பஞ்சவனின் வருடலில் பெண்ணவளின் தேகம் சிலிர்த்து எழ மூச்சை அடக்கி தன் வயிறை உள்ளிழுத்துக் கொண்டாள்.
அதை உணர்ந்தவன் அப்பொழுது தான் தான் செய்துக் கொண்டு இருக்கும் செயலின் வீரியம் புரிந்தது. பட்டென்று கையை எடுத்துக் கொண்டான்.
“ரொம்ப ஹார்டா இருந்தா இனி சொல்லிடு” என்றவன் ஒன்றும் நடக்கதவனாய் மீண்டும் அவளின் இடையில் கையை வைத்து அவளை பிடித்துக் கொண்டான்.
மகராவுக்கு என்ன சொல்வது என்ன செய்வது என்று எதுவும் தோன்றவில்லை. அவன் கையின் பொம்மையாகி அவனருகில் வந்துக் கொண்டு இருந்தாள்.
சற்று பெரிய நிலம் தான். சுற்றிப் பார்த்து விட்டு ஆலமரத்தின் கீழ் அமர கல் மேடை போட்டு இருந்தார்கள்.
அதற்கு கீழே தரையை நன்கு சுத்தம் செய்து புள் பூண்டு எதுவும் இல்லாமல் இருக்க அதில் சாக்கை விரித்துப் போட்டு அவளை அமரவைத்தான்.
தாத்தா கல் மேடையில் அமர்ந்துக் கொண்டார். இவர்கள் வரவும் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர் அவர்களிடம் வந்தார்.
“வாங்க அய்யா” என்று புன்னகையுடன் வரவேற்றவர் அனைவருக்கும் குடிக்க இளநீர் வெட்டி வந்து குடுத்தார்.
மகரா மட்டும் வேணாம் என்று மறுத்து விட்டாள். அவளுக்கு மாங்காயை பறித்து உடைத்து உப்பு தூள் மிளகாய் தூள் போட்டு கொடுத்தான் பஞ்சவன்.
ஆசைக்காக இரண்டு துண்டு எடுத்துக் கொண்டவள் மீதியை அப்படியே வைத்துவிட்டாள்.
“ஏன்?” என்று கேட்டான்.
“இல்ல பால் ஒரு மாதிரி திரிஞ்சி போயிடும். இன்னும் புளிப்பு அதிகம் எடுத்துக்கல” என்றாள்.
சரி என்று தலை அசைத்தவன், இவளுக்கு உண்ண என்ன கொடுப்பது என்று சுற்றிலும் பார்த்தான். அங்கு நிலத்தில் இருந்த நிலகடலையை கண்டு அங்கே சென்றவன் அதை பிடுங்கி, ஆய்ந்து, உடைத்து வேறு அவளுக்கு கொடுக்க அதை உண்டவளுக்கு இதை விட சுவையான பண்டம் வாழ்நாளில் தான் உண்ணவில்லை என்று உணர்ந்துக் கொண்டாள்.
“இது ஓகேயா?” கேட்டுக் கொண்டான். அவள் தலையாட்ட அதன் பிறகே இவன் இளநீரை எடுத்துக் குடித்தான்.
பிறகு அங்கு சோளம் இருக்கக் கண்டு அதை ஒடித்து எடுத்துக் கொண்டு வந்தவன்,
“இதையெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணினேன் தாத்தா இந்த மூணு வருடம்” என்று பெருமூச்சு விட்டு சுள்ளிகளை பொருக்கி நெருப்பு மூட்டி அதில் பதமாக சுட்டு எடுத்தவன் தாத்தாவுக்கும் யுவனுக்கும் கொடுத்தவன் மகராவிடம் கேட்டான்.
“இதையெல்லாம் சாப்பிட்டு இருக்கியா மகரா?”
“இல்ல இதெல்லாம் என்னன்னு கூட எனக்கு தெரியாதுங்க” அவள் சொல்ல சூடு பொறுக்க தன் கையில் சோளத்தை எடுத்து நன்றாக கசக்கி அதன் உமியை எல்லாம் போக்கி, சுட்ட கருப்பு தோளையும் வாயால் ஊதி நீக்கிவிட்டு வெள்ளை வெளேரென இருந்த சோளத்தை அவளுக்கு கொடுத்தான்.
