அத்தியாயம் 39

 
Admin
(@ramya-devi)
Member Admin

அதை எல்லாம் கேட்க கேட்க சுந்தரத்துக்கு தன் மகளின் மீது கட்டுக் கடங்காத ஆத்திரம் வந்தது. அதை அப்படியே பார்வையாலே அவளிடம் வெளிப்படுத்த அவள் அசையவே இல்லை. அப்படியே கல்லு போலவே நின்று இருந்தாள்.

சுந்தரம் மட்டும் இல்லை அங்கு இருந்த அத்தனை பேரும் ராசசிங்கனை பற்றி மிக கீழ்த்தரமாக விமர்சித்துக் கொண்டு இருக்க அதை எல்லாம் கேட்டவளுக்கு மனம் வெம்பிப் போனது. ஆனால் அதை வெளியே சிறிதும் கூட காட்டிக் கொள்ளாமல் இரும்பு மனிசியாய் நின்று இருந்தாள் ஏந்திழையாள்.

அவளின் அந்த நிமிரவில் பெற்ற அன்னைக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.

“எல்லாத்தையும் கேட்டுட்டு இப்படி கல்லு போல நிக்கிறியேடி.. உன் மனசு என்ன இரும்பாலையா செய்து வச்சு இருக்கு... உனக்கு இவன் வேணாம்டா... இவனை விட வேற ஒரு நல்லவனா பார்த்து உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறோம்” என்றார்.

அப்படி சொன்னவரை ஆழ்ந்து பார்த்தவள்,

“அப்படி நல்லவனை என் முன்னாடி நிறுத்தினா என்னை ஒரு கேள்வி கூட கேட்காம என் கழுத்துல தாலி கட்டுவனா ம்ம்மா” என்று நிதானமாக கேட்டாள்.

“என்னடி உளறுற.. நை எதுக்கு வர்றவன் கேள்வி கேட்கணும்?” புரியாமல் அவளது பெரியம்மா கேட்டார்.

அதே கேள்வியை தான் அத்தைமார்களும் கண்களாலே கேட்டுக் கொண்டு இருந்தார்கள். எல்லோரையும் மிக நிதானமாக பார்த்தவள் தன் தந்தையை கூர்ந்து ஒரு நொடி ஆழ்ந்து பார்த்து விட்டு பார்வையை தன் தாயிடம் நிறுத்திக் கொண்டவள்,

“நான் ஒரு நாள் முழுக்க முழுக்க அந்த ராசசிங்கனோட இருந்து இருக்கேன் ம்மா. இந்த செய்தி என்னை பொண்ணு பார்க்க வர்றவனுக்கு தெரிஞ்சா அவன் என்னை என்ன கேள்விம்மா கேட்பான்?” என்று தாயிடம் கேட்டாள்.

அதை கேட்டுக் கொண்டு இருந்த சுந்தரத்துக்கு அடி நெஞ்சு சுருக்கென்று தைத்தது.

“இழை” என்று அண்ணன்மார்கள் அவளை நெருங்கி ஆறுதல் கூற வர,

“ப்ளீஸ்” என்று அனைவரையும் ஓரம் கட்டியவள்,

“அவன் கிட்ட நான் சுத்தமானவன்னு சொல்லி ஒவ்வொரு நாளும் தீக்குளிக்க சொல்றீங்களா ம்ம்மா” என்று அவள் கேட்க தேவகியின் அடிவயிறு தீ பட்டது போல துடித்துப் போனார்.

“கண்ணு ஏன்டி இப்படி எல்லாம் பேசுற... நீ தங்கம்னு எங்களுக்கு தெரியாதா?” என்று அவர் கண்ணீர் சிந்த, பெரியம்மா அத்தை மார்கள் அனைவரும் கண்கள் கலங்கிப் போனார்கள்.

“நீ என்னை பெத்தவம்மா அதனால உனக்கு என் மேல பூரண நம்பிக்கை இருக்கு. ஆனா மத்தவங்களுக்கும் அந்த நம்பிக்கை இருக்குமான்னு நாம சொல்ல முடியாது இல்லையா? அதோட தீ குளிச்சு காண்பிக்க நான் ஒன்னும் சீதை இல்லையே.. நெருப்புல இறங்குனா என்னோட சாம்பல் தான் கிடைக்கும்..” என்று அவள் மேலும் பேச பேச இங்கே சுந்தரத்தோடு கண்ணனும் வீட்டு மாப்பிளைகளும் சவுக்கடி பட்டது போல துடித்துப் போனார்கள்.

தன் பெண்ணையே நம்பாத பாவத்துக்கு இன்னும் அவளிடம் ஏச்சுகள் எல்லாம் வாங்க வேண்டி இருக்கும் என்று உணர்ந்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களின் வேதனை மட்டும் தீரவில்லை.

பெற்ற பெண்ணை சந்தேகப் பட்டத்துக்கு இந்த வேதனை எல்லாம் ஒண்ணுமே இல்லையே.. இன்னும் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கிறதே..

“கண்ணு அப்படி எல்லாம் உன்னை விட்டுட மாட்டோம்டி தங்கம்” என்று அத்தைமார்கள் கண்ணீருடன் அவளை அனைத்துக் கொள்ள,

ஏந்திழையாளின் இதழ்களில் ஒரு விரக்தி புன்னகை...

“ஏற்கனவே நான் இந்த விசயத்துல சூடு பட்டுட்டேன் அத்தை. இனி இங்க புதுசா சூடு பட எதுவும் இல்லை. ஆனா புதுசா சூடு பட்டா அதை தாங்க என்னக்கு வலு இல்லை. அது தான் தாத்தா எடுத்த முடிவுக்கு சரின்னு சொன்னேன். மத்தபடி வேற ஆம்பிள்ளை கிடைக்காம நான் இந்த கல்யாணம் செய்துக்கல” என்று எல்லோருக்குமே பதிலடி கொடுத்து விட்டு நகர்ந்து விட்டாள்.

