அத்தியாயம் 17

 
Admin
(@ramya-devi)
Member Admin

திருமணம் நாளை என்கிற நிலையில் சொந்த பந்தம், நட்பு, உறவுகள் என எல்லோருக்கும் அழைப்பிதல் கொடுத்து முடித்து இரவு பெண்ணழைப்பு வைத்து இருந்தார்கள். மண்டபமே நிறைந்து போனது. வாசுகியின் வழியில் இது தான் முதல் நல்ல காரியம் என்பதால் கூட்டம் சற்று அதிகமாகவே வந்தது.

சங்கவையின் வீட்டிலும் உறவுகள் மிக அதிகம். அதனால் இவர்களின் புறமும் நிறைய சொந்தங்கள் வந்து இருந்தார்கள். எளிமையாக பாரம்பரியப்படி பெண்ணழைப்பு நடந்தது.

இரவே சில புகைப்படங்கள் எல்லாம் எடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து அடுத்த நாள் காலையில் திருமண நிகழ்வுகள் நடை பெற தொடங்கியது. இருவருக்கும் முகூர்த்த உடைகள் வழங்க, போய் மாற்றிக் கொண்டு வந்தார்கள்.

மனையில் அமர இருந்தவளிடம் தனியாக பேசணும் என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு சென்றான் செஞ்சடையன்.

“இந்த நேரத்துல என்னப்பா?” வாசுகிக்கு கோவம் உச்சிக்கு ஏறியது. இப்படி அடம் பண்ணும் மகனை வைத்துக் கொண்டு அவரால் உறவுகள் கேட்கும் கேள்விக்கு பதிலே சொல்ல முடியவில்லை.

“வந்திடுறேன் ம்மா” என்று சொன்னவன் அவளை அழைத்துக் கொண்டு முன்னேற,

“தம்பி எதா இருந்தாலும் தாலி கட்டிட்டு போய் பேச வேண்டியது தானே...”

“நான் அவக்கிட்ட பேசலன்னா... தாலி கட்ட மட்டேன் பரவாயில்லையா?” நறுக்கு தெரித்தார் போல பேசியவனின் பேச்சில் கன்னத்திலே ஒன்று விடலாம் போல இருந்தது அவருக்கு. ஆனால் அவனுக்கு ஒத்து போகவில்லை என்றால் இந்த கல்யாணத்தை நிறுத்தினாலும் நிறுத்தி விடுவான் என்று பயந்து ஒதுங்கி நின்று விட்டார்.

மணமகனின் அறைக்கு கூட்டி சென்றவன் அவளிடம் என்ன பேசினானோ... சங்கவை விக்கித்துப் போனாள்.

“இதுக்கு சம்மதம்னா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான்.

மனதுக்குள் பெரும் அடி வாங்கியவள், இப்படி இக்கட்டான சூழ்நிலையில் தன்னை நிறுத்தி சூழ்நிலை கைதியாக மாற்றியவனின் மீது கோவம் வந்தது.

“என்னால இதுக்கு சம்மதிக்க முடியாது” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

“அப்போ இந்த கல்யாணம் நடக்காது” என்றான் திட்டவட்டமாய்.

“நீங்க என்ன லூசா...?” பட்டென்று கேட்டே விட்டாள்.

அவளது கேள்வியில் சுருக்கென்று கோவம் வர,

“ஏன் நீ லூசு மாதிரி நடந்துக்கல... உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?” என்றவன்,

“நீ இதுக்கு முழு மனதோட சம்மதிச்சா தான் இந்த கல்யாணம். இல்லன்னா இந்த கல்யாணம் நடக்காது” அறுதியிட்டு அவன் உரைக்க,

அவனை தீர்க்கமாக பார்த்தவள்,

“உங்க உடன்படிக்கைக்கு என்னால இப்பன்னு இல்ல எப்பொழுதுமே சம்மதிக்க முடியாது மிஸ்டர்..” என்றாள் அவனை விட உறுதியாக.

“அப்போ ஒகே” என்றவன் கழுத்தில் போட்டு இருந்த மாலையை கழற்றி வைத்து விட்டு வெளியே வர, சங்கவையும் கழுத்தில் இருந்த மாலையை கழற்றி வைத்து விட்டாள்.