அதை வாங்கி வாயில் போட்டவளுக்கு அதன் சுவை பிடித்து விட,
“ம்ம்ம் சூப்பர் ங்க” என்று சொல்லி அவன் இரு உள்ளங்கையாலும் தேய்த்து தேய்த்து கொடுக்க அவள் நன்றாக சாப்பிட்டாள்.
முழுதாக இரண்டு கருதை உண்டவளுக்கு போதும் என்று தோன்ற,
“போதுங்க... வயிறு புல்” என்றாள். அதனை பிறகே அவன் சாப்பிட ஆரம்பித்தான். அவனின் இந்த குட்டி குட்டி நேசத்தில் மகரா அடியோடு அடித்துச் சென்றாள். ஆனாலும் தன் மனதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவனிடம் மிக இயல்பாய் இருந்தாள்.
மகரா பிள்ளைகளை கவனித்துக் கொண்டு இருக்க தாத்தாவும் பஞ்சவனும் குத்தகை எடுத்து இருந்தவரிடம் பேச ஆரம்பித்தார்கள்.
“இந்த வருடத்தோட குத்தகையை முடிச்சுக்கலாம்” என்று சொல்லி விட அவருக்கு மனமே இல்லை. நன்றாக நிலத்தை கவனித்தால் முப்போகத்தை விட கூடுதலாக இன்னொரு போகமும் விளைவிக்கலாம். அந்த மாதிரியான மண். கூடவே அருகிலே ஏரிக்காரை இருக்க நீர் வளத்துக்கு சொல்லவே வேண்டாம்.
கோடையிலும் கூட வற்றாத கிணற்றுப்பாசனம். அதை விட அவருக்கு மனமே இல்லை.
“நானே வாங்கிக்கிறனே... உங்க மகனுங்க கூட சரின்னு சொல்லிட்டாங்க... உங்களுக்கு பிறகு இந்த நிலத்தை யாரும் எடுத்து செய்ய மாட்டாங்க அய்யா” என்று அவர் தாத்தாவிடம் கேட்க,
“எனக்கு பிறகு என் பேரன் பார்ப்பான்... அதனால இந்த வருடத்தோட முடிச்சுக்கலாம்” உறுதியாக தாத்தா சொல்லி விட அவரின் முகம் சுருண்டு விட்டது.
“ஆனா உங்க மகனுங்க வேற மாதிரி இல்லை சொன்னாங்க” என்று பஞ்சவனை ஒரு பார்வை பார்த்தார்.
“என்ன என் பேரன் இந்த ஊர் பக்கமே வரமாட்டான்னு சொன்னாங்களா? இல்ல...” என்று அவர் காட்டமாக கேட்டார்.
“அய்யா அப்படி சொல்லல.. பெரிய தம்பிக்கு ஐடியில வேலை இருக்கு. அதனால அவரால நிலத்தை எல்லாம் எடுத்து நடத்த முடியாதுன்னு சொல்லி என்கிட்டே அட்வான்ஸ் ரெடி பண்ண சொன்னாங்க.. நானும் என் வீட்டு நிலத்தை அடமானம் வச்சு பணத்தை தயார் செய்துட்டு இருக்கேன். இப்போ வந்து நீங்க இப்படி சொல்றீங்க” என்றார் வேதனையுடன்.
“இல்லப்பா எங்களால நிலத்தை விற்கவே முடியாது. இது ஏங்க பரம்பரை சொத்து... இதை தாரை வார்த்து குடுக்குற அளவுக்கு எங்களுக்கு பெரிய மனசு கிடையாது” தாத்தா உறுதியாக மறுத்து விட்டார்.
“உங்க மகனுங்க பேச்சை கேட்டு இப்போ நிலமும் போச்சு... வீடும் அடமானதுல இருக்குது... என் பொழப்பே போச்சுங்க அய்யா. இதை நம்பி தான் என் மகளுங்களுக்கு கல்யாணம் செய்ய ஏற்பாடு பண்ணலாம்னு இருந்தேன்” என்று அவர் மேலும் சொல்ல தாத்தா கொஞ்சம் கூட இளகவே இல்லை.
