Notifications
Clear all

அத்தியாயம் 21

 
Admin
(@ramya-devi)
Member Admin

ராஜி பேசிய பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த உமையவள் தன் கணவனின் மன மகிழ்வுக்காக கிளம்பி வெளியே வந்தாள். அரக்கு நிற புடவை.. அங்கும் இங்குமாக ஒற்றை இலை தங்க சரிகள் சேர்த்து இருக்க பார்க்கவே அழகாக இருந்தது அந்த புடவை. அதை எடுத்து உடுத்திக் கொண்டு கண்களுக்கு லேசாக மையிட்டு, இதழ்களில் இருக்கும் காயம் மற்றவர்களின் பார்வைக்கு படமால் இருக்க மெல்லிய பிங்க் கலர் லிப்ஸ்டிக் போட்டு அதற்கு மேல் லிப்க்லாஸ் போட்டு சரி செய்துக் கொண்டவள், முகத்திற்கு லேசாக ஒப்பனை செய்து தலையில் காலையில் உத்தமன் வாங்கிக் கொடுத்த பூவை சூடிக் கொண்டாள்.

காதோரம் வெள்ளை மற்றும் அரக்கு வண்ண கற்கள் வைத்த தோடும், அதற்கு தோதாக அதே வடிவில் நெஞ்சில் வந்து விழுந்த சங்கிலியில் டாலர் வைத்து அணிந்துக் கொண்டாள்.

கையிலும் அதே போல அரக்கு வண்ண வளையல்களோடு மெல்லிய தங்க வளையல்களை சேர்த்து அணிந்துக் கொண்டாள்.

கை பையை எடுத்துக் கொண்டு அறையை சாற்றிய நேரம் உத்தமனிடம் இருந்து போன் வந்தது.

“ஹேய் கிளம்பிட்டியாடி...” என்று கேட்டான்.

“ம்ம்... கிளம்பிட்டேன்ங்க... அவ்வளவு தான் ஆச்சு...” என்றாள்.

“என்னன்னு தெரியல... கேப் புக் ஆகல. நீ கார் எடுத்துட்டு வந்திடுடி..”

“விளையாடாதீங்க மாமா... நான் கேப்லையே வரேன்” என்றாள்.

“ப்ச்.. படுத்தாதடி... ஏற்கனவே நேரமாச்சு. நீ கார்ல வந்திடு...” என்று வைத்து விட்டான்.

“அது தானே எது சொன்னாலும் காதில வாங்குறதே இல்லை...” முணகிக் கொண்டவள், மறுபடியும் உள்ளுக்குள்ள போய் கார் சாவியை எடுத்துக் கொண்டு வந்தாள் உமை.

“ஏற்கனவே வீட்டுல ஒரு குண்டு வெடிச்சி இருக்கு. இதுல நான் கார ஓட்டிக்கிட்டு போனா அவ்வளவு தான்...” என்று முணகிக்கொண்டாள். ஏனெனில் உத்தமன் இது வரை காரை யாருக்கும் குடுத்ததே இல்லை. எல்லோரையும் காரில் ஏற்றிக் கொள்வான். ஆனால் ஓட்டுவது அவன் மட்டும் தான்.

புல்லா ஆட்டோமேட்டிக் கார். அதனால் பெரிதாக எந்த சிரமும் இல்லை. ஏற்கனவே உமைக்கு கார் ஓட்ட சொல்லிக் கொடுத்து இருந்தான்.

அவனை பொறுத்த வரையில் எது எது அவனுக்கு உரிமை உள்ளதோ அது அத்தனைக்கும் உரிமை உள்ளவள் உமையவள் என்கிற எண்ணம் அழுந்த பதிந்து இருந்தது. அதனால் மற்றவர்களிடம் காரை கொடுக்க மனம் இல்லாதவனுக்கு தன்னவளிடம் மட்டும் முழு உரிமை கொடுத்து ஓட்ட சொல்லி பழகினான்.

பழைய வாடகை காரில் பழகுறேன் என்றவளின் சொல்லை கேட்காமல் நம்ம கார் இருக்கும் பொழுது நீ எதுக்குடி வெளியே வாடகை கார்ல ஓட்டி பழகணும். அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... என்று அவளுக்கு கார் ஓட்ட எல்லா நுணுக்கங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்தான்.

