அத்தியாயம் 5

 
Admin
(@ramya-devi)
Member Admin

தமிழ் அவனிடம் கேட்ட கேள்விக்கு அகத்தியன் வாயையே திறக்கவில்லை. அவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து போய் விட்டான். அவனிடம் எந்த பதிலும் வாங்க முடியவில்லை அவளால்.

அவள் ஆசை ஆசையாக எண்ணி இருந்த கல்யாண வாழ்க்கை அவளை முற்றிலும் ஏமாற்றி போட்டது. கல்யாண வாழ்கையே கருகி போனது போல ஆனது. அவளுள் எவ்வளவோ கனவுகளும் கற்பனைகளும் குவிந்து கிடந்தது. ஆனால் அது அத்தனைக்கும் உயிர் குடுக்க வேண்டிய அகத்தியன் அவளை கருக வைத்துக் கொண்டே இருந்தான் ஒவ்வொரு நொடியும்.

கொஞ்சமும் ஒட்டுதல் இல்லை இருவரிடமும். பாசம் அறவே இல்லை. ஏன் நிமிர்ந்து ஒரு பார்வை கூட இல்லை இருவருக்கும் இடையே.. வெறும் கசப்பு மட்டும் தான் தமிழ் அறிந்த சுவை.

இனிப்பான பக்கம் ஒன்று இதில் ஒளிந்து இருக்கிறது என்று அவள் அறியவே இல்லை. அகத்தியன் அந்த இனிப்பை அவளுக்கு கொடுக்கவேயில்லை.

கொடுத்தால் தானே இனிப்பின் சுவையை உணர முடியும்...

கடும் கோடையில் பாலைவனத்தில் நடப்பது போல தான் அவளின் திருமண வாழ்க்கை இருந்தது. அகத்தியன் இல்லாத பொழுது மட்டும் தான் அவளுக்கு நிம்மதியான நேரம். அவன் வீட்டில் இருந்தால் அது தமிழுக்கு நரகம் தான்.

அவன் இருந்தால் அவனோடு அறையில் தான் இருக்க வேண்டும். அதை தாண்டி வெளியே போக முடியாது. போகவும் கூடாது. அவன் பாட்டுக்க போன் பார்ப்பான். இவளை கொஞ்சமும் கண்டுக்கொள்ளவே மாட்டான். இதுக்கெதுக்கு அவள் இந்த அறையில் அடைந்து இருக்க வேண்டும் என்று தோன்றும்.

சரி டிவியாவது பார்க்கலாம் என்று போட்டாள். அவன் நிமிர்ந்து ஒரு பார்வை தான் பார்த்தான். தமிழின் கைகள் தானாகவே அனைத்து போட்டது டிவியை.

தன் போனை எடுத்து பார்த்தாள். போனை பார்த்தாலே சலிப்பு தான் வந்தது. என்னவோ அவளை மட்டும் சிறை வைத்தது போல இருந்தது. மூச்சு முட்டியது. எழுந்து உப்பரிகை பக்கம் போய் நின்றாள்.

வெளியே தெரிந்த உலகை இன்று தான் பார்ப்பது போல வியந்து போய் பார்த்தாள். இதற்கு முன்னாடி வானம் என்ற ஒன்று இருந்ததை அவள் மறந்து போனவள் போல நீல வானத்தையும் அதில் அழகாய் மிதந்து போன மேகத்தையும் இரசித்து இரசித்து பார்த்தாள்.

அதில் பல உருவங்கள் தென்பட அது என்ன ஏது என்று உள்ளுக்குள் பல பட்டிமன்றம் நடந்தினாள். போதாதற்கு அவளை வந்து தழுவி சென்ற காற்றுக்கு பெயர் வேறு வைத்து விளையாட தொடங்கினாள்.

அழகுக்காகவும் கடமைக்காகவும் வேலையாட்கள் வாங்கி வைத்த தொட்டி செடியை இன்று தான் மிக நிதானமாக இரசித்துப் பார்த்தாள். அதில் மலர காத்திருந்த மொட்டுகளையும், ஏற்கனவே மலர்ந்து மனம் வீசிக் கொண்டு இருந்த பூக்களையும் பார்த்தவளுக்கு இது எப்படி இவ்வளவு சுதந்திரமா மலர்ந்து மனம் வீசுகிறது..

