பஞ்சவன் நகர்ந்த உடன் வீட்டில் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டவள் தானும் கிளம்பி வெளியே வந்தாள். வீட்டை பூட்டி சாவியை தன் பேக்கில் போட்டுக் கொண்டவள் பேகை எடுத்துக் கொள்ள,
சரியாக பஞ்சவனும் யுவனும் ஆளுக்கொரு பிள்ளையை கையில் வைத்துக் கொண்டு வெளியே வந்தார்கள்.
யுவன் தன் கையில் இருந்த பஞ்சவனின் பிள்ளையை அவளிடம் கொடுத்து விட்டு எல்லாரோட பைகளையும் எடுத்துக் கொண்டான்.
கால் டேக்ஸியில் ஏறிக் கொண்டவர்கள் ஊருக்கு பயணமானார்கள்.
“நம்ம கார் எப்போ வருதாம்டா” என்றான் பஞ்சவன் யுவனிடம்.
“ட்ராக் பண்ணினேன். இன்னும் ஒன் வீக்ல வந்திடுமாம் டா”
“அந்த கொரியர்ல போட்டதுக்கு பேசாம நாமலே மும்பையில இருந்து ஓட்டிட்டு வந்து இருக்கலாம்டா” என்றான் சலிப்பாக.
மும்பையில் இவன் பயன்படுத்திய காரை கொரியரில் போட்டு விட்டு இவர்கள் விமானத்தில் சென்னை வந்து இருந்தார்கள்.
ஒரு வாரத்தில் டெலிவரி ஆகும் என்று சொன்னவர்கள் இன்னும் இழுத்து அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். கார் சரியான நேரத்துக்கு வந்து இருந்தால் இந்நேரம் ஊருக்கு அவர்களது காரிலே சென்று இருக்கலாம். அதனாலே இந்த சலிப்பு பஞ்சவனிடம்.
யுவன் ட்ரைவரோடு முன் பக்கம் அமர்ந்துக் கொள்ள பஞ்சவனும் மகராவும் பின் பக்கம் பிள்ளைகளோடு அமர்ந்துக் கொண்டார்கள்.
வழி நெடுக எந்த பேச்சும் அதிகம் எழவில்லை. இடையில் உணவு உண்ண டீ காபி குடிக்க என்று நிறுத்திக் கொண்டார்கள். காலையில் கிளம்பி இரவு வந்த பிறகு தான் வீடு போய் சேர்ந்தார்கள்.
வந்தவர்களுக்கு ஆராத்தி கரைத்து திருஷ்ட்டி கழித்து மணமக்களாக இருவரையும் உள்ளே அழைத்துக் கொண்டு சென்றார்கள்.
கிராமத்து வீட்டுக்கே உரிய ஈர மனம் முகத்தில் வீச அதை அனுபவித்த படி அந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தாள் மகரா.
“வா” என்று அவளை அழைத்து அந்த வீட்டுக்குள் அவளோடு உள்ளே நுழைந்தான் பஞ்சவன். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு அந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கிறான் பஞ்சவன்.
அவன் பார்த்து, தொட்டு, அனுபவித்து, வளர்ந்து, உருண்டு, பிரண்டு விளையாண்ட வீடு. எங்கு சுத்தினாலும் இறுதியில் அவனது மனம் தஞ்சம் அடைவது என்னவோ இந்த வீடு தான். ஆனால் இந்த வீட்டுக்குள் வர விடாமல் செய்த தன் தகப்பனையும் தாயையும் எண்ணி இன்னுமே கோவம் பெருகியது அவனது அடி மனதில். ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் விலகி நின்றுக் கொண்டான்.
யாரிடமும் முன்பு போல ஒட்ட முடியவில்லை. எல்லோருமே சுயநலமாகவே அவனுக்கு தெரிந்தார்கள். கூட்டுக் குடும்பம் அவனது.
