Notifications
Clear all

அத்தியாயம் 12

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 1006
Topic starter  

அவளின் விழிகளில் இருந்த கண்ணீரின் மினுமினுப்பும் இதழ்களில் இருந்த புன்னகையும் கண்டு கொண்டான். ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல்,

“பதில் சொல்லுடி” என்று மேலும் அவளை காயப்படுத்தினான்.

“அது தான் நீங்களே சொல்லிட்டீங்களே சார்... உங்களை மயக்கன்னு. பிறகு நான் என்ன சொல்ல... எனக்கும் ஆடம்பரமா வாழ ஆசை வரும்ல. அது தான் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கேன். நான் அடிக்கடி உங்க பார்வையில பட்டு என் அழகை காட்டி மயக்கி போட்டு அமைச்சர் பொண்டாட்டியா வாழ ரொம்ப ஆசை வந்திடுச்சு..” என்று சொன்னவள்,

“வாந்தி வர்ற மாதிரி இருக்கு கொஞ்சம் வண்டியை நிறுத்துறீங்களா ப்ளீஸ்” என்று கேட்டாள்.

அவள் காரை விட்டு இறங்க தான் இப்படி ட்ரிக் செய்கிறாள் என்று புரிந்துக் கொண்டவன்,

“பரவாயில்லை இங்கயே வாந்தி எடு... நாளைக்கு காரை சர்வீஸ்க்கு தான் விடப்போறேன்” என்றான். அவனின் நெஞ்சில் அவள் மீதான தாக்கம் சற்று அழுத்தமாகவே விழுந்தது.

உதயாதிபனுக்கு அவளை நன்றாக தெரியும் என்று சொல்ல முடியாது. ஆனால் அவளுடன் பழகி இருந்த நாளில் அவளது குணம் நன்றாகவே தெரிந்து வைத்து இருந்தான். அதுவும் நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த மழை நாளில் சந்தித்த பொழுது அவனை யாரென்று தெரியாதது போலவே நடந்துக் கொண்ட அவளின் தன்மான குணம் நன்கு விளங்கியது.

இப்பொழுது கூட தாலிக்கு உரிய காசை குடுத்து விடுகிறேன் என்று தான் நிற்கிறாள். இதோ அவனது உருத்தான ஒரே வாரிசு... பல ஆயிரம் கோடிகளுக்கு ஒரே வாரிசு.

அது அவளின் வயிற்றில் இருந்த பொழுதும் உரிமை கோரி அவனிடம் வரவில்லை. அதே போல அவன் பிறந்த பிறகும் இது தான் உன் வாரிசு... பாதி சொத்தை குடு என்று எதற்கும் அவனிடம் வராத உத்தமி ஆயிற்றே.. அவனுக்கா அவளை பற்றி தெரியாது.

ஆனாலும் அவனுக்கு சில விசயங்கள் தெரிய வேண்டி இருந்தது. அதனாலே வராளியிடம் போட்டு வாங்கிக் கொண்டு இருந்தான் உதயாதிபன். அது தெரியாமல் இவள் பாட்டுக்க அவனிடம் தன் மனக்குமுறலை கொட்டினாள்.

“பார்த்தியா உன் மனசுல இந்த ஆசை இருக்க போய் தானே இப்படி நடந்துக்குற... இல்லன்னா இவ்வளவு நாள் என் கண்ணுல படமா இருந்த மாதிரி இருந்து இருப்ப... ஆனா சமீபகாலமா நீ பார்வையில அடிக்கடி பட்டுக்கிட்டே இருக்க. இதுக்குன்ன பெருசா காரணம் இருக்கப் போகுது. என் கூட உனக்கு வாழ ஆசை வந்திடுச்சு... அதுவும் அமைச்சர் பொண்டாட்டின்னா சும்மாவா? இந்த சமூகத்துல எவ்வளவு மதிப்பு மரியாதை கிடைக்கும். அதை விட என் பேர்ல இருக்க சொத்துக்கள். என் பரம்பரை சொத்துக்கள் இதெல்லாம் தானே உன்னை இப்படி எல்லாம் செய்ய வைக்கிறது” என்று கேட்டவனின் கேள்விகளில் கண்களில் கண்ணீர் நிறைந்துப் போனது.

