“அச்சோ எவ்வளவு நேரம் தூங்கிட்டேன்...” என்று பதறியவள் அவசர அவசரமாக தன்னை சுத்தம் செய்துக் கொண்டு பிள்ளையை கவனித்து குளித்து கீழே வர அவளை அமரவைத்து உணவு கொடுத்தான் பஞ்சவன்.
அவள் திகைத்துப் பார்த்து அவனை மறுக்க,
“நீ என் கூட இருக்கிற வரை உனக்கு நான் செய்வேன். என்னை மறுக்கணும்னு நினைக்காத தோத்து போயிடுவ மகரா. அதோட எல்லாத்தையும் மறுக்கணும்னு அவசியம் இல்லை. சிலதை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் வாழ்க்கை” என்றான் நிதானமாய். அதில் அவள் விக்கித்துப் போனாள்.
“என்ன பார்வை ஒழுங்கா சாப்பிடு” என்றவன் அவளை சாப்பிட விட்டுட்டு பழச்சாறு போட போய் விட்டான்.
பஞ்சவனின் நடவடிக்கையை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த வீட்டு பெண்களுக்கு பத்திக் கொண்டு வந்தது. நேற்று இரவு அவர்களின் கணவன்மார்கள் கவனித்த விதம் அப்படி.
“ஏன்டி எவ்வளவு கொழுப்பு இருந்தா நீ இந்த காரியம் செய்து இருப்ப. இவ்வளவு நாள் ராசாவா இருந்தேன். ஆனா இப்போ நான் பெத்துப் போட்டவன் என்னையே நடு வீட்டுல நிக்க வச்சு கேள்வி கேட்டு செலவை இனி நீயே பார்த்துக்கோன்னு சொல்லி தள்ளி வைக்கிறான். இதுக்கு எல்லாம் நீ தானேடி காரணம்” என்று கேட்டு மனைவியை அடி வெளுத்து விட்டார் தனிகாசலாம். அதே போல மருதகாசியும் தன் மனைவியை வெளுவெளுவேன்று வெளுத்து விட்டார்.
“நாலு நாள் பட்டினியா கிடங்க அப்போ தான் புத்தி வரும்” என்று அப்பா சித்தப்பா இருவரும் அவர்களை கொஞ்சம் கண்டு கொள்ளாமல் அவர்களின் வயிற்று பாட்டை வெளியே பார்த்துக் கொள்ள,
குகனிடம் போய் நின்றார்கள்.
“நீங்க பண்ணின வேலைக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். வீட்டுல என்ன இருக்கோ அதை வைத்து சாப்பிடுங்க” என்று அவனும் காலை வாரிவிட்டான்.
“டேய் அண்ணா நான் என்னடா பண்ணினேன். எனக்கு ஏதாவது குடுத்துட்டு போடா” என்று சொல்லி அவனிடம் ஒரு தொகையை வாங்கிக்கொண்டு வெளியே கிளம்பி விட்டாள் ரூபா.
யுவன் தாத்தா பாட்டிக்கும் சேர்த்து சமையல் செய்து இருந்தான். அதனால் கவிதாவுக்கும் வனிதாவுக்கும் மட்டும் தான் எதுவும் இல்லாமல் போனது. அன்றாடம் மார்கெட்டுக்கு போய் பிரெஷாக வாங்கி சமைத்தவர்கள் இன்று கையில் காசு இல்லாமல் போக இருந்ததை வைத்து சாப்பிட வேண்டிய நிலையில் இருந்தார்கள்.
அவர்களின் நிலையை பார்த்தா மகரா பஞ்சவனிடம் பேச வர,
“அவங்களை பற்றி பேசுறதா இருந்தா என் கிட்ட பேசாத மகரா” என்று அவன் உறுதியாக மறுத்து விட அவளால் அதற்கு பிறகு அவர்களை பற்றி பேச முடியவில்லை.
