Notifications
Clear all

அத்தியாயம் 25

 
Admin
(@ramya-devi)
Member Admin

“வாட் நெக்ஸ்ட்?” என்று இருவரின் மனதும் கேட்டது. இப்படியே இங்கேயே இருந்து விடலாம் ஒருவரின் அருகாமையில் இன்னொருவர் என்று இரு உள்ளமும் தவித்தது. ஆனால் மற்றவரின் கருத்து என்னவென்று தெரியாதே அதனால் அமைதியாக இருந்தார்கள்.

படகில் சாய்ந்து அமர்ந்தாள் வராளி. அவளின் முந்தானையை விரித்து விட்டு அதில் மகனை படுக்கப் போட்டாள். மகனுக்கு அந்த புறம் உதயாதிபன் அவளைப்போல சாய்ந்து அமர்ந்தான். உச்சி வெயில் நேரம் என்பதால் கடற்கரை ஆளரவம் இன்றி வெறிச்சோடி இருந்தது. அதனால் முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவனின் முகத்தை கடை கண்ணால் பார்த்தாள். பார்த்தவளுக்கு அவனது முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. அவனது கற்றை மீசையை பிடித்து இழுக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அவ்வளவு உரிமையை அவள் எடுத்துக் கொள்ள தயங்கினாள்.

அவன் கிளம்பிய பிறகு போகலாம் என்று அவளும், அவள் கிளம்பிய பிறகு போகலாம் என்று அவனும் காத்திருந்தார்கள். ஆனால் இருவருக்கும் போக தான் மனமில்லையே.. அதனால் அப்படியே அமர்ந்து இருந்தார்கள்.

இருவருக்கும் இடையே மகன் தான் ஆ...ஊ என்று சத்தம் போட்டுக்கொண்டு இருந்தான். இருவரும் எதுவும் பேசவில்லை. உதயாதிபனின் கை மகனின் காலை பிடித்து இருந்தது. வராளியின் கை மகனின் கையை பிடித்து இருந்தது. நீண்ட மௌனத்துக்கு பிறகு, “இவனுக்கு என்ன பெயர் வச்சு இருக்க” என்று கேட்டான். அவனது பார்வை எதிரில் இருந்த மண்ணில் இருந்தது.

அவனை ஒரு பார்வை பார்த்தவள், “கர்ணன்” என்றாள். சட்டென்று அவளை திரும்பி பார்த்தான் உதயாதிபன். அவனது பார்வையை உணர்ந்தவள், “உங்க பெயருக்கு பொருள் தெரியும் முன்னாடியே வச்சேன்” என்றாள் தலையை குனிந்துக் கொண்டு. “ஓ” என்று மட்டும் சொன்னவன் இயல்புக்கு திரும்பி விட்டான்.

ஆனால் எல்லாம் ஒரு நொடி தான். பட்டென்று அவளை மீண்டும் பார்த்தவன், “அப்போ இப்ப என்னோட பெயருக்கு பொருள் தெரியுமா?” என்று கண்கள் சுறுங்க அவளை கூர்ந்து பார்த்தான். அவனது கேள்விக்கு தலையை ஆட்டினாள்.

“அப்போ உன் பேருக்கும் பொருள் தெரிஞ்சு வச்சு இருப்பியே?” அவனது குரலில் காட்டம் கொஞ்சம் தென்பட்டதோ.. “ம்ம்ம் நேற்றைக்கு தான் தேடித் பார்த்தேன்” என்றாள் அமைதியாய்.

“என்ன புரிஞ்சது?” என்று சீற்றமாக கேட்டான்.

அவள் மௌனம் சாதித்தாள். “உன் கிட்ட தான்டி கேட்கிறேன். என்ன புரிஞ்சது?” அவளுக்கு மட்டும் கேட்கும் அளவுக்கு கத்தினான். “ப்ச் காலம் கடந்து போன பிறகு பொருள் தெரிஞ்சி என்ன புண்ணியம்...” என்று சொன்னாள்.

“அப்போ என்னோட காதல்” என்று அவன் சீற்றமாக கேட்டான். “காதல்... பெரிய பொல்லாத காதல்... உங்க காதலால யாருக்கு பயன்... என் வாழ்க்கை போனது தான் மிச்சம்” அவளும் தன் கோவத்தை கொட்டினாள்.

“ஏய்..” என்று அவளின் குரல் வளையை இறுக்கிப் பிடித்தான். “ஏன் இல்லன்னு சொல்லுவீங்களா? உங்க காதலால என் வாழ்க்கையே போயிடுச்சு. நான் பாட்டுக்க படிச்சு என் வாழ்க்கையை சீரா கொண்டு போய் இருப்பேன். இப்ப என் படிப்பு பாதியில போய், நல்ல வேலை கிடைக்காம, அஞ்சுக்கும் பத்துக்கும் நாயா ஒவ்வொரு இடமா ஏறி இறங்கி, ஒவ்வொருத்தனிடமும் வாங்கக்கூடாத பேச்சு எல்லாம் வாங்கிக்கிட்டு இருக்கேன். அது மட்டுமா என்னவோ உங்க அம்மா உங்களை மயக்கி நான் என் முந்தானையில வச்சுக்கிட்ட மாதிரி இன்னைக்கு வந்து என்னை அடிச்சுட்டு போறாங்க...”

