சசிதரனும் மதிலாவும் எல்லா பிணக்கும் தீர்ந்து போய் நிம்மதியுடன் ஒருவரில் ஒருவர் கலந்து இருந்தார்கள். இழந்து போன எல்லாவற்றையும் மீட்டுக்கொள்ள மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை காலம் வழங்கி இருக்க அது போதாதா இருவருக்கும்.
தங்களின் வாழ்க்கையை ஒளி பெற செய்துவிட்டார்கள். பிள்ளையை கரங்களில் தூக்கியவன் தான் அதன் பிறகு விடவே இல்லை. அதை பார்த்துக் கொண்டே இருவருக்கும் பாலாற்றி எடுத்துக் கொண்டு வந்து அவர்களுடன் அமர்ந்தாள்.
“ஆமா ரொம்ப நேரமாவே எங்க ஒருத்தரையும் காணோம்.. எங்க போறேன்னு சொல்லிட்டு போனாங்களாங்க...?”
“நான் தான் டிஸ்ட்டபென்ஸ் வேணான்னு மூணு பேருக்கும் சினிமாவுக்கு டிக்கெட் போட்டு துரத்தி விட்டேன். அதோட புதுசா ஒரு மால் ஒண்ணு ஒப்பன் பண்ணி இருக்காங்க... அப்படியே எங்கயும் சுத்தி பார்த்துட்டு வாங்கன்னு சொல்லி இருக்கேன். அது தான் இவ்வளவு நேரமா மூணு பெரும் வீட்டுக்கு வரல..” என்றான்.
“அடப்பாவி இந்த பூனையும் பால் குடிக்குமான்னு மூஞ்சை வச்சுக்கிட்டு செய்தா காரியத்தை பாரேன்” என்று வியந்துப் போனாள் மதிலா..
“இல்ல இது அண்ணன் குடுத்த ஐடியாடி. முதல்ல மனசு விட்டு பேசுங்க. மத்தவங்க யாரும் வீட்டுல இல்லாதபடி பார்த்துக்க சொன்னாரு... அது தான் சரின்னு எனக்கும் பட்டது. சோ எல்லாத்தையும் துரத்தி விட்டுட்டு உன் கூட மட்டும்..” என்று அழகாக புன்னகை செய்தான்.
அவனது புன்னகையை மனமார உள் வாங்கியவள் அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள். மனமெல்லாம் பூரித்துப் போய் கிடந்தது. எந்த வாழ்க்கை தன்னை வஞ்சித்து விட்டது என்று அவளின் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் இறுக தொடங்கியதோ இப்பொழுது அதற்கு எதிர் பதமாய் இளகத் தொடங்கி இருக்கிறது.
அதற்கு முதல் வேலையாக தன் பெரிய கொழுந்தனுக்கு நன்றி சொல்ல எண்ணினாள். ஆனால் அவனிடம் பேச கூச்சம் கொண்டு உமையவளுக்கு அழைத்தாள்.
திடுதிப்பென்று மதிலா அழைத்து நன்றி சொல்லவும் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.
“நீ எல்லாத்தையும் உன் கணவன் கிட்ட கேளு, இல்லன்னா நீ ஊருக்கு வந்ததுக்கு பிறகு நானே சொல்றேன் என்று சொல்லிவிட்டு வைத்து விட்டாள் மதிலா.
அதன் பிறகு தன் கணவனிடம் விடாது தொல்லை பண்ணி என்ன ஏது என்று கேட்டு தெரிந்துக் கொண்டவளுக்கு மனமெல்லாம் நிறைந்துப் போய் கிடந்தது.
“அற்ற குளத்தின் அறுநீர் பறவைபோல
உற்றுழி தீர்வார் உறவல்லர்
அக்குளத்தில் கொட்டியும்
ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உருவார் உறவு...” என்ற பாடலுக்கு உத்தமனை விடவா ஒரு உதாரண புருசனை காட்டி விட முடியும்...
வளம் மிகுந்த குளத்தில் உள்ள மீன்களை எல்லாம் உண்டு வாழ்ந்த நீர்பறவை அக்குளம் வற்றி போன பிறகு வேறிடம் சென்று விடும்.
