Notifications
Clear all

அத்தியாயம் 13

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 1006
Topic starter  

முதலிரவும் அன்றே நடக்க வேண்டும். இல்லை என்றால் இருவரும் சேரும் வாய்ப்பே இருக்காது. கூடிய சீக்கிரம் முதலிரவு நடந்தால் தான் உங்க மகனது வெற்றி கண்கூடாக பார்க்க முடியும்... என்று சொல்லி விட்டார் சாதகம் பார்ப்பவர்.

அதனாலே உதயாதிபனின் அன்னை தேனாண்டாள் இந்த திருமணத்தில் கொஞ்சம்கூட விருப்பம் இல்லை என்றாலும் சாதக பலனுக்காக திருமணத்துக்கு சம்மதித்து அன்றைக்கே முதலிரவு நடத்த ஏற்பாடு செய்தார்.

உதயாதிபனுக்கு இதிலெல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. ஆனால் இதை எல்லாம் செய்யவில்லை என்றால் பெரியவர்களின் மனம் புண்படும் என்பதால் தலையை ஆட்டிவிட்டு நின்றான்.

தாலியை கட்ட சொன்னார்கள். இவனும் எடுத்து கட்டினான். அப்பொழுது தான் தாலியை பார்த்தார்கள் அனைவரும். அது தாலியே இல்லை.

தன் மகனை பார்த்து அதிர்ந்த தேனாண்டாள், “என்ன உதயா தாலி எங்க? வேற என்னத்தையோ கட்டுற” என்று கேட்டார்.

“பத்து நாள் கூத்துக்கு இது போதும் ம்ம்மா” என்று முடித்துக் கொண்டான். ஏனெனில் அவனிடம் சொன்னது அப்படி தான் சொன்னார்கள்.

“உதயா இது வெறும் கண் துடைப்பு தான். உன் பதவிக்காக தான் இதெல்லாம். உனக்கு கல்யாணம் நம்ம லட்சுமி நாத்தனாரோடு தான்” என்றார்.

அவரை பார்த்து தலையை ஆட்டியவன் வராளியின் கழுத்தில் அழுத்தமாக மூன்று முடிச்சை போட்டான் யாராலும் அவிழ்க்க முடியாத அளவுக்கு. வராளியே நினைச்சாலும் இந்த உறவை விட்டு விலக இயலாது.

தாலி கட்டிய அடுத்த நொடி வராளியின் வீட்டு ஆட்களை அனுப்பிவிட்டு விட்டார்கள். சிறு பெண்ணுக்கு மிகுந்த பயமாக இருந்தது. மிரட்சியுடன் போகும் தன் குடும்பத்தை பார்த்தவளுக்கு நெஞ்சில் பயம் கவ்விக் கொள்ள, அந்த நேரம் அவளின் கையோடு ஒரு கை நுழைய திகைத்துப் போய் அந்த கையை பார்த்தாள்.

அப்படியே பார்வையை மேலேற்றி வர உதயாதிபன் மென்மையான பார்வையோடு அவளை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். ஏனோ அந்த பார்வையில் அவ்வளவு ஆறுதல் இருந்தது.

அவளின் கையை பிடித்து இருந்தது என்னவோ முரட்டு தனமாக இருந்தாலும் அதில் இருக்கும் ஆறுதலை புரிந்துக் கொண்டாள்.

சிறுபெண் தான். ஆனால் அவள் இயல்பிலே அதிக புத்திசாலி தனத்தோடும் பக்குவத்தோடும் இருந்தாள். அதனால் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவும் துணிந்தாள் வராளி.

கோயிலில் இருந்து நேராக மணமக்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். பெயருக்கு ஒரு ஆராத்தி அவ்வளவு தான்.

அதன் பிறகு ஒருவரும் கண்ணில் படவில்லை. அவரவர் அறைக்குள் நுழைந்துக் கொண்டார்கள். தனித்து நின்ற பெண்ணவளை அழைத்துக் கொண்டு சாமி அறைக்கு சென்றான் உதயாதிபன்.

“விளக்கு ஏத்து” என்றான்.

அவளும் சாமியை வணங்கி விளக்கு ஏற்றினாள். அந்த நேரம் தேனாண்டாள் வேகமாக வந்து விளக்கை அணைக்க பார்த்தார்.

“யார் வீட்டுல வந்து யார் விளக்கு ஏற்றுவது? என்ன தகுதிடி இருக்கு உனக்கு என் வீட்டுல வந்து விளக்கு ஏற்ற.. பஞ்சபரதேசி... அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தும் பிச்சைக்காரி என் வீட்டுல வந்து தங்க விளக்கு ஏத்துவதா?” என்று விளக்கையே தட்டிவிடப் பார்த்தார் ஆவேசமாக.

