அப்படியே மாலை நேரம் கடக்க மணி ஏழு மணிக்கு பாட்டிலை எடுத்துக் கொண்டு யுவன் வெளியே கிளம்ப,
“நீ பிள்ளையை பார்த்துக்க... நான் போறேன்” என்று வாங்கிக் கொண்டு போக, போனவனை ஒரு கணம் பார்த்தவன் பின் உதட்டை பிதுக்கிக் கொண்டு உள்ளே வந்து விட்டான்.
பஞ்சவன் மகராவின் வீட்டு கதவை தட்டினான். இந்த முறை உடனடியாக திறந்து இருந்தாள்.
அவளிடம் எதுவும் பேசாமல் பாட்டிலை மட்டும் அவன் நீட்டினான். இப்பொழுதும் பாட்டிலை வாங்கிக்கொண்டு கதவை சாத்தி விட்டாள். தனியாக இருக்கும் பெண்ணின் நிலையில் இதெல்லாம் தவறில்லை என்று புரிந்துக் கொண்டவனுக்கு அவளின் கண்களில் இருந்த கண்ணீர் கண்டு புருவம் சுறுக்கினான்.
மகராவின் கசங்கிய முகத்தை பார்த்து “என்னாவாக இருக்கும்..?” என்று மனம் கேள்வி கேட்டாலும் அதை கண்டு கொள்ளாமல் தவிர்த்து விட்டான். அப்படியே நகர்ந்து உப்பரிகையின் பக்கம் நின்றுக் கொண்டான். இரவு பொழுதில் மதராஸ் பட்டினம் விளக்கு வெளிச்சத்தில் மிதந்துக் கொண்டு இருப்பது போல இருந்தது.
“ஹப்பா எவ்வளவு டூவீலர், எவ்வளவு கார்... எவ்வளவு ட்ராபிக்” என்று முணகிக் கொண்டான். அவன் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தின் உள் பக்கம்.. கிராமம்... படிப்பு கூட அங்கே தான். பயிர்த்தொழில் தான் அதிகம் அவன் பார்த்தது.
இப்பொழுது கூட இந்த ஐடி நிறுவனத்தின் வேலையை தூக்கி போட்டுவிட்டு எப்பொழுது ஏர்கலப்பையை பிடிப்போம் என்று இருக்கிறது.
ஆனால் அதை அவனால் செய்ய முடியாது. அதை எண்ணி பெருமூச்சு விட்டவனின் காதை மெல்லிய கொலுசின் ஒலி நிறைத்தது.
திரும்பி பார்த்தான்.
அவனை நோக்கி மகரா தான் வந்துக் கொண்டு இருந்தாள். அவளின் முகத்தை கூர்ந்து பார்த்தான்.
முன்பிருந்ததை விட இப்பொழுது அவளின் முகத்தில் கண்ணீர் தடம் நன்றாகவே தெரிந்தது. என்னவென்று கேட்க மனம் உந்தி தள்ளியது என்றாலும் அவன் அழுத்தமாய் எதுவும் கேட்காமல் அவள் நீட்டிய பாட்டிலை மட்டும் வாங்கிக் கொண்டவன்,
“எவ்வளவு பே பண்ணனும்” என்று கேட்டான்.
அவன் சொன்னது புரியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளின் பார்வையில் இல்லாத புரிதலை கண்டவன் “ப்ச்...” என்று அலுத்துக் கொண்டவன்,
“நீ குடுக்குற மதர் பீடிங்க்கு நான் எவ்வளவு பே பண்ணனும்” கேட்டான்.
“நான் இதை பணத்துக்காக செய்யல சார். என் மன திருப்திக்காக தான் செய்கிறேன். அதனால பணம் குடுத்து அதை அசிங்கப் படுத்தாதீங்க” என்றவளின் குரல் “ங்மன ஞாமன” என்று இருந்தது.
“ஓகே..” என்றவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவளும் அதன் பிறகு வேறு எதுவும் பேசாமல் திரும்பி போக அவளின் முதுகை சில கணங்கள் வெறித்துப் பார்த்தவன் தானும் வீட்டுக்கு போய் விட்டான்.