“இத்தனையும் நீங்க என்ன காதலிச்சதுனால தான்.. நீங்க மட்டும் என்னை காதலிக்காம தேடி வந்து கல்யாணம் பண்ணாம இருந்து இருந்தா என் வாழ்க்கை சுபிக்ஷமா இருந்து இருக்கும். எங்க விட்டீங்க? வாழ்க்கை என்னன்னு தெரியிரதுக்குள்ள கையில குழந்தை வேற”

“என்னவோ பொண்ணுங்களையே பார்க்காதவரு மாதிரி முதல் நாளே மேல பாய்ஞ்சீங்க... சின்ன பிள்ளைன்னு கூட பார்க்காம பிரிச்சி மேஞ்சீங்க... அவளோட விருப்பத்தை கேட்டீங்களா? அவளோட கனவை கேட்டீங்களா? எதுவுமே இல்லையே.. அட்லீஸ்ட் கூட படுத்து உங்க தேவையை தீர்த்துக்கிட்டதுக்கு பிறகாவது என்னை நல்லா வச்சு வாழ்ந்தீங்களா அதுவும் இல்லை. அஞ்சாவது நாளே வீட்டை விட்டுதுரத்தி அடிச்சாச்சு... அப்போ என் வாழ்க்கை என்ன ஆகும்னு நினைச்சி பார்த்தீங்களா? இதுல காதலாம் காதல். மண்ணாங்கட்டி காதல்” கடுப்புடன் அவனை பார்த்து பொரிந்தாள். தன் கழுத்தில் இருந்த அவனது கையை தட்டியும் விட்டாள்.

“காதலை சொல்லல... சரி அட்லீஸ்ட் தாலி கட்டுன பிறகாவது சொல்லணுமா இல்லையா?” என்று அவள் பாட்டுக்க பேசிக்கொண்டே போக,

“எங்க அம்மா உன்னை அடிச்சாங்களாடி” என்று அவளின் நெற்றி காயத்தை கூர்ந்து பார்த்தான். அவனது உடல் மொழியில் சட்டென்று ஒரு மாற்றம். அதை கண்டு கொண்டவள்,

“ச்சை உளறி வச்சுட்டமே” என்று நொந்துக் கொண்டவள், “அதெல்லாம் எதுவுமில்லை...” என்று மழுப்பினாள். அவளை துளைத்துப் பார்த்தவன், தன் பியேவுக்கு போனை போட்டு, “அம்மா காலையில எங்க போனாங்க?” என்று தகவல் கேட்டு பெறப்பார்க்க, அவனது கையில் இருந்து போனை பிடுங்கப் பார்த்தாள்.

ஆனால் அவளை ஒரு கையால் தடுத்து பிடித்தவன் போனில் முழு கவனத்தையும் செலுத்தினான். அந்த பக்கம் சொல்லப்பட்ட செய்தில் உதயாதிபனின் முகம் நெருப்பு கனலாய் சிவந்துப் போனது.

போனை கட் பண்ணிவிட்டு தன் மனைவியை முறைத்துப் பார்த்தான். “எங்க அம்மாவை எதுக்காக என்கிட்ட இருந்து காப்பாத்த பார்க்கிற?”

“ம்கும் எனக்கு என்ன தேவை வந்தது உங்க அம்மாவை காப்பாற்ற” என்று நொடித்துக் கொண்டாள். “அப்புறம் ஏன் காலையில இருந்து கேட்டுட்டு இருக்கேன். பதிலே சொல்லல”

“அது...” என்று தயங்கினாள். “சொல்லுடி எதுக்காக சொல்லல?” ஆத்திரமாக கேட்டான்.

“எதுக்காக சொல்லணும்? ஏன் சொல்லணும்? அப்படியே சொன்னாலும் நீங்க என்ன செய்துடுவீங்க.. உங்களால என்ன செய்திட முடியும்” என்று ஆவேசமாக கேட்டாள். அவன் புருவம் சுருக்கி அவளின் கோவத்தை ஆழ்ந்து பார்த்தான்.

“என்ன செய்ய முடியும் முடியாதுன்னு நான் பார்த்துக்குறேன். நீ என்கிட்டே சொல்ல வேண்டியதை சொல்லணுமா இல்லையா?” அவளை இன்னும் தூண்டி விட்டான்.

“அடேயப்பா... பெரிய ஆளு தான்... ஒன்னரை வருடத்துக்கு முன்னாடி உங்க அம்மா என்னை உங்க வீட்டை விட்டு நாயை விட கேவலமா துரத்தி அடிச்சாங்களே அப்போ எங்க போனிங்கலாம்? அப்போ வராத கோவம் இந்த சின்ன காயத்துக்கு வருதாக்கும்... நல்லா நடிக்கிறீங்க பாஸ். நான் ஒன்னும் உங்க காசுக்காக ஓட்டு போட்ட பொதுமக்கள் கிடையாது சாமி. நீங்க கூழை கும்பிடு போட்டு ரெண்டு வார்த்தை பேசின உடனே மயங்கி போறதுக்கு” என்றாள் ஆத்திரமாக.

Loading spinner

This topic was modified 16 hours ago by Admin
Quote
Topic starter Posted : March 9, 2026 2:40 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top