ஒரு புறம் வானுயர்ந்த மலைகள். இன்னொரு புறம் ஆழ்ந்த பள்ளத்தாக்கு.. இயற்கை எவ்வளவுக்கு எவ்வளவு அழகாகவும் மகிழ்வாகவும் இருக்கிறதோ அதை விட அதிக பயத்தையும் மர்மத்தையும் தனக்குள் புதைத்து வைத்து இருக்கிறது... என்று எண்ணிக் கொண்டாள்.
சற்று தொலைவில் ஓடிக் கொண்டு இருந்த சிற்றருவியை பார்த்தவளுக்கு அதன் குளிர்ச்சியை இங்கே உணர முடிந்தது. “ம்ம் ஒரு நாள் அங்க போய் குளிக்கணும்” என்று முடிவெடுத்துக் கொண்டவள் பணத்தை கொடுத்து விட்டு காரில் ஏறி அமர்ந்து கிளப்பினாள்.
அவளின் வீட்டை சுற்றி பல ஏக்கர் நிலம் இருந்தது. அதில் மிளகு கொடி, ரப்பர் மரம், தேயிலை தோட்டம் என பணபயிர் வளரும் பயிர்த்தொழில் செய்துக் கொண்டு இருந்தார்கள் இவளது குடும்பம்.
தோட்டத்தில் கூட இவர்களுக்கு அலுவலகத்தோடு குடியிருக்க வீடும் இருந்தது. அதை மேற்பார்வை செய்ய தனியாக ஆட்கள் நியமிக்கப் பட்டு இருந்தது.
அந்த எஸ்ட்டேட்டை சுற்றி விட்டு தான் வீட்டுக்கு போக இயலும். அதன் படி காரில் போய்க்கொண்டே எஸ்டேட்டை பார்த்தாள். எல்லோரும் அவரவர் வேலைகளை செய்துக் கொண்டு இருந்தார்கள்.
அவர்களை கடந்து கொஞ்ச தூரம் பயணம் செய்த பிறகு வீடு வர பெருமூச்சு விட்டாள். நீண்ட பயணம். மிகவும் அலுப்பாக இருந்தது. தானே ஓட்டிக் கொண்டு வரவும் சோல்டர் பெயின் எடுத்தது.
சுடுநீரில் போய் விழுந்தால் தான் இந்த அலுப்பு போகும் என்று காரை விட்டு கீழே இறங்கினாள். அதற்குள் பணியாட்கள் வந்து அவளை வரவேற்று பெட்டிகளை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள்.
“சுடு தண்ணீர் தயாரா இருக்கு மேம்” என்று பணிப்பெண் சொல்ல தலையை மட்டும் ஆட்டியவள் தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
உடைகளை கலைந்து விட்டு துண்டுடன் குளியல் அறைக்குள் நுழைந்தாள். வெஸ்டர்ன் மாடல். எல்லாமே பளிங்கு தான். அழகான மணமான கேண்டில் ஏற்றி வைத்து இருக்க தானாகவே அவளின் இதழ்களில் புன்னகை குவிந்தது.
“குட்” என்று பாராட்டிக் கொண்டவள் ஒரு மெல்லிசையை சுழல விட்டாள். அதை கேட்டுக்கொண்டே அப்படியே பாத் டப்பில் இருந்த சுடு நீரில் மூழ்கினாள். அதென்னவோ கொஞ்ச நேரமாச்சும் பாத்டப்பில் கிடந்தால் தான் அவளுக்கு குளித்த மாதிரி ஒரு உணர்வே வரும்.
நறுமணம் அவளின் மனதை இன்னும் இதமாக்க தன்னை மறந்து அப்படியே கிடந்தாள். எட்டி அருகே இருந்த சுவிட்சை தட்டி விட்டாள். உடனே வீட்டின் மேற் கூரையை திறந்துக் கொண்டது. வானம் தலைக்கு மேல் தெரிய அண்ணாந்து கிடந்தாள்.
“நீரோடு ஒரு காதல்..
கடல் அலையில் கால் நனைய நடப்பேன்...
ஆகாயம் எனை பார்க்க
மணல் வெளியில் நாள் முழுதும் கிடப்பேன்..
புதிய பல பறவை கூட்டம் வானில்
பறந்து போகிறதே...
சிறகு சில உதிர்த்து நீயும் வா வா
என்றே தான் அழைக்கிறதே...
முகத்துக்கு ஒப்பனைகள் தேவையில்லையே
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே...
அசடுகள் வழிந்திட ஆள்கள் இல்லையே
காலம் நேரம் கடந்த ஞான நிலை...
மலர்களே மலர்களே மலர வேண்டாம்...
உறங்கிடுங்கள்...
அவசரமும் எதுவுமே இன்று இல்லை...
ஓய்வெடுங்கள்...” பாடல் வரிகள் சுழன்றது.
நிம்மதியாக யாருடைய தொந்தரவும் இல்லாமல் சில மணி நேரங்கள் அப்படியே கிடந்தாள் நீருக்குள். மனமெங்கும் பெரும் அமைதி நிலவியது.
கடந்துப் போனவை கடந்துப் போனவையாக மட்டுமே இருக்கட்டும் என்று எண்ணி அதை எல்லாம் தள்ளி வைத்து விட்டு இந்த நொடியில் வாழ முடிவெடுத்தாள்.
தன்னை எப்படி இவர்கள் ஜட்ஜ் பண்ணலாம் என்கிற போக்கு அவளின் மனதில் அடியில் போய் விட்டது. இயற்கை மெல்ல மெல்ல அவளை பூரணமாக அணைத்துக் கொள்ள ஆரம்பித்தது. போதாதற்கு ஊசியாய் மழைத்துளிகள் விழ ஆரம்பிக்க சொல்லவே வேண்டாம் அவளின் நிலையை...
