தன் முன் நீட்டிக் கொண்டு இருந்த ட்ரெயின் டிக்கெட்டுகளை ஒரு பார்வை பார்த்த மதிலா எதுவும் சொல்லாமல் பிள்ளைக்கு உடையை கழட்டி குளிக்க வைக்க ஆயத்தப் படுத்தினாள்.
அவளது ரியாக்ஷன் இப்படி தான் இருக்கும் என்று எண்ணினாலும் தன் தயக்கத்தை சற்றே ஓரம் கட்டி விட்டு “நாளைக்கு கிளம்பணும். நாலு நாளைக்கு தேவையான துணிகளை எடுத்து வை..” என்றான்.
அவனை ஒரு பார்வை பார்த்தவள், எதையும் காதிலே வாங்கிக் கொள்ளாத பாவனையுடன் குளியல் அறைக்குள் நுழைந்துக் கொள்ள பெருமூச்சு விட்டான் சசிதரன்.
அவனுக்கு தெரியும் இது புயலுக்கு முன் வரும் அமைதி என்று. மேசை மீது பயண சீட்டுகளை வைத்து விட்டு கட்டிலில் நீட்டி நிமிர்ந்து படுத்து விட்டான். எப்பொழுதும் போனை நொண்டிக் கொண்டு இருப்பவன் இன்று அதை தூர வைப்பதை பார்த்து மதிலாவின் புருவம் உயர்ந்தது யோசனையில்.
ஆனால் எதையும் கேட்க கூடாது என்று வாயை இறுக மூடிக் கொண்டாள். பிள்ளையிடம் மட்டுமே கவனத்தை வைக்க முயன்றாள். பிள்ளையை குளிக்க வைத்து கட்டிலில் கொண்டு வந்து நிறுத்தியவள் ஈரம் போக துடைத்து விட்டு அவனுக்கு உடை மாற்ற ஆரம்பித்தாள்.
மதிலா இன்னும் நாலு நாள் ஆனாலும் அதை எடுத்து பார்க்க மாட்டாள் என்று புரிந்துப் போக சற்றே சினம் எழுந்தது. முயன்று அதை அடக்கிக் கொண்டு அவளையே நோட்டம் விட்டான்.
அவள் எப்பொழுதும் போல பிள்ளையை கிளப்பி விட்டு படுக்கையில் விளையாட கொஞ்சம் பொருகளை எடுத்துப் போட்டுவிட்டு அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
எப்பொழுதும் அவன் அலுவலகம் சென்ற பிறகு தான் அறைக்கு வருவாள். இன்று சசிதரண் வேலைக்கு போகவில்லை. அதனால் அவனின் கன் முன்னாடி வேலை செய்ய வேண்டி இருந்ததில் கடுப்புடன் செய்ய ஆரம்பித்தாள்.
ஒதுக்கத்தில் இருந்த உறவில் இன்று ஒரு படி முன்னேறி சசி தரன் பேச ஆரம்பித்தான். அதோடு ஒரு ட்ரிப் கூட... இத்தனை நாளா பேசுறதுக்கு ஒரு நேரம் வாய்க்கல... இப்போ தான் உல்லாச பயணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு வந்து இருக்காரு... என்று மனதில் வேதனை சூழ்ந்தது.
‘ஏன் இதை என்கிட்டே சேர்ந்து பேசி ஏற்பாடு செய்ய கூட மனசு வரல... இதுல இவரு சொன்ன உடனே ஆட்டிக்கிட்டு பின்னாடியே போயிடனுமாக்கும்...’ என்று விரக்தி தான் வந்தது மதிலாவுக்கு. உள்ளத்தில் கொஞ்சம் கூட மகிழ்ச்சியே ஏற்படவில்லை.
எதிலோ மிகவும் மோசமாய் அடிபட்டு போனது போல உணர்ந்தாள். குறுங்கண் இரும்பு கம்பிகளை எல்லாம் ஈர துணி வைத்து துடைத்து விட்டாள். மூளை முடுக்கு எல்லாம் சுத்தம் செய்து சற்றே சிறிதாக இருந்த உப்பரிகையை சுத்தம் செய்து அங்கு இருந்த சின்ன சின்ன தொட்டி செடிகளுக்கு நீர் விட்டு அவ்விடத்தில் சிறிது நேரம் நின்றாள்.
