தன்னிடம் ப்ரபோஸ் செய்தவனை அலுத்தமாக ஏறெடுத்துப் பார்த்தவள் “சாரி ஆகாஷ்” என்று அவனை கடந்துப் போனாள்.
“ப்ளீஸ் ப்ளீஸ் மேம். எனக்கு உங்களை ரொம்ப பிடுச்சு இருக்கு... நீங்க என் வாழ்க்கைக்குள்ள வந்தா நான் ரொம்ப மகிழ்ச்சியா இருப்பேன் மேம்” என்றவனை பார்த்தவளுக்கு சலிப்பு தான் வந்தது.
“ஆனா நான் மகிழ்ச்சியா இருக்க மாட்டேன் ஆகாஷ்” என்றாள் நெற்றியடியாக.
“மேம் உங்கள விட சம்பளம் கம்மியா வாங்குறேன்னு என்னை ரிஜெக்ட் பண்ணாதீங்க மேம். ஊர்ல நிறைய சொத்துக்கள் இருக்கு. எங்க அப்பா தான் ஊர் தலைவர்” என்று அவன் மேலும் சொல்ல பத்திக் கொண்டு வந்தது. ஆனால் அவளின் பக்கவப்பட மன நிலை அவனை காயப்படுத்த விடாமல் பார்த்துக் கொண்டது.
“ஆகாஷ்” என்று அவனை அழைத்தவள் அருகில் இருந்த சோபாவில் அவனை அமர சொல்லி விட்டு அவளும் அமர்ந்தாள்.
“மேம் ஓகே சொல்லுங்க ப்ளீஸ்” என்று கேட்டவனின் முன்பு தானும் தன் மகனும் இருக்கும் ஒரு புகைப்படத்தை அவனிடம் நீட்டினாள்.
“மேம் இது”
“என்னோட பேபி... பேரு அன்பு... ரொம்ப அழகா இருக்கான் இல்லையா?” என்று கேட்டவளை கண்கள் தெறிக்க பார்த்தான்.
“மேம்” என்று அவன் தடுமாற,
“ம்ம்ம் எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. சோ என்னை டிஸ்ட்ரப் பண்ணாத ஆகாஷ்” என்றவள் எழுந்து போய் விட்டாள்.
அதை எல்லாம் கொஞ்சம் தள்ளி நின்று பார்த்துக் கொண்டு இருந்தான் பஞ்சவன். அவனது மனதில் என்ன ஓடிக்கொண்டு இருக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. ஆனால் போகும் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் என்பது மட்டும் உண்மை.
மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வரும் பொழுது பஞ்சவனும் வந்தான். இருவரும் ஒரே லிப்ட்டில் ஏறி வர ஒரு புன்னகையை மட்டும் அவன் புறம் கொடுத்து விட்டு திரும்பிக் கொண்டாள்.
அவன் அதை கூட அவள் புறம் சிந்தவில்லை. அதை அவள் கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளவில்லை.
இருவரும் ஒன்றாக மேலே வர பஞ்சவனின் வீட்டு வாசலில் நிறைய செருப்புகள் இருந்ததை பார்த்து பஞ்சவனின் முகம் பார்த்தாள். அவனுக்கு வந்து இருப்பது யார் என்று தெரியுமே அதனால் அவனது முகத்தில் ஒரு அசூசை தென் பட்டது..
“என்ன ஏதுன்னு தெரியலையே... இவர் முகம் வேற ஒரு மாதிரி இருக்கு” என்று எண்ணிக் கொண்டவள் தன் வீட்டுக்குள் நுழைந்துக் கொண்டாள்.
அதன் பிறகு சிறிது நேரத்திலே அவளது வீட்டு கதவு தட்டப்பட யாரு என்று கேட்டவளுக்கு ம்ம்ம் என்கிற பஞ்சவனின் உறுமல் சத்தம் மட்டும் கேட்டது.
சட்டென்று கதவை திறந்து விட்டாள்.
“ஒரு மணி நேரம் மட்டும் எனக்கு பொண்டாட்டியா இரு” என்று சொல்லி விட்டு அவளோடு சேர்த்து அவளின் மகனையும் கூட்டிக்கொண்டு அவனது வீட்டுக்கு சென்றான்.