சிறிது நேரத்தில் வெளியே ஏதோ சத்தம் கேட்க என்ன என்று எட்டி பார்த்தான் யுவன். மகரா அழுதுக் கொண்டு பிள்ளையை தோளில் போட்டுக் கொண்டு கீழே ஓடுவது தெரிய
“என்ன ஆச்சு சிஸ்டர்” என்று இவன் குரல் கொடுத்தான்.
“பேபிக்கு ரொம்ப உடம்பு சரி இல்லை ண்ணா. அது தான் மருத்துவமனைக்கு போறேன்” என்று அந்த நிலையிலும் அவனுக்கு பதில் சொல்லி விட்டு போக அதை உள்ளிருந்து கேட்டுக் கொண்டு இருந்தவனுக்கு என்னவோ போல் ஆனது.
அவளோட பிள்ளைக்கு உடம்பு சரியில்லை என்றாலும் தன் பிள்ளைக்கு பாலை கொடுத்து விட்டு போனவளை எண்ணி மனம் கனத்துப் போக, வெளியே வந்து பார்த்தான் பஞ்சவன்.
ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்துக் கொண்டு இருந்தாள். அது ஸ்டார் ஆவேனா என்று சதி செய்துக் கொண்டு இருந்தது.
அதை விட உடம்பு சரி இல்லாத பிள்ளையை தனக்கு முன்புறம் இருந்த பேபி பேக்கில் போட்டுக் கொண்டு இருந்தவளை காணுகையில் என்னவோ செய்ய, அவசரமாய் மேல் சட்டையை எடுத்து அணிந்துக் கொண்டவன்,
“யுவன் பேபிய பார்த்துக்க... வந்திடுறேன்” என்றவன் கீழே இறங்கி ஓடினான் பஞ்சவன்.
“நகரு” என்றவன் அவளது கையில் இருந்து வண்டியை வாங்கிக் கொண்டவன் வேக வேகமாய் இரண்டு உதை கொடுத்தான். அடுத்த நிமிடம் ஸ்டார்ட் ஆகிவிட,
“தேங்க்ஸ் சார்” என்று வண்டியை வாங்க வர,
“இல்ல நீ இருக்கிற நிலையில் வண்டியை உன்னால ஓட்ட முடியாது. அதனால நீ இரு. நான் ஓட்டுறேன்” என்றான். அவளுக்கும் அது மிகவும் தேவையாக இருக்க, தோளில் இருந்த துண்டால் பிள்ளையை பேக்கில் இருந்து தூக்கி அதில் பாதுகாப்பாக சுற்றிக் கொண்டவள் அவனின் பின்னோடு ஏறி அமர்ந்துக் கொண்டாள்.
கண்கள் எல்லாம் கலங்கிக்கொண்டு வந்தது. ஆதரவுக்கு யாரும் இல்லாமல் கை பிள்ளையை வைத்துக் கொண்டு அவள் படும் அவஸ்த்தைகளை பார்த்து பஞ்சவனுக்கு மீண்டும் மனம் கனத்துப் போனது. ஒரு வேலை பிள்ளைக்கு உடம்பு முடியாத காரணத்தால் தான் இன்னைக்கு வேலைக்கு தாமதமாக வந்து இருந்தாளோ என்று எண்ணிக் கொண்டான்.
“லொகேஷன் சொல்லு...” என்றவன் தன் போனில் மேப்பை ஓபன் செய்து வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.
சிறிது நேரத்திலே மருத்துவமனை வந்து விட பிள்ளையை தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினாள். வண்டியை நிறுத்தி விட்டு அவனும் பின்னாடியே ஓடினான்.
குழந்தையை வாங்கி பரிசோதித்த மருத்துவர்,
“பேபிக்கு ஒன்னும் இல்லை... கொஞ்சம் மூச்சு திணறல் தான். அவனை குளிர்ச்சியா வைக்க ட்ரை பண்ணுங்க. தென் நாசில் யூஸ் பண்ணுங்க. பெட்டர்” என்றார்.