ஏனோ அறையின் உள்ளே போக கைக்கால்கள் எல்லாம் நடுங்கி போனது. ஏனெனில் சசிதரனின் பார்வை அவளை சுற்றியே வருவது போல இருந்தது. அவனிடமிருந்து இப்படி திடீர் என்று வரும் மாற்றத்தை அவளால் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
இதுக்கு பின்னாடி என்ன பூகம்பம் இருக்கிறதோ... என்று அவளுள் ஒரு சிந்தை எழ சட்டென்று தன் மாமியார் சொன்ன சொல் புத்தியில் நேரம் காலம் இல்லாமல் உதித்தது...!
உமையும் மதிலாவும் அடுப்படியில் நின்று சமைத்துக் கொண்டு இருந்த பொழுது,
“நீ இன்னும் தான் தலைக்கு குளிச்சுட்டு இருக்கியா?” என்று பின்னால் இருந்து சத்தம் வர இருவரில் யாரை கேட்கிறார்கள் என்று தெரியாமல் இருவரும் திரும்பி பார்த்தார்கள்.
“உன் கிட்ட தான் கேட்கிறேன்...” என்று ஈஸ்வரி உமையிடம் அழுத்தமாக கேட்டார்.
“புரியல அத்த...” என்று அவள் சொல்ல,
“ம்கும் இதெல்லாம் புரியாது. ஆனா புருசனை மட்டும் மயக்க நல்லா தெரியும் போல..” என்று அவர் மேலும் பேச, அப்பொழுது தான் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிய ஒரு கணம் ஆடி தான் போனாள்.
கல்யாணம் ஆகி இரண்டே மாசத்தில் இந்த கேள்வியை எதிர்க்கொள்ளுவோம் என்று உமையவள் கொஞ்சம் கூட எதிர் பார்த்திருக்கவே இல்லை.
அவள் அதிர்ந்து போய் தன் மாமியாரை பார்த்தாள். அவளின் பார்வையை உணர்ந்தவர்,
“ம்கும் இப்படி பாவனையை காட்டி காட்டி தான் என் பிள்ளையை மயக்கி வச்சு இருக்க. அந்த சமத்து வயித்த நிரப்புறதுலையும் இருக்கணும். சும்மா சும்மா குளிச்கிக்கிட்டே இருந்தா போதாது...” என்று சொன்னவரின் சொல்லில் கூசிப் போனாள்.
“அடுத்த மாசமும் நிக்கலன்னா ஒழுங்கா மருத்துவர்கிட்ட போயிட்டு வா... என்ன குறையோ எல்லாம் என் தலையில வந்து விடியுது. நான் வந்த முதல் மாசத்துல தலை குளிச்சதுக்கே என் மாமியார் காரி என்னை அவ்வளவு பேச்சு பேசுனா... நீ இப்போ தான் மாசாமாசம் குளிச்கிக்கிட்டு இருக்க...” என்று மேலும் அவளிடம் குறை இருப்பது போல பேசிவைக்க உமைக்கு கண்கள் எல்லாம் கலங்கிக்கொண்டு வந்தது.
பிள்ளை வரம் கிடைப்பது என்னவோ அவள் கையில் இருப்பது போல பேசிய மாமியாரை வாயடைத்துப் போய் பார்த்தாள். எவ்வளவு முயற்சி செய்தாலும் பிள்ளை வரம் என்பது கடவுளாக பார்த்து கொடுப்பது. அதில் அவள் என்ன செய்ய முடியும். ஏதோ கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆனது போல பேசியவரின் தோரணையில் உமையவளால் எதுவுமே பேச முடியாமல் போனது.
“நீ என்னடி... உனக்கு தனியா சொல்லணுமா...? இன்னும் எத்தனை நாள் உன் ஒத்த மகனையே சுத்தி வருவ... அடுத்த பிள்ளைக்கு ஏற்பாடு செய்... வந்துட்டாளுங்க எல்லாம் சூதானமா இருக்க துப்பு இல்லை...” என்று மதிலாவையும் ஒரு போடு போட்டுவிட்டு போய்விட்டார்.