கண்மூடி மெய் மறந்து தன்னை இழக்க ஆரம்பித்தாள். லேசாய் வெடவெட வென்று வர ஆரம்பித்த பிறகே நீரை விட்டு எழுந்தாள். மேல் கூரையை இழுத்து மூடிவிட்டு குளித்து விட்டு வெளியே வந்தவளுக்கு சூடாக உணவும் சூப்பும் இருக்க உண்டுவிட்டு நன்றாக தூங்கத் தொடங்கினாள். அறைக்குள் நுழைந்தவுடன் இங்கும் பாடல்களை போட்டு விட்டாள். அந்த மெல்லிசையில் கண்களை நன்கு சுழட்டிக் கொண்டு வர எல்லாம் மறந்து தூங்கிப் போனாள்.
தூக்கம் இமைகளை அழுத்திக் கொண்டு இருக்க அவளால் தூங்க முடியவில்லை. என்னவோ ஒரு தொந்தரவு. என்ன இது பாதி தூக்கத்தில் என்று அவளின் மனம் சிணுங்கினாலும் தூக்கம் கலைந்து விட்டது. அனால் இமைகளை பிறக்க முடியவில்லை. ஏன் இந்த தொந்தரவு என்று சிறிய முயற்சி செய்து கண்களை திறந்துப் பார்த்தாள்.
பார்த்தவளுக்கு தூக்கி வாரிப்போட்டது. காலடியில் பூமி நழுவியது. படுக்கைக்கு எதிரில் இருந்த ஒற்றை சோபாவில் கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக மறந்து இருந்தான் ராசசிங்கன். அவனை அங்கு எதிர்பாராதவள்,
“நீ... நீங்க எப்படி என் அறையில...” என்று பதட்டமனாள்.
“உன் அறை வேற என் அறை வேறயாடி?” என்று கேட்டான் ராசசிங்கன்.
“ப்ளீஸ் விளையாடாதீங்க... நீங்க எப்படி என் அறைக்குள்ள வந்தீங்க? ஒரு பொண்ணு தனியா இருக்கிற ரூமுக்கு இப்படி சொல்லாம கொள்ளாம வரலாமா? ஹால்ல வெயிட் பண்ணி இருந்து இருக்க வேண்டியது தானே” என்று படபடத்துப் போனாள்.
“அங்க வெயிட் பண்ணா இப்படி ஒரு தரிசனம் கிடைத்து இருக்காதே” என்று நக்கல் செய்தவன் பார்வையாலே அவளின் உடலை தொட்டுக் காட்டினான்.
“வாட்?” என்று அதிர்ந்தவள் தன்னை குனிந்துப் பார்க்க இரவு உடையில் இருந்தாள். இவள் மட்டும் தானே என்று இரவும் நேரத்துக்கு உரிய குட்டி உடையில் இருந்தாள். சட்டென்று தன்னை விட்டு நழுவி இருந்த போர்வையை எடுத்து போத்திக் கொண்டவள்,
“ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க? கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம்னு தான் இங்க வந்தேன். இங்கயும் வந்துட்டீங்க” என்று கண்கள் கலங்க கேட்டாள்.
“உன்னை அப்படி நிம்மதியா விடக் கூடாதுன்னு தான்டி உன் பின்னாடியே துரத்திட்டு வந்தேன். அவ்வளவு ஈசியா நீ நிம்மதியா இருந்துடுவியா? நான் தான் இருக்க விட்டுடுவனா?” எகத்தாளம் பேசியவன்,
“நான் இருக்கிறவரை உனக்கு நிம்மதியே இருக்காது.. காடிட்” என்று ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைக்க அதிர்ந்துப் போனாள்.
“எனக்கு ஸ்மோக் அலர்ஜி இருக்கு” என்றாள்.
“உன்னை தம்மடிக்க சொல்லலையே” என்று நக்கல் பண்ணினான். இவள் பட்டென்று வாயை மூடிக் கொண்டாள். இன்னும் ஏதாவது பேசினால் தன் வாயில் அந்த சிகரெட்டை வைத்தாலும் வைத்து விடுவான் என்று புரிந்துக் கொண்டு அமைதியாகி விட்டாள்.
அவன் நிதானமாக புகையை இழுத்து வெளியே விட ஆழ்ந்த நிசப்தம் அங்கு.
“எதுக்கு இப்போ நீ ஊட்டி வந்த?” கேட்டான். இவள் பதிலே சொல்லவில்லை.
“நான் கேட்டா பதில் வரணும். இல்லன்னா என்ன பண்ணுவேன்னு தெரியும் தானே” அடிக்குரலில் அவன் கேட்க உடம்பு தூக்கிவாரிப் போட்டது.
“இல்ல... என்னால அங்க இருக்க முடியல...” என்று தலை குனிந்துக் கொண்டே சொன்னாள் ஏந்திழையாள்.
“வொய்?”
அவளிடம் ஒரு மௌனம்...
“ம்ம்ம்” என்று ராசசிங்கன் உறும,
அதில் உள்ளுக்குள் அமிழ்ந்து இருந்த கோவம் முகிழ்த்துக் கொண்டு வெடிக்க, “உங்களால தான்” என்றாள் பட்டென்று.
அவன் பார்வை அவள் மீது கூர்மையாக கோவமாக படிந்தது. விழிகளில் அனல் பறந்தது. அந்த சீற்றத்தில் தலையை குனிந்துக் கொண்டவளின் விழிகளில் ஈரம் கசிந்தது.