அதன் பிறகே நிம்மதியானது அவளுக்கு. அதற்குள் அவளது கண்கள் எல்லாம் சிவந்து போய் இருந்ததை பார்த்தவனுக்கு தனிமையின் கொடூரம் நன்றாகவே புரிந்தது.
அதன் பிறகு குழந்தையை தூக்கிக் கொண்டு இருவரும் வீட்டுக்கு வந்தார்கள். சாவியை அவளிடம் நீட்டினான். அதுவரை எதுவும் பேசாமல் இருந்தவள்,
“தேங்க்ஸ் சார்” என்றாள் மனதில் எழுந்த நன்றி உணர்வோடு.
அதற்கு வெறுமென தலையை மட்டும் அசைத்தவன் தன் வீட்டுக்குள் நுழைந்துக் கொண்டான்.
“என்னடா ஆச்சு?” கேட்ட யுவனுக்கு சுருக்கமாக விளக்கம் சொன்னவன் தன் குழந்தையை கையில் அள்ளிக் கொண்டான்.
“பாவம்டா அந்த பொண்ணு தனியாளா இருக்கு... உதவிக்கு கூட யாரும் இல்லை... இப்படியும் சில பொண்ணுங்க இருக்கிறதுனால தான் மழை எல்லாம் இன்னும் பொய்த்துப் போகாம இருக்கு” என்று யுவன் சொன்னான். பஞ்சவன் காது கொடுத்து கேட்டானே தவிர தன் கருத்தை பகிரவில்லை.
அடுத்த நாள் அலுவலகத்திற்கும் தாமதமாக வந்தாள். வந்தவளிடம்,
“என்னம்மா இது இப்படி பண்ற...? நீ எப்பவும் உன் விசயத்துல பஞ்சுவலா இருப்பியே இப்போ என்ன ஆச்சு..? புதுசா வந்த ப்ராஜெக்ட் லீடர் கிட்ட இப்போ என்ன சொல்லி சமாளிக்கிறது” என்று மேனேஜெர் புலம்ப,
“குழந்தைக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல சார்.. அதனால தான்” என்று இவள் தயங்க,
“ப்ச் இதெல்லாம் ஒரு காரணமா எப்படி ம்மா அவர்கிட்ட நான் சொல்ல முடியும். டீம் லீடர் நீங்களே இப்படி பொறுப்பு இல்லமா இருந்தா உங்களுக்கு கீழ இருக்கிற டீமுக்கு எப்படி பொறுப்பு இருக்கும்” என்று அவர் கத்த, மகரா தலையை நிமிர்த்தவே இல்லை.
மருத்துவமனைக்கு போயிட்டு வந்த பிறகு பிள்ளைக்கு கொஞ்சம் பரவாயில்லை தான். ஆனால் அவன் தூங்கவே இல்லை இரவு முழுவதும்.
அனத்திக் கொண்டே இருந்தான். அவளும் தொட்டிலில் போட்டு ஆட்டிப் பார்த்தாள். நெஞ்சில் போட்டு தட்டிக் கொண்டுத்தாள். மடியில் போட்டு நெஞ்சை நீவி விட்டுப் பார்த்தாள். ம்ஹும் எதற்கும் அவளது மகன் அசையவில்லை.
இறுதியாக விடியல் ஆரம்பித்த பிறகு தான் தூங்கவே செய்தான். மகராவுக்கு கண்களை சுழட்டிக் கொண்டு தூக்கம் வர எழுந்து முகத்தை கழுவியவள் நேற்றைக்கு எடுத்த நோட்ஸ் எல்லாவற்றையும் படித்து என்ன மாதிரி டிசைன் செய்வது என்று யோசித்து அதை மேலோட்டமாக வரைந்து எடுத்து வைத்தவள் நிமிர்ந்து பார்க்க மணி எட்டாகி இருந்தது.
“அச்சோ..” என்று அதிர்ந்தவள் வேக வேகமாய் உணவு செய்தவள் குளித்து விட்டு பிள்ளைக்கு உணவு ஊட்டி விட, வெளியே கதாவு தட்டப்பட்டது.