ஆனால் குளத்தில் இருக்கும் அல்லியும் நெய்தலும் நீர் இருக்கும் போது செழித்து பின் நீர் வற்றிப் போன பிறகு அந்த குளத்தோடு சேர்ந்து அதுவும் காய்ந்துப் போகும். பிறகு அந்த குளத்தில் மறுபடியும் நீர் வரும் பொழுது அல்லியும் நெய்தலும் செழித்து வளரும். அது போல உறவுகள் வாடும் பொழுது அவர்களை விட்டு நீங்காமல் அவர்களின் துன்பம் கண்டு தானும் வாடி பிறகு அவர்கள் மகிழும் போது தானும் மகிழ்வது என்பது தான் சிறந்த உறவு.
இங்கு உத்தமன் இந்த உறவு நிலையை தாண்டி தன்னை சுற்றி இருப்பவர்களின் வாழ்வில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் வாடிப் போனாலும் அதை செப்பணிட்டு சீர்திருத்தி வாழ செய்திருக்கிறான்.
சசிதரனின் வாழ்க்கையை மட்டும் இல்லை ராஜியின் வாழ்க்கையையும் செப்பணிட்டு தருவான் என்பதில் கொஞ்சம் கூட ஐயமில்லை உமையவளுக்கு... இப்படி பட்ட கணவனுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாமே... அவளால் முடிந்தவரை அவனை கொண்டாடி தீர்த்தாள்.
அந்த கொண்டாட்டத்தில் உத்தமன் எவ்வளவு மகிழ்ந்துப் போனான் என்று வரையருக்கவே இயலாது. ஒட்டு மொத்த மகிழ்ச்சியும் அவனிடமே என்பது போல உணர்ந்தான். தன்னை ஒவ்வொரு நிமிடமும் புதிதாக உணரவைத்தவளை அவன் கொண்டாடாமல் விடுவானா என்ன... தன் மனம் போல பெண்ணவளை தீரா நேசத்தில் கொண்டாடி திக்குமுக்காட செய்தான்.
எப்படி ஒரு மாத காலம் சென்றது என்று தெரியவில்லை. ஏதோ கண்ணிமிக்கும் நேரத்தில் முடிந்து விட்டது போலவே இருவரும் உணர்ந்தார்கள். அவ்வளவு நேசம் இருவரிடமும்... ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து சண்டை வந்தால் முட்டிக் கொண்டு என எல்லா உணர்வுகளையும் சரிவர நிர்வகித்தாகள்.
கிளம்பும் நாளும் வந்தது... மன மகிழ்ச்சியுடனே கிளம்பினார்கள் இருவரும். ஏனெனில் இங்கு வீட்டுக்கு வந்த பிறகும் அவர்களுக்குள் இடைவெளி என்பது இருக்காது அல்லவா.. அதனால் பெரிதாக அவர்களிடம் எந்த துன்பமும் இல்லை.
--
இங்கே அடுத்த நாள் நான்கு நாட்களுக்கு தேவையான உடைகளோடு கிளம்பி வந்தார்கள் மதிலாவும் சசிதரனும் பிள்ளையோடு.
அவர்கள் இருவரும் கிளம்பி வந்ததை பார்த்து ராஜியும் ஈஸ்வரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் யோசனையுடன்.
“எங்கடா பெட்டி படுக்கையுடன் கிளம்பிட்ட... இவ வேற கிளம்பி நிக்கிறா?”
“அது ஊட்டிக்கு போறோம்ம்மா.. வர நாலு நாள் ஆகும். டேக்சி வந்திடுச்சு... வரோம்” என்று முன்னறிவிப்பாக எதையும் சொல்லாமல் கிளம்பி கீழே வந்த பிறகு வாய் வார்த்தையாக சொல்லிவிட்டு மனைவி பிள்ளையோடு கார் ஏறி விட்டான் சசிதரன்.
“பாரேன் உன் பிள்ளையின் சாமார்த்தியத்தை... எங்க முன்னாடியே சொன்னா நாம குட்டி கலாட்டா பண்ணி ஆட்டத்தை கலைச்சி விடுவோம்னு எவ்வளவு நேக்கா டேக்சி வந்த பிறகு சொல்றான்...” என்று வயிறு எரிச்சலில் கத்திக் கொண்டு இருந்தாள்.
“ம்கும்.. எல்லாம் அவனை சொல்லணும்டி... அவன் தான் ரூட்டு போட்டு குடுத்து இருப்பான்...” என்று பெரிய மகனை திட்டினார் ஈஸ்வரி.
