியது கூட அவளுக்கு வதம் செய்தது போல தோன்றியது. கண்களை மூடி அவனை தனக்குள் கிரகித்துக் கொண்டாள்.

பஞ்சவனின் வியர்வை மனம் அவளின் நாசியில் ஏறி கூச்சமூட்டியது.

“என்ன அவஸ்த்தை இது” என்று அவள் தடுமாறினாலும் அவனை தேற்ற வேண்டுமே என்று உள்ளம் தவித்தாள்.

அவன் மனம் கொள்ளுமளவு தன்னால் ஆறுதல் கொடுக்க இயலுமா என்று வேதனையும் கொண்டாள்.

இதற்கு முன்பு இப்படியெல்லாம் யாருக்கும் செய்தது இல்லை என்பதால் தடுமாறினாள். எல்லோருக்கும் வாய் மொழி ஆறுதல் மட்டும் தான். மிஞ்சி மிஞ்சிப்போனால் கைப்பிடித்து ஆறுதல் கூறி இருக்கிறாள்.

இப்படி தோளில் சாய்ந்து சிறுபிள்ளையாய் அவளிடம் யாரும் தஞ்சம் கொண்டது இல்லையே..! அவளையும் அறியாமல் அவளது கை அவனது தலையில் படிந்தது.

அதை உணர்ந்தவள் மெல்ல அவனது தலையை கோதி விட்டாள். அவளது தலை கோதலில் இன்னும் அவளின் தோளில் அழுத்தமாக முகம் புதைத்துக் கொண்டான்.

அதை எதிர்பார்க்கதவள் ஒரு கணம் செயலாற்றுப் போனாள். அதை பஞ்சவனும் உணர்ந்தான் தான். ஆனால் அவளை விட்டு அவன் விலகவே இல்லை. இன்னும் எனக்கு ஆறுதல் தேவைப்படுகிறது. நீ கொடுக்கிறவரை உன்னை விட்டு விலக மாட்டேன் என்பது போல அவன் அடமாய் அவளிடம நின்றான்.

அதை உணர்ந்துக் கொண்டாளோ என்னவோ நிறுத்திய கை மீண்டும் கோதி விட ஆரம்பித்தது. இன்னொரு கை அவனது முதுகை நீவி விட இன்னும் அவளிடம் ஒன்றினான்.

இருவரும் கால் வலிக்க வலிக்க அப்படியே நின்று இருந்தார்கள். இருவருக்கும் ஒருவரை விட்டு ஒருவர் விலகவே தோன்றவில்லை. அவனின் பாரம் அவளிடம் அப்படியே இருந்தது. மூச்சு முட்டியது. ஆனாலும் ஒன்றும் சொல்லவில்லை. நீண்ட நேரம் அப்படி நின்றார்கள். அவர்களின் தவத்தை கலைப்பது போல யுவன் பிள்ளைகளோடு வர இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் விலக வேண்டிய நிலை.

இல்லை என்றால் இரவு முழுவதும் கூட அப்படியே நின்று இருந்து இருப்பார்கள். இந்த அணைப்பில் எந்த வித காதலும் இல்லை. எந்த வித காமமும் இல்லை. வெறுமென அழுத பிள்ளையை அன்னை தூக்கி சமாதனம் செய்யும் உணர்வு மட்டுமே இருந்தது. அதை இருவரும் நன்றாகவே உணர்ந்து இருந்தார்கள்.

அந்த சமாதன தேறுதலான உணர்வு தான் இன்னும் இன்னும் வேணும் என்று ஆணின் மனம் அலைபாய்ந்தது. பெண்ணின் மனமோ சொற்களின்றி அந்த தேறுதலை மிகச்சரியாக கொடுத்தது.

யுவன் வரவும் இருவரும் விலகி நின்றார்கள். பிள்ளைகள் இவர்களிடம் தாவ, வாங்கிக்கொண்டார்கள்.

“ரொம்ப கோவப்படாதடா” யுவன் அவனை தேற்றப் பார்த்தான்.

“முடியலடா..” என்று அழுந்த தலைக்கோதியவன்,

“நான் கேட்ட டீட்டையில் எல்லாம் என்ன ஆச்சு?” என்று கேட்டான்.

“இதெல்லாம் அவசியமா பஞ்சவா?” என்றான்.

“வேற வழியில்ல யுவன். நான் இதையெல்லாம் செய்யக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனா ...” என்று எதையோ சொல்ல வந்தவன் அப்படியே சொற்களை முழுங்கிவிட்டு பொங்கி வந்த ஆத்திரத்தையும் சீரணித்துக் கொண்டு கண்கள் சிவந்துப் போய் நின்றவனை கண்டு வேதனையாகிப் போனது மகராவுக்கு.

பஞ்சவனின் தோளைத்தொட்டு ஒரு அழுத்தம் அழுத்திக் கொடுத்த யுவன்,

“நான் ஏற்பாடு பண்றேன்” என்றான்.