வெளியே பஞ்சவன் நின்றிருந்தான். வேகமாய் அவனது கையில் இருந்த பாட்டிலை வாங்கிக் கொண்டு உள்ளே போய் விட்டாள்.
அவனை இப்பொழுதும் உள்ளே கூப்பிட வில்லை. ஆனால் கதவை சாற்ற வில்லை. அதை கண்டு பெரிய மாற்றம் தான் என்று எண்ணினான்.
அறைக்குள் நுழைந்துக் கொண்டவள் சிறிது நேரத்தில் வந்து அவனிடம் பாட்டிலை கொடுத்தாள்.
“பேபி எப்படி இருக்கிறான். இரவு எல்லாம் தூங்குனானா?” கேட்டான்.
“இல்ல நாலு மணிக்கு மேல தான் தூங்கினான்... இப்போ வரை தூங்கிட்டு தான் இருக்கிறான்” என்றாள்.
“ஓ...!” என்றவனுக்கு வேறு எதையும் பேச தோன்றவில்லை. போய் விட்டான்.
அலுவலகம் கிளம்பி வெளியே வர, அப்பொழுது தான் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள். எப்பொழுதும் போல பிள்ளை அவளின் நெஞ்சோடு கட்டி இருந்தாள்.
“பொறுப்புகளை சுமக்கும் தோள்களுக்கு தான் இன்னும் கூடுதல் சுமை வந்து சேரும்...” என்று எண்ணியவன் யுவனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டான்.
பேபியை கரச்சில் விட்டுவிட்டு அலுவலகம் வர கொஞ்சம் தாமதமாகி இருந்தது. அதற்குள் பஞ்சவன் கான்பரென்சை ஆரம்பித்து இருந்தான்.
நேற்று போலவே இன்றைக்கும் அவள் தாமதமாக வந்து நின்றாள். அவனை ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை. கண்டபடிக்கு திட்டுவான் என்று எண்ணி இருந்தாள். அவனோ நாளையில இருந்து சீக்கிரம் வரலன்னா இந்த டீம்ல இருந்து தூக்கப்படும் என்று அடி மடியிலே கை வைத்து விட்டான். அதில் அவளது கண்கள் எல்லாம் கலங்கிப் போனது.
ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் தலையை மட்டும் ஆட்டியவள் தன் இடத்தில் போய் அமர்ந்து விட்டாள்.
“நேற்று சொன்ன கான்சப்ட்டுக்கு எல்லோரையும் டிசைன் ரெடி பண்ண சொன்னனே.. செய்துட்டீங்களா?” என்று கேட்க எல்லோரும் தலையை ஆட்டினார்கள்.
“ஓகே குட்... ஒவ்வொருத்தங்களா உங்க டிசைனை ப்ராஜெக்ட் பண்ணுங்க” என்றவன் ஓவல் ஷேப்பில் இருந்த மேசையை சுற்றி போட்டு இருந்த நாற்காலியில் ஒன்று காலியாக இருக்க அதில் போய் அமர்ந்துக் கொண்டான். அவனுக்கு வெகு அருகாமையில் தான் மகரா அமர்ந்து இருந்ந்தாள்.
எல்லோரையும் எக்ஸ்ப்ளைன் பண்ண சொன்னவன் மகராவை மட்டும் எதுவும் செய்ய சொல்லி சொல்லவில்லை.
இறுதியாக கான்ப்ரன்சை முடிக்க இருந்த நேரம்,
“ரெடி பண்ணி வச்சு இருக்கியா..?” என்று யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் அடிக் குரலில் அவளிடம் கேட்டான் பஞ்சவன்.
அவள் தலையை ஆட்ட,
“ஓகே நெக்ஸ்ட் நீ போய் எக்ஸ்ப்ளைன் பண்ணு” என்றான்.
தலையை மட்டும் ஆட்டினாள். அவள் அப்படி தலையை ஆட்டும் பொழுது அழகாய் ஆடிய அவளின் சிமிக்கியை ஒரு பார்வை பார்த்தான். பின் சுதாரித்து தன் கவனத்தை மாற்றிக் கொண்டான்.