அதை எண்ணிக்கொண்டே கார் மீது இருந்த கவரை நீக்கி விட்டு அதன் ஓட்டுனர் இருக்கையில் அமர அவளின் ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கொண்டு இருந்த ராஜிக்கு பத்திக் கொண்டு வந்தது...!

ஈஸ்வரிக்கு தாங்கவே முடியவில்லை. உடமைபட்டவளாய் உமையின் ஒவ்வொரு செயலும் இருப்பதை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதெப்பாடி இத்தனை வருசமா இந்த வீடு எங்க கை பிடியில தானே இருந்தது. இப்போ வந்தவ வந்து இரண்டு மாசம் கூட ஆகல அதுக்குள்ள இந்த வீட்டையே வளைத்து அவ கையில வச்கிகிட்டாளே என்று வயிற்றெரிச்சல் அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டார்கள். வேகமாய் ஓடிவந்து உமையின் கையிலிருந்த கார் சாவியை பிடிங்கிக் கொண்டார் ஈஸ்வரி.

“ஏய் என்ன தைரியம் இருந்தா இந்த காரை நீ ஓட்டுவ... நேத்திக்கு வந்துட்டு இன்னைக்கு இந்த வீட்டையே வளைச்சி போட பார்க்குறியா? அது நான் இருக்கிற வரை நடக்காதுடி... உன்னை முதல்ல இந்த வீட்டை விட்டு துரத்தி அடிக்கணும்டி...” கூப்பாடு போட்டார். அவரின் வார்த்தையில் மனம் புண் பட்டாலும் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் இரு கரத்தையும் நெஞ்சில் கட்டிக் கொண்டு அவரையே ஆழ்ந்து பார்த்தாள் உமையவள்.

“என்னடி இப்படி பார்த்தா நான் பயந்துடுவனா..? என் பொண்ணு வாழ்க்கையை நாசமாக்கிட்டு நீ மட்டும் எப்படி நல்லா வாழ்ந்துடுறன்னு நான் பார்க்கிறேன்” வயிற்றெரிச்சலில் கொதித்துக் கொண்டு பேசினார்.

அவருக்கு பதில் பேச விருப்பம் இல்லாமல், உத்தமனுக்கு போனை போட்டு,

“காருக்கு இன்னொரு ஸ்பேர் கீ இருக்காங்க?” என்று கேட்டாள்.

“ஏன்டி என்ன ஆச்சு. கார் கீ அங்க டேபிள் மேல தானே வச்சு இருந்தேன். எதுக்கு ஸ்பேர் கேக்குற” என்றபடியே தன் டூ வீலரை இயக்கினான்.

“ம்ம்.. உங்க அம்மா அந்த கீயை எடுத்து வச்சுக்கிட்டு தர மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்க. அது தான் ஸ்பேர் இருக்கான்னு கேட்டேன்...”

“ப்ச்... இவங்களோட...” என்று சளித்தவன், “போனை ஸ்பீக்கர்ல போடுடி...” என்றான். போனை ஸ்பீக்கர்ல போட்டாள்.

“ம்மா உங்களுக்கு என்ன பிரச்சனை... எதுக்கு உமை கிட்ட இருந்து சாவியை பிடுங்கி வச்சு இருக்கீங்க.. நான் தான் அவளை கார் எடுத்துட்டு வர சொன்னேன். அவக்கிட்ட அந்த சாவியை குடுங்க” என்றான் அழுத்தமாக.

“இல்லடா தம்பி நீ இந்த காரை யாரையும் ஓட்ட கூடாதுன்னு சொல்லி இருக்கல்ல..” என்று அவர் பம்மி பதுங்க,

“வேற யாரையும் தான் சொன்னேன். உமையை சொல்லல... உமையும் நானும் வேற வேற இல்லை. இங்க எனக்கு நேரம் ஆகுது. சீக்கிரம் அவக்கிட்ட சாவியை குடுங்க...” என்றான் கடுப்பாக..

ஈஸ்வரிக்கு வேறு வழியில்லாமல் அவளிடம் சாவியை வீசிவிட்டு அங்கிருந்து போய் விட்டார் கடுப்புடன்.