என்ன நடக்குது என்று அவள் சுதாரிக்கும் முன்பே அவளை இழுத்துக் கொண்டு அவன் வீட்டில் இருந்தவர்களின் முன்பு நிறுத்தினான்.
“முட்டாள் மாதிரி முழிக்காத முகத்தை நார்மலா வை..” என்று அவளின் காதோரம் சொன்னான். முதன்முறை அவனது நெருக்கம் அவளை வெகுவாக தாக்க இதென்னது இவன் இப்படி பண்றான் என்று அவனை விட்டு விலகி நிற்க பார்க்க, அவளின் இடையோடு தன் கையை போட்டு தன்னோடு நெருக்கிக் கொண்டான் பஞ்சவன்.
“கொஞ்ச நேரத்துக்கு மட்டும் தான். அதனால ரொம்ப சீன் போட வேண்டாம்” என்று கடித்து துப்பினான் சொற்களை. திரும்பி யுவனை பார்த்தாள். அவனும் கண்களாலே அவளை கெஞ்சிக் கொண்டு நின்றான். பெருமூச்சு விட்டவளின் காதில் குழந்தை அழும் சத்தம் கேட்க,
விழிகளால் பிள்ளையை தேடினாள். இந்த ஒரு மாதமும் மகராவிடமே இருந்ததால் வந்து இவ்வளவு நேரம் ஆகியும் தன்னை தொட்டு தூக்காமல் இருக்கவும் குழந்தை பெரும் குரல் எடுத்து அழ ஆரம்பித்து விட்டாள்.
நான்கரை மாத பிள்ளையின் குரல் கேட்டு தவித்த மகரா,
“நான் பாப்பாவை போய் பார்க்கவா?” என்று கேட்டாள் மெதுவான குரலில். அவளிடம் இருந்த அன்புவை வாங்கிக் கொண்டவன், யுவனுக்கு கண்ணை காட்ட, பிள்ளையை கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான்.
அவளை தூக்கிக் கொண்ட உடனே மகராவின் வாசனை உணர்ந்து அவளின் மார்பில் வாயை வைத்து பசிக்காக ஈரம் செய்ய ஆரம்பிக்க தவிப்புடன் பஞ்சவனை பார்த்தாள்.
“நீ போய் அவளை கவனி. நான் பேசிக்கிறேன்” என்று சொன்னான். அவள் அவளது வீட்டுக்கு போக பார்க்க,
“இங்க என் ரூமுக்கு போ” என்றான் கட்டளையாக.
“இதென்ன புது அவஸ்த்தை” என்று எண்ணிக் கொண்டே உள்ளே போய் கதவை சாற்றிக் கொண்டவள் பிள்ளையை கவனிக்க இங்கே பஞ்சவன் ஊரையே திரட்டிக் கொண்டு வந்து இருந்த தன் பெற்றவர்களை முறைத்துப் பார்த்தான்.
“அப்பு அப்போ நீ சொன்னது உண்மை தானா..? இவ தான் எங்க மருமகளா?” என்று அவளது தாய் கேட்க,
“ம்மா” என்று கடுப்பானான்.
“இல்ல கண்ணு நீ எங்களுக்காக சொல்றியோன்னு நினைச்சேன். நீ வாழ்ந்தா எங்களுக்கு அது போதும்ய்யா வேற என்ன ராசா உன்கிட்ட நாங்க கேட்டுட போறோம்” என்ற அப்பாவின் தாயை பார்த்தான்.
அவர்களின் ஆசை எல்லாம் அவன் நன்றாக வாழ வேண்டும் என்பது மட்டும் தான். இவ்வளவு நாள் மும்பையில் இருந்ததால் அவனை காண முடியாமல் தவித்தவர்கள் இப்பொழுது தமிழ்நாட்டுக்கு அவன் வரவும் இவர்கள் அதிரடியாக வந்து விட்டார்கள்.
பிடிக்காத பெண்ணை வலுக்கட்டயமாக கல்யணம் செய்து வைத்து அவளுடன் வாழ்ந்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பஞ்சவனின் வாழ்க்கையை நரகம்மாகி விட்டு இப்பொழுது நீ நன்றாக வாழ்வதை பார்க்க தான் எங்கள் உயிர் இருக்கிறது என்று சொல்லும் பெற்றவர்களையும் உறவுகளையும் அடியோடு வெறுத்தவன் யாருக்கும் எந்த பதிலும் சொல்லவில்லை.
