அவள் காயத்தில் ப்லாஸ்த்திரியை மீறி உதிரம் கசிந்தது. “பாப்பா இரத்தம் வருது” என்று பதட்டப் பட்டார்.
அதை முந்தானையால் துடைத்துக் கொண்டே, “நா.. ன் பார்த்து... க்குறேன் பாட்டி... நீ...ங்க... வீட்டுக்கு கிளம்புங்க..” என்று வலியை மீறி அவரை சமாதனம் செய்து ஒரு ஆட்டோ பிடித்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தவள் கடற்கரை ஓரம் இருந்த அட்ட லட்சுமி கோயிலுக்கு போகலாம் என்று எண்ணி பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.
என்னவோ நெஞ்செல்லாம் பாரமாக இருந்தது. வீட்டுக்கு போக அவளுக்கு மனமே வரவில்லை. எங்காவது கண்காணாத இடத்துக்கு போய் விடலாம் என்று தோன்றிக் கொண்டே இருந்தது.
ஆனால் எங்கு செல்வது என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இலக்கின்றி பயணிப்பது போல ஒரு உணர்வு. எல்லோரும் சேர்ந்து அவளை வாழ விடாமல் செய்வதில் கோவம் கோவமாய் வந்தது.
ஆனால் அந்த கோவத்தை யாரிடம் காட்டுவது எனத்தெரியாமல் அமைதியாக ஒதுங்கிப் போக ஆரம்பித்து விட்டாள். ஆனால் ஒதுங்கிப் போனாலும் விடாமல் வந்து வேதனை தருகிறார்களே என்று மறுகிப் போனாள்.
கோயில் வர எட்டு லட்சுமிகளையும் பார்த்து விட்டு வந்தவள் அங்கு இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்து விட்டாள்.
கோயில் வர எட்டு லட்சுமிகளையும் பார்த்து விட்டு வந்தவள் அங்கு இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்து விட்டாள். எல்லோரும் இருந்தும் தான் மட்டும் அனாதையாகிப் போன உணர்வு. விழிகளில் நீர் கசிந்தது. நெற்றியில் உதிரம் கசிந்தது.
எதுவும் அவளுக்கு உரைக்கவில்லை. எட்ட தெரிந்த கடல் அலையையே பார்த்துக் கொண்டு இருந்தாள். பேசாம யாருக்கும் பாரமில்லாம பயந்து பயந்து வாழுவதை விட செத்துப் போவதே மேல் என்று எண்ணினாள்.
எல்லாம் ஒரு நிமிடம் தான். “ப்ச் இதென்ன கோழை மாதிரி தறிகெட்ட தனமா எண்ணம் போகுது...” தன்னையே நொந்துக் கொண்டவள், “இந்த ஊர்ல இருந்தா தானே பிரச்சனை. பாரதி சார் கிட்ட சொல்லி வேற எங்கயாவது போனா என்ன” என்று தோன்றியது.
அதுவும் சரி தான் என்று எண்ணியவள் பிள்ளை அழுதான். அவனை கவனிக்கலாம் என்றால் ஒரு மறைவு கூட இல்லை.. தோளில் போட்டு அவனை சமாதனம் செய்தவள் மறைவு இடத்தை தேடிப்போக எங்குமே இல்லை. எல்லா இடமும் நெரிசலாக இருந்தது.
“ப்ச்...” என்று கண்கள் கலங்கியவள், கரையோரம் நின்று இருந்த படகின் அடிக்கு போகலாம் என்று கைப்பையை எடுத்துக் கொண்டவள் நடந்தாள்.
அங்கே ஒரு ஆடவன் தலைக்கு கையை கொடுத்து முகத்தில் கைத்துணியை போட்டு முகத்தை மறைத்தபடி மல்லாக்க படுத்து இருக்க கண்டு, விலகி நடந்த நேரம் குழந்தை பசி பொறுக்காமல் அழுக, சரி இவரிடம் பேசி பார்க்கலாம்.. இல்லன்னா வேறு இடம் போகலாம்... என்று முடிவெடுத்தவள் “சார்” என்று அவரை அழைத்தாள். சிறிது நேரம் அசைவே இல்லை. ஒருவேளை நன்றாக தூங்குகிறாரோ என்று எண்ணி நகரப் போன பொழுது,
“ம்ம்” என்று சத்தம் மட்டும் வந்தது. “இல்ல சார் குழந்தை அழறான்” என்ற நேரமே அவனின் முகத்தில் இருந்து துணியை எடுத்து பார்த்தான். அதுவரை அவனையே பார்த்துக் கொண்டு இருந்த பெண்ணவளுக்கு காலடியில் நிலம் நகர்ந்ததை போல இருந்தது.
