என்னவோ அவனை கோவப்படுத்த தான் இவர்கள் பேச்சை ஆரம்பித்தது போல உணர்ந்தாள் மகரா. அவனது கோவத்தை இப்பொழுது தானே நேரில் பார்த்து இருக்கிறாள். அதனால் எங்கே அவன் மீண்டும் கோவப்பட்டு விடுவானோ என்று பயந்துப் போனாள்.
அவன் கோவப்படும் பொழுது புடைத்து எழுந்த நரம்புகளை கண்டு உள்ளுக்குள் பேரச்சம் எழுந்தது அவளுக்கு. அந்த கோவத்தை அப்படியே கட்டாமல் தனக்குள் போட்டு புதைத்துக் கொள்ள தன்னை அடக்க அவன் பட்ட சிரமம் அதை அவள் பார்த்துக் கொண்டு தானே இருந்தாள்.
“இவ்வளவு கோவம் உடம்புக்கு ஆகாதே” என்று கவலையும் கொண்டாள் அவன் மீது.
இதோ இப்பொழுது கூட அவனது கோவத்தை தூண்டித் தான் செய்ய போகிறார்கள் என்று அவளுக்கு தெளிவாக தெரிந்தது. பெரியவர்களின் பார்வை அவளை தொட்டு சென்றதிலே இவளுக்கு இன்னும் பயம் வந்தது.
‘என்னை வச்சு எதுவும் அவரை காயப்படுத்துவாங்களோ’ கலங்கிப் போனாள்.
அது போலவே இவர்களும் சொற்களை வீசி அவனை சினந்து எழ வைத்து விட்டார்கள் தந்தைமார்கள். உள்ளுக்குள் பஞ்சவன் மீது பயம் தான். ஆனால் இப்பொழுது விட்டு விட்டால் பின் எப்பொழுதுமே அவனை எதிர்த்து நிற்க முடியாது என்று அறிந்த தந்தைமார்கள் அவனை முற்றிலும் வலுவிழக்க செய்து தாங்கள் நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்ள எண்ணினார்கள்.
வயலில் இருந்து வீடு திரும்புவதற்குள்ளே குத்தகைக்காரர் தந்தைமார்களுக்கு போன் போட்டு பேசிவிட்டார்.
“இல்ல கைலாசம்... அதெல்லாம் அப்படி எதுவும் நடக்க விட மாட்டோம்.. நீ கவலை படாத... நிலம் உனக்கு தான். நாங்க சொன்னா என் மகன் கேட்டுக்குவான். நீ அட்வான்ஸை ரெடி பண்ணு முதல்ல. இடம் ஆட்டோமேட்டிக்கா உன் கைக்கு வரும்” என்று அவருக்கு உறுதியும் நம்பிக்கையும் கொடுத்து விட்டு அண்ணனும் தம்பியும் இவர்கள் வீட்டுக்கு வருவதற்குள் பஞ்சவனிடம் என்ன சொல்லி சம்மதிக்க வைக்கலாம் என்று ஆயிரத்தெட்டு காரணங்களை அடுக்கி வைத்து விட்டார்கள்.
“பேசணுமா...?” என்று நிறுத்தி நிதானமாக கேட்டவன் திரும்பி தன் தாத்தாவை ஒரு பார்வை பார்த்தான். அவர் கண்களை மூடி திறக்க இழுத்து பிடித்த பொறுமையுடன்,
“பேசிடலாமே....” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன் அவர்களிடமே கேள்வி கேட்டான்.
“சரி சொல்லுங்க என்ன பேசணும்... ” என்று அவன் அவர்களின் எதிரில் வந்து அமர்ந்துக் கொண்டான்.
அவனது இந்த நிதானத்திலும் அழுத்தத்திலும் இவர்களுக்கு உள்ளுக்குள் கிலி பிடித்தது. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அண்ணனும் தம்பியும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அவர்களின் கண்களில் தெரிந்த எச்சரிக்கையை கவனித்தவனுக்கு மனமெல்லாம் கசந்து வந்தது.
இவர்களுக்கு மகனாய் பிறந்து விட்டு இன்னும் என்னவெல்லாம் தான் பார்க்க நேரும் என்று எரிச்சல் மண்டியது.
ஆனால் பார்த்து தான் ஆகணும். குடும்ப பாரத்தை தலையில் தூக்கும் எந்த ஆண் மகனும் இந்த ஒரு சூழலை சந்தித்து தானே ஆக வேண்டும்... பொறுப்பு இல்லை என்றால் எனக்கு என்ன என்று போய் விடலாம். ஆனால் பஞ்சவன் அப்படி இல்லையே சிறு வயதிலே குடும்ப பாரத்தை அவனது தாத்தா அவனிடம் கொடுத்து விட்டாரே.. எங்கிருந்து பொறுப்பு இல்லாமல் ஊதாரித்தனமாக திரிவது.
பெருமூச்சு விட்டவன் தன் தந்தைமார்களை கூர்மையான பார்வையோடு ஏறிட்டான்.
