தாத்தாவை ஒரு எட்டு எட்டிப் பார்த்தான். முழித்து இருந்தார்.
“வெளில வரீங்களா தாத்தா.. இல்ல அறையிலையே இருக்கீங்களா?” என்று கேட்டான்.
“இங்கயே இருக்கிறது ஒரு மாதிரியா இருக்குப்பா... கூடத்துக்கு வரேன்” என்று அவனோடு வந்து அமர்ந்துக் கொண்டார்.
மெல்ல இந்த மூன்று வருடத்தில் நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் அவனுக்கு சொல்ல பெருமூச்சு விட்டான்.
“பார்த்து கவனமா இரு பஞ்சவா...” என்றார் வேதனையுடன்.
“இவனுங்களை கண்கொத்தி பாம்பா பார்த்து பார்த்து தான் எனக்கு இவ்வளவு நோயும் வருது. வயசுக்கேத்த கூறே கிடையாது. தலைமுறை தலைமுறையா வர்ற நிலத்தை போய் விக்கிறேன்னு நிக்கிறானுங்க. மனசே ஆறல பஞ்சவா” என்றார் வேதனையுடன். அவரின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டவன்,
“நான் பார்த்துக்குறேன் தாத்தா... நீங்க கவலை படாதீங்க..” ஆறுதல் கொடுத்தவனுக்கு மனமே ஆறவில்லை. மனம் உளைக்கலம் போல கொதித்துக் கொண்டு இருந்தது.
பட்டு பட்டு என்று கேட்டு விட அவ்வளவு ஆவேசம் வந்தது. ஆனால் எதுவும் பேசாமல் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு கூடத்தில் அமர்ந்து இருந்தான்.
எல்லோரும் உண்டு விட்டு கூடத்துக்கு வர எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தவன்,
“இத்தனை வருடமா இந்த குடும்பத்துல யார் யார் சம்பாதிக்கறீங்க... இந்த குடும்ப செலவுக்கு யாரெல்லாம் காசு குடுத்துட்டு இருக்கீங்க? இந்த குடும்பத்துக்காக நீங்க எல்லோரும் எவ்வளவு செலவு பண்ணி இருக்கீங்கன்னு சொல்லுங்க” என்று எடுத்த உடனே கேள்வி கணைகளை வீசினான்.
அவன் அப்படி கேட்கவும் தந்தைமார் இருவருக்கும் கெதுக்கேன்று ஆனது.
“என்ன தம்பி புதுசா கேள்வி கேட்கிற...? வரவு செலவு கணக்கு எல்லாம் நீதானே பார்க்கிற... உனக்கு தெரியாதா?” என்று தணிகாசலம் சற்று பணிவாகவே கேட்டார்.
“அது வேற இது தனி கதை. அது அப்படியே இருக்கட்டும். இப்போ நான் என்ன கேள்வி கேட்கிறானோ அதுக்கு மட்டும் சரியா பதில் சொன்னா போதும்..” என்று அவன் அழுத்தமாக சொல்ல குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வெலவெலத்துப் போனார்கள் அவன் கொடுத்த அழுத்தத்தில்.
“என்ன தம்பி இது.. வயது வித்யாசம் இல்லாம இப்படி நடு வீட்டுல பெரியவங்களை உட்கார வச்சு கேள்வி கேட்டுட்டு இருக்க... அவங்க எல்லாம் யாரு சாமி.. உன்னை பெத்தவங்க தானே” என்று பாட்டி பிரளயம் வருவதை தடுக்க பார்க்க மாரியப்பன் திரும்பி தன் மனைவியை ஒரு பார்வை பார்த்தார். அந்த பார்வையில் இருந்த தகிப்பில் வாயை மூடிக் கொண்டார் விசாலாட்சி.
ஆனாலும் அவருக்கு மனம் கேட்கவில்லை. பேரன் பேத்தி எடுத்த பிறகும் கூட தன் மகன்களை கேள்வி கேட்கும் நிலைக்கு வைத்து இருக்கும் பேரனை கண்டு கொஞ்சம் ஆத்தாமை வந்தது தான். ஆனால் பேரன் பேத்தி எடுத்த பிறகும் கூட பொறுப்பு வராமல் தற்குறி தனமாக சுத்திக் கொண்டு இருக்கும் தன் மகன்களை என்ன தான் செய்வது என்று அமைதியாகிப் போனார்.