போனவரை திருத்தவே முடியாது... என்று பார்த்து சிரித்தவள் காரை கிளப்பிக் கொண்டு உத்தமன் சொன்ன இடத்துக்கு வந்து சேர்ந்தாள். காரில் ஏறி ஒய்யாரமாய் போனவளை வஞ்சக கண்ணோடு பார்த்துக் கொண்டு இருந்தாள் ராஜி.

உமையின் ஆளுமையும், திடமும், நிமிர்வும், கண்டு அவளின் உள்ளுக்குள் பெரும் புகைச்சல். போதாதற்கு கார் வேற ஓட்டுகிறாள் என்று காண்டு வந்தது. ஏனோ உமைக்கு முன்பு தன் நிலை இன்னும் கீழே சரிந்தது போல உணர்ந்தாள்.

போட்டி இருக்க வேண்டும். ஆனால் பொறாமை இருக்க கூடாது. அப்படி இருந்தால் அந்த பொறாமையே தன்னை அழித்து விடும் என்று தெரியாமல் உமையின் மீது தேவையே இல்லாமல் பொறாமையை வளர்த்துக் கொண்டாள் ராஜி.

இங்கு ராஜி மட்டும் அந்த குணத்தை கொண்டு இருக்கவில்லை. நாத்தனாராய் இருக்கும் சில பெண்கள் வீட்டுக்கு வந்த மருமகள்களை இப்படி தான் பார்க்கிறார்கள்.

நாத்தனாருக்கு நல்ல விளக்கமே நாத் துணையார் என்பது தான். அதாவது புகுந்த வீட்டுக்கு போற பெண்களுக்கு பேச்சு துணைக்கு ஆள் யாருன்னு பார்த்தா கணவன் மார்களின் கூட பிறந்த சகோதரியை தான் பார்ப்பார்கள். சகோதரி இல்லாத வீட்டில் பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுக்கவே யோசிப்பார்கள் பலர். இப்பவுமே அப்படி யோசிப்பவர்கள் உண்டு.

ஆனால் நாத்துணையார் பேச்சு துணைக்கு இல்லாமல் போய் போட்டி பொறாமையோடு வளம் வருகிறார்கள். என்ன செய்வது... ஆனால் ஒரு சிலர் அதிலும் விதிவிலக்கு. வந்த பெண்ணை தங்கள் மகளாகவும், சகோதரியாகவும் பார்த்துக் கொள்கிறவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். அங்கும் வெடிப்புகளும் கருத்து மோதல்களும் இருக்க தான் செய்யும். ஆனாலும் அதையும் தாண்டி ஒரு நெருக்கம் அவர்களுக்குள் இழையோடும்.

என் அண்ணி.. என்கிற உரிமை இருக்கும். ராஜிக்கு அந்த உரிமை எண்ணம் எல்லாம் எதுவும் இல்லாமல் வெறும் பொறாமை குணம் மட்டுமே அதிகம் முகிழ்த்து இருந்தது.

பொறாமை தன்னையே அழித்து போடும் கருவி என்று தெரியாமல் நெஞ்சில் அதற்கு இடம் கொடுத்து வளர்த்து வருகிறாள் ராஜி. பார்ப்போம் பொறாமையிலிருந்து மீள்வாளா இல்லை பொறாமையிலே அழிந்து போவாளா என்று..

ஷாப்பிங் வந்தவர்கள் முதலில் இளகுவான ஆடைகளை முதலில் பார்த்தார்கள். அதன் பிறகு வெற்றி வந்ததுக்கு பிறகு மதிய உணவை முடித்துக் கொண்டு மீண்டும் ட்ரிப்புக்கு தேவையானவற்றை வாங்கலாம் என்று முடிவு செய்துக் கொண்டார்கள்.

அதன் படி அவர்கள் கொஞ்சம் வாங்கி முடித்த போது வெற்றி வந்து விட அவனோடு நேரத்தை செலவிட்டார்கள் இருவரும்.

“வீட்டுக்கு வந்து இருக்கலாமே வெற்றி..”

“இல்லங்க மாமா... இங்க பக்கத்துல ஒரு மீட்டிங். அதை அட்டென் பண்ணிட்டு ஈவினிங் ரிப்போர் சப்மிட் பண்ணியாகணும். அதனால தான் உங்க ரெண்டு பேரையும் இங்க வர சொன்னேன். இல்லன்னா வீட்டுக்கே வந்து இருப்பேன்” என்று சொன்னான்.