அவனது கூர் பார்வையில் இருவருக்கும் நடுக்கம் பிறந்தது. குடும்பமே அங்கு தான் கூடி இருந்தது. இருவரின் மனைவிகளும் மகளும் அப்பா அம்மாவும் மகனின் நண்பனும், மகனது மனைவியும் என அங்கு நிற்க அப்பொழுது தான் தாங்கள் அவசரப்பட்டு விட்டோம் என்று புரிந்தது.
ஆனால் ஆரம்பித்த பிறகு விட்டு விட முடியாதே... தேவைகள் ஆயிரம் வேறு இருக்கிறது.. என்று எண்ணியவர்கள் தங்களை சமாளித்துக் கொண்டு புன்னகையுடன் மகனை எதிர்க்கொன்டர்கள்.
“வயல் எப்படி ப்பா இருக்கு...” என்று எல்லாவற்றிற்கும் காரணமான வயலில் இருந்தே பேச்சை ஆரம்பித்தார் தந்தை.
“அதுக்கென்ன நல்லா தான் இருக்குப்பா” என்றான்.
“ம்ம் அதுக்கு காரணம் நம்ம கைலாசம் தான் பஞ்சவா. அவனோட நிலம் போலவே நல்லா பார்துக்குறான். அவனுக்கு மண்ணு மேல அம்புட்டு பாசம்” என்றார் சித்தப்பா.
“அதுல ஒன்னும் தப்பு இல்லயே சித்தப்பா. மூணு வருடம் அது அவங்க நிலமா தானே இருந்தது. அதனால அந்த ஈடுபாடு வந்து இருக்கும். வரலன்னா அவன் பயிர்த்தொழிலாளன் இல்லையே...” என்றான் அமைதியாக.
“ம்ம் அது தான்பா நாங்களும் யோசித்தோம். நிலத்தை நல்லா பார்துக்குறான்.. பயிரை தவிர வேறு எதுவும் நடவு செய்ய மாட்டான். நம்ம பெரும் கவலையே அது தானே..” என்றார் தந்தை.
அவர்களை பேசவிட்டான். இடையில் எதுவுமே பேசவில்லை பஞ்சவன். அமைதியாக கேட்டுக் கொண்டு மட்டும் இருந்தான்.
“நிலத்தை தரிசா போட்டா ஒண்ணுத்துக்கும் ஆகாதுன்னு தான் அவனுக்கு குத்தகைக்கு விட்டோம். அவனும் கண்ணும் கருத்துமா அப்படி பார்த்துக்குறான்.. நாம கூட அப்படி பார்த்துக் கிடத்து இல்லை பஞ்சவா” என்று மேலும் சொன்னார்கள்.
அவன் கேட்டுக் கொண்டே இருந்தான்.
“நம்மளை விட நல்லா பார்துக்குறான்” என்று மீண்டும் அழுத்தி சொன்னார்.
“சோ...” என்று சொல்லி அவர்களை கூர்ந்த விழிகளால் பார்த்தான்.
“இல்ல தம்பி நீயும் மும்பை போயிட்ட, அப்பாவுக்கும் முடியாம போயிடுச்சு... எனக்கும் சரி அண்ணனுக்கும் சரி பெருசா இந்த பயிர்த்தொழில் மேல எல்லாம் விருப்பம் இல்லை. சின்னவன் குகனுக்கு அவனது வேலையே சரியா இருக்கு...” என்றார் இழுத்து சித்தப்பா.
“சரி” என்று கேட்டுக் கொண்டான் பொறுமையாக.
“அதனால நாங்க ஒரு முடிவுக்கு வந்து இருக்கோம் தம்பி” என்றார் தந்தை.
“என்ன முடிவு?” நிதானமாகவே கேட்டான் அவன்.
“அது.. அது...” என்று இருவருமே கொஞ்ச தடுமாறினார்கள். அப்பொழுது கூட அவன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவேயில்லை.
எது வருகிறது என்றாலும் அவர்களின் வாய் மொழியாகவே வரட்டும்... என்று எண்ணிக் கொண்டான். தனக்கு தெரிந்தது போல அவன் சிறிதுக்கூட காட்டிக்கொள்ளவில்லை.
“அந்த கைலாசம் உன்கிட்ட எதுவும் சொன்னானா? இல்ல பேசுனானா?” சுத்தி வளைத்தார்கள்.
“பேசுனாரே... அவரோட ஊரு நம்ம ஊருக்கு பக்கம் தான் போல... நல்லா தான் பேசுனாரு...” என்றான் எதுவும் தெரியாதவனாய்.
இப்படி சொல்கிறவனிடம் வேறு என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிப் போனார்கள்.
பஞ்சவன் கோவப்பட்டு கைலாசத்திடம் பேசியது போல தங்களிடமும் கோவப்படுவான் என்று தான் எண்ணினார்கள். ஆனால் பஞ்சவனோ வாயையே திறக்கவில்லை.
“என்ன அண்ணா இவன் இப்படி இருக்கான்” என்று அண்ணனிடம் ஆதங்கப்பட்டார் மருதகாசி.