“ம்மா” என்று அழுத்தமாக தன் தாயை பார்த்தான் உதயாதிபன்.

“எல்லாம் உன்னை சொல்லணும்டா... தெரு நாயை கூட்டிட்டு வந்து நடு வீட்டுல வச்சி அழகு பார்த்துட்டு இருக்க... இருக்கிற பத்து நாளும் இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு துரத்தி அடிச்சுட்டு வீட்டை டெட்டால் போட்டு கழுவி விடுவதை விட்டுட்டு விளக்கமாத்துக்கு தங்க விளக்கு கேக்குதோ” என்று ஆத்திரமாக தன் மகனிடம் பாய்ந்தார்.

“ப்ச்” இவர்கிட்ட பேச முடியாது என்பதால்,

“டையர்டா இருக்கு ரெஸ்ட் எடுக்கிறேன்” என்று சொல்லி கையோடு வராளியையும் கூட்டிக்கொண்டு போய் விட்டான். கீழே இவர்களிடம் அவளை விட்டுட்டு வர மனமில்லை. சிறு பெண் அவர்களின் குணத்தை எல்லாம் பார்த்து இன்னும் அதிகமாக மிரண்டு போவாள் என்பதால் தன்னோடு அவளை கூட்டிக்கொண்டு வந்து விட்டான்.

“பார்த்தியாமா உன் மகனை... வந்த உடனே அவளை தலையில் தூக்கி வைக்காத குறையா ஆடுறான். நீ கவனமா இரு. இல்லன்னா உன்னையையும் தூக்கி சாப்பிட்டுடுவா அவ..” என்று இல்லாததும் பொல்லாததுமாக ஏற்றி விட்டார்கள் இரு மகள்களும்.

ஒருத்தி லட்சுமி இன்னொருத்தி சீதா. சீதா சின்னவள். திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். லட்சுமிக்கு திருமணமாகி ஒரு பிள்ளை இருக்கிறது. இருவரும் குடும்பத்தோடு உதயாதிபன் வீட்டில் தான் இருக்கிறார்கள்.

இவ்வளவு நாட்களும் தம்பியின் அண்ணனின் திருமணத்தை பல வழிகளில் தடுத்துக் கொண்டே இருந்தார்கள். திருமணம் நடந்து வாரிசும் வந்து விட்டால் மொத்த சொத்தும் அவனுக்கு தானே போய் சேரும். அதனால் உதயாதிபனுக்கு திருமணம் ஆகாமல் பார்த்துக்கொண்டு வந்தார்கள் இத்தனை வருடமும்.

ஆனால் இதோ இனிதாக திருமணம் உதயாதிபனுக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டது. அவர்கள் கண்ட கனவு கைநழுவி போகும் அபாயத்தை உணர்ந்தவர்கள் தேனாண்டளிடம் ஏட்டிக்கு போட்டியாக கண்டதையும் வராளியை பற்றி சொல்லி அவளின் மீது கொஞ்சமும் கரிசனம் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள் சகோதரிகள் இருவரும்.

இவர்கள் சொல்லிக் கொடுத்து தான் தேனாண்டாள் அப்படி நடந்துக் கொள்கிறார் என்று எல்லாம் இல்லை. அவரும் நஞ்சில் ஊறி போய் இருக்கும் ஆள் தான். பணம் நகை பதவியின் மீது அவ்வளவு மோகம். தங்களுக்கு இணையாக இருக்கும் ஆட்களை மட்டும் தான் மதிப்பார். மதத்தவர்களை எல்லாம் செருப்புக்கு கீழாக கூட மதிக்க மாட்டார். அந்த அளவு ஆணவத்திலும் பகட்டிலும் மூழ்கி இருந்தார். சரியான சுயநலம் வாய்ந்த குடும்பம்.

அந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரின் குணமும் இது தான். அதில் உதயாதிபன் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் இரக்க குணம் கொண்டவன். ஆனால் அவனுக்கும் இவர்களது குணம் தலைகாட்டாமல் இருக்காது.

தங்களின் சுயநலத்துக்காக எதையும் செய்ய துணியும் வர்க்கம். அப்படி பட்ட அரக்க குணம் கொண்டவர்களின் மத்தியில் தான் வராளி போய் சிக்கிக் கொண்டாள்.

ஆனால் உதயாதிபனின் நிழலில் இருந்ததால் அவர்களால் அவளை ஒன்றும் செய்ய முடியவில்லை.

தன் அறைக்கு அழைத்து வந்தான் வராளியை. வராளிக்கு அந்த பெரிய வீட்டை பார்த்து உள்ளுக்குள் பெரும் பயம் சூழ்ந்தது. அவள் இருந்த வீடு வெறும் இரண்டு அறை உள்ள வாடகை வீடு. அதிலே நால்வரும் சுருண்டுக் கொள்வார்கள். ஆனால் இங்கே மிக மிக பிரமாண்டமாய் இருந்த மாளிகையை பார்த்து மிரண்டுப் போனாள்.