“பரவாயில்லை. அடுத்த முறை வீட்டுக்கு வா... எல்லோரும் சந்தோசப் படுவாங்க இல்லையா?” என்று பெரியவனாய் நடைமுறை வழக்கத்தை எடுத்து சொன்னான் உத்தமன்.

“கண்டிப்பா மாமா...” என்று உடனடியாக ஒப்புதல் கொடுத்தவன் ரூபாவதி செய்துக் கொடுத்த இனிப்புகளையும் வாங்கி வந்த பழங்களையும் கொடுத்தான். அதன் பிறகு மூவரும் ஒருவருக்கு ஒருவர் பேசியபடி மத்திய உணவை சாப்பிட்டு முடித்தார்கள்.

“சரிங்க மாமா.. நீங்க ட்ரிப் போயிட்டு அப்புறமா வீட்டுக்கு வாங்க.. அம்மாவும் அப்பாவும் உங்ககிட்டே பேசுறேன்னு சொன்னாங்க... வந்தா அப்படியே ஜாலியா நம்ம கிராமத்துக்கு போயிட்டு வரலாம்” என்றான் அழைப்பாய்.

“ம்ம்... நான் செட்யுள் பார்த்துட்டு சொல்றேன் வெற்றி. கண்டிப்பா போகலாம்..” ஒப்புதல் கொடுத்தான் உத்தமன்.

“அப்போ சரிங்க மாமா.. நான் கிளம்புறேன்...” என்றவன், தன் தங்கையிடம் ஒரு கட்டு பணத்தை கொடுத்தான்.

“இது எதுக்கு அண்ணா.. அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..” என்று உமை சங்கடப் பட்டாள்.

“பரவாயில்ல வாங்கிக்கடா... செய்யிறது எங்க கடமை. அதை மகிழ்ச்சியா தான் செய்யிறோம்... அங்க போயிட்டு போட்டோஸ் எல்லாம் அனுப்பு...” என்று அவளின் தலையை வருடி விட்டான்.

“அண்ணா...” என்றாள்.

“ப்ச்... அதெல்லாம் ஒண்ணும் சொல்ல கூடாது. கை செலவுக்கு வச்சுக்க... மாமா சொல்லுங்க நீங்க...” என்று உத்தமனையும் துணைக்கு அழைக்க,

சிரிப்புடன் அவன் தலையாட்ட, அதன் பிறகே வாங்கிக் கொண்டாள் உமை. அதில் மனம் நெகிழ்ந்தவன் தன் தங்கை நன்றாக வாழ்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டான்.

“மாமா சுவிஸ்ல இருந்து வரும் போது என்ன வாங்கிட்டு வருவீங்க...” என்று அவனையும் வம்பிழுத்து அவனை கட்டிபிடித்து விடை பெற்றான் வெற்றி. அவனுக்கு சிரிப்புடன் விடைக் கொடுத்த உத்தமன் அதன் பிறகு தன்னவளுடன் நேரத்தை செலவு செய்தான்.

அதுவும் அவன் வாங்கிய ஆடைகளை பார்த்து முகம் அப்பட்டமாய் சிவந்துப் போனது பெண்ணவளுக்கு.

“ரொம்ப ஓவரா இருக்கு ங்க... நான் இதெல்லாம் போடா மாட்டேன்” என்று சிணுங்கினாள்.

“நைட்ல எனக்கு மட்டும் போட்டு காட்டுடி... எவ்வளவு ஆசை தெரியுமா?” என்று அவளின் காதோரம் தன் ஆசைகளை எல்லாம் பட்டியல் போட்டான்.

“அச்சோ போங்க மாமா... சேட்டை சேட்டை... நான் மாட்டேன்” என்று முகம் சிவந்தாள்.

“உனக்கு அந்த சிரமம் எல்லாம் நான் கொடுக்கவே மாட்டேன்டி... நானே போட்டு விடுறேன்...” என்று அதற்கும் உத்தமன் சொல்ல, அதை கற்பனையால் எண்ணி பார்த்தவளுக்கு அச்சோ... என்று வந்தது.. அவனது நெஞ்சிலே இரண்டடி போட்டு தன் நாணத்தை மறைத்துக் கொள்ள பார்த்தாள். ஆனால் அது அவளை விட்டு விலகவே மாட்டேன் என்று பசைப் போட்டு ஒட்டிக் கொண்டது.