விக்கித்துப் போனாள். “நீங்க இங்க என்ன பண்றீங்க? அதுவும் மொட்டை வெயில்ல” என்று அவனை பார்த்து கேட்டாள். அங்கிருந்தது வேற யாரும் இல்ல நம்ம தொழில்துறை அமைச்சர் தான்.
பின்ன பெரிய மாளிகை போல வீட்டை விட்டுட்டு, அடுக்கடுக்கா வாங்கி போட்ட அப்பார்ட்மெண்டுகளை விட்டுட்டு, வசதிக்காக வாங்கி போட்ட நூறு கெஸ்ட்ஹவுஸ்களை விட்டுட்டு, அசதிக்காக வாங்கிய பல பண்ணை வீடுகளை விட்டுட்டு இப்படி ஏதுமில்லாத வறியவன் போல வெறும் மணலில் படுத்து இருந்தால் பரிதவித்துப் போகாமல் என்ன செய்வது.
நுனி காலில் கூட அழுக்குப் படாமல் அவ்வளவு நேர்த்தியாக இருப்பவன் இப்படி சுத்தம் சுகாதாரம் பார்க்காமல், ஏறினால் இறங்கினால் என எல்லாமே வெளிநாட்டிலிருந்து சுடசுட இறக்குமதியான பளபளப்புக்கும் கார் தான். கார் முழுவதும் அவ்வளவு வசதி.
அதை எல்லாம் விட்டுட்டு இப்படி சுல்லென்று கொளுத்தும் வெயிலில் படுத்து இருக்கிறான் எனில் அவனது மனதை ஏதோ ஒன்று அழுத்திக் கொண்டு இருக்கிறது என்று தானே பொருள். பட்டென்று அவனது அருகில் அமர்ந்தாள்.
“இங்க என்ன பண்றீங்க?” அதிர்ந்துப் போய் கேட்டாள். அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால் அவனது பார்வை மொத்தமும் அவளின் நெற்றி காயத்தில் இருந்தது. உதிரம் இன்னும் கசிந்துக் கொண்டே தான் இருந்தது.
தன் முகத்தை மூடி இருந்த துணியை வைத்து அவளின் உதிரத்தை துடைக்க வர அவள் முகத்தை நகர்த்திக் கொண்டாள். அதில் அவனது முகம் கசங்கிப் போனது. அதை பார்த்தவளுக்கு இங்கிருக்க வேணாம் என்று உள்மனம் எச்சரிக்கை விட்டது. ஆனால் அவளின் பெண்மனமோ ஆறுதலற்ற சிறுவனாய் இருக்கும் கணவனை விட்டு விலக முடியாமல் அங்கேயே அமர்ந்தாள். “சொல்லுங்க?” என்று மீண்டும் கேட்டாள்.
“நீ இங்க என்ன பண்ற? அதுவும் நெற்றியில எப்படி இவ்வளவு பெரிய காயம். நேத்திக்கு இல்லையே.. என்ன ஆச்சு?” என்று எழுந்து அமர்ந்தான். அவன் சாப்பிடவில்லை என்று அவனது முகத்திலே தெரிந்தது.
“கேள்வி உங்கக்கிட்ட கேட்டேன்?” காலையில் அவளை அடித்த பொழுதும் சத்தமில்லாமல் அனைவரிடமும் இருந்து விலகி வந்தவளால் அவனிடம் அமைதியாக போக முடியவில்லை. என்னவோ நெஞ்சை அறுத்தது.