“ம்கும் இங்க முகம் குடுத்து பேசவே குதிரை கொம்பா இருக்கு. இதுல அடுத்த பிள்ளைக்கு நான் எங்க போறது...” என்று கொஞ்சம் சத்தமாகவே முணகிவிட்டாள் மதிலா. அதை கேட்ட உமைக்கு பெரும் அதிர்ச்சியாய் போனது.
ஏற்கனவே பாராமுகம் தான். இதில் படுக்கையில் கூட மகிழ்ச்சி இல்லையா என்று உமையின் மனம் கசங்கிப் போனது.
அதையெல்லாம் இன்று எண்ணிப் பார்த்த மதிலாவுக்கு திக்கென்று இருந்தது. ஒருவேளை அடுத்த பிள்ளைக்கு தான் இந்த ஏற்படா... என்று முகம் கசங்கிப் போனது.
நான் என்ன பிள்ளை பெக்குற மிசினா... என்று உள்ளம் குமைந்தவள் அவனிடம் நேரடியாக கேட்டுவிட வேண்டும் என்று குமுறிக் கொண்டு வந்தாள். வந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
சசிதரன் பிள்ளையின் மீது ஒரு கரத்தை போட்டு தூங்கிக்கொண்டு இருந்தான். அப்படியே அவன் முடியை பிடித்து ஆட்டி தன் ஆத்திரத்தை எல்லாம் தீர்த்துக் கொள்ள பார்த்தாள். ஆனால் தூக்கத்தில் இருப்பவனை கலைக்க மனம் வராமல் பிள்ளையை மாட்டுக் வெடுக்கென்று தூக்கிக்கொண்டு கீழே போய் விட்டாள்.
வீட்டில் யாரும் இல்லை. ‘என்ன ஒரு அதிசயம் ரெண்டு வெளியே கிளம்பி இருக்குங்க... மாமனாரை கூட காணோம்..’ எண்ணியவள் மத்தியத்துக்கு சமைக்க ஆரம்பித்தாள்.
பிள்ளையின் மீது ஒரு கண்ணை வைத்தபடியே சமைக்க தொடங்கினாள். ‘என்னை தான் எதுக்கும் கூப்பிடுறதுல.. போய் தொலையுதுன்னு பார்த்தா... இந்த பிள்ளை இவங்களை என்ன பண்ணானாம். போகும் பொழுது இந்த பிள்ளையையும் தூக்கிட்டு போய் இருந்து இருக்கலாம்ல... இவன் மட்டும் எங்க போறான் வரான்...’ என்று பொருமியபடியே வேலை செய்தாள்.
‘இதுங்களுக்கு வடிச்சி கொட்ட மட்டும் தான் நானு. மத்த எதுலையும் சேர்த்துக்குறதே இல்லை. என்னை சேர்த்துக்காட்டி போகுது.’ எண்ணியவளின் காலை கட்டிக் கொண்டு வந்து நின்ற பிள்ளை,
“ம்மா பாட்டி காணோம்...” என்று அழ ஆரம்பித்தான். வெறுமையான வீடு பிள்ளையை வாட்டுகிறது என்பது புரிய கலங்கிய கண்களை அடக்க சிரமப்பட்டு சிமிட்டி சிமிட்டி சரி செய்துக் கொண்டவள், அவனை தூக்கி சமைக்கும் மேடை மீது ஒரு ஓரத்தில் அமரவைத்தவள்,
“அம்மா சமைக்கிறேன்டா... என்னென்ன போடணும்னு அம்மாவுக்கு சொல்லி தர்றியா” அவனிடம் பேசிக் கொண்டே தன் வேலையை பார்க்க ஆரம்பிக்க அவளது காதில் சற்றே அழுத்தமான காலடி சத்தம் கேட்க, பக்கென்று ஆனது..! வீட்டில் யாரும் இல்லை என்றவுடன் முன் கடவு பின் கதவு என எல்லாவற்றையும் சாற்றி தாழிட்டு விட்டாள்.