“சொல்லுங்க ப்பா.. நீங்களும் சொல்லுங்க சித்தப்பா. யார் யார் இந்த வீட்டுல சம்பாதிக்கிறீங்க... சம்பாதிக்கிற பணத்துல இந்த வீட்டு செலவுக்குன்னு யார் எல்லாம் எவ்வளவு பணம் குடுக்குறீங்கன்னு சொல்லுங்க? நீயும் சொல்லு குகன். நீயும் தானே வேலைக்கு போற.. அதனால நீயும் தாரளாமா சொல்லலாம்” என்ற பஞ்சவனின் கூற்றில் குகன் மிரண்டுப் போனான்.
ஏனெனில் வேலைக்கு போகிறான் தான். ஆனால் வீட்டு செலவுக்கு என்று இன்றுவரை ஒற்றை பைசா கூட கொடுத்தது இல்லை.
“என்னண்ணா திடிர்னு” என்று அவன் திணற,
“திடிர்னு தானே இந்த வீட்டுல எல்லாம் நடக்குது குகன். அதனால தான் இந்த கேள்வி கேட்கிறேன். கேட்கிற நிலைக்கு கொண்டு வந்துட்டாங்க” என்று அவன் அழுத்தமாக தாய்மார்களை பார்த்துக் கொண்டே சொன்னான்.
அவனது பார்வையில் இரு தாய்மார்களுக்கும் அடிவயிற்றில் பய பந்து உருண்டது. பார்வையாலே அவனிடம் கெஞ்சினார்கள் இருவரும். அவன் யாரையும் சட்டை செய்யவில்லை.
“யாருப்பா உனக்கு இந்த நிலையை கொண்டு வந்ததுன்னு சொல்லு. நான் கேட்கிறேன்” என்று அவனின் தந்தை கோவத்துடன் கேட்க,
“ப்பா அதை எல்லாம் நான் பார்த்துக்குறேன். இப்போ நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க’” என்று அவன் அழுத்தம் கொடுக்க, அதில் பெரிய மூச்சை எடுத்து விட்டவர்,
“நான் சித்தப்பா குகன் மூவரும் வேலைக்கு போய் சம்பாதிக்கிறோம். ஆனா வீட்டு செலவுக்குன்னு நாங்க யாரும் இன்னவரையிலும் காசு கொடுத்தது இல்லை. அதா எல்லாம் எங்க செலவுக்கு தான் நாங்க வச்சுக்கிட்டோம். உன்... உன் சம்பாத்தியத்துலயும் நீயும் தாத்தாவும் வயல்ல பாடுபட்டு கொண்டு வந்த பணத்திளையும் தான் இந்த குடும்பம் நடக்குது... இத்தனை வருடமாகவும் உன் பணத்துல தான் நாங்க எல்லோரும் சாப்பிட்டு, செலவும் செய்துக் கொண்டு இருக்கிறோம்” என்றார். அதை சொல்லும் பொழுதே அவமானம் பிடுங்கி தின்றது அவரை.
பின்ன வளர்ந்து ஆளாகி நின்ற மகன் தான் குடும்பத்தை தாங்கி நிற்கிறான். தள்ளாடும் வயதில் கூட வயலுக்கு சென்று பேரனோடு தந்தையும் சேர்ந்து வேலை செய்து உழைத்து இந்த வீட்டுக்கு கொடுக்கிறார். ஆனால் இந்த வீட்டின் தலைமகனாக உரிமை பட்ட தாங்கள் ஊதாரி தனமாக குடும்பத்தை பார்க்காமல் விருப்பம் போல செலவு செய்து ராசா போல அல்லவா இவ்வளவு நாளும் வாழ்ந்து வந்துக் கொண்டு இருக்கிறோம் என்ற உண்மை சுட அந்த அவமானம் அவரை தலை நிமிர விடவில்லை.
சித்தப்பாவும் தலை குனிந்து நின்றார். அவரும் அண்ணன் காட்டிய வழியில் அல்லவா போய்க்கொண்டு இருக்கிறார்.
குகன் அந்த மாதிரி இல்லை என்றாலும் தன் வருமானத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் சுயநலமாய் இவ்வளவு காலமும் சேர்த்து வைத்துக் கொண்டு இருக்கிறான்.
அவன் எண்ணினால் குடும்ப செலவுக்கு அவனால் என்ன இயலுமோ அதை கொடுக்கலாம். ஆனால் மனம் வரலையே...!
தூக்கம் வராமல் வெளியே வந்தவள் அனைவரும் கூடத்தில் கூடி இருப்பதை பார்த்து குடும்ப விவகாரம் போல என்று எண்ணி யுகன் இருந்த அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
அங்கே பிள்ளைகளோடு அவன் விளையாடிக் கொண்டு இருக்க அவனிடம் இருந்து பஞ்சவனின் மகளை வாங்கிக் கொண்டாள்.