“இருக்கு வாய்ப்பு இருக்கும்மா நீ சொல்றதும் சரி... இல்லன்னா இந்த கஞ்சபயலாச்சும் இவ்வளவு தூரம் செலவு பண்ணி ஊட்டிக்கு போறதாவது...” என்று அம்மாவும் பொண்ணும் மனம் பொறுக்காமல் உத்தமனையும் சசிதரனையும் கரித்துக் கொட்டினார்கள்.
பெத்த பிள்ளைகளையே மனம் பொறுக்காமல் திட்டுபவர்கள் வாய்த்த மருமகள்களை சும்மாவா விடுவார்கள். அவர்களின் பெற்றோர் முதற்கொண்டு வம்சாவளி முழுவதையும் சொல்லி திட்டி ஆத்தாத்துப் போனார்கள்.
“உன் மகனுங்க எல்லாம் நல்லா தான் இருக்காணுங்க... ஆனா இப்போ என் வாழ்க்கை தான் நாசமா போச்சு... ஆளாளுக்கு சுவிட்சர்லாந்து ஊட்டின்னு ஜாலியா இருக்காணுங்க. ஆனா இங்க என் புருசன் பிள்ளை முகத்தை பார்க்க கூட வழியில்லாம கிடக்குறேன். இது அத்தனையையும் இவனுங்க பண்ணிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி பொண்டாட்டியோட ஊர் சுத்திக்கிட்டு இருக்காணுங்க. என் வாழ்க்கையை அழிச்ச இவனுங்களை நான் சும்மா விட மாட்டன்ம்மா...” என்று கறுவினாள்.
“அடி ஏன்டி நீ வேற... பழி வாங்க போறாளாம்.. முதல்ல உன் புருசனை போய் பாரு. அப்புறம் உன் புருசனோட இங்க வந்து இருந்துக்கிட்டு இவனுங்களை என்ன செய்யலாம்னு யோசிப்போம்” என்று சொன்னார்.
“ம்கும் அந்த ஆள் தான் உன்னை பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டானே... பிறகு எங்க இருந்து அவருக்கிட்ட போறது... ம்மா நீ பேசி பாரேன் உன் மருமகன்கிட்ட.” என்று கெஞ்சினாள்.
“போடி உனக்கு ஒரு வேலையில்லை. உன்னையே பார்க்க விடாதவாரு என்னை சும்மாவா விடுவாரு.. எல்லாத்துக்கும் காரணம் நான்தான்னு என் போன் நம்பரையே ப்ளாக்ல போட்டு வச்சிட்டாரு. நானும் எத்தனையோ முறை அந்த மனுசனுக்கு போன் பண்ணி பார்த்துட்டேன். ம்ஹும்.. ஒண்ணுத்துக்கும் வேலைக்கு ஆகல...” என்றார் ஈஸ்வரி.
இருவரும் பேசிக்கொண்டு இருந்ததை பார்த்த மணிகண்டன், “தும்பை விட்டுட்டு வாளை பிடிச்ச கதையா பண்ணிக்கிட்டு இருக்கீங்க ஆத்தாவும் மகளும்...” என்றார்.
“இந்த பழமொழி பேசுற வேலையெல்லாம் இங்க வேணாம். ஒழுங்கா எழுந்து போய் மார்கெட் போயிட்டு வாங்க சொல்லிட்டேன்... ஏற்கனவே என்ன பண்றதுன்னு தெரியாம உட்கார்ந்து இருந்தா இப்ப தான் பழமொழி பேசிக்கிட்டு திரியிறாரு இந்த ஆளு” என்று கடுப்படித்த ஈஸ்வரி அவரின் கையில் காசையும் பையையும் திணித்து வெளியே துரத்தி விட்டார்.
“இன்னும் இதுங்க என்னென்ன சதி பண்ண திட்டம் போட போகுதுங்களோ...” என்று முணகிக்கொண்டே வெளியே போனார்.
நாலு நாள் என்று ஊட்டிக்கு போனவர்கள் ஒரு வாரம் இருந்து விட்டு வந்தர்கள். வந்தவர்கள் நேரடியாக மதிலாவின் வீட்டுக்கு சென்றார்கள். அங்கு இன்னும் இரண்டு வாரம் இருந்து விட்டு முழுதாக ஈஸ்வரி ராஜியின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்து பத்து நாள் கழித்து உத்தமனும் உமையும் இந்தியா திரும்பினார்கள்.