தரையில் தன் கால் பட்டால் எங்கே தரை அழுக்காகி விடுமோ என்று பயந்தாள். அவளின் மிரட்சியை பார்த்து புருவம் சுருக்கிய உதயாதிபன் மென்மையாக சிரித்தான்.

“இங்க வா” என்று அவளின் கையை பிடித்து இழுத்து தன் அருகில் அமரவைத்தான்.

அவனை ஒட்டி உட்காராமல் தள்ளியே அமர்ந்துக் கொண்டாள். அதுவும் அவள் இருக்கையின் நுனியில் அமர்ந்துக் கொள்ள அதை பார்த்தவனுக்கும் அவளை சீண்டி விட வேண்டும் போல இருந்தது. ஆனால் அவள் இன்னும் மிரண்டு போவாள் என்று எண்ணி தன் சேட்டையை மறைத்துக் கொண்டு அவளிடம் இயல்பாக இருந்தான்.

“ஆமா உன் பேர் என்ன?” என்று கேட்டான். ‘பேரு கூட தெரியாமலா கழுத்தில் தாலி கட்டுனாரு’ மனதுக்குள் கேட்டுக் கொண்டவள்,

“வராளி” என்று மென்மையாக சொன்னாள். அதை கேட்டு புன்னகை பூத்தவன்,

“வராளின்னா என்னன்னு தெரியுமா?” என்று கேட்டவனின் பார்வை மொத்தமும் அவளின் நெஞ்சில் இருந்த தாலியில் இருந்தது.

“ம்ஹும்..” என்று தலையை ஆட்டினாள்.

“உனக்கே ஒரு நாள் தெரிய வரும்” என்று சொன்னவன், “ஆமா என்னை பிடிச்சு இருக்கா?” மேலும் அவளிடம் பேச்சை வளர்த்தான்.

“தெரியலயே” உதட்டை பிதுக்கினாள். கூடவே தலையையும் அவள் ஆட்ட காதில் இருந்த சின்ன சிமிக்கியும் கூட சேர்ந்து ஆடியது.

அதை உள்வாங்கி இரசித்துப் பார்த்தவன்,

“சமைக்க தெரியுமா?”

“தெரியும்”

“என்ன சமைப்ப?” கேட்டவன், “என்னை இதுக்கு முன்னாடி எங்கயும் பார்த்து இருக்கியா? நான் யாருன்னு தெரியுமா?” என்று மேலும் கேட்டான்.

“ம்ம் நீங்க தொழில்துறை அமைச்சர்... எங்க கல்லூரி விழாவுக்கு வந்து இருக்கீங்க” என்றாள் மெல்லிய குரலில். அவனது கண்களில் ஒரு மின்னல் வந்துப் போனது.

“சோ என்னை நினைவு இருக்கு இல்லையா?” என்று கேட்டான் ஒரு மாதிரி குரலில்.

“ம்ம்ம்” என்று மட்டும் சொன்னாள். கல்லூரி விழா நாளில் உதயாதிபன் தான் விழாவை தலைமை தாங்க ஏற்பாடு செய்தது கல்லூரி நிர்வாகம்.

அப்படி அவன் மாலை நேரம் வந்திருக்கும் பொழுது அவனை உபசரிக்க நான்கு பெண்களை ஏற்பாடு செய்து இருந்தார்கள். அதில் ஒரு பெண் தான் வராளி.

அவளின் அமைதியும் நேர்த்தியும் முதல் பார்வையிலே உதயாதிபனை கவர்ந்து ஈர்த்தது. ஆனால் அவன் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. மற்ற பெண்கள் அவனிடம் மேலே வந்து விழும் அளவுக்கு நெருங்கி நெருங்கி நின்று உபசரிக்க இவள் மட்டும் தள்ளியே நின்றாள்.

ஒரு கட்டத்துக்கு மேல் அவர்கள் மூவரையும் மற்றவர்களை கவனிக்க சொன்னவன் வராளியை மட்டும் தனக்கு சேவகம் பண்ண பணித்தான். அவளும் சொன்னதை செய்யும் கிளிபிள்ளையாய் அவனுக்கு சேவை செய்தாள்.

அப்படி செய்யும் பொழுது அருகில் இருந்த குத்து விளக்கில் அவளது புடவை உரசி தீ பிடிக்க அதை பார்த்தவன் அவளின் கையை பிடித்து இழுத்து தன் நெஞ்சோடு அணைத்து அவளின் பின் காலில் புடவையில் பற்றி எறிந்த தீயை தன் கையாலே அனைத்தான்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top