“என்னால இதுல இருந்து பின்வாங்க முடியாது அய்யா... என் முதல் மகளுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்கேன். இரண்டாவது மகளுக்கு படிப்புக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன். இந்த நிலம் எனக்கு வந்தே ஆகணும்” என்று அவர் பேச
பஞ்சவனுக்கோ அந்த குத்தகைக்காரர் பேச பேச முகம் ஜிவு ஜிவு என்று வந்தது. அதை பார்த்த மகராவுக்கு கவலையாகிப் போனது.
“ஏன் இவ்வளவு கோவம் வருது. கொஞ்சம் பொறுமையா ஹேண்டில் பண்ணலாமே” என்று எண்ணிக் கொண்டாள்.
ஆனால் பரம்பரை பரம்பரையா வந்த நிலம் கை விட்டு போக இருக்கும் நிலையில் எங்கிருந்து நிதானமாக கையாள முடியும் என்று அவனுக்கு சாதகமாக மனம் தவித்தது.
குத்தகைக்காரர் கேஸ் போடுவேன் என்று மிரட்டலாக சொல்ல, அவரை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவன்,
“உன்னால என்ன செய்ய முடியுமோ அதை செய்துக்கோ. உன்னை எப்படி கையாள்வதுன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். உனக்கு யாரு இந்த தைரியம் குடுத்தாங்கன்னும் எனக்கு ரொம்ப நல்லா தெரியும். அவங்க கிட்ட சொல்லு இந்த பஞ்சவன் இருக்கிற வரை அவங்க நினைக்கிறது எதுவும் நடக்கதுன்னு” என்று சொன்னவனின் முகம் ஆத்திரத்தில் சிவந்துப் போனது.
அவன் கோவப்படும் பொழுது நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொண்டு அப்பட்டமாய் வெளியே தெரிய பயந்துப் போனாள் மகரா.
வேகமாய் அவனது கையை பற்றிக் கொண்டாள். அவள் தொடவும் கோவத்தை தணித்துக் கொண்டவன் “என்னமா” என்று கேட்டான்.
“இல்ல ரொம்ப கோவமா இருந்தீங்க. நரம்பு எல்லாம் புடைத்துக் கொண்டு வெளியே வரும் போல இருந்தது அது தான்” என்றாள் மென்மையான குரலில்.
“அது அப்படி தான்.. ரொம்ப எமோஷ்னல் ஆகும் பொழுது அப்படி ஆகும்.. வேற ஒன்னும் இல்லை. நீ பயப்படாத” என்றவன்,
“இந்த வருடம் குத்தகை முடித்து நிலத்தை என் கையில ஒப்படைக்கணும். அப்படி இல்லன்னா வர்ற எதிர்விளைவுகளை சந்திக்க நீங்க தயார் ஆகிக்கோங்க” என்று சொல்லி விட்டு எல்லோரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான்.
வரும் பொழுதும் அவளின் இடுப்பை வளைத்து பிடித்துக் கொண்டு தான் வந்தான்.
வருகிற வழியில் ஒரு சின்ன செருப்புக் கடை இருக்க இருவரது விழிகளும் அந்த கடையில் படிந்தது. ஆனால் கால்கள் அந்த கடையை தாண்டி பயணித்தது.
இருவரின் மனத்திலும் அந்த நேரம் அப்படி ஒரு நிம்மதி எழுந்தது.
மகரா அவனை அழைத்து அந்த கடையை காட்டி இருந்தாலோ, அல்லது பஞ்சவன் அவளை அழைத்து அந்த கடையை காட்டி இருந்தாலோ இருவரின் நெஞ்சமும் உறுதியாக உடைந்து போய் இருக்கும். ஆனால் இருவரும் அதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் அதை கடந்து விட அப்பொழுது தான் இருவருக்குமே அந்த தீண்டலும் நெருக்கமும் வேண்டும் என்பதை உணர்ந்தார்கள்.
அந்த செருப்பு கடையை தாண்டும் வரையிலும் இருவரிடமுமே ஒரு படபடப்பு தான். ஆனால் அதை தாண்டிய பிறகு இருவரின் மனத்திலும் ஒரே குளுகுளு தான்.