சொல்லி வைத்தது போல இரண்டு இணைகளும் முன்னும் பின்னும் வர பார்த்துக் கொண்டு இருந்த ஈஸ்வரிக்கு காதில் புகை புகையாய் வந்தது. அதோடு இந்த ஒரு மாசமும் செலவுக்கு முழு தொகை குடுக்காமல் பாதி தொகை தான் உத்தமன் கொடுத்து இருந்தான்.
அதிலே ஈஸ்வரிக்கு இன்னும் பெரும் கோவம் வந்தது. வந்ததும் வராததுமாக அவர் ஆரம்பிக்க பார்க்க மணிகண்டன் தான் அவரை தடுத்து நிறுத்தினார்.
“வந்த உடனே ஆரம்பிக்காத ஈஸ்வரி... நீ இப்ப கேட்டா முழுதுக்கும் ஆப்பு வச்சாலும் வச்சிடுவான்” என்று எச்சரிக்க வாயை மூடிக் கொண்டார் அவர்.
நான்கு பேரின் முகத்திலும் தெரிந்த பூரிப்பில் மகிழ முடியாமல், என் பெண்ணோட வாழ்க்கை இங்கு பட்டு போய் கிடக்கு. ஆனா அந்த வருத்தம் கொஞ்சம் கூட இல்லாம நாலு பேரும் கொட்டம் அடிச்சுட்டு வந்து இருக்காங்க... தங்கச்சின்ற பாசம் கொஞ்சமாச்சும் இருந்து இருந்தா இப்படி இவங்களால இருக்க முடியுமா?
“ச்சீ என் வயித்துலையா இவங்களை பெத்தேன்...” என்று உத்தமமான அம்மாவை போல குமுறிக் கொண்டு இருந்தார்.
ஒரு கண்ணில் சுண்ணாம்பும் இன்னொரு கண்ணில் வெண்ணையும் வைத்துக் கொண்டு இருக்கும் ஈஸ்வரிக்கு எப்பொழுது தான் புத்தி வருமோ தெரியவில்லை...
சிலருடைய பிறவி குணங்கள் எப்பொழுதும் மாறாது என்பதற்கு ராஜியும் ஈஸ்வரியுமே உதாரணம்.
உத்தமன் வந்த சிறிது நேரத்திலே மணிகண்டன் மார்கெட் கிளம்பி சென்றார். அசைவத்தில் எல்லா வகையையும் வாங்கிக் கொண்டு வந்தார்.
மதிலா யாருடைய உதவியும் இல்லாமல் தானே மகிழ்ச்சியுடன் செய்ய அவளுக்கு உதவ வந்த உமையை தடுத்து விட்டு,
“நீ போய் ரெஸ்ட் எடு உமை. உன் கண்ணுலையே தூக்கம் தெரியுது... போ” என்று அவளை உரிமையாக அனுப்பி வைத்தாள்.
“பரவாயில்லை மதிலா.. நானும் கொஞ்சம் உதவி பண்றேன்...” என்று அவளும் அங்கு நின்று வேலை செய்ய ஆரம்பித்தாள்.
இருவரும் கொஞ்சம் பேசியபடியே சமைத்தார்கள். ஆரம்பத்தில் கொஞ்சமே கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் போக போக ஒருவரை ஒருவர் கிண்டல் கேலி பண்ணி பேசி சிரிக்கும் அளவுக்கு நெஞ்ருங்கி இருந்தார்கள் உமையும் மதிலாவும்.
“என்ன நாலு நாள்னு ஒரு வாரம் ஆயிடுச்சு போல ரிட்டேர்ன் வர...” என்று உமை மதிலாவை கேலி பண்ண,
“ஏன் அங்க மட்டும் என்னவாம் ஒரு மாசம்னு சொல்லிட்டு எக்ஸ்ட்ரா பத்து நாள் இருந்துட்டு தானே வந்த...” என்று அவளும் கேலியில் இறங்க,
“என்ன பண்ண வீட்டுக்கு வீடு வாசப்படி தானே...” ஒரே நேரத்தில் இருவரும் சொல்லி சிரிக்க அதை கேட்டுக் கொண்டு இருந்த அம்மாவும் மகளுக்கும் ஆத்திரத்தில் கண்கள் சிவந்துப் போனது.