அவளின் நாணத்தையும் அதில் விளைந்த சிரிப்பையும் முகத்தில் படர்ந்த விசித்திராங்கத்தையும்(அழகு) பார்த்தவனுக்கு அவளிடமிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை.

“கொல்றடி...” என்று அவளின் முகத்தை இழுத்து தன் நெஞ்சில் புதைத்துக் கொண்டான்.

“அச்சோ எல்லாரும் பார்க்கிறாங்க மாமா..” முணகியவள் அவன் கைக்கு அகப்படாமல் நழுவி நின்றாள்.

“இதுக்கே உன்னை இன்னைக்கு தூங்க விட மாட்டேன்டி...” கடுப்படித்தான்.

“ஆமாம் இல்லன்னா மட்டும் தினமும் தூங்க விட்டுட்டு தான் மறுவேலை பார்பீங்க பாருங்க” நொடித்துக் கொண்டவள் ஸ்வெட்டர் வகைகளை பார்வையிட்டாள்.

அவள் அதை பார்த்துக் கொண்டு இருக்க இவனுக்கு முகம் சுருங்கிப் போனது.

அவளின் காதோரம் நெருங்கி, “எனக்கு பிடிக்காத ஒரு உடைன்னா அது ஸ்வெட்டர் தான்டி... அவசரத்துக்கு உள்ள வரவே முடியல... அதே போல கழட்டவும் முடியல... என்று முறைத்தான்.

“அதனால தான் சாரு நேக்கா ஸ்வெட்டர் வாங்காம எல்லாமே ஷாலா வாங்கி குவிச்சு இருக்கீங்களாக்கும்... கேடி பெல்லோ ப்பா நீங்க” என்று அவனை இழுத்து கொஞ்சினாள். 

“பின்ன என்னடி குளிர் அதிகாமா வைக்கும் போதெல்லாம் நீ பாட்டுக்கு அதை எடுத்து போட்டுகுற.. ஆத்திர அவசரத்துக்கு முடியல...” என்று கடுப்படித்தான். அன்று அவனது கை வண்ணத்தில் அணிந்து இருந்த ஸ்வெட்டர் இரண்டாக கிழிந்து போய் இருந்தது. அந்த அளவுக்கு அதன் மீது வெறுப்பு அவனுக்கு. அதை இன்றைக்கு நினைத்துப் பார்த்தவள் அவனை வம்பிளுக்கவே ஸ்வெட்டர் பக்கம் வந்தாள்.

அவனது முகம் சுருங்கிப் போனதில் அவ்வளவு மகிழ்ச்சி உமையவளுக்கு. அவனை இப்படி சின்ன சின்னதாய் சீண்டி பார்ப்பதில் உமைக்கு அப்படி ஒரு சந்தோசம்.

அவளின் சீண்டலுக்கு தன்வழியில் பதில் சொல்லி அவளை சீண்டி விடுவான் உத்தமன். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை...

பொருத்தம் என்றால் பொருத்தம் அப்படி ஒரு பொருத்தம்... சுவிஸ் ட்ரிப்பும் இனிதாக தொடங்கியது அனைவரின் பொறாமையுடணும். அதையெல்லாம் கண்டுக் சிறிதும் கொள்ளாமல் இணை மகன்றில்கள் ஒருவருக்கொருவர் துணையாக பயணத்தில் ஈடு பட்டார்கள்.

சுற்றிலும் பனி பொழிவு... அதற்கு தோதாய் கமுக்கமாக அறையில் ஹீட்டரை போட்டுவிட்டு பெண்ணவளுடன் ஒன்றிப் போனான் உத்தமன்.

 

Loading spinner
Quote
Topic starter Posted : July 4, 2025 9:13 am
(@sivaranjitha)
Active Member

Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr sis 👌👌👌👌👌

Loading spinner
ReplyQuote
Posted : July 5, 2025 2:15 pm
Admin
(@ramya-devi)
Member Admin

நன்றி மா 😍 

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : July 6, 2025 6:17 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top