வெளியே வந்தவன் கதவுக்கு முன்பு தவிப்புடன் நின்று இருந்த தாயை கண்டு உதடு பிதுக்கினான்.

அவனது பாவனையிலே உள்ளம் துடித்துப் போனது. படபடவென்று வந்தது.

“எங்கடா கழுத்துல போட்டு இருந்த மாலை? எதுக்கு கழட்டி வச்ச?” இதயம் அடைக்க கேட்டார் வாசுகி. அவனுக்கு பின்னாடி வந்த சங்கவையும் கழுத்தில் மாலை இல்லாமல் வர, அவருக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது.

“நீங்க வந்து இருக்கிற கோலத்தை பார்த்தா எனக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வருது... என் தலையில இடியை இறக்கிடாதீங்க” என்ற தாயாரை கண்டு,

“உன் தலையில இடி விழ வேணான்னா உன் மருமகளை என் நிபந்தனைக்கு ஒத்துக்க சொல்லு” என்றான்.

“ஏம்மா அவன் தான் எதுக்கோ ஒத்துக்க சொல்றானே.. ஒதுக்க வேண்டியது தானே.. ஊரு உறவு சனத்துக்கு முன்னாடி எங்கள தலை குனிய வச்சுடாதம்மா” சங்கவையின் கையை பற்றிக் கொண்டார்.

அவரோடு சங்கவையின் பெற்றவர்களும் சேர்ந்துக் கொண்டு அவளிடம் யாசிக்க,

அவளால் எந்த நாளும் ஒத்துக் கொள்ளவே முடியாத ஒன்றை செய்ய வைக்க சொல்லும் அவர்களை வேதனையுடன் பார்த்தவள்,

“சாரி என்னை மன்னிச்சிடுங்க... என்னால அவர் கேட்பதற்கு சம்மதம் சொல்ல முடியாது” என்று அவள் குரல் கமற சொன்னாள். அவளுக்கு மட்டும் இந்த கல்யாணம் நிற்பதில் மகிழ்ச்சி இல்லையே.. விரும்பியவனையே கல்யாணம் செய்துக் கொள்ள அவளுக்கு கசக்குமா என்ன...

ஆனால் அவன் வைத்த உடன் படிக்கையை தான் அவளால் எஞ்கான்றும் ஒதுக்க கொள்ள முடியாத ஒன்று. அதற்காக இந்த திருமணம நின்று போனாலும் அவளுக்கு வருத்தமொன்றும் இல்லை.

பெருமூச்சு விட்டவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது கல்யாணம் நின்று போனதில். ஆனால் வாசுகி அப்படியே விட்டு விடுவாரா என்ன..

வேகமாய் சங்கவையின் முன்பு வந்து அவளின் கையை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டவர்,

“இது என் மேல சத்தியம்... நீ அவன் ஒப்பந்ததுக்கு கட்டு படுற” என்று சொல்லி விட சங்கவையின் உயிர் ஒரு கணம் ஆடிப்போனது.

“அத்தை” என்று அதிர்ந்துப் போனாள்.

“என் மேல நீ சத்தியம் பண்ணிட்ட.. இனி இந்த கல்யாணம் நடந்தே தீரும்..” என்றவரை இதயத்தில் ஏற்பட்ட வலியுடன் பார்த்தாள் சங்கவை.

“அவசர பட்டுட்டீங்க அத்தை” என்றாள் தாளமுடியாத வேதனையுடன்.

“நான் அவசர படலன்னா உங்க ரெண்டு பேரோட கல்யாணம் இந்த பிறவியில நடக்காது...” என்று சொன்ன வாசுகி தன் மகனை அழுத்தமாய் பார்த்தவர்,

“இப்போ உனக்கு சம்மதமா? அவ உன்னோட ஒப்பந்ததுக்கு சம்மதிச்சுட்டா... இனி எந்த கழகமும் செய்யாம ஒழுங்கா போய் மேடையில அமரு” என்றார்.