இப்பொழுது காலடி சத்தம் கேட்க ஒரு அகனம் பயந்து தான் போனாள். சசிதரன் வீட்டில் இருந்த நினைவே அவளுக்கு இல்லை பாவம். சட்டென்று அவளுக்கு வேர்த்துக் கொட்ட பின்னாடி திரும்பி பார்த்தாள். அங்கு சசிதரன் தான் வந்துக் கொண்டு இருந்தான்.
“ச்சே... இந்தாளா...” என்று அடைத்த நெஞ்சை பிடித்துக் கொண்டு கொஞ்சம் ஆசுவாசம் ஆனவள் பட்டென்று திரும்பிக் கொண்டாள்.
அங்கு நின்றிருந்தவளை சட்டை செய்யாமல் குழந்தையை தூக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு போக பார்க்க,
“பிள்ளையை இங்கேயே விட்டுட்டு போங்க...” என்றாள் அதிகாரமாக. அவளின் அதிகாரத்தில் இதழ் வளைத்தவன் அவளுக்கு காட்டாமல்,
“இவனை நானும் தான் சேர்ந்து பெத்தேன்...” என்றான் கடுப்பாக.
“ஏன் அது இவ்வளவு நாளா தெரியலையா...? இப்போ தான் உங்களுக்கு ஞானோதயம் வந்து இருக்கா என்ன...?” என்று ஆத்திரப்பட்டாள்.
அவளின் ஆத்திரத்தை விழி இடுங்க பார்த்தவன்,
“பிள்ளைக்கு முன்னாடி குரல் உயர்த்தி பேசாத... பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன்” என்று எச்சரித்தவன், பிள்ளைகளுடன் வெளியே போய் விட்டான்.
அவனது இந்த அதிரடியில் மகிழ முடியாமல் ஏனோ நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது...! கால்கள் எல்லாம் தள்ளாட ஆரம்பித்தது. எவ்வளவு நாள் அவளது பொழுதுகள் எல்லாம் தனிமையில் கழிந்து இருக்கும். முழுதாக மூன்று வருடம்.. அவளால் அதை அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
எத்தனை நாள் அவனது முகம் பார்த்து நின்றிருப்பாள். அத்தனை ஒதுக்கம் காட்டினான் சசிதரன்.. சேர்த்து வைத்த காதல் எல்லாம் இன்று கானல்நீராய் வற்றிப் போன பிறகு வந்தால் உடனே சரி செய்து அவனுடன் ஒன்று கலக்க முடியுமா என்ன..? மனம் என்ன மிசினா தேவையில்லாத பாகங்களை கழட்டிப் போட்டுவிட்டு புதிய பாகத்தை உடனடியாக சேர்த்துக் கொள்ள...
கொண்ட காயங்கள் ஏராளம் அல்லவா...? அதற்கு ஒரு விளக்கத்தை கொடுக்க முயலாமல் இப்படி செய்கையில் காட்ட முயன்றால் அப்படியே மயங்கி இவங்க காலடியில விழுந்துடனுமாக்கும்... பொறுமியவள் அவனை சிறிதும் கண்டுக் கொள்ளவில்லை.
மத்தியம் சமைத்து டேபிளில் எடுத்து வைத்தவள் தன் மகனுக்கு மட்டும் எடுத்து போட்டு ஊட்டிவிட ஆரம்பித்தாள். வீட்டில் ஒருவன் இருக்கிறான் அவனை சாப்பிட கூப்பிடுவோம், அவனுக்கு பரிமாறுவோம் என்று எதுவுமில்லாமல் பிள்ளைக்கு போட்டு ஊட்டி விட்டாள். அவள் மகனுக்கு ஊட்டும் அழகை வெளிப்படையாக பார்த்து இரசிக்க,
‘குப்பென்று வேர்த்தது மதிலாவுக்கு. என்ன ஆச்சு இந்த ஆளுக்கு... ஏதோ இன்னைக்கு தான் பொண்டாட்டியை புதுசா கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்த மாதிரி நடந்துக்குறான்... சப்பா இந்த எலி தொல்லை தாங்க முடியல... இன்னொரு பிள்ளைன்னு பக்கத்துல வரட்டும் உருட்டு கட்டையாலே மண்டையை பிளந்துடுறேன்...’ கருவிக் கொண்டவள் அவனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் தானும் போட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
கூடத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தவனை கிஞ்சித்தும் மதிக்கவில்லை மதிலா.. என் உணர்வுகளை மதிக்கதவனின் உணர்வுகளை நான் மட்டும் ஏன் மதிக்க வேண்டும். ஒரு முறை இரண்டு முறை என்றால் பரவாயில்லை.. கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடங்களாக இந்த இடைவெளியை வளரவிட்டுட்டு இப்போ வந்து இதெல்லாம் தேவையா? என்று தான் எண்ணினாள்.