மகரா எழுந்து தான் செய்த டிசைனை எ டு இசெட் வரை விளக்கமாக சொன்னாள். அவள் எக்ஸ்ப்ளைன் பண்ணும் விதம் பார்த்து வியந்துப் போனான். அதை விட அங்கு இருந்த அத்தனை பேரும் அழகாய் மார்டனாய் இருக்க இவள் மட்டும் புடவையில் நீண்ட கூந்தலோடு இருக்க கண்டு சிரிப்பு வந்தது.
“ஐடி வேலைக்கு குடும்ப குத்து விளக்கா வந்து இருக்கா...” என்று இதழ் விரித்தான் கமுக்கமாய்.
அவளின் நீண்ட கண்களில் தீட்டி இருந்த அஞ்சனம் அவளின் கண்களை இன்னும் அழகாக காட்டியது போல் தோன்றியது..
“ப்ச் என்ன இது யாரோ ஒரு பெண்ணை இப்படி சைட் அடிக்கிறேன்” என்று முணகினான்.
“ம்ஹும்... நானும் சைட் அடிப்பென்றது இவ்வளவு நாள்கள் கழித்து இப்போ தான் உணருகிறேன்” என்று தனக்குள் அதிர்வாக எண்ணிக் கொண்டவன் மகராவை நிதானமாக அளவிட்டான்.
அவளின் அமைதியான அடக்கமான பாங்கு அவனை வெகுவாக ஈர்த்தது. ஆனால் தான் ஒரு பிள்ளைக்கு அப்பன் என்று நினைவுக்கு வர தன் பார்வையை மாற்றிக் கொண்டான்.
எல்லாரோடதையும் விட அவளின் டிசைன் நன்றாக இருக்க பஞ்சவன் அவளை பாராட்டினான்.
அதோடு தான் செய்து இருந்த டிசைனை அவர்களுக்கு சொல்ல எல்லோருமே வியந்து போய் பார்த்தார்கள். ஏனெனில் மகரா செய்து இருந்ததும் பஞ்சவன் செய்து இருந்ததும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான். ஆனால் சின்ன சின்ன தவறுகள் இருந்து மகரா செய்து இருந்ததில் அவ்வளவே.
“இந்த டிசைன்ஸ் அத்தனையும் கஸ்டமர் கிட்ட போகும். யாரோடது அவங்களுக்கு பிடிச்சு இருக்கோ அது அப்ருவல் ஆகும்... தென் இன்னைக்கு ஓவர். இன்னைக்கு எவினிங் ஆர் நைட் எல்லோருக்கும் மெயில் வந்திடும்” என்று சொல்லி விட்டு அவன் போக அவனுக்கு பின்னாடியே மகராவும் வந்தாள் அடித்து பிடித்துக் கொண்டு.
கொஞ்சம் தாமதமாக போனாலும் அவளின் பிள்ளை கத்தி அழுது ஊரை கூட்டுவானே எனவே அடித்து பிடித்துக் கொண்டு வெளியே வந்தாள். அவனை பீட் பண்ணி வரவும் செய்து விட்டாள்.
அவள் ஓடிய காரணம் அவனுக்கு தான் நன்றாகவே தெரியுமே அதனால் அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
க்ரச்சுக்கு போய் குழந்தையை அழைத்துக் கொண்டு வீடு வர பஞ்சவன் வந்து இருந்தான் வீட்டுக்கு.
அவர்களது வீட்டை தாண்டி தான் இவளது வீட்டுக்கு போக வேண்டும். கதவு திறந்து இருக்க குழந்தையின் சத்தம் கேட்டது. வீல் வீல் என்று அது அழுதுக் கொண்டு இருக்க
“ஏன் அழுகுறான்னு தெரியலையே...” என்று யுவனின் குரல் கேட்க,
“பார்க்கலாம் இரு...” என்று பஞ்சவன் பிள்ளையை ஆராய்வது தெரிந்தது.
அவர்களை கடந்து தன் வீட்டு கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் மகரா.
“என்ன ஆச்சுன்னு தெரியலையே...” என்று அவளின் மனம் அடித்துக் கொண்டது.