தன்னை தன் வாழ்வை சீர் குலைத்தவன் என்றாலும் ஏனோ அவனை இப்படி ஒரு நிலையில் அம்போவென விட்டுட்டு அவளால் போகமுடியவில்லை. அவளின் கையில் இருக்கும் பிள்ளையும் இவனும் ஒரே நிலையில் இருப்பது போல தோன்றியது.
“ப்ச் நீ முதல்ல சொல்லுடி.. எப்படி காயம் வந்தது?” பதறினான். “அது கிடக்கட்டும் நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? அதுக்கு முதல்ல பதிலை சொல்லுங்க” என்று கேட்டாள்.
“ப்ச்” என்றவன், “குழந்தை அழறான் பாரு. முதல்ல அவனை கவனி” என்று அவளுக்கு அறிவுறுத்த வேறு வழியில்லாமல் முதலில் குழந்தையை கவனித்தாள். படகு பக்கம் திரும்பிக் கொண்டாள். அவளின் முதுகோடு ஒட்டி படுத்துக் கொண்டான் உதயாதிபன்.
அதில் பெரும் கூச்சம் கொண்டவள், “தள்ளி இருக்கலாம் தானே?” கேட்டாள்.
“வெயில் அடிக்கிதுடி” என்றான். “ம்கும்” என்றவள் ஒன்றும் சொல்லவில்லை. “எத்தனை நாள் ஆச்சு சாப்பிட்டு?” என்று நக்கல் பண்ணினாள். “ப்ச்...” என்றான் அவன்.
தன் பேகை திறந்து மத்திய உணவை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “வேணாம்” என்றான்.
“சாப்பிட்டு பல நாள் ஆன மாதிரி இருக்குங்க” என்றாள். அவன் கையால் சாப்பிட்ட நன்றி உணர்வோ என்னவோ. அவனது பசியை பார்க்க முடியவில்லை அவளால்.
“விட்டுட்டு போயிட்டு இப்ப என்னடி புதுசா அக்கறை..?” “தெரியாம அக்கறை காட்டிட்டேன். நீங்க தின்னா தின்னுங்க.. இல்லன்னா எக்கேடோ கெட்டுப்போங்க. எனக்கு என்ன வந்தது” என்று சொன்னவள் வெடுக்கென்று திரும்பிக் கொண்டாள்.
உதயாதிபனிடம் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. அவனின் கைவிரல்கள் மகனின் காலை பிடித்து வருடிக் கொண்டு இருந்தது. அதில் மகனின் கவனம் கலைய,
“கொஞ்ச நேரம் சும்மா இருங்க... இவன் வேடிக்கை பார்க்கிறான்” என்று அதட்டினாள்.
“ப்ச் என்னடி ரொம்ப தான் அதட்டுர? அப்படிதான் பண்ணுவேன்” என்று வேகமாய் எழுந்தவன் அவள் மூடி இருந்த புடவையை விலக்கி விட்டு மகனை கொஞ்ச வர,
அவனின் கையை பிடித்து தடுத்தவள் வேகமாய் தானே மகனை எடுத்து வெளியே கொடுத்தாள். “ரொம்ப தான் சிலிர்த்துக்குற... நான் பார்க்காதது எதுவும் இருக்கா உன்கிட்ட” என்று கேட்டவனை முறைத்துப் பார்த்தவள்,
“உங்கக்கிட்ட போய் பேசுனேன் பாருங்க என்னை சொல்லணும்” என்றவள் வெடுக்கென்று திரும்பிக் கொண்டு உடையை சரி செய்தாள். அவனின் மார்பின் மீது பிள்ளையை போட்டுக் கொண்டவனுக்கு மனம் பிசைந்தது.
மனைவியின் மடியில் தலை சாய்க்க மனம் ஏங்கியது. ஆனால் அவள் அனுமதிப்பளா என்று தெரியாது. ஒண்ணரை வருடமாக அவன் இழந்து விட்ட சுவர்க்கம் அல்லவா அவள்.
அவளின் காலை பிடித்து மன்னிப்பு கேட்டாலும் திரும்ப கிடைக்காத பொழுதல்லவா? மனம் ஏங்கியது கடந்துப் போன நாட்களை எல்லாம் திருப்பி கொண்டு வந்து வாழ. ஆனால் அதெல்லாம் நடக்காது அல்லவா...