தோள்களை குலுக்கிக் கொண்டவன் அறைக்குள் நுழைந்து இரண்டு மாலையையும் எடுத்துக் கொண்டு வந்து ஒன்றை அவளது கழுத்தில் போட்டவன், இன்னொன்றை அவளின் கையில் குடுத்து தன் கழுத்தில் போட சொல்லி சொன்னான்.

“ம்கும்... இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை... ரொமான்ஸ் பண்ண தான்டா நீ எல்லாம் லாயக்கு” என்று வெடுவெடுத்த வாசுகி இருவரையும் அழைத்துக் கொண்டு மனையில் அமரவைத்தார்.

“கொஞ்ச நேரத்துல பதட்ட பட வச்சுட்டானே..” என்று பரவாசுவிடம் புலம்பி தள்ளினார்.

“அவனுக்கு இதே வேலையா போச்சு... எப்போ பார்த்தாலும் பரபரப்பாவே வச்சு இருக்கான் நம்மளை” என்று அவனும் பதிலுக்கு புலம்பிக் கொண்டான்.

சங்கவைக்கு முகத்தில் இருள் சூழ்ந்தது. அதை கல்யாண பரபரப்பில் யாரும் கவனிக்கவில்லை.

கல்யாணம் நடக்குமா நடக்காதா? என்று பெற்றவர்களின் பதட்டத்தையும் நட்புகளின் கவலையையும் உறவுகளின் ஆவலையும் முறியடித்து விட்டு செஞ்சடையன் சங்கவையின் கழுத்தில் தாலி கட்டினான்.

செஞ்சன் தாலி கட்டிய பிறகே பெற்றவர்களின் மனம் ஆசுவாசம் ஆனது.

“அப்பாடா... எப்படியோ சேரவே சேராத இரு துருவங்களையும் சேர்த்து வச்சாச்சு.. பெரிய மலையையே இறக்கி வைத்தது போல பரம நிம்மதியாய் இருக்கு” என்று சொன்னார் வாசுகி.

“ஆமா அண்ணி” என்று அவரின் கையை பற்றிக் கொண்டார் சங்கவையின் அம்மா.

“கடைசி நிமிடம் வரை பரபரப்பாவே வச்சுட்டான் இவன். கல்யாணம்ன்ற நிம்மதியே இல்லாம போயிடுச்சு இவன் கிட்ட” என்று பரவாசுவும் ஆசுவாசம் அடைந்தான்.

தம்பதியரை வளைத்து வளைத்து புகைப்படம் எடுக்க, சங்கவை முகத்தில் கொஞ்சம் கூட மகிழ்ச்சியே இல்லை. கடமைக்கு என்று கூட அவளால் நிற்க முடியவில்லை.

“சிரிச்ச மாதிரி முகத்தை வைடி” என்றான் செஞ்சன். இயலாமையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளின் கண்களில் தெரிந்த வேதனையை கண்டு கொள்ளாமல்,

“இப்போ நீ சிரிக்கலன்னா எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு போயிட்டே இருப்பேன்” என்று பல்லைக் கடித்தான்.

“மனசாட்சியே இல்லாம நீங்க நடந்துக்குறீங்க செஞ்சா..” தன் இயலாமையில் அவனிடம் சீறினாள்.

“ஏன் இதையே நீ செய்யும் பொழுது என் நிலையை நீ யோசுச்சு பார்த்தியா? இல்ல தானே... இதே வலியை நான் குடுத்தா மட்டும் உங்களுக்கு வலிக்கிது இல்லை” என்றவன், அவளை வளைத்து பிடித்து புகைப்படம் எடுத்தான்.

வந்த அவனது கொலிக்ஸ் எல்லோருமே வியந்து தான் பார்த்தார்கள்.

“சார் இவ்வளவு ரொமான்ஸா இருப்பாரா?” என்று. செஞ்சனிடம் என்னைக்கு ரொமான்ஸ் கம்மியாக இருந்து இருக்கு. அவன் பார்க்கும் பார்வையே ரோமன்ஸ் தானே... தொடாமலே ரோமன்ஸ் செய்வதில் வல்லவனாயிற்றே..