அதோடு அவள் ப்ராஜெக்ட் ஒர்க் இரண்டு நாள் செய்யாமல் போக அது தலைக்கு மேல் குவிந்து இருக்க அதை செய்ய ஆரம்பித்தாள்.
“ஆமா இன்னும் எத்தனை நாள் நாம இங்க இருக்குறது... இந்த வாரம் வெள்ளிக்கிழமை மீட்டிங் இருக்குங்க” என்றாள்.
“ம்ம் போகலாம்” என்றானே தவிர எப்பொழுது என்று சொல்லவில்லை.
“வொர்க் எப்போ முடியும்?” கேட்டான்.
“இப்போ தான் ஆரம்பித்து இருக்கேன்” என்றாள்.
“ரைட் அப்போ உச்சி பொழுது வரை வேலை பாரு. பிறகு ஒரு இடத்துக்கு போகலாம்” என்றான். எங்க ஏது என்று எதுவும் கேட்காமல் தலையை ஆட்டினாள்.
பசியாற மட்டுமே பிள்ளையை அவளிடம் விட்டான் பஞ்சவன். மற்ற நேரம் எல்லாம் அவனே பார்த்துக் கொண்டான். போதாதற்கு தாத்தாவும் அவனது அறைக்கே வந்து விட பிள்ளைகள் அவர்களுடனே இருந்தார்கள்.
இவளை எந்த தொந்தரவும் செய்ய விடவில்லை. மகள் தூங்கி விட மகன் மட்டும் விளையாடிக் கொண்டு இருந்தான். அவனது தூக்கம் ஒரு நாளுக்கு மூன்று நேரம் என்று இருந்தது. அதனால் அவன் அதிகம் தூங்க மாட்டான். காலை ஒன்பது மணிக்கு தூங்கி எழுந்தால் அடுத்து மூன்று மணிக்கு தான் தூங்குவான். அதே போல மாலை ஏழு இல்லை எட்டு மணிக்கு தான் தூங்குவான். ஆனால் மகள் அப்படி இல்லை நாலு நேரம் இரண்டு இரண்டு மணி நேரமாக தூங்குவாள்.
பஞ்சவனுக்கு கோடிங் வேலை எல்லாம் இருக்காது. எல்லா வேலையும் முடித்து அவனிடம் வாரத்தில் ஒரு நாள் சப்மிட் பண்ணும் பொழுது தான் வேலை இருக்கும். இடைப்பட்ட நாளில் அவர்களுக்கு எதாவது சந்தேகம் என்றால் அதை தீர்த்து வைப்பான். அதோடு அவனுக்கு பிளானிங், வேற ஒரு ப்ராஜெக்ட்டுக்கு கைட் பண்ண வேண்டி இருக்கும். மெயில் பார்த்து செக் பண்ணிவிட்டு அவன் வேலையை தொடங்குவான்.
தாத்தாவும் யுவனும் வந்து விட அவனும் ஒரு லேப்டாப்பை வைத்துக் கொண்டு மகராவின் அருகில் வந்து அமர்ந்து விட்டான்.
இயல்பான அவனது நெருக்கம் அவளை லேசாக தடுமாற வைத்தது. ஆனாலும் அலட்டிக் கொள்ளவில்லை.
“உன் பார்ட்ட எனக்கும் அனுப்பி வை” என்றான் அவளுக்கு உதவி செய்யும் நோக்குடன்.
அவள் திகைத்துப் போய் பார்க்க,
“இந்த ஒரு நேரம் மட்டும் தான். மத்த நேரம் நீயே பார்த்துக்கோ” என்றான். அவன் உதவி செய்ய முன் வந்த உடன் அவளும் அனுப்பி விட அதை வாங்கிப் பார்த்தவன்,
“எவ்வளவு தூரம் செய்து இருக்க” என்று கேட்டவன் அவளின் லேப்டாப்புக்கே வந்து விட்டான்.
