Notifications
Clear all

அத்தியாயம் 20

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 1018
Topic starter  

அப்போ நான் வேணாம் என்பதால் தானே அவன் வரவில்லை. அவன் தான் தாலி கட்டும் பொழுதே சொன்னானே பத்து நாள் கூத்துன்னு.. பிறகு எப்படி தன்னை தேடி வருவான்... என்று உள்ளுக்குள் எரிமலை பொங்கியது. ஆனாலதை கூட அவனிடம் காட்டிக் கொள்ளவில்லை அவள்.

உரிமையில்லாத இடத்தில் சண்டை போடுவது கூட தவறு தான். தவறு என்பதை விட மடத்தனம் என்றே எண்ணினாள். அதனால் அவனை தேடி அவள் போகவில்லை. இனி போகவும் மாட்டாள்.

அதையெல்லாம் எண்ணிக் கொண்டு அவனின் அருகில் அமர்ந்து வந்தவளுக்கு மனமெல்லாம் காந்தி எடுத்தது. “ச்சீ எவ்வளவு சுயநலமா இருக்காங்க... என்னவோ நானே இந்த ஆளை மயக்கி கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி வீட்டை விட்டு நாயை விரட்டி அடிக்கிற மாதிரி விரட்டி அடிச்சாங்களே.. நானா விரும்பி கல்யாணம் பண்ணேன். இவனுங்களா தானே என்னை கல்யாணம் பண்ணா பதவி வரும், மண்ணாங்கட்டி வரும்னு தேடி வந்து பேரம் பேசி கல்யாணம் பண்ணாங்க...” என்று கொதித்தாள்.

ஆமாம் பேரம் தான்... கலாவதி பெண்ணின் வாழ்க்கைக்கு ஈடாக கோடியை வாங்கி வீட்டில் நிரப்பிக் கொண்டார். முதலில் ஐம்பது லட்சம் தான் பேசினார் தேனாண்டாள். ஆனால் கலாவதி அதை கொஞ்சமும் ஒத்துக் கொள்ளவே இல்லை.

“கையில கோடியை குடுத்தா உண்டு. இல்லையா இடத்தை காலி பண்ணுங்க” என்று விட்டார் காரராக. வேறு வழியில்லாமல் சிவசங்கரன் தான் கலாவதியிடம் ஒரு கோடியை கொடுத்தார்.

அதை எல்லாம் எண்ணிப் பார்த்தவளுக்கு தன் வாழ்க்கையை பகடை காயாக மாற்றி எல்லோரும் தூக்கி போட்டு விளையாண்டதை கண்டு குமுறிப் போனாள். ஆனால் அவளால் என்ன செய்ய இயலும்.

ஒரு வேலை உணவுக்கே தாயின் கையை பார்க்க வேண்டி இருந்தது. வேலைக்கு போன பிறகும் பெரிதாக அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. பிள்ளைக்கு வைத்தியம் பார்ப்பதற்கும் அவளுக்கு பிரசவ செலவு செய்ததற்கும் கலாவதியிடம் பணம் குடுக்க வேண்டி இருந்தது.

இதில் எங்கிருந்து தன் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர்களை பழிக்கு பழி வாங்குவது. ஒவ்வொரு மணி நேரமும் போராட்டத்துடன் அல்லவா போய்க்கொண்டு இருக்கிறது.

பெருமூச்சு விட்டவள் குழந்தையின் அழுகை சத்தத்தில் நடப்புக்கு திரும்பினாள். பிள்ளையின் கள்ளமில்லா முகத்தில் தன்னை தொலைத்தவள் “நீயாவது என்னை ஏமாற்றாம இரு தங்கம்... என் வாழ்க்கையில் நான் சந்திக்கக் கூடாத வேதனை எல்லாம் சந்திச்சுட்டேன்... பார்க்கக் கூடாத காயங்களை எல்லாம் பார்த்து விட்டேன்” என்று மனதோடு சொல்லிக் கொண்டவள் கணவனின் அருகில் மரம் போல அமர்ந்து இருந்தாள்.

அவனை பார்த்து அவளுக்கு வேறு எந்த உணர்வும் வரவில்லை. அவளின் மொத்த உணர்வுகளும் தான் தீ வைத்து கொளுத்தப் பட்டு இருந்ததே. பிறகு எங்கிருந்து உணர்வுகள் முகிழ்க்கும்.