“எப்படி கொட்டம் அடிக்கிறாங்க பத்தியாம்மா... ஆனா நான் இங்க வாழமா தனியா இருக்கிறதை யாரவது கொஞ்சமாச்சும் கண்டுக்குறாங்களா? இல்ல என்ன ஏதுன்னு தான் ஒரு வார்த்தை கேட்டாங்களா பாரேன். எல்லாரையும் விடு உன் மூத்த மகன் உத்தமன் ஒரு வார்த்தை கேட்டு இருக்கானா பாரேன்... எனக்கு மனசெல்லாம் எரியுதும்மா... மத்த எல்லோரும் சுயநலம் தான். ஆனா உத்தமன் அவன் கூட என்னை ஏதுன்னு பார்க்கல...” என்று ஆத்திரம் போய் வேதனையும் துன்பமும் ராஜியை வாட்டியது.
அவளின் கண் எதிரில் பெண்கள் இருவரும் நன்றாக வாழ்ந்துக் கொண்டு இருப்பதை பார்த்து அவளுக்கு மனம் தாங்கவில்லை. அவளும் பெண் தானே.. மற்றவர்கள் அவர்களது கணவனோடு சேர்ந்து வாழ்வதை பார்த்து மனம் அது பாட்டுக்கு தன் கணவனை தேடியது...
ஆனால் சேர்த்து வைக்க தான் அங்கு யாருக்கும் மனமில்லாமல் போனது.. என்று ராஜியின் உள்ளம் கிடந்து குமுறியது.
போதாதற்கு விருந்து வேறு தடாபுடாலாக நடந்துக்கொண்டு இருக்க ராஜிக்கு சொல்லவே வேண்டாம். கண்களில் கண்ணீர் வராதது ஒன்று தான் குறை.
அதுவுமே இப்பவோ அப்பவோ என்று தழும்பிக் கொண்டு இருந்தது. முயன்று அதை அடக்கிக் கொண்டு பின் பக்கம் தோட்டத்தில் அமர்ந்து இருந்தாள்.
அவளின் வேதனைக்கு இன்னும் பெட்ரோலை ஊற்றுவது போல உத்தமனின் சத்தம் கேட்டது.
“உமை இன்னும் என்னடி பண்ற... வா கொஞ்ச நேரம் தூங்கலாம்” என்று வெளிப்படையாகவே அவளை அழைத்தான். உண்மையாகவே அவன் தூங்க தான் அழைத்தான். ஆனால் ராஜிக்கு தான் அது எதுக்கான அழைப்போ என்று உள்ளம் கொதித்தது.
“பட்ட பகல்னு கூட பார்க்காம கொஞ்சமும் விவஸ்த்தை இல்லாம இப்படியா ஒரு மனுசன் பொண்டாட்டியை கூப்பிடுவான். சரியான பொண்டாட்டி தாசனா இருப்பான்... ச்சீ இவ்வளவு நாளா எப்படி தான் ஒண்டி கட்டையா இருந்தானோ.. ஒரு வேளை வேற எங்காவது போய் இருப்பானோ” என்று தேவையில்லாத குப்பையை எல்லாம் மனதில் போட்டு வைத்தாள் ராஜி.
இவளது இந்த எண்ணம் மட்டும் உமைக்கு தெரிந்தது என்றால் அன்றைக்கு ஒரு கன்னம் வீங்கியது. இன்றைக்கு இரண்டு கன்னமும் வீங்கி போயிடும். அது தெரியாமல் அவள் பாட்டுக்கு பொருமிக் கொண்டு இருந்தாள்.
“பெரிய மாமா கூப்பிடுறாரு பாரு... போ உமை... பிறகு இங்க வந்து தூக்கிட்டு போயிட போறாரு...” என்று சிரித்தாள்.
“சும்மா இருங்க மதிலா... உங்க பெரிய மாமாவது பரவாயில்லை அங்க இருந்த படி சத்தம் தான் குடுக்குறாரு... ஆனா எங்க சின்ன மாமா அங்க இருந்த படி பார்வையாலே உங்களை காலி பண்ணிக்கிட்டு இருக்காரு.. முதல்ல அவரை போய் என்னன்னு கவனிங்க மேடம்...” என்று உமையும் கேலியில் இறங்க கலகலத்து சிரித்த படியே இருவரும் வேலை செய்துக் கொண்டு இருந்தார்கள்.