இருவரும் ஒரே லேப்டாப்பில் அமர்ந்து வேலை பார்க்க இருவரது கையும் அடிக்கடி தொட்டுக் கொண்டது. இருவரின் தோள்களும் உரசிக் கொள்ள அவனின் ஆண் வாடை அவளின் முகத்தில் மோத மனம் அச்சத்தில் அடித்துக் கொண்டது.
கவனம் சிதற இதழ்களை கடித்தாள். அவனின் வெற்று மார்பில் இவளின் பார்வை அடிக்கடி பதிய தன்னையே நொந்துக் கொண்டாள்.
“மேல ஒரு துண்டையாவது போடலாம் இல்ல” என்று எண்ணிக்கொண்டாள். இவ்வளவு நெருக்கமாக ஒரு ஆணின் இருப்பு அவளை படபடக்கச் செய்தது.
“மகரா இந்த இடத்துல இந்த கோடிங்கை பேஸ்ட் பண்ணு...” என்று சொல்லி அவளின் விரல்களை பிடித்தே அதை செய்யவைக்க மூச்சடைத்துக் கொண்டு வந்தது அவளுக்கு.
அதிர்ந்து போய் அவனை பார்த்தாள். கிட்டத்தட்ட அவளின் பின்னாடி அவளை மொத்தமாக அணைத்தபடி அமர்ந்து இருந்தான் பஞ்சவன். முன்பு பக்கவாட்டில் அமர்ந்து இருந்தவன் இப்பொழுது பேஸ்ட் செய்வதற்காக அவளின் பின்னாடி வந்து இரு கால்களையும் நீட்டி அவளை கால்களுக்கு நடுவே அமரவைத்து இருந்தான்.
அவனது வெற்று மார்பு அவளின் முதுகில் படர்ந்து இருந்தது.
“கவனம் எங்கடி இருக்கு?” என்று கேட்டவன் லேப்டாப்பில் கவனமாக இருந்தான். ஆனால் இவள் தான் பெரிதும் தடுமாறினாள். அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை போல...
அப்படி கேட்ட உடன் தெளிந்துக் கொண்டவள் தன்னை நினைத்தே குன்றிப் போனாள். ஆனால் பஞ்சவன் தன் நிலையில் இருந்து கொஞ்சம் கூட விலகவே இல்லை. தாத்தா யுவன் இருக்கிறார்கள் என்று கூட இல்லாமல் அவளின் பின்னோடு இருந்தபடி வேலை பார்த்தான். இவள் தான் தவித்துப் போனாள்.
அந்த நேரம் பிள்ளை அழ, “யுவா பேபியை கொண்டு வந்து குடு” என்றவன் பார்வையிலே தாத்தாவையும் யுவனையும் போக சொல்லி விட்டான். ஆனால் அவன் நகரவில்லை.
“இல்ல நானே எழுந்துக்குறேன்” என்று குழந்தையோடு அவள் எழப் போக அவளின் இரு தோளிலும் கைவைத்து அமரவைத்தவன் “இப்படி இருந்தே...” என்று அவன் சொல்ல விழிபிதுங்கிப் போனாள் மகரா.
“சார்..” என்று அவள் அதிர, கண் மூடி திறந்தவன்,
“நான் உன்னோட புருசன்டி” என்றான் அழுத்தமாய்.
“சோ வாட்?” என்றாள் படபடப்புடன்.
“நேத்திக்கே பார்த்துட்டேன்” என்றான். அவனது பார்வை மொத்தமும் அவளின் முக சிவப்பில் நிலை கொண்டு இருந்தது.
அவன் இப்படி வெளிப்படையாக சொன்னதிலும் பார்த்ததிலும் இன்னும் தவித்துப் போனவள் “ப்ளீஸ்” என்றாள் மிக சங்கடமாக.
நேற்றைக்கு இருந்த சூழல் வேற... ஆனா இன்னைக்கு அப்படி இல்லையே...!