“ம்ம்” என்றான் அமைதியாக. அதன் பிறகு பஞ்சவன் எதுவும் பேசவில்லை. பிள்ளைகளை தூங்க வைத்தவள் தன் மடிகணினியை எடுத்து வைத்துக்கொண்டு அமர, போனில் மூழ்கி இருந்த யுவன்,

“எனி ஹெல்ப்” என்று கேட்டான் அவளிடம்.

“ப்ராஜெக்ட் செய்வீங்களா?” என்று கேட்டாள் அவனிடம்.

“ம்ம்ம்..” என்றவன் தன் லேப்டாப்பை எடுத்து அவளின் அருகில் அமர்ந்துக் கொண்டான். எப்படி என்ன என்பதை எல்லாம் கேட்டுக் கொண்டவன் அவளுடன் செய்ய ஆரம்பித்து விட்டான்.

இருவரையும் திரும்பி பார்த்த பஞ்சவன் எதையும் கண்டுக் கொள்ளவில்லை. பிள்ளைகளின் அருகில் போய் படுத்து விட்டான். ஆனால் கண்களை மூடவில்லை.

“ரிலாக்ஸ்டா” என்று யுவன் சொல்ல,

“கண்ணை மூடவே முடியலைடா” என்று அவன் தலையை மட்டும் தூக்கி சொன்னான்.

“சரி செய்துக்கலாம்” என்றான் யுவன்.

“ம்ம்ம்ம்” என்று சொன்னவன் சிறிது நேரம் அப்படியே படுத்து விட்டான். பின் என்ன நினைத்தானோ தலையணையை அவர்களின் அருகில் தூக்கிப்போட்டு அவர்களின் அருகே படுத்துக் கொண்டான்.

கிட்டத்தட்ட மகராவின் அருகில் படுத்து இருந்தான். அவன் அப்படி படுக்கவும் மகராவால் வேலை செய்ய முடியவில்லை. ஏதோ ஒரு தொந்தரவு. அவளின் கண் பார்வை மொத்தமும் பஞ்சவனின் மீது தான் இருந்தது.

பரிதவித்துக் கொண்டு இருந்த அவளின் மனதை அமைதிப் படுத்தவோ என்னவோ “உன் மடியில படுத்துக்கவா மகரா” என்று கேட்டான்.

அவள் அதிர்ந்துப் போனாள் அவனது கேள்வியில். வாயை திறந்து அவளால் பதில் சொல்லவே முடியவில்லை. அவளின் அதிர்வை பார்த்து பெருமூச்சு விட்டவன்,

“கேன் ஐ..” என்று கேட்டவன் அவளின் மடியில் படுத்துக் கொண்டான்.

“என் மடியும் ப்ரீயா தான் இருக்கு” என்றான் யுவன்.

“நோ நீட்...” என்று சொன்ன பஞ்சவன் அவள் புறம் திரும்பாமல் கண்ணியமா அவளின் மடியில் படுத்துக் கொண்டான். பெண்ணவளுக்கு தான் மூச்சு முட்டும் நிலை.

அவன் முகம் அவள் புறம் திரும்பவில்லை தான். ஆனால் அவனின் தலைமுடி அவளின் வெற்று இடையில் உரசி கூச்சம் காட்டியது.

அதோடு அவள் கட்டி இருந்த புடவை மெல்லிய புடவை என்பதால் அவளின் புடவையின் வழியே அவனது தலை முடி ஊடுருவி அவளின் வயிற்றில் குத்திக் கொண்டு இருந்தது.

பெரும் அவஸ்த்தை பெண்ணவளுக்கு... ஆனால் அவனை விலக்கி வைக்கவும் அவளால் முடியவில்லை.

“இல்ல ஜஸ்ட் இன்பார்ம் பண்ணுனேன்” என்று யுவன் சொல்ல திரும்பி அவனை ஒரு முறை முறைத்தான். அதில் யுவன் சீண்டலாய் ஒரு பார்வை பார்த்து விட்டு வேலையில் கவனம் வைத்தான்.

“சரி செலரி யாருக்கு கிரிடிட் பண்ணனும்?” என்று பஞ்சவன் கேட்க, மகரா புரியாமல் முழித்தாள்.

“அவன் உன்னை நக்கல் பண்ணுறான் மகரா... உன் வேலையை நான் செய்யிறேன் இல்லையா? அதுக்கு தான் சார் இந்த கேள்வியை கேக்குறாரு” என்றான்.

புரிந்துக் கொண்டவள் தன் கணவனை முறைத்துப் பார்த்தாள்.

“இந்த பார்வையெல்லாம் இங்க செல்லாது.. ஒன்லி வாய் மொழி தான்” என்று பஞ்சவன் அவளை சீண்டி விட, இதழ்களை சுழித்தவள்,

“நான் இந்த குவேஷன குயிட் பண்றேன்” என்றாள்.

“ம்ம்ம் விவரம் தான்” என்று சொன்னவன் அவளின் மடியில் நன்றாக படுத்து தூங்க ஆரம்பித்தான். மடிகணினியில் வேலை செய்தால் அவன் தூக்கம் கெடுமே என்று அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

Loading spinner
Quote
Topic starter Posted : July 25, 2025 11:35 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top