திருமணத்தின் ஒவ்வொரு சடங்கிலும் அவனது அதித அன்பு வெளிப்பட்டது. அவளின் கோர்த்த கையை எங்கும் விடவே இல்லை. அவளின் பாதம் பிடித்து மிஞ்சி போடும் பொழுது கூட வேகமாய் போடாமல் காலை வருடி விட்டு மெதுவாக அவளின் சின்னஞ்சிறு விரலுக்கு வலிக்காமல் போட்டான்.

போட்டதோடு இல்லாமல், “வலிச்சதாடி?” என்று கேட்டும் கொண்டான். இப்படி அவளுக்கு நோகாமல் காதலிப்பவன் எப்படி தான் அவளை வலிக்க வைக்கிறானோ...

அவனது மிரட்டலுக்கு சற்றே பணிந்து சிரித்த முகமாய் வைத்துக் கொண்டாள் சங்கவை.

“இந்த சிரிப்பு எப்பொழுதும் வாடக் கூடாது” என்று கட்டளையும் போட்டான்.

அவனை ஆழ்ந்து பார்த்தாளே தவிர ஒரு வார்த்தையும் பேசவில்லை.

அதன் பிறகு இரு வீட்டிலும் சென்று விளக்கு ஏற்றி செஞ்சனின் வீட்டில் இரவு சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சங்கவையோடு அவளின் அத்தை வந்து இருந்தார். அவரே அவளுக்கு எல்லாவற்றையும் பார்த்து செய்தார்.

இரவு ஒன்பது மணிக்கு குளித்து உணவு உண்ண இருவரையும் அமர்த்தினார்கள்.

“ஹெவியா எதுவும் வேணாம் ம்மா” என்று செஞ்சன் சொல்ல,

“இடியாப்பம் தான்டா செஞ்சு இருக்கேன்” என்றவர் இருவருக்கும் பரிமாறினார். உண்டு விட்டு அவன் கூடத்தில் அமர்ந்துக் கொண்டான்.

சங்கவையை அழைத்துக் கொண்டு செஞ்சனின் அறையில் விட்ட வாசுகி,

“புது புடவை கட்டிட்டு தயார் ஆகுடா.. பத்து மணிக்கு மேல நல்ல நேரம்” என்றார்.

“சரிங்க அத்தை” என்றவள் கதவை சாற்றிக் கொண்டு கிளம்ப ஆரம்பித்தாள். மிருதுவாக உறுத்தாத வகையில் கையால் நெய்த பட்டு புடவையை இந்த சடங்குக்கு வாங்கி இருந்தான் செஞ்சன்.

அதை தொட்டு பார்த்தவளுக்கு அதன் மென்மையில் சற்றே மனம் இளகியது. என் மேல வச்சு இருக்கிற காதலை பார்க்கும் பொழுது எப்படியும் அவன் போட்ட ஒப்பந்தத்தை முறியடித்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து இருந்தது.

ஆனால் அவ்வளவு காதல் இருந்தும் இத்தனை வருடங்களாக பிரிந்து தானே இருந்தான். என்கிற நிதர்சனம் முகத்தில் அறைய தவித்துப் போனாள்.

கடவுளே நீ தான் துணை... என்று மனதில் வேண்டிக் கொண்டே புடவையை எடுத்து நேர்த்தியாக கட்டினாள். அவனுக்கு பிடித்த வகையில் ஒற்றையாக முந்தானையை விட்டவள், தளர்வாக பின்னினாள். பின் அதை கலைத்து விட்டு கூந்தலை விரித்து விட்டவள் அதில் பூக்களை சூடிக் கொண்டாள். கழுத்தில் அன்று காலையில் செஞ்சன் கட்டிய மஞ்சள் கயிறு மட்டும் தான் இருந்தது.

காதில் சற்றே பெரிய சிமிக்கி, கைகளில் கல்யாணத்துக்காக போட்டு இருந்த கல்யாண வளையல்கள் கையை நிறைத்து இருந்தது. அதில் இருந்த தங்க வளையல்களை கூட கழட்டி இருந்தாள்.

சிவப்பு குங்குமம் வகிட்டில் மின்ன, காலில் முத்து வைத்த மிஞ்சி, மெலிதான கொலுசு அவ்வளவு தான் அவளின் அலங்காரம்.