“எனக்கும் அது தான் புரியலடா. விஷயம் தெரிந்து இங்க வந்து குதிப்பான்னு பார்த்தேன். எதுவும் பேசாம சைலண்ட்டா மேல போனான். சரி இது வேலைக்கு ஆகாதுன்னு நாமலே இழுத்து வச்சி பேசுறோம். அப்பவும் இவன் வாயை திறக்கவே மாட்டேங்குறானே” என்று குமைந்துப் போனார் பெரியவர்.
“பேசாம நாமலே உடைச்சி சொல்லிடலாமா?” என்று கேட்டார் சின்னவர்.
“எனக்கும் அது தான் தோணுதுடா தம்பி” என்று தங்களுக்குள் அவர்கள் பேசிக்கொண்டு இருக்க,
“உங்களுக்குள்ள பேசுறதுக்கு என்னை எதுக்கு இழுத்து பிடிச்சி வச்சு இருக்கீங்க... எனக்கு வேலை இருக்கு... சோ உங்க பேச்சுல என்னால கலந்துக்க முடியாது. நீங்களே பேசிட்டு இருங்க” என்றவன் அங்கு பயந்துக் கொண்டு நின்ற மகராவை ஒரு பார்வை பார்த்தவன்,
“ப்ராஜெக்ட் ஒர்க் ஸ்டார்ட் பண்றியா..? நாளைக்கு நைட் சப்மிட் பண்ணனும். நெஸ்ட் ப்ரைடே உனக்கு கான்பரென்ஸ் இருக்கு. கண்டிப்பா அட்டென் பண்ணியே ஆகணும். அப்போ தான் சில டூல்ஸ் எல்லாம் அக்டிவேட் பண்ண முடியும். அதுக்கு இப்போ உனக்கு கொடுத்ததை டெவலப் பண்ணி ஆகணும்” என்று அவளிடம் ஆபிஸ் விசயங்களை பேசிக்கொண்டே அவளுடன் மேலே போய் விட்டான்.
மிகப்பெரிய பூகம்பத்தை எதிர்பார்த்து பயந்துக் கொண்டு இருந்தவளுக்கு அப்படி எதுவும் நிகழாமல் போக விழிகளை விரித்து பஞ்சவனை பார்த்தாள்.
அவளது கண்களில் இருந்த கேள்வியை கண்டு பெருமூச்சு விட்டவன்,
“இப்போ நான் ரொம்ப எமோஷ்னலா இருக்கேன் மகரா. இப்போ இந்த நிமிடம் நான் வாயை திறந்தா கண்டிப்பா எல்லோரையும் அளவுக்கு அதிகமாவே ஹெர்ட் பண்ணிடுவேன்... அது தான் என்னால முடிஞ்ச வரை தள்ளிப்போட்டு இருக்கேன்” என்றான்.
“ஆனா இது தள்ளிப்போடும் விசயமும் இல்லையேங்க” என்று வருந்தினாள். தனக்காக அவள் வருந்தவதை கண்டு சிலிர்த்தவன் அவளின் தோளில் மிக உரிமையாக கைகளைப் போட்டுக்கொண்டு தனக்கு நேரெதிர் நிற்கவைத்தான்.
அவனது தொடுகையில் அவள் அதிர்ந்துப் பார்க்க அவளது அதிர்வுகளை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாதவன்,
“புரியுது மகரா... ஆனா எனக்கு கொஞ்சமாச்சும் மூச்சு விடணும்... அவங்க முன்னாடி என்னால மூச்சே விட முடியலடி. நான் சின்னப்பிள்ளையில இருந்து பார்த்து வளர்ந்த இடம் அது. நான் இந்த வீட்டுல இருந்ததை விட அந்த மண்ணுல இருந்தது தான் அதிகம்.”
“இன்னைக்கு அதுவே அந்த நிலத்தையே எனக்கு சொந்தமில்லாம பண்ண என்னை பெத்தவங்களே துடியாய் துடிக்கிறதை பார்த்து இங்க வெந்துப் போச்சுடி” என்று அவனின் சட்டையை விலக்கி விட்டுட்டு வெற்று மார்பை காட்டினான்.
அவனது நிலையை புரிந்தவளுக்கு ஏனோ கண்கள் கலங்கியது. அதை நாசுக்காக மறைத்துக் கொண்டாள். ஆனால் அவளது கை அவனின் வெற்று மார்பை தொட்டு தடவி வருடி விட்டது. அவன் கொண்ட காயங்களுக்கு அவள் மருந்துப் போட கண்களை அழுந்த மூடிக் கொண்டான்.
சின்ன ஆறுதல் தான். மடி தாங்கவில்லை. தலை கோதி விடவில்லை. மனதை லேசாகும் ஆறுதல் நிறைந்த மொழிகள் இல்லை. நம்பிக்கையை கொடுக்கும் கண் பார்வையில்லை. ஆனால் அவளின் உரிமையான சின்ன வருடல் அவனுக்கு இது அத்தனையும் கொடுத்து இருந்தது.
அவளின் கை மீது தன் கையை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டவன் சட்டென்று அவளின் தோளில் சாய்ந்துக் கொண்டான்.