“ப்ச்” என்று சலித்தவனுக்கு தலை வலி அதிகமாக இருக்க “பார்த்துக்க...” என்று யுவனிடம் சொல்லி விட்டு தன் அறைக்குள் நுழைந்தான்.
மண்டையே வெடிப்பது போல அப்படி ஒரு உணர்வு...
“ச்ச சரியான சுயநல மனிதர்கள்..” என்று கதவை மூடிவிட்டு உள்ளே வர அங்கே பார்த்துக் கொண்டு இருந்த காட்சியில் ஒரு கணம் தன்னை மறந்தான். மகரா பஞ்சவனின் மகளை அணைத்து அவளுக்கு பசியாற்றிக் கொண்டு இருக்க அப்பொழுது தான் மகராவை தன் அறைக்கு போக சொன்னது நினைவுக்கே வந்தது.
அவன் இப்படி வந்து நிற்பான் என்று அறியாதவள் பட்டென்று தன் முந்தானையை எடுத்து பிள்ளையோடு சேர்த்து போர்த்தி விட்டு அவனுக்கு முதுகு காண்பித்து திரும்பிக் கொண்டாள். பட்டென்று நடந்து விட்டு நிகழ்வில் படபடப்பு தொற்றிக் கொண்டது அவளுக்கு.
“இதென்ன இப்படி எல்லாம் நடக்கிறது” என்று மனதுக்குள் கலங்கிப் போனாள். அவளின் சங்கடத்தை உணர்ந்தவனாய் “ப்ச்” என்று தலையிலே அடித்துக் கொண்டான்.
இப்பொழுது வெளியேவும் போக முடியாது. “சிட்” என்று படுக்கையில் போய் விழுந்தான் மகராவின் பிள்ளையோடு. அவன் அவனது நெஞ்சில் விழுந்து தவள, அருகில் அவர்களுக்கு முதுகு காட்டியபடி மகரா இருக்க தவழ்ந்து போய் தாயின் புடவையை பிடித்து இழுத்தான். மகராவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. திரும்ப முடியாத நிலையில் அவள் இருந்தாள்.
அழைத்தும் அவனின் அம்மா திரும்பாமல் போக அழ ஆரம்பித்தான்.
“டேய் அம்மா இங்க தான்டா இருக்கேன். அழாத தங்கம்” என்று குரல் கொடுத்தாலும் அவனுக்கு அவள் அம்மா திரும்பாமல் போனதில் கோவம் வர அவளை அடிக்க ஆரம்பித்தான். புடவையை பிடித்து இழுத்தான்.
இந்த சூழ்நிலையை பார்த்த பஞ்சவன் அன்புவை பிடித்து இழுக்க அவனிடம் திமிறியவன் தாயிடமே ஓடினான்.
மகரா திரும்பினால் ஒழிய அவனது அழுகை நிற்காது என்று புரிய பஞ்சவனும் இப்பொழுது வெளியே போக முடியாது. மகராவை பொண்டாட்டி என்று சொல்லியாகி விட்டது.
அய்யோ என்று மண்டையை பிடித்துக் கொண்டான். அவனது நிலையை கண்டு மகராவே திரும்பினாள் வேறு வழியில்லாது. அவள் திரும்பவும் இவன் சுவர் பக்கம் திரும்பிக் கொண்டான்.
அதில் பெருமூச்சு விட்டவள் இன்னொரு பக்கம் மகனை தூக்கிக் கொண்டாள். அவனை தூக்கவும் பஞ்சவனின் மகள் வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க புடவையை சரி செய்யவும் முடியவில்லை.
“ஹப்பா படுதுறாங்களே என்னைய” என்று கலவரம் ஆனவள் முடிந்த மட்டும் எட்டி தன் உடைகளை சரி செய்துக் கொண்டு இருவரையும் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்.