தாத்தா பாட்டிக்கு இரு மகன்கள். அதில் பெரியவரின் மகன் தான் பஞ்சவன். சிறியவருக்கு இரண்டு பிள்ளைகள். பெரியவர்கள் செய்த செயலுக்கு தன் தம்பி தங்கையிடம் கூட பேசவில்லை அவன்.
அவ்வளவு கோவத்தில் இருந்தான். இப்பொழுதும் அதே கோவம் தான். ஆனால் அவன் கோவமெல்லாம் படுக்கையில் கிடந்த தாத்தனிடம் காட்ட முடியாதே. அதனால் தான் மகராவை அவசர திருமணம் செய்துக் கொண்டான்.
அவளுக்கு விருப்பம் உள்ளவரை ஒன்றாக, நிழல் கூட படாது என்று வாக்கு கொடுத்து இருக்கிறான். பெரியவர்களின் கண் துடைப்புக்காக எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டான்.
இதோ இப்பொழுது வீட்டுக்கும் வந்தாகி விட்டாது. அவனது மனம் கோவத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அந்த வீட்டில் சிறிது நேரம் இளைப்பாறியது. என்னவோ தன் கூட்டுக்குள் மீண்டும் வந்து அடைந்த சுகம் உள்ளுக்குள் பரவியது.
என்னவோ தாய் மடியில் மூன்று வயது பாலகன் தஞ்சம் புகுந்தது போல ஒரு உணர்வு. அதை ஆழமாக அனுபவித்தான்.
பஞ்சவனின் உணர்வுகளை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த மகராவுக்கு தன் இல்லத்தை தேடியது. அது இனி எப்பொழுதும் கிட்டாது என்று உணர்ந்த பிறகு அந்த உணர்வை ஏன் வளரவிட வேண்டும் என்று பிள்ளைகளிடம் கவனத்தை திருப்பிக் கொண்டாள்.
அந்த வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் யார் யார் என்று எதுவும் புரியாமல் அவள் தடுமாற,
பஞ்சவனின் பாட்டி அவளின் கையை பிடித்து ஒவ்வொருவராய் அறிமுகம் செய்து வைத்தார்.
“இது தான் உன் மாமனார். என்னோட முதல் மகன் பேரு தணிகாசலம். இவனோட பொண்டாட்டி கவிதா. இவங்களுக்கு ஒரே ஒரு மகன் அது தான் உன் புருசன். அவன் என் இரண்டாவது மகன். பேரு மருதகாசி. அவன் பொண்டாட்டி வனிதா. இவங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க. இவங்க தான் குகன், ரூபா” என்று பாட்டி ஒவ்வொருவராய் அடையாளம் காட்டி சொல்ல அனைவரையும் பார்த்து சிரித்தாள்.
யாருடைய முகத்திலும் உண்மையான புன்னகை இல்லை. அதை வந்த உடனே தெரிந்துக் கொண்டவளுக்கு ஏன் வந்தோம் என்று தோன்றியது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றுக் கொண்டாள்.
“வா உனக்கு இன்னொருத்தரை அறிமுகம் செய்து வைக்கிறேன்” என்று பாசமாக அழைத்தார் பாட்டி. அவரின் பின்னோடு எதுவும் சொல்லாமல் சென்றாள் மகரா.
அங்கே படுக்கையில் நலிந்துப் போன உருவத்துடன் ஒருவர் படுத்து இருந்தார்.
“இது தான் என் புருசன்.. இவருக்கு பெரிய பேரன்னா அவ்வளவு விருப்பம். அவன் மேல தான் இவரு உயிரையே வச்சு இருக்காரு. மூணு வருடமா அவன் இங்க வராததுனால இந்த மனிதன் இப்படி ஆகிட்டாரு...” என்று சொல்லி வாயில் முந்தானையை வைத்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விட்டார்.