இந்த சமயத்தை பயன்படுத்தி தன் வாழ்க்கையை சுமுகமாக கொண்டு செல்லலாம் என்று யோசிக்கவில்லை. ‘கணவனுடன் வாழ்வது கடினம் தான். ஆனால் கணவன் இல்லாமல் வாழ்வது அதை விட கடினம்’ என்று புரியவில்லை பெண்ணவளுக்கு.
இறங்கி வரும் சுழலில் கொஞ்சம் கூட யோசிக்காமல் இறங்கிவிட வேண்டும். பிறகு கணவனின் தலை கரத்தில் சிக்கும் பொழுது எவ்வளவு ஆய்ந்து அறுக்க முடியுமோ ஆய்ந்து எடுத்து விட வேண்டும்.
அதன் பிறகு இப்படி ஒரு பிரிவே இருக்காது. சண்டை போட்டால் கூட கூட இருந்து சண்டை போடு என்பது போல தான் இரு மனமும் நினைக்கும். அந்த நிலை வந்துவிட்டாலே எவ்வளவு இடைஞ்சல் வந்தாலும் சரி எவ்வளவு பெரிய சண்டை வந்தாலும் சரி ஒருத்தரை விட்டு ஒருவர் நீங்கும் நிலையே வராது.
இதை விட மிக எளிதாக திருமணம் ஆன முதல் எட்டு வருடத்தை மிக சிறப்பாக கடந்து விட்டால் போதுமானது. ஒருவரின் ஒருவரை குணங்கள் ஒருவருக்கு ஒருவர் அத்துபடியாகி விடும். அதன் பிறகு போ உன் குணம் இப்படி தான்... என்று சட்டை செய்யாமல் போக ஒரு பக்குவம் வந்து விடும். அப்படி இல்லையா உனக்கு தெரிஞ்ச வளம் அவ்வளவு தான் என்று அவர்களை அவர்களது போக்கில் விட்டுவிட்டு அவர்களுக்கு ஏற்றவாறு தங்களின் போக்கை மாற்றி அவர்களை வளைத்துக் கொள்ளும் திறமை வாய்த்து விடும்...
திருமண வாழ்க்கை ஆரம்ப கட்டத்தில் கொஞ்சம் போராட்டமாக தான் இருக்கும். சட்டென்று பிரிவை தான் நாடும் மனது. ஆனால் அதை அடக்கி கட்டிப் போட்டு முயன்றவை கடந்து சென்றுவிட்டால் சிறப்பான ஒரு இல்லறம் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலமும் மிக சிறப்பாக இருக்கும்.
முடியாத பட்சத்தில் பிரிவு ஒரு விடுதலை தான். ஆனால் இரு பக்க மனமும் இறங்கி வந்தால் பிரிவு என்பது சுமக்க முடியாத சுமையாகிவிடும். எனவே ஒரு முடிவு எடுக்கும் பொழுது நாலையும் அலசி ஆராய்ந்து விட்டு எடுப்பது சுகம்.
கதைகளுக்கு வேண்டும் என்றால் பிரிவு சுகமாக இருக்கும். ஆனால் நடைமுறையில் பிரிவு என்பது வெயில் அடிக்கும் பொழுது மொட்டை பாறையில் வெறும் காலோடு நடப்பதற்கு ஈடானது.
இங்கு மதிலா இறங்கி வராமல் இருக்க முயன்றாள். ஆனால் அதற்கு சசிதரன் விட வேண்டுமே...! அவள் கூப்பிடுவாள் என்று எதிர் பார்த்தான். ஆனால் அவள் அவனை கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளாமல் அவளது வேலையில் இருக்க கொஞ்சம் முகம் வாடி தான் போனது அவனுக்கு.
Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr sis 👌👌👌👌