“அடம் ஏதும் செய்தாங்களா அண்ணா...” கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை மகரா..” என்றான்.
“சரி பாப்பாவை நான் தூக்கிட்டு போகட்டுமா?” கேட்டு விட்டு மாடி படி ஏறினாள்.
அப்பொழுது,
“இனி இந்த குடும்பத்துக்கான செலவை நான் பார்க்க மாட்டேன். என் கடமை தாத்தா பாட்டிக்கு நான் பார்க்கணும். அதனால அவங்க செலவை மட்டும் தான் நான் பார்ப்பேன். மத்த யாருக்கும் பார்க்கணும்னு எனக்கு அவசியம் இல்லை. அதனால இந்த மாதத்தில் இருந்து உங்க செலவை நீங்களே பார்த்துக்கோங்க” என்று எல்லோரின் தலையிலும் இடியை இறக்கினான் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல். அதோடு அவன் பொண்டாட்டி என்று அவளை குறிப்பிட்டு சொல்ல அவளின் காலின் கீழ் நிலம் நழுவியது...
“ஏன்.. ஏன்... பஞ்சவா... ஏன் திடிர்னு இந்த முடிவு? இப்போ அப்படி என்ன ஆச்சுன்னு இந்த முடிவுக்கு வந்த...?” என்று அப்பாவும் சித்தப்பாவும் வேகமாய் கேள்வி தொடுக்க, இரு தாய்மார்களையும் அழுத்தமாக பார்த்தவன்,
“என் பொண்டாட்டிக்கும் என் பிள்ளைக்கும் இந்த குடும்பத்தால ஒரு நேர சோறு போட முடியலன்றப்போ நான் மட்டும் ஏன் இந்த குடும்ப பாரத்தை சுமக்கனும்... நான் எதுக்கு பணம் குடுக்கணும்.. தேவையில்லையே” என்று அவன் ஆணித்தரமாக கேட்க, தணிகாசலமும் மருதகாசியும் புருவம் சுருக்கினார்கள்.
“என்ன தம்பி சொல்ற?” என்று அவர்கள் கேட்க,
“என்னை கேட்டு, உங்க மனைவிமார்களையே கேட்டு தெரிஞ்சுக்கோங்க” என்று கண்கள் சிவக்க சொன்னான்.
அவனது ஆத்திரத்தில் அன்னைமார்கள் இருவருக்கும் காய்ச்சல் கண்டுப் போனது.
எதற்கும் கோவப்படாத பஞ்சவனே கோவப்படுகிறான் என்றால் உறுதியாக தங்களின் மனைவிமார்கள் தான் ஏதோ செய்து இருக்கிறார்கள் என்று எண்ணியவர்கள் கேட்டு கேள்வி இல்லாது அவர்களின் கன்னத்திலே பளார் என்று வைத்தார்கள்.
“சொல்லுடி நீ என்ன பண்ண...? எதுக்கு தம்பி இந்த முடிவு எடுத்து இருக்கான். ஒழுங்கா சொல்லிடு இல்ல இப்பவே தோளை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுவிடுவேன்” என்று கவிதாவை அடித்துக் கொண்டே அவரிடம் கேட்டார் தணிகாசலம்.
படி ஏறியவளின் காதில் என் பொண்டாட்டி என் பிள்ளை என்று பஞ்சவன் சொல்ல அதிர்ந்துப் போனாள். திரும்பி பஞ்சவனை பார்த்தாள். அவனது முகத்தில் அப்படி ஒரு தணல் எரிந்தது. அதை பார்த்து விக்கித்து நின்றாள்.
“எனக்காகவா? என் பிள்ளைக்காகவா? இந்த அவதாரம்...” என்று அதிர்ந்துப் போனாள். அவனது முகத்திலும் கண்களிலும் இருந்த சிவப்பு அவனது கோவத்தை சொல்ல இதயம் நழுவியது போல உணர்ந்தாள்.
முதல் முறையாக அவளுக்கு என்று ஒருவன் குரல் கொடுக்கிறான். வாழ்க்கையில் எவ்வளவோ வேதனைகளையும் துன்பத்தையும் துயரத்தையும் கடந்து வந்தவள் தான். அப்பொழுது எல்லாம் அத்தனை துன்பங்களையும் தன் இரு தோள்களில் மட்டுமே சுமந்து அத்தனையையும் கடந்து வந்தாள். ஆசுவாசப் படுவதற்கு கூட அருகில் தோள் சாய ஒரு தோள் இருந்தது இல்லை.