அவரது அழுகையை எதிர் பாராதவள்,
“அச்சோ பாட்டி அழாதீங்க.. அது தான் அவங்க வந்துட்டாங்கல்ல இனி தாத்தா குணமாயிடுவரு. முன்ன மாதிரியே ஆகிடுவாங்க. நீங்க அழாதீங்க பாட்டி” என்று அவரை ஆறுதல் படுத்த முனைய,
“என்னவோ அதை நம்பி தான் நான் இன்னும் இருக்கேன் கண்ணு. நான் பூவும் பொட்டுமா இவருக்கு முன்னாடி போயிடணும்னு ஆசை. ஆனா நான் போனதுக்கு பிறகு இந்த மனுசனால தனியா இருக்க முடியாதுள்ள...” என்று அவர் மேலும் கண்கள் கலங்க பாவமாய் போனது.
தமிழ் நாட்டில் பெண்களாய் பிறந்த எல்லோரின் மனத்திலும் இந்த கவலை தான் அதிகம் இருக்கும். நான் இல்லன்னா அவரால ஒரு சுடு தண்ணீர் கூட போட தெரியாது. பிறகு எப்படி தனியா விட்டுட்டு போறது.. பூவும் பொட்டும்மா சுமங்கலியா போறதை விட அவரை கரை ஏத்திட்டு தான் நான் போய் சேரனும்... என்று மங்கையரின் மனது இறுதி தருவாயிலும் கட்டிய கணவனின் நலனை தான் நாடும். இது இயற்கை தான்...
எவ்வளவு சண்டை போட்டாலும் மீண்டும் ஒன்றுகூடும் ஒரே உறவு கணவன் மனைவி உறவு தான். பழமொழி கூட உண்டே..
“புருசன் பொண்டாட்டி சண்டை உளை வைக்கும் பொழுது போட்டா அது சோறு வடிக்கிரதுக்குள்ள முடிவுக்கு வந்திடுமாம்..” அதனாலையே கணவன் மனைவி சண்டைக்குள்ள யாரும் தலையிட கூடாது. பஞ்சாயத்து பண்ண போறவங்க தான் விரோதியா போயிடுவாங்க என்று கேள்வி பட்டு இருந்தாள் மகரா. அதை எண்ணிப் பார்த்தாள்.
“பாட்டி தாத்தாவுக்கு ஒன்னும் ஆகாது.. நீங்களே இப்படி மனசு ஒடிஞ்சு போனா அவரை யாரு தேற்றுவது. அழாதீங்க பாட்டி. எனக்கு தெரிஞ்சு தாத்தாவோட பலமே நீங்க தான்...” என்று அவள் சொல்ல, பாட்டியின் முகத்தில் சின்னதாய் மின்னல் கீற்று போல ஒரு புன்னகை வந்தது.
“ஆமா கண்ணு... என் முகம் கொஞ்சம் வாடி இருந்தாலும் மனுசனால தாங்க முடியாது” என்று கணவனின் காதலில் திளைத்தார் அந்த முதிய பெண்.
அதை இரசனையுடன் பார்த்தாள் மகரா. அந்த நேரம் அந்த அறையின் உள்ளே நுழைந்தான் பஞ்சவன்.
“அய்யா வா ராசா... உன் தாத்தனை பார்த்தியா? உன்னை பார்க்காம உன் தாத்தா எப்படி போயிட்டாருன்னு...” என்று பஞ்சவனின் நெஞ்சில் சாய்ந்து விம்மினார் விசாலாட்சி.
ஒரு கையால் அவரை அணைத்தவன் தன் தாத்தாவை விழியகலாது பார்த்தான். மூன்று வருடங்களுக்கு முன்பு திடகாத்திரமாய் இருந்த மனிதன் உருக்குலைந்து போய் இருப்பதை பார்த்து கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது அவனுக்கு.
இந்த வீட்டிலே அவனுக்கு ரொம்ப பிடித்தது அவனது தாத்தா மட்டும் தான். அவனது அனைத்தும் அவருக்கு அத்துபடி. எல்லாவற்றையும் வயது வித்யாசம் இல்லாமல் பகிர்ந்துக் கொள்வான்.