யாருடைய கட்டுப்பாட்டுக்கும் ஆளாகாமல் சுயமாக மலர்ந்து நின்ற பூவை இலக்கின்றி வெறித்து பார்த்தாள். அதன் அருகிலே கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்து விட்டாள் வெறும் தரையில்.

இதற்கு முன்னாடி இப்படி தரையில் அவள் அமர்ந்தது எல்லாம் கிடையவே கிடையாது.. என்னவோ இன்று எல்லாமே வெறுத்துப் போனது போல ஒரு உணர்வு.
இவன் தான் மாப்பிள்ளை என்று அறிமுகம் செய்து வைத்த நாளில் இருந்து அகத்தியன் மீது உண்டான நேசம்..

அவன் அதிகம் பேசவில்லை. ஆனால் அவளை நிமிர்ந்து அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான். அந்த ஒற்றை பார்வையில் அவளின் ஒட்டு மொத்த மனதும் குப்புற அடித்து கவிழ்ந்து போனது.

அதே பார்வைக்காக இதோ இப்பொழுதும் கூட ஏங்கிக்கொண்டு இருக்கிறாள் தமிழ்.

கை நீட்டி எதிரில் இருந்த பூவை தொட்டு பார்த்தாள். மிக மிருதுவான தொடுகை. அதற்கே அந்த பூ சிவந்துப் போனது போல அவளுக்கு தோன்றியது.

“நான் ஒன்னும் உன்னுடைய காற்று காதலன் இல்லை.. என் தொடுகைக்கு நீ வெட்கப்பட்டு சிவக்க வேண்டாம்” என்று இவளின் மனம் பூவை கேலி செய்தது. தமிழின் இதழ்களில் சின்ன புன்னகை தோன்றியது.

தன் கணவனின் தொடுகையும் இதே போல மென்மையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி பார்த்தாள். கற்பனைக்கு கூட எட்டவில்லை அவனது மென்மை. அவளிடம் முழுவதும் வேகமாக மட்டுமே நடந்துக் கொண்டு இருந்தான். இல்லை என்றாள் அதிரடி. இது மட்டுமே..

பெண்ணை இரசித்து கையாள வேண்டும் என்று அவனுக்கு தெரியவில்லை போல... இல்லை இவளுக்கு அந்த உணர்வுகளை கொடுக்க கூடாது என்று எண்ணினானோ என்னவோ..

அதை ஓரளவு புரிந்துக் கொண்டவளுக்கு நெஞ்சில் பாரம் ஏறியது. இவள் சாப்பிட கூப்பிட்டால் ஒரு தலையசைப்பை கூட குடுக்க மாட்டான்.

எல்லாவற்றையும் எடுத்து வச்சுட்டேன் என்று அவளின் முன்பு வந்து நின்றால் விழிகளை கூட அசைக்க மாட்டான். என்னவோ கடமைக்கு கூட அவளுடன் வாழ விரும்பவில்லை என்பது போல தான் அவனது நடவடிக்கைகள் எல்லாம் இருந்தது. அதை புரிந்தும் புரியாமலும் இரண்டு கெட்டான் மனதுடன் இருந்தாள் தமிழ்.

“உன்னை பிடிச்சு தான் கல்யாணம் பண்றேன்” என்றவனது நடவடிக்கை இப்படியா இருக்கும். என்னவோ எதிலோ தோற்ற உணர்வு அவளுக்கு. விழியோரம் நீர் கசிந்தது. துடைத்துக் கொண்டவளுக்கு அறைக்கு உள்ளே போக பயமாக இருந்து. அப்படியே தனித்து இருந்துவிடலாம் போல தோன்றியது.

ஆனால் அது முடியாதே.. பெருமூச்சு விட்டவளுக்கு பாட்டியிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுத்து காதில் வைத்து பேசினாள்.

“பாட்டி” என்றாள்.

“கண்ணு எங்க கீழ வரவே இல்லை. வாடா... நாளைக்கு குலதெய்வ கோயிலுக்கு போகணும் உன் வீட்டுகாரர் கிட்ட சொல்லிட்டு கீழ வா. கொஞ்ச நேரம் எங்களோட பேசிட்டு பிறகு போவ..” என்று அழைத்தார்.