“கண்ணு நாளைக்கு எங்க வேலை?” என்று வேலம்மாள் கேட்க, பல்லைக் கடித்தாள் வராளி. ‘இவருக்கு முன்னாடி தான் இந்த கேள்வி எல்லாம் கேட்கணுமா?’ என்று வந்தது.

“வேதா ஸ்டுடியோ போகணும் பாட்டி. ஒரு ஆட் இருக்கு” என்றாள். “மெயின் ரோலா? சைட்ரோலா?” கேட்டார். “அது...” என்று அவள் தடுமாற, “நமக்கு என்னைக்கு மெயின் ரோல் கிடைச்சு இருக்கு. சைட் ரோலா கண்ணு?” கேட்க, பெருமூச்சு விட்டவள் “ஆமாம் பாட்டி” என்றாள்.

“உனக்கு ஒரு விடிவு காலம் வர மாட்டிக்கிதே...” அவர் பெருமூச்சு விட்டார். பின் உதயாதிபனிடம் திரும்பி, “ஐயா ராசா... நீங்க தான் பெரிய அமைச்சர் ஆச்சே. உங்க தயவுல இந்த பிள்ளைக்கு ஒரு நல்ல வேலை வாங்கி குடுங்க ஐயா. உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும்.. பாவம் கை பிள்ளையை வச்சுக்கிட்டு ரொம்ப சிரமப்படுது” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே “பாட்டி” என்று அதட்டினாள் வராளி.

“எனக்கு யாருடைய தயவும் தேவை இல்லை பாட்டி... எனக்கு கிடைக்கிற வேலையே போதும்.. இதுலையே என்னோட தேவைகளை எல்லாம் நிறைவேற்றிக்கிறேன். இதுக்கு மேல வேற என்ன வேணும்..” என்று சொன்னவளை கூர்மையான பார்வையால் துளைத்து எடுத்தான் உதயாதிபன்.

முன்பு இருந்த தயக்கம் மென்மை எல்லாம் தொலைத்து விட்டவள் போலிருந்தாள். அவனது பார்வை உணர்ந்தும் அவள் அவன் பக்கம் திரும்பவே இல்லை.

கையருகில் அமர்ந்து இருக்கும் மனைவியை கட்டி தழுவ எல்லாம் பரபரக்கவில்லை அவனுக்கு. அவளின் சுயத்தில் தலை நிமிர்ந்து இருப்பதற்கு பின்னாடி இருக்கும் கடந்த காலத்தை பற்றி எண்ணியவனுக்கு அவளின் வலி புரியவில்லை.

ஆனால் தனக்கு தெரியாமல் என்னவோ நடந்து இருக்கிறது என்பதை உணர்ந்தவனாய் பெருமூச்சு விட்டான். அவளிடம் பேச முயற்சிக்கவில்லை.

அவனின் நினைவுக்கள் கடந்தகாலத்தில் பயணித்தது. மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றவன் நான்காவது நாள் வீட்டுக்குள் நுழைந்தான். நுழைந்தவுடன் அவன் தேடியது என்னவோ அவனின் மனைவியை தான். ஆனால் அவள் அவனின் கண்களில் சிக்கவே இல்லை.

“எங்கம்மா அவ” என்று கேட்டவனிடம் சில காகிதங்களை கொடுத்தார் தேனாண்டாள். “என்னம்மா இதெல்லாம்?” என்று அவன் கேட்க, “நீயே படிச்சு பாரு” என்று சொன்னார்.

அவன் எல்லா காகிதங்களையும் பொறுமையாக வாசித்துப் பார்த்தான். அதில் அவர்களின் டைவேர்ஸ் பேப்பர், கூடவே சில சொத்துக்களை அவளது பெயரில் ரெஜிஸ்டர் ஆகி இருந்தது. ரொக்கமாக பல கோடி பணம் கைமாறி இருந்ததுக்கான விவரங்களுடன் அவளின் கையெழுத்துக்கள் மின்னியது அந்த காகிதங்களில்.