அதன் பிறகு இருவரின் மனமும் இன்னும் கொஞ்சம் நெருங்கியது அன்பால். ஆனால் அந்த நெருக்கமும் இழையோடிய மெல்லிய தொடுகையும் வீடு வந்த பிறகு முற்றிலும் குழைந்துப் போனது.
பஞ்சவனும் மகராவும் இருவருமே ஒருவரின் அருகாமையை மற்றவர் விரும்ப ஆரம்பித்து இருந்தார்கள் வயலுக்கு சென்ற நொடியில் இருந்து. மெல்லிய இசை மயக்கமாய் இருவரிடையே ஒரு மெல்லிய நூலிழை நேயம் பரவி இருந்தது.
அதை உணர்ந்தவர்களுக்கு நெஞ்சோரம் பூஞ்சாரல் வீசியது போல தோன்றியது. ஆனால் வீட்டுக்கு வந்த பிறகு வீட்டில் இருந்த மனிதர்களை கண்டு பஞ்சவனுக்கு பின்னுக்கு போன கோவம் மீண்டும் துளிர்த்தது.
கூடத்தில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு ரொம்பவும் வசதியாக எந்த கவலையும் இல்லாமல் இருந்த தந்தை மற்றும் சிறிய தந்தையையும் பார்த்தவனுக்கு கட்டுக்கடங்காமல் அவ்வளவு கோவம் வந்தது.
எங்கே சொற்களை விட்டு விடுவமோ என்று நிதானித்தவன் வேகமாய் மாடி ஏறினான் யாரையும் ஏறிட்டுப் பார்க்காமல்.
ஆனால் தணிக்காசலமோ வேலியில் போன ஓணானை தூக்கி மடியில் விட்டுக் கொண்ட கதையாகிப் போனார்.
“என்ன தம்பி வயலுக்கு போன போல?” என்று ஆரம்பித்தார்.
படியில் ஏறியவன் ஒரு கணம் திரும்பி தன் தந்தையை பார்த்து தலையை மட்டும் ஆட்டிவிட்டு மீண்டும் மேலே போக,
“இங்க வந்து உட்காரு பஞ்சாவா... பேசிட்டு இருக்கலாம். நீ இப்போ எல்லாம் முன்ன மாதிரியே இருக்க மாட்டிக்கிறே” என்றார் சித்தப்பா.
கண்களை மூடி திறந்து தன் கோவத்தை கட்டுப் படுத்திக் கொள்ள முயன்ற கணவனை பார்த்து இரக்கம் சுரந்தது மகராவுக்கு.
என்னவோ அவனை கோவப்படுத்த தான் இவர்கள் பேச்சை ஆரம்பித்தது போல உணர்ந்தாள் மகரா. அவனது கோவத்தை இப்பொழுது தானே நேரில் பார்த்து இருக்கிறாள். அதனால் எங்கே அவன் மீண்டும் கோவப்பட்டு விடுவானோ என்று பயந்துப் போனாள்.
அவன் கோவப்படும் பொழுது புடைத்து எழுந்த நரம்புகளை கண்டு உள்ளுக்குள் பேரச்சம் எழுந்தது அவளுக்கு. அந்த கோவத்தை அப்படியே கட்டாமல் தனக்குள் போட்டு புதைத்துக் கொள்ள தன்னை அடக்க அவன் பட்ட சிரமம் அதை அவள் பார்த்துக் கொண்டு தானே இருந்தாள்.
“இவ்வளவு கோவம் உடம்புக்கு ஆகாதே” என்று கவலையும் கொண்டாள் அவன் மீது.
இதோ இப்பொழுது கூட அவனது கோவத்தை தூண்டித் தான் செய்ய போகிறார்கள் என்று அவளுக்கு தெளிவாக தெரிந்தது. பெரியவர்களின் பார்வை அவளை தொட்டு சென்றதிலே இவளுக்கு இன்னும் பயம் வந்தது.
‘என்னை வச்சு எதுவும் அவரை காயப்படுத்துவாங்களோ’ கலங்கிப் போனாள்.