“சரிங்க பாட்டி” என்றவள் தயக்கத்துடன் அகத்தியன் முன்பு வந்து நின்றாள்.

அவன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

“பாட்டி கீழே கூப்பிடுறாங்க... நாளைக்கு கோயிலுக்கு போகணுமாம். அதை பத்தி பேச கூப்பிடுறாங்க” என்று தயங்கி தயங்கி சொன்னாள்.

அவளை நிமிர்ந்து ஒரு சொல் கூட சொல்லாமல் போனை பார்த்துக் கொண்டே இடது கை ஆள்காட்டி விரலை மட்டும் அசைத்தான்.

அதுவே போதும் என்று எண்ணியவள் குடுகுடுவென்று ஓட,

“பத்து நிமிடம் தான். அதுக்குள்ள வந்திடு” என்றவன் நிமிரவே இல்லை.

“ஏது பத்து நிமிடமா?” ஏகத்துக்கும் அதிர்ந்துப் போனாள்.

“ஏன் அதிகமா இருக்கா?” நக்கலாக கேட்டான். அதில் திகைத்துப் போனவள், இன்னும் நின்றால் இந்த நேரத்தையும் குறைத்து விடுவான் என்று உடனடியாக கீழே போய் விட்டாள்.

கீழே வந்தவள் தாத்தாவிடம் பாட்டியிடம் பேச போக, கூடத்தில் அமர்ந்து போனில் பேசிக்கொண்டு இருந்த தாமரை மகளை ஏற இறங்க பார்த்தார். அவரது பார்வையில் கூசி போய் விட்டாள் தமிழ்.

“புருசனை ரொம்ப தான் கைக்குள்ள போட்டுக்குற போல” நக்கலுடன் கேட்டார்.

அதில் விக்கித்துப் போனாள். “சித்தி” என்று வீரிட்டு இருந்தாள் அடுத்த நொடி.

தமிழை பெற்ற தாய் தாமரை இல்லை. தமிழின் உண்மையான அன்னை கனகா.. அவரின் தங்கை தான் இந்த தாமரை. அக்கா தங்கை இருவருமே செல்வா செழிப்பில் குறைந்தவர்கள் இல்லை. அவர்களின் தந்தை கட்சியில் மூத்த உறுப்பினராக இருந்தார். அவருக்கு கீழே தான் செல்லப்பா இருந்தார்.

கனகாவை திருமணம் செய்வதற்கு முன்பே தாமரையும் செல்லப்பாவும் நெருங்கி பழகி தயாளனை உருவாக்கி இருந்தார்கள்.

கனகாவுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையை பார்க்க தொடங்க, எங்கே சொத்து இரண்டு பங்காக போய் விடுமோ என்று எண்ணி தாமரை தன் அக்காவை செல்லப்பாவுக்கே திருமணம் செய்து வைத்தாள்.

கனகா எவ்வளவோ தடுத்து பார்த்தும் அவரால் எதையும் செய்ய முடியாமல் போனது. தங்கை கணவனையே கட்டும் நிலை வந்து விட்டதே என்று அவர் குமுறி மனம் உடைந்து போக,

அதை யாருமே கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை. செல்லாப்பாவின் அப்பாவும் அம்மாவும் கிராமத்தில்  இருந்ததால் இங்கு நடக்கும் அக்கபோரு எதுவும் தெரியாமலே போனது.

இந்த திருமணத்துக்கு கனகாவின் பெற்றவர்களும் உடன் பட்டு தான் போனார்கள். ஏனெனில் கட்சியில் செல்லப்பாவுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. அதோடு அவரது சொத்துக்களின் மதிப்பு தன் சொத்துக்கு ஈடாக இருக்க, விரைவில் கட்சியின் முக்கிய உறுப்பினராக வந்து விடும் நிலை இருந்ததால் தன் மகள்களை கட்டி குடுத்து தான் அரசியலில் நிலைத்து நிற்க வழிவகை செய்துக் கொண்டார்.