அவரும் அப்படி தான். ஆனால் இடையில் இந்த கல்யாணத்தால் வீட்டு பக்கமே தலை வைத்து படுக்கவில்லை. அதனால் அவனது பிரிவு அவரை மிகவும் பாதித்து விட்டது.
மெல்ல அவரின் நலிந்த விரல்களை தொட்டு கையை இறுக பற்றிக் கொண்டான் பஞ்சவன்.
அவனது தொடுகையில் அவருக்கு ஆவி வந்தது போல.. மெல்ல மெல்ல அவரின் கருவிழிகள் அங்கும் இங்குமாய் அசைந்தது.
“தாத்தா...” என்று கதறலுடன் பஞ்சவன் அழைக்க,
“ராசா” என்று குரல் கொடுத்தார் பதிலுக்கு. சுற்றி நின்ற அனைவரும் ஆடிப் போனார்கள். இருக்காத பின்ன மூன்று வருடங்களுக்கு பிறகு அவர் பேசுகிறாரே. பாட்டி சத்தம் வராமல் வாயை சேலையால் மூடிக் கொண்டு கதறினார்.
“அய்யா” என்று பஞ்சவன் மீண்டும் குரல் கொடுக்க,
“அய்யா” என்றார் அவர் பதிலுக்கு. இருவரும் ஒருவரை ஒருவர் அய்யா அய்யா என்று தான் அழைப்பார்கள்.
“தாத்தா” என்று அவன் கதற,
“தாத்தாவுக்கு ஒன்னும் இல்லைய்யா நல்லா இருக்கேன்” என்றவர்,
“இறுதியா தாத்தாவ தேடி வந்துட்டியா ய்யா” என்று அவர் குரல் தழுதழுக்க, பஞ்சவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
“அய்யா” என்று அவரை அப்படியே தூக்கி தன் நெஞ்சோடு கட்டிக் கொண்டான். அவனது கட்டி தழுவளுக்காகவே காத்து இருந்தவர் அவனது அணைப்பில் சிறு பிள்ளையாய் அடங்கிப் போனார்.
பஞ்சவனுக்கு கண்களில் இருந்து கண்ணீர் நிற்கவே இல்லை. அவரது தோளில் தானே அவனது மழலை காலங்கள் எல்லாம் கழிந்தது. அடுத்து கொஞ்சம் வளர்ந்த பிறகு அவனது சிறுவயது எல்லாம் அவரின் விரல் பிடித்து தானே நகர்ந்தது.
தோளுக்கு மேல் வளர்ந்த பிறகு அவரின் தோள் மேல் கை போட்டு அல்லவா சென்றது அவனுக்கு பொழுதுகள் எல்லாம்... அப்படியாப்பட்டவரை அவனால் எப்படி இழக்க முடியும். முடியவே முடியாதே.
“யார் மேலையோ உள்ள கோவத்தை உங்க மேல காட்டிட்டேன் தாத்தா... என்னை பொறுத்துக்கோங்க (மன்னிச்சிடுங்க) இனி உங்களை விட்டு எங்கயும் போக மாட்டேன்... போனா உங்களையும் கூட்டிட்டு தான் போவேன்” என்று அவரை இறுக கட்டிக் கொண்டான்.
“நினைப்பு பூரா நீ மட்டும் தான் ய்யா.. எங்க இருந்தாலும் நீ நல்லா இருக்கணும்னு தான் எண்ணம் முழுவதும். அவரு உன்னை நினைக்காத நாள் இல்ல.. உன்னை ஒரு முறையாவது குடும்பமா பார்த்திட மாட்டமான்னு அவரு உள் மனசு ஏங்கிக்கிட்டு இருக்கு ராசா” என்று பாட்டி கண்ணீரை துடைத்துக் கொண்டார்.