ஏந்திழையாள் அப்படி சொல்லி விட்டு போகவும் சுந்தரத்தால் தலையை நிமிர்த்தவே முடியவில்லை. பெண்களால் புலம்பாமல் இருக்க முடியவில்லை. ஆனால் வெளியில் சொல்லவில்லை. பெரியவர்கள் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டிய சூழல்.

அறைக்குள் நுழைந்த ராசசிங்கனும் வேல்முருகனும் எதையோ பற்றி பேசினார்கள். தீவிரமாக டிஸ்கஷன் செய்துக் கொண்டார்கள். அதன் பிறகு கொஞ்ச நேரம் அதை பற்றி விவாதித்து விட்டு வெளியே வந்தவர்கள்.

“சாப்பிட்டு போங்க சிங்கன்” என்று வேல் முருகன் மட்டுமே அவனை உபசரித்தார். வேறு யாரும் அவனது முகத்தை கூட பார்க்கவில்லை. பிறகு எங்க இருந்து உபசரிப்பது. யாருக்கு வந்த விருந்தோ என்பது போலவே வீட்டு ஆட்கள் மொத்தமும் இருந்தார்கள்.

எல்லோரையும் மீறி அவனை சாப்பிட சொல்ல ஏந்திழையாளால் முடியவில்லை. ஆனால் அவளுக்குள் ஒரு சின்ன தவிப்பு இருந்தது.

அன்று தன்னை உபசரித்தவனை இன்று அவளால் உபசரிக்க முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம் அவளை சூழ்ந்தது.

ஆனால் தாத்தா அவனை உபசரித்ததில் கொஞ்சமே கொஞ்சம் நிம்மதி பிறந்தது. வீட்டு மாப்பிள்ளை என்கிற பட்சத்தில் கொஞ்சமே கொஞ்சம் அவனை உபசரித்து இருந்து இருக்கலாம். ஆனால் யாருக்கும் மனம் வரவில்லை.

ஏனெனில் அவர்களது வீட்டு பெண்ணை இந்த அளவுக்கு உடைத்துப் போட்டது அவன் தானே.. இல்லை என்றால் அவளுக்கு இருக்கும் ராச வாழ்வே வேறயாயிற்றே.. அதனால் ராசசிங்கனுக்கு எந்த மரியாதையும் அவர்கள் செய்ய முன்வரவில்லை.

வீட்டு ஆட்கள் வேறு யாரும் உபசரிக்காமல் போனதில் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு இதழ்களை வளைத்தவன்,

“ஏந்திழையாளை கட்டிக் கொண்டு முறைப்படி விருந்தே சாப்பிட்டுக்கிறேன் மிஸ்டர் வேல்முருகன்” என்று வீட்டை விட்டு போய் விட்டான் ராசசிங்கன்.

யாரும் அவனை உபசரிக்காமல் போனதில் கண்கள் எல்லாம் கலங்கிக்கொண்டு வந்தது அவளுக்கு. ஆனால் அவளுக்கு தான் யாரிடமும் பேச மனம் இல்லையே. பிறகு எங்கிருந்து அவர்களிடம் இதையெல்லாம் சொல்லி கேட்பது. மௌனமாக போகும் ராசசிங்கனை பார்த்துக் கொண்டு நின்றாள் நிச்சந்தையாக.

வாசலை தாண்டி சென்றவன் ஒரு கணம் திரும்பி பெண்ணவளை பார்த்தான். அவளது கண்களில் அவனை உபசரிக்க முடியாமல் போனதில் விளைந்த கண்ணீர் தளும்பி நிற்பதை பார்த்தான்.

பிறகு அவளை வா என்றான். இவள் மகுடிக்கு கட்டுப் பட்ட நாகம் போல அவனை நோக்கிச் சென்றாள். வீட்டு ஆட்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்று இருந்தார்கள். ஏனோ இந்த ராசசிங்கனை கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை அவர்களுக்கு.

வந்தவளின் செவியோரம் “ரொம்ப தான் அக்கரை” என்று சொன்னான் ஏளனமாக.

அவள் விலுக்கென்று அவனை முறைத்துப் பார்த்தாள். “இந்த பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...” என்று சொன்னவன் அவளின் முகம் நோக்கி குனிந்தான். இவள் அதிர்ந்துப் பார்த்தாள்.

“கல்யாணத்துக்கு முன்னாடி சின்னதா ஒரு கிஸ் பண்ணனுமாம். அந்த சம்பிரதாயத்தை நான் மதிக்கணும் இல்லையா?” என்று அவன் நக்கலாக சொல்ல, இவள் அதற்கும் முறைத்தாள்.

“ரொம்ப முறைக்காதடி... நான் ஏதோ நல்ல மூடுல இருக்கேன். அது தான் நீ இன்னும் என் கண்ணு முன்னாடி எந்த சேதாரமும் ஆகாம இருக்கிற... இல்லன்னா...” என்று மிரட்டல் தொனியில் அவளிடம் சொன்னான்.

“ஹலோ என்ன ரொம்ப தான் மிரட்டுறீங்க... என்னை சுத்தி பார்த்தீங்கள்ள என் அண்ணனுங்க எத்தனை பேர் இருக்காங்கன்னு.. அவங்களை மீறி உங்களால என்னை எதுவும் செய்ய முடியாது” என்று கொஞ்சம் கர்வமாகவே சொன்னாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : April 10, 2026 11:40 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top