இன்று அது எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து ஒருவன் தனக்காக அவனது சொந்த குடும்பத்தையே விளாசிக் கொண்டு இருக்கிறான். அதுவும் ஒரு நேர சோறு கொடுக்காததற்காக... ஒரு நேர சோறுக்கே இப்படி இந்த அளவு வேடிக்கிறானே..
என்னை எவ்வளவு பேர் மனம் நோக காயம் செய்து இருக்கிறார்கள். அதை எல்லாம் தெரிந்தால் இவன் என்ன செய்வான். என்று ஒரு கணம் எண்ணிப் பார்த்தாள் மகரா.
எண்ணிப் பார்க்கையிலே மனம் முழுவதும் பரவசத்தில் திளைத்தது. கண்கள் எல்லாம் கலங்கிக்கொண்டு வந்தது. அங்கேயே நின்றாள் அவளது கண்கள் முழுவதும் பஞ்சவனிடமே இருந்தது.
தங்களது மனைவி மார்களை வெளுத்து எடுத்தவர்கள், “ஆனாலும் பஞ்சவா இப்ப வந்த பொண்ணுக்காக நீ எங்களை எல்லாம் இப்படி கை விட கூடாது” என்று சித்தப்பா சொல்ல,
இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவரை தீர்க்கமாக பார்த்தவன்,
“அவ இப்ப வந்தவளோ எப்ப வந்தவளோ அது கணக்கு கிடையாது சித்தப்பா. அவ என் பொண்டாட்டி. அவளோட சுக துக்கம் அத்தனையும் என்னை சேர்ந்தது. அவளுக்கு ஒண்ணுன்னா கண்டிப்பா நான் வந்து நிப்பேன். அவ நான் தொட்டு தாலி கட்டிய பொண்டாட்டி. இந்த வீட்டோட மூத்த மருமக. உங்களுக்கு பிறகு இந்த வீட்ட நிர்வகிக்கிரவ அவ தான். அவளுக்கு இந்த வீட்டுல எல்லா உரிமையும் இருக்கு. இருக்கணும்” என்றான் அழுத்தம் திருத்தமாய்.
“அது இல்ல தம்பி” என்று தந்தை பேச வர,
“எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை ப்பா. என் பொண்டாட்டிக்கு இந்த வீட்டுல எல்லா உரிமையும் இருக்கணும். அவளுக்கு உரிமை இல்லாத பட்சத்துல உங்க மகன் உங்களுக்கு சொந்தமில்லை... அவ தான் என்னோட சகலமும்” என்று சொன்னவன், எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தவன்,
“நானே இல்லாம போனாலும் என் பொண்டாட்டிக்கு அவளுக்கு இந்த வீட்டுல எல்லா உரிமையும் இருக்கணும். கிடைக்கணும். அவளை யாரும் ரொம்ப ஈசியா ஹேண்டில் பண்ணிட கூடாது.. இந்த வீட்டோட ஆணிவேர்ல அவளும் ஒருத்தி.” என்றான் கட்டளையாய். அவனது வாய் மொழியில் தேகம் மொத்தமும் தளர்ந்துப் போனாள் மகரா. கண்களில் இருந்து கண்ணீர் சுரந்தது. எங்கெங்கோ பரந்து திரிந்து கலைத்து ஓய்ந்து போன நேரம் ஒரு தோள் அவளிடம் வந்து “இங்க வா சாஞ்சுக்கோ...” என்று ஆறுதலாய், அணைவாய்... அழுகை வெடித்துக் கொண்டு வந்தது மகராவுக்கு. பஞ்சவனின் மகராவுக்கு..
எஸ் பஞ்சவனின் மகரா தான். பஞ்சவன் பாண்டியன்... மகரா மீன்... பாண்டியனின் சின்னம் மீன்... அப்போ இவள் பாண்டிய மண்ணின் மீன் தானே... சரி தானே பஞ்சவனின் மகரா என்றது.
நெடுங்காலமாய் புழங்காமலே இருக்கிறது என் அன்பு... உயிர் தூண்டும் நேசம் உன்னில் கண்ட பிறகு அது பூ பூக்கிறதே காலம் கடந்த பிறகும்..
மகராவின் கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்தது. அன்புக்காக ஏங்கிய காலங்களில் ஒரு நாள் ஒரு பொழுது கூட கைக்கு கிட்டாமல் ஆட்டம் காட்டிய நேசம் இன்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நேரத்தில் இந்தா நீ தேடிய ஒட்டு மொத்த நேசம் என்று காலம் அவள் கண் முன் காட்டுகிறது...
காலம் கடந்த ஒரு நேசம் என்றாலும் அவளுக்காகவே கிடைத்திருக்கிறது..