“ம்மா” என்று அவன் பேசவர, “ஒரு வாரத்துக்கு மட்டும் தான் அவ உன்னோட மனைவியா இருக்க இந்த கல்யாணம் ஏற்பாடு செய்தோம். இருந்தாலும் மனசு கேட்காம அவக்கிட்ட பணம் வேணுமா இல்ல இங்க வாழுறியான்னு கேட்டோம். அவளுக்கு பணம் தான் வேணும்னு கிளம்பிட்டா... இதுக்கு மேல நீ அவளை தேடி போகக்கூடாது. அடுத்த மாசம் சீதா நாத்தனாரோடு உனக்கு திருமணம்” என்று கட்டன் ரைட்டாக பேசிவிட்டார் தேனாண்டாள். அதனால் இவ்வளவு காலமும் அவளை தேடி அவன் போகவில்லை.

அவனுடைய கோவம் எல்லாம் அவ்வளவு தூரம் சொல்லியும் அறையை விட்டு வெளியே வந்ததோடு இல்லாமல் வீட்டை விட்டும் போய் இருக்கிறாளே என்பது தான். எதுவாக இருந்தாலும் அவன் சரிசெய்வான் என்கிற நம்பிக்கையை அவள் வைக்காமல் போனது தான்.

அதனாலே அவளை தேடி அவன் போகவே இல்லை. அடுத்த மாதம் தேனாண்டாள் கல்யாணத்துக்கு நாள் குறிக்க பார்க்க, “எனக்கு கல்யாணமே வேணாம்...” என்று ஒரே பிடிவாதத்தில் இருந்து விட்டான் உதயாதிபன். எல்லோரும் சொல்லி பார்த்து விட்டார்கள். ஆனால் அவன் கேட்கவே இல்லை.

யாருடைய பேச்சையும் காதில் போட்டுக்கொள்வதே இல்லை. அவனது அமைச்சர் பதவிக்கு கடுமையாக வேலை செய்தான். தொகுதி மக்களை பார்த்து நலன் விசாரிப்பது. அவர்களின் முன்னேற்றத்திற்கு ஏதாவது உதவி செய்வது, தொழில்துறை வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வது என அவனது எல்லாமே பாதி மிகவும் பரந்து விரிந்து கிடந்தது. எல்லாமே பொது வாழ்க்கை என்று ஆனது. அதனால் அவனது சொந்த வாழ்க்கையை பற்றி அவன் கவலை கொண்டதே இல்லை.

தன் பேச்சை மீறி போனவளின் மீது கட்டுக்கடங்காத கோவம் வந்தது. அவள் பக்கம் இருக்கும் சூழலை கவனிக்க தவறினான். இப்பொழுதும் அதே போல தான் இருக்கிறான். ஆனாலும் அவளின் மீது இன்னும் காதல் ஒளிந்துக் கொண்டு தான் இருக்கிறது.

காதலா... ஆம் காதலே தான்...

“போதும் இங்கயே நிறுத்துங்க...” என்று வண்டியை நிறுத்த சொன்னாள் வராளி.

“ஏன் என்ன ஆச்சு?” என்று நீண்ட நேரத்துக்கு பிறகு கேட்டான் உதயாதிபன். “பல பிரச்சனைகள் எழாம இருக்கணும்னா நான் இங்கயே இறங்குறது தான் நல்லது” என்றாள்.

“பாப்பா தம்பி இருக்கான். மழை வேற விடல... எப்படி இவ்வளவு தூரம் நனைஞ்சுக்கிட்டே போறது.. நான் உங்க அம்மாக்கிட்ட பேசிக்கிறேன்” என்று சொன்ன பாட்டி காரை நேராகா அவளின் வீட்டுக்கு முன்னாடி நிறுத்த சொன்னார்.

வராளி தலையிலே அடித்துக் கொண்டாள். வீட்டின் முன்னாடி கார் சத்தம் கேட்கவும் கலாவும் சிவாவும் வெளியே வந்து பார்த்தார்கள். முன்னாடி அமைச்சர் என்று பெயர்பலகை இருக்கக் கண்டு கண்களை விரித்தார்கள்.

மறுபடியும் ஒரு அமவுண்ட் தேறும் போலையே... என்று பேராசையில் மிதந்தனர். “உங்க கருணைக்கு ரொம்ப நன்றி.. ஆனா இதோட நம்ம உறவு முடிஞ்சுக்கிட்டா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்” என்று சொன்னவள் பிள்ளையை தன் முந்தானையால் போத்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.

Loading spinner

This topic was modified 11 hours ago by Admin

   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top