“நான் உன்னை என் பொண்டாட்டியா தான் பார்க்கிறேன்” என்றான் முழு பொருளுடனும் மனதுடனும். அவன் அப்படி சொல்லவும் விக்கித்து நெக்குருகிப் போனவள் விழிகள் கலங்க அவனை திரும்பி பார்த்தாள்.
அவளின் பார்வையை தயங்காமல் எதிர்க் கொண்டவன், அவள் கழுத்தில் இருந்த தாலியை வெளியே எடுத்துப் போட்டு அதை தொட்டு கையில் தூக்கியவன்,
“நான் கட்டுன தாலி உன் கழுத்துல இருக்கிறவரை நீ இந்த பஞ்சவனோட உரிமை... இந்த பஞ்சவனோட மனைவி” என்றான் அழுத்தமாக. அவனது அந்த அழுத்தத்தில் அவளது மனதில் இதுநாள் வரை இருந்த அழுத்தம் எல்லாம் காணாமல் போனது போல இருந்தது. அவளுக்காகவே தோள் சாய ஒரு தோள். அவளை எங்கும் விட்டுக் கொடுக்க நினைக்காத உறவு... உள்ளம் சிலிர்த்தது. ஆனாலும் அவளால் அவனிடம் முழுமையாக ஒன்ற முடியவில்லை.
“அப்போ உங்க தாலி என் கழுத்துல இருக்கலன்னா...?” ஏனோ இந்த கேள்வியை கேட்க பிடிக்கவில்லை தான். ஆனால் கேட்டு தெளிவு பண்ணிக்கொள்ள வேண்டி இருந்தது. தாலியினால் மட்டும் தான் இந்த பந்தம் நிலைத்து இருக்குமா என்ற எண்ணம் அவளை கலங்க வைத்தது. ஒரு வேலை தாலி இல்லாமல் போனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
கேள்வி ரொம்ப எளிது தான். ஆனால் அதில் அவள் மனம் பட்டவர்த்தனமாக தெரிந்துப்போனது. பெருமூச்சு விட்ட பஞ்சவன் அவளை பின்னிருந்து இன்னும் நெருங்கி அமர்ந்தவன் அவளின் மடியில் இருந்த பிள்ளையின் முகத்தை நீவி விட்டுக் கொண்டே மகராவின் தோளில் மோவாயை பதித்து,
“இந்த கேள்விக்கு நான் என்ன பதில் சொன்னா உன் உள் மன தவிப்பு அடங்கும் மகரா?” என்று அவளிடமே கேட்டான். அவன் அப்படி கேட்கவும் பட்டென்று கோவம் வந்து விட, தன்னை சுற்றி போட்டு இருந்த கையை எடுத்து விட்டவள்,
“எனக்கு எந்த பதிலும் வேணாம். வெளிய போங்க முதல்ல” என்று அவனை விட்டு விலகி பிள்ளையோடு படுக்கையில் சென்று அமர்ந்துக் கொண்டாள். ஏனோ கண்கள் எல்லாம் கலங்கிக் கொண்டு வந்தது.
என்னவோ நான் மட்டும் தான் இவனோட வாழ ஆசை படுற மாதிரி... இவனுக்கு ஆசை இல்லாத மாதிரி பேசுறானே... என்று மனம் சுருண்டுப் போனது.
“இதென்ன பேசிட்டு இருக்கும் பொழுதே பாதியில எழுந்து போறது” என்றவனின் குரலில் கடுப்பு ஏறியது. அதை கண்டுக் கொள்ளாமல்,
“ப்ளீஸ் வெளிய போங்க” என்றாள்.
“முடியாதுடி” என்றான் வீம்பாய்.