அன்பு இப்பொழுது தான் உட்கார பழகிக் கொண்டு இருக்கிறான். அதனால் அவனை அமர வைத்து விட்டு இவளை தன்னோடு சேர்த்து அமரவைத்துக் கொண்டாள்.
“முடிஞ்சதா?” என்று கேட்டான்.
“ம்ம்ம்..” என்றாள். அதன் பிறகே அவன் இந்த பக்கம் திரும்பினான்.
“என்ன ஆச்சு...? யாரு அவங்க எல்லாம். என்னை எதுக்கு மனைவியா அவங்க கிட்ட அறிமுகம் செய்து வச்சீங்க?” என்று எதுவும் புரியாமல் அவனிடம் கேட்டாள். மகரா.
“எங்க அப்பா அம்மா தான்” என்றவன் தன் வாழ்வில் நடந்ததை மேலோட்டமாக சொன்னான்.
“மும்பையில வேலைல இருந்தேன். எங்க பிள்ளை அவனாவே கல்யாணம் செய்துக்குவானொன்னு அத்தை மகளை பார்த்து கட்டாய கல்யாணம் பண்ணி வச்சாங்க. ஆனா அவளுக்கு என்னை பிடிக்கல போல.. நானும் விட்டுட்டேன். ஆனா அவளோட சொத்து அவளுக்கு கிடைக்கணும்னா குழந்தை வரணுமாம். அதனால எங்க வீட்டுலையும் அவளோட கம்பல் பண்ணி வாழ வச்சாங்க. ஒரு நாள் கூடலிலே இதோ இந்த பிள்ளை உருவாகிடுச்சு. அதுக்கு பிறகு இவளை பெத்து குடுத்ததோட டைவர்சையும் சேர்த்து குடுத்துட்டு அவள் சொத்துக்களோட வெளிநாடு கிளம்பிட்டா..” என்றான் பெருமூச்சு விட்டு.
“விருப்பம் இல்லாத கல்யாணத்தை செய்து வச்சதுல செம்ம கோவம். அதனால இந்த பக்கமே வரல. மும்பையிலயே இருந்தேன். ஆனா கம்பெனில ப்ரமோஷனோடு தமிழ் நாட்டுக்கு வர வேண்டியதா போச்சு”
“நான் வந்ததை யுவன் சொல்லி இருப்பான் போல... அது தான் கும்பலா கிளம்பி வந்துட்டாங்க. மறுபடியும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனுமாம். பிள்ளையோட தனியா இருக்கேனாம். அதனால இன்னொரு அத்தை மகளை தயார் பண்ணி வச்சு இருக்காங்க” என்று கடுப்படித்தான் பஞ்சவன்.
“செய்துக்க வேண்டியது தானே... எல்லாரும் ஒன்று போலவே இருக்க மாட்டாங்க சார். இவங்க கூட உங்க ஒரு வேலை நல்லா அமையலாம்” என்றவளை முறைத்துப் பார்த்தான்.
“ஏற்கனவே வாங்குன சூடே இன்னும் ஆறாம கிடக்கு. இதுல இன்னொன்னா.. என்னால முடியாது. அவங்க சுயநலத்துக்காக என்னை காவு குடுத்துட்டாங்க” என்று பல்லைக் கடித்தான்.
“அப்படி இல்ல சார்” என்று மகரா பேசவர,
“சஸ்ட் ஸ்டாப்பிட் மகரா... ஏற்கனவே தலை வலிக்கிது. இதுல நீ வேற புதுசா எதையும் ஆரம்பிக்காத. அவர்களை சமாளிக்க தான் உன்னை உள்ளே இழுத்து விட்டேன். இப்போ நீயும் எதையும் ஆரம்பிக்காத” என்றான் சற்றே கடுப்பாக.
அவன் அப்படி சொல்லவும் அவனது தனிப்பட்ட வாழ்வில் தான் அதிகமாக தலையிடுகிறோம் என்று புரிந்துக் கொண்டவள் பிள்ளைகளோடு விளையாட ஆரம்பித்தாள்.
ஐந்து நிமிடம் நீண்ட மௌனத்தில் தன்னை மீட்டுக் கொண்டவன், “ஆமா உன் லைப்” என்று கேட்டான்.