இருந்த தடைகள் எல்லாம் தகர்ந்துப் போக மடை திறந்த வெள்ளம் போல இருவரிடையே பேச்சு போனது. இரகசிய குரலில் மதிலா ராஜியை பற்றிப் பேச உமை கவலைப் பட்டாள்.
“என்ன சொல்றீங்க மதிலா வரதன் அண்ணாகிட்ட பேசியும் மசியவில்லையா”
“ம்கும் இவ பேசுன பேச்சுக்கு அந்த மனுசன் பாவம் பிள்ளையை வச்சுக்கிட்டு அல்லாடிக்கிட்டு இருக்காரு. அப்ப கூட இவளுக்கு புத்தி வரமா ஆத்தா முந்தானையை பிடிச்சுக்கிட்டு திரியிறா.. என்ன பெண்ணோ.. ஆத்தாகாரி அதுக்கு மேல பிள்ளை வாழ்க்கை இப்படி இருக்கேன்னு கொஞ்சம் கூட உறுத்தாம இருக்குறா... என்னத்தை சொல்ல...” என்று புலம்பினாள்.
“ப்ச்.. அடுத்தவங்களை பார்த்து பார்த்தே தன் வாழ்க்கையை கோட்டை விட்டுக்கிட்டு இருக்காங்க... இப்படி தான் பல பேர்... நம் முதுகில் இருக்கும் அழுக்கு தெரியாமல் மற்றவர்களின் முதுகில் இருக்கும் ஆயிரம் குறைகளை கண்டு பிடித்து பெருசாக்குகிறார்கள்” என்று சொன்ன உமை கணவனின் நச்சரிப்பு தங்காமல் ஒரளவு எல்லாவற்றையும் முடித்து வைத்துவிட்டு மதிலாவிடம் தலையை ஆட்டிவிட்டு போனாள்.
வழியில் கூடத்தில் உட்கார்ந்து இருந்த உத்தமனை எவ்வளவு முறைக்க முடியுமோ அந்த அளவுக்கு முறைத்து பார்த்து விட்டு மேலே சென்றாள்.
முறைத்து பார்த்தவளை அழுத்தமாகவும் உல்லாசமாகவும் பார்த்து கண்ணடித்து இதழ்களை குவித்து முத்தமிட்டவன் “நீ முன்னாடி போனா நான் பின்னாடி வாறன்...” என்று விசில் மூலம் பாட்டு பாடியபடி எழுந்துக் கொண்டான் உத்தமன்.
அண்ணன் அந்த பக்கம் போன பிறகு மடியில் இருந்த குழந்தையை பாதுகாப்பாக கீழே விளையாட விட்டவன் வேகமாய் அடுப்படிக்குள் நுழைந்துக் கொண்டான் சசிதரன்.
“தம்பியை முன்னாடி வச்சுக்கிட்டே என்னென்ன வேலை எல்லாம் பார்த்து வைக்கிறீங்க... அடங்கவே மாட்டீங்களா மிஸ்டர் உத்தமன்” என்று பல்லைக் கடித்தாள்.
“என்னடி பேர் எல்லாம் சொல்ற...” என்று அவளின் முகத்தில் கவிழ்ந்தவன்,
“இதுவும் நல்லா தான் இருக்கு. ஆனாலும் நீ மாமா சொல்லுடி...” என்று அவளுடன் இளைய, அவனை பிடித்து படுக்கையில் தள்ளிவிட்டவள்,
“கிட்ட வந்தா கொன்னுடுவேன் உங்களை... மதிலா எப்படி தெரியுமா கிண்டல் பண்றாங்க... மானமே போச்சு போங்க...” என்று சிணுங்கினாள்.
“இதென்னடி புது கதை... வீட்டுக்கு வீடு வாசப்படி தானே... நான் இந்த பக்கம் படி ஏறுன உடனே என் தம்பி சமையல் கட்டுக்கு போய் விட்டான் தெரியுமா? நான் தான் லேட்டு...” என்று அவளை எட்டி பிடிக்க பார்த்தான் உத்தமன்.
Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr sis 👌👌👌👌👌👌👌