கண்களுக்கு மட்டும் மையிட்டுக் கொண்டவள் தன்னை கண்ணாடியில் ஒரு கணம் பார்த்தாள். நிறைவாக இருந்தது. மேக்கப் டச்சப் எதுவும் செய்துக் கொள்ளவில்லை.

பத்து மணிக்கு மேலே ஆகிவிட அவளின் அத்தை வந்து கதவை தட்டினார்.

திறந்தவளின் தோற்றத்தை கண்டு,

“என்னடா இவ்வளவு எளிமையா கிளம்பி இருக்க... அதுவும் கழுத்தில் வெறும் தாலி கயிறு மட்டும் தான் இருக்கு.. ரெண்டு சங்கிலி எடுத்து போட வேண்டியது தானே...” ஆதங்கப்பட்டார்.

“இல்ல அத்தை அதெல்லாம் வேணாம்” என்றவளை பெருமூச்சு விட்டு கீழே கூட்டிக்கொண்டு வந்தார். செஞ்சனின் அறை மாடியில் இருந்தது. உள் பக்கமே படிகள் இருந்தது.

கூடத்தில் அமர்ந்து இருந்தவன் மெல்லிய கொலுசொலி கேட்டது. கூடவே கண்ணாடி வளையல்களின் சிருங்காரமும் கேட்டது.

அவனது வீட்டில் இன்று வரை கொலுசொலி ஒலிக்கவே இல்லை. கண்ணாடி வளையல்களின் சத்தமும் கேட்டதே இல்லை. இதோ இப்பொழுது தான் இரண்டு சத்தங்களும் ஒருங்கே கேட்டது..

அவனின் மனதுக்குள் பாடல்களின் வரிகள் ஒலித்தது.

“வளையோசை கலகலவென கவிதைகள் படிக்க...” என்று.

விழிகள் எடுக்காது படியில் நடந்து வருபவளை தாபம் பொங்க பார்த்தான் செஞ்சன். அவனது பார்வையில் சங்கவையின் நடை தடுமாறியது.

Loading spinner
Quote
Topic starter Posted : April 7, 2025 11:38 am
(@mrsbeena-loganathan)
Trusted Member

கல்யாணமே முடிஞ்சிடுச்சு காரணம் இன்னும் தெரியலையேப்பா 🤩🤩🤩🤩🤩

Loading spinner
ReplyQuote
Posted : April 7, 2025 1:32 pm
(@mrsbeena-loganathan)
Trusted Member

காரணம் சொல்லவில்லை கட்டளையிடுகிறான்

கவலை கொள்ளும் பெண்ணும் கல்யாணத்தை மறுக்கிறாள்...

காதலும் கோபமும் போட்டி போட்டாலும்

கல்யாணமும் கலகலப்பும்

வாட்டி வதைத்தாலும்...

கலக்கமும் நாணமும்

கலந்த பெண்மையும்

காலடி எடுத்து வைத்தது

கணவனின் அறையில்....

காத்திருப்போம் நாமும்....

Loading spinner
ReplyQuote
Posted : April 7, 2025 1:37 pm
(@gowri)
Estimable Member

இவனை எனக்கு துளி கூட பிடிக்கல🤮🤮🤮🤮🤮

இவனுக்கு எங்க அகவே எவலவோ பரவால்ல போல....

ஏன்டா கல்யாணம் எப்படி பட்ட நிகழ்வு....

அதில் இப்படி ஏதோ அவளை செய்ய வைக்க நினைக்கரியே🙄🙄🙄

சரியான கிரதகனா இருக்கான்....

காட்டேரி😡😡😡😡😡

பண்றது எல்லாம் பண்ணிட்டு சிரிக்க சொல்லுவாம்....

குரங்கு பையன்....

எப்படி டா சிரிக்க முடியும்🤨🤨🤨🤨🤨

Loading spinner
ReplyQuote
Posted : April 8, 2025 11:09 am
(@mathy)
Eminent Member

என்ன கண்டிஷன்னே தெரியாம இந்த வாசுகி வேற 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

இந்த ரசனைக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல 😒😒😒
படுத்துறானே 😷😷😷😷

Loading spinner
ReplyQuote
Posted : April 9, 2025 9:13 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top