நீ சொன்னா நானும் சொல்லனுமா என்று அவளின் மனம் முரண்டினாலும், “வீட்டுல பார்த்து வச்ச கல்யாணம் தான். அவனுக்கு என் சம்பளம் மட்டும் தான் பெருசா தெரிஞ்சுது. என்னை விட அதிக சம்பளம் வாங்கும் பெண் கிடைச்ச உடன் ஒரு மாதத்திலே என்னை விட்டுட்டு போயிட்டான். அப்பாவும் அம்மாவும் போய் அவன்கிட்ட கேட்டாங்க. ஆனா அவன் ரொம்ப அசிங்கமா பேசி அவங்களை கேவலப்படுத்தி அனுப்பி வச்சுட்டான்” என்றாள் மறுத்துப் போன குரலில்.
“எனக்கு கீழ ஒரு தங்கையும் தம்பியும் இருக்கிறதால எங்க அவங்களுக்கு நடக்குற நல்லது நடக்காம போயிடுமோன்னு எங்க அம்மா பயந்தாங்க. அதனால நான் யாருக்கும் பாரமா இல்லாமல் நான் வேலை பார்த்த நிருவனத்துலையே சென்னை ப்ராஞ்ச்சுக்கு மாத்திட்டு சென்னை வந்துட்டேன். என்னால யாரும் வேதனை பட வேணான்னு நான் இருக்கிற இடத்தை யாருக்கும் சொல்லாமா வந்துட்டேன். கொஞ்சமே கொஞ்சம் முயற்சி செய்து இருந்தா இந்த ஒன்னரை வருடத்துல என்னை ரொம்ப ஈசியா கண்டு பிடிச்சு இருக்கலாம். ஆனால் இன்னிவரை என்னை தேடி யாரும் வந்ததில்லை. அந்த அளவுக்கு நான் வேண்டாதவளா போயிட்டேன்” என்றாள் எல்லாம் மறுத்துப் போன உணர்வுடன்.
பஞ்சவனுக்கு அந்த நிமிடம் என்ன தோன்றியதோ தெரியவில்லை.
“நாம் ரெண்டு பேரும் சேர்ந்து லைபை ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று கேட்டான்.
அவள் அதிர்ந்துப் போனாள்.
“நீங்க என்ன சொல்றீங்க?” என்று திகைத்துப் போனாள்.
“இனி எனக்கு திருமணம் செய்ய எல்லாம் ஆசை இல்லை. இதோ என் குழந்தையை வளர்த்துக்கிட்டு இப்படியே காலாம் போனா போதும்னு இருக்கு... ஆனா அதுக்கு என் பெற்றவர்கள் எல்லாம் விட மாட்டாங்க.. அது தான் உன்னை கேட்டேன்” என்று அவளின் கண்களை பார்த்தவன்,
“சப்போஸ் உனக்கு வேற யார் மேலயாவது விருப்பம் இருந்தா சொல்லு.. நான் விலகிக்கிறேன்” என்றான்.
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை. ஆனா நான் இன்னொரு கல்யாணத்தை நினைச்சு கூட பார்க்கல” என்றாள் நிதானமாக.
“அப்போ அப்ரோச் பண்ணவா?” என்று கேட்டான் பஞ்சவன்.
“நான் யோசிக்கணும்” என்றாள்.
“தாராளமா... உனக்கும் சரி உன் பிள்ளைக்கும் சரி கணவனா தகப்பானா என் கடமையை நான் சரியா செய்வேன் என் காலம் இருக்கிற வரை” என்றான்.
அதை அவசரமாக மறுத்தாள் மகரா. “இல்ல சார் இந்த கணவன் அப்பா இந்த உறவு எல்லாம் நமக்குள்ள வேணாம். சஸ்ட் ஒரு வழித்துணையா வர்ற உறவாவே நம்ம உறவு இருக்கட்டும்... அப்போ தான் இந்த உறவு நீண்ட நாள் நிலைக்கும்னு தோணுது. ஏன்னா எல்லா உறவும் ஒரு கட்டத்தில் என்னை ஏமாத்திக்கிட்டே தான் இருக்காங்க. உங்களை உறவா நினைக்க ஆரம்பித்தா இந்த உறவும் ஏமாத்தமா போயிடும்... அதனால நாம வெறும் வழிப்போக்கனகாவே இருந்து விடலாம்” என்றாள். அவனிடம் எந்த பதிலும் இல்லாமல் போக,
“நான் சொன்னது உங்களை ஹேட் பண்ணிடுச்சா?” கேட்டாள்.