“அப்போ நான் போறேன்” என்றவள் வெளியே போக பார்க்க அவளின் கையை இழுத்து நிறுத்தியவன், தன் நெஞ்சுக்கு நேராக அவளை நிறுத்தி அவளின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவன்,
“உன் கழுத்துல என் தாலி இல்லன்னா நான் செத்துட்டேன்னு பொருள்” என்றான் அழுத்தமாய். அவன் சொன்ன கூற்றில் அதிர்ந்துப் போனவள் பட்டேன்று அவள் விழிகளில் நீர் திரண்டு விட்டது.
“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க?” என்று வேதனை பட்டாள். அவளால் அவனை இழக்க முடியாது. கானல் நீராய் தாகம் தீர்க்க பார்த்தவளுக்கு இவ்வளவு நாளும் ஏமாற்றம் தான். பஞ்சவனோ பஞ்சத்துக்கு வந்த அமுதமழை.
அவனை எப்படி அவளால் இழக்க முடியும். அவனது பேச்சில் அவளுக்கு கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது.
“நீ கேட்டதுக்கான பதில். அப்போ நீயே உன் கேள்விக்கான பதிலை முடிவு பண்ணிக்கோ” என்றவன் வெளியே போய் விட்டான்.
ஒரு கணம் குழம்பி போனவள் அவன் ஒட்டு மொத்தமாக தன்னை இழுத்துக் கொண்டான் என்பது புரிய இதழ்களில் மெல்லிய மலர்வு. நேற்று வரை கூட இந்த பந்தம் பெரிதாக அவளுக்கு தோன்றவில்லை. ஏற்கனவே கட்டிய தாலிக்கே மதிப்பில்லை. இது மட்டும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தான் எண்ணி இருந்தாள்.
ஆனால் நேற்று அவன் தனக்காக ஒரு நேர சோறுக்காக ஒட்டு மொத்த குடும்பத்தையும் நிற்க வைத்து கேள்வி கேட்டது அவனின் மீது ஒரு ஈர்ப்பை அவளுக்கு வர வைத்து இருந்தது.
அது காதல் என்றோ காமம் என்றோ அவளால் பெயரிட முடியவில்லை. ஆனால் காலம் முழுவதும் அவனுடன் பயணிக்க அவளுக்கு ஆசை வந்து இருந்தது.
தோதாக தோள் சாய அவளுக்கு என்றே ஒரு துணை. அது பஞ்சவனை தவிர வேறு யாராலும் தரமுடியாது என்று நன்கு விளங்கி இருந்தது. அதனாலே அவனிடம் அந்த கேள்வியை கேட்டாள்.
தாலி ஒரு பந்தம் தான். ஆனால் அது மட்டுமே இருவரையும் ஒன்று சேர்க்கும் முடிச்சு கிடையாதே. தேவைக்கு தானே அவன் அதை அவளின் கழுத்தில் கட்டியது. தேவை முடிந்த பிறகு அதை கழட்டி கூட வைத்து விடலாம்.
ஆனால் இருவர் மனதிலும் இருக்கும் ஈர்ப்பு தானே இருவரையும் கட்டி வைக்கும் பிணைப்பாய் இருக்கும் அதை அவனிடம் உறுதி செய்துக் கொள்ளவே இந்த கேள்வியை கேட்டாள் மகரா.
ஆனால் அவனோ உன் கழுத்தில் இருந்து தாலி இறங்கனால் தான் நான் உன்னை விட்டு இல்லாமல் போவேன் என்று தாலி அவளின் கழுத்தில் இருந்து இறங்கவே செய்யாது. அந்த உறுதியை உனக்கு நான் தருகிறேன் என்று அல்லவா காட்டி விட்டான்.
பெருமூச்சு விட்டவள் பிள்ளையை கவனித்து விட்டு வேலையை பார்க்க அமர,
“வந்து பார்த்துக்கலாம்... இப்போ வா” என்று இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு அவளோடு தாத்தா யுவன் எல்லோரும் கிளம்பினார்கள் வயலுக்கு.