இப்படி எல்லா பக்கமும் கனகாவுக்கு எதிராக போனது. திருமணம் ஆன அன்றைக்கு கனகாவை தன் கணவனோடு இருக்க விட்ட தாமரை, அதன் பிறகு கனகாவை தன் மாமனார் மாமியார் இருக்கும் ஊருக்கு அனுப்பி வைத்து விட்டார் சொத்து பேப்பரில் எல்லாம் கையெழுத்து வாங்கிக் கொண்டு.

மிக தந்திரமாய் காய் நகர்த்தி மொத்த சொத்தையும் தன் பெயரில் மாற்றிக் கொண்ட தாமரை அடிக்கடி கிராமத்துக்கு போக நினைக்கும் கணவனை அடக்கி ஒடுக்கி வைக்கவே நேரம் சரியாக இருந்தது.

அதற்கு ஏற்றார் போல செல்லப்பாவின் அம்மா அடிக்கடி மகனை பார்க்க வேண்டும் என்று வர சொல்லி ஊருக்கு அழைத்துக் கொள்வார்.

இதனிடையே கனகா கருவுற்று இருப்பது தெரியவர தாமரை கணவனை முறைத்து பார்த்தார்.

“இதுக்கு தான் நீ அடிக்கடி ஊருக்கு போறேன் ஊருக்கு போறேன்னு நின்னியா ய்யா...” என்று அவரை போட்டு மொத்தி எடுத்தவர் அதன் பிறகு தன் விருப்பம் போல வளைய வர தொடங்கினார்.

பத்தாவது மாதம் குழந்தை பிறந்த உடனே கனகா இறந்து போய் விட்டதாக மாமியார் சொல்ல,

செல்லப்பாவை ஊருக்கு விடவே இல்லை தாமரை. அக்கா என்கிற பாசம் சிறிதும் இல்லாமல், அவருக்காக கொஞ்சமும் துடிக்காமல்

“அவரு வர முடியாதுன்னு சொல்லிட்டாரு... அதனால நீங்களே எல்லா காரியமும் பார்த்துக்கோங்க” என்று வைத்து விட்டார். தன் தாய் தகப்பனையும் கூட போக அனுமதிக்கவில்லை.

அவ்வளவு கல் நெஞ்சம் கொண்ட தாமரை தன் அக்கா மகளுக்கா நல்ல புத்தி சொல்லி வளர்ப்பார்.

“உண்மையை தானே சொன்னேன். விட்டா உன் புருசனை மாராப்பிலே முடிஞ்சு வச்சுக்குவ போல... என்ன சொன்னாலும் கேட்காம இப்படியே பண்ணிட்டு இருந்தா சீக்கிரம் அவன் உன்னை விட்டுட்டு வெளியில தான் தேடுவான். ஒழுங்கா நான் சொல்றதை கேட்டு அவனை ஒதுக்கி வை. அவனை எல்லாத்துக்கும் ஏங்க விடு.. அப்போ தான் உன் அப்பா மாதிரி உன் காலை சுத்தி இருப்பான் உன் புருசன்” என்று கண்டபடிக்கு அட்வைஸ் பண்ண தலைவலி வந்தது தமிழுக்கு.

 

Loading spinner
Quote
Topic starter Posted : February 18, 2025 1:04 pm
(@gowri)
Eminent Member

ஓஹ, இந்த மரை கழண்ட தா... மரை இவ அம்மா இல்லையா🤷🤷🤷🤷🤷

நா கூட இது எப்படி அம்மாவா இருந்துட்டு இப்படி பேசும்னு நினைச்சேன்.....

பாவம் கனகா....இப்ப அவங்களா போல தான் இந்த தமிழும் இருக்கா....

இந்த அகக்கும் மரைக்கும் தான் ஏதோ வாய்க்கா தகராறு இருக்கு .....

இவ அவங்க பொண்ணு இல்லைனு தெரிஞ்சா அக இப்படி நடக்க மாட்டானோ?????

Loading spinner
ReplyQuote
Posted : February 18, 2025 2:38 pm
Admin
(@ramya-devi)
Member Admin

@gowri 

 

வாய்க்கா தகராறா🤣🤣 

அகத்தியனை அப்படி தப்பா எல்லாம் நினைக்க கூடாது டா🙈🙈 அவன் எப்போதுமே இப்படி தான் 🙊

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : February 18, 2025 5:49 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top