“அப்படி இல்ல... ஆனா நீ சொல்றது ஒரு வகையில நியாயமா படுத்து..” என்று பஞ்சவன் சொல்ல மகராவின் முகத்தில் மெல்லிய புன்னகை உதித்தது.
“ரைட் நீ சொன்ன மாதிரியே இருந்துக்கலாம். ஆனா அடிக்கடி எங்க ஊர் பக்கம் போக வேண்டியது வரும்” என்று அவன் சொல்ல தலையை மட்டும் ஆட்டினாள்.
“என்ன ஓகே யா?” என்று கேட்டான்.
ஒரு பெருமூச்சு விட்டவள் “ம்ம்ம்” என்று சொல்லி விட்டாள். அவளும் எத்தனை காலத்துக்கு தனியாக இருப்பது. தலை வலி என்றால் கூட அவள் போய் தான் வாங்க வேண்டி இருக்கிறது. எவ்வளவோ பட்டாச்சு... பஞ்சவன் பொய்த்துப் போனால் அவளுக்கு இன்னொரு ஏமாற்றம். ஆனால் தனிமை ஒருக்கட்டதுக்கு மேல் சலித்து விடுகிறதே.. அதற்கு இந்த வழித்துணை எவ்வளவோ மேல் அல்லவா?
இது போதுமே என்று எண்ணி அவனிடம் சம்மதம் சொல்லி விட்டாள். கமுக்கமாக யாருக்கும் தெரியாமல் பஞ்சவன் அடுத்த நாளே ரெஜிஸ்டர் ஆபிசில் திருமணத்தை முடித்துக் கொண்டான்.
ஏனெனில் நாளைக்கு பஞ்சவனின் ஊருக்கு போக வேண்டி இருந்தது. அதனால் எல்லோரையும் ஊருக்கு அன்றைக்கே பேக் பண்ணியவன் அவசர அவசரமாய் மறுநாளே திருமணத்தை ஏற்பாடு செய்து விட்டான்.
“இவ்வளவு அவசரம் தேவையா?” என்று மகரா தயங்கினாள் என்றாலும் ஒப்புக் கொண்டாள். திருமணம் ஆனாலும் அவள் அவனது வீட்டுக்கு போகவில்லை. அது போல பஞ்சவனும் அவளை தேடி வரவில்லை.
மீண்டும் தன் கழுத்தில் ஏறிய மஞ்சள் கயிறை தூக்கிப் பார்த்தவளுக்கும் பெரிதாக எந்த உணர்வும் வரவில்லை. ஏற்கனவே சூடு பட்டது தானே என்கிற சலிப்போ என்னவோ.. அவ்வளவு தான் என்று எண்ணிக்கொண்டாள். எந்த ஒரு குறுகுறுப்பும் அவளிடம் இல்லை. புது பெண் என்கிற களையும் இல்லை. எப்பொழுதும் போலவே இருந்தாள்.
அடுத்த நாள் காலையிலேயே கிளம்ப வேண்டும் என்று சொல்லி இருக்க மூன்று நாட்களுக்கு உண்டான துணிகளை எடுத்து வைத்துக் கொண்டாள்.
அதி காலையிலே கதவு தட்டப்பட குளித்து முடித்து இருந்தவள் கதவை திறந்து விட்டாள். பஞ்சவன் தான் நின்று இருந்தான்.
“ரெடியா? காருக்கு சொல்லிட்டேன்” கேட்டான்.
“ஒரு பைவ் மினிட்ஸ்” என்றாள்.
“தட்ஸ் ஓகே. பேபி முழிச்சுட்டானா?”
“ம்ம் வாகர்ல உட்கார வச்சு இருக்கேன்”
“சரி நான் தூக்கிக்கிறேன். நீ கிளம்பி வா” என்று பிள்ளையை தூக்கிக் கொண்டு போய் விட்டான்.
இந்த ஒரு மாதத்திலே மகராவின் தலை விதி மாறிப் போனது.