“கடவுளே... எவ்வளவு பழிச்சொல்” என்று மறுகிப் போனவள்,

“ஆமாம் சார்... எனக்கு ஆடம்பரமா வாழணும்னு ஆசை. அது எங்க வீட்டுல இருந்தா நடக்காது இல்லையா... அதனால என்னை உங்களோட கூட்டிட்டு போயிடுங்க. எனக்கு நீங்க வாழற மாதிரி சொகுசா இருக்கணும்னு ஆசை. ஏறுனா காரு இறங்குனா காரு... ரெண்டு நாளைக்கு ஒருமுறை ஷாப்பிங், நகை நட்டுன்னு போட்டுட்டு வெளியே தெருவ போகணும். பல பார்ட்டிக்கு போகணும்னு ரொம்ப நாள் ஆசை. அதெல்லாம் என் வீட்டுல இருந்தா கண்டிப்பா நடக்காது இல்லையா.. அது தான் உங்களை வளச்சி போடலாம்னு பார்க்கிறேன்” என்றாள் அடைக்கும் தொண்டையை சரிசெய்துக் கொண்டு.

அவளது கரகரப்பான குரலிலே அவள் மிகவும் கலங்கிப் போய் இருக்கிறாள் என்று உணர்ந்துக் கொண்டவனுக்கு சன்னமாய் பெருமூச்சு வந்தது.

அவளின் நடுங்கும் கைகளை இறுக்கமாக பற்றிக் கொள்ள எழுந்த உணர்வுகளை அடக்கிக் கொண்டு அவளின் முகத்தை கூர்ந்து பார்த்தான். அவளின் உதடுகள் அழுகையில் துடித்தது. அதை தன் பற்களால் அழுத்தமாக கடித்து அடக்கிக் கொண்டு இருந்தவளை பார்த்து அவளின் மீது இரக்கம் சுரந்தது.

வாழ வேண்டிய சிறு பெண்.. சிறு வயதில் ஏன் இவளுக்கு இவ்வளவு வேதனை பெருமூச்சு விட்டவன்,

“சரி அப்போ நாளைக்கு ரெடியா இரு... என் வீட்டுல என்னோட வந்து வாழு” என்றான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.

“ஏதே...” என்று அவளின் ஒட்டு மொத்த அழுகையும் நின்றுப் போனது அவன் கொடுத்த அதிர்ச்சியில். மறுபடியும் அவனோட போய் வாழறதா... ம்ஹும் அது மட்டும் அவளால் முடியவே முடியாது...

“ஹலோ..” என்று அவள் கொந்தளிக்க ஆரம்பிக்கும் முன்பே,

“அப்படி கூப்பிடுவேன்னு நினைச்சியா? நீ பணத்துக்கு ஆசை பட்டுத்தானே என்னை விட்டுட்டு போன.. மறுபடியும் உன்னை தேடி வந்து வாழ கூப்பிடுவேன்னு நினைச்சியா? அது கனவுலையும் நடக்காது..” என்றான் அழுத்தமாய்.

“நான் எங்க வாழ வரேன்னு சொன்னேன். இவரா வர சொல்லி இவரே வேணான்னு சொல்றாரு... லூசா இவரு” என்று தான் அவனை பார்த்தாள் வராளி.

“என்ன பார்க்கிற உன் பேராசை புத்தியை இப்போ தான் இன்னும் தெளிவா தெரியுது.. உன் பேராசைக்கு என் சொத்து மொத்தத்தையும் எழுதி வச்சா கூட பத்தாது. அதனால உன்னை எல்லாம் என் வாழ்க்கையோட சேர்த்து வச்சுக்கிட்டு அவஸ்த்தை பட என்னால முடியாது” என்று கடுகடுத்தவனை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

‘அப்பாடா நல்ல வேலைக்கு. நான் கூட எங்க கையோட அவரோட வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாரோன்னு பயந்து போயிட்டேன்’ என்று மனதுக்குள் ஆசுவாசம் ஆனாள். ‘கொஞ்ச நேரத்துல கலவரம் செய்ய பார்த்துட்டாரே இந்த மனுசன்’ என்று பெருமூச்சு விட்டவள் பின்னாடி நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டு கண்களை அழுந்த மூடிக் கொண்டாள்.

மகன் அவளின் மடியில் சுகமாக தூங்க ஆரம்பித்தான். உடையை சரி செய்துக் கொண்டவள் மகனை தட்டிக் கொடுத்துக் கொண்டே தூங்க அவளின் தோளில் ஒரு பாரம் படிந்தது. கதறி மீசை அவளின் கழுத்தை குத்தி கிழித்தது.

பட்டென்று விழிகளை திறந்து பார்க்க உதயாதிபன் தான் அவளின் கழுத்தில் முகம் புதைத்து இருந்தான். அவனை தள்ளி விட பார்த்த கைகளை அடக்கிக்கொண்டு வெறுமென அப்படியே இருந்தாள். விழிகளில் கோர்த்த நீர் அவளின் கன்னங்களை நனைத்தது. அவனின் தலையை கோதி விட துடித்த மனதை அடக்க வெகுவாக போராடினாள்.

அவளின் நினைவுகள் எல்லாம் ஒன்னரை வருடங்களுக்கு முன்பு பயணித்தது.

மிக எளிமையாக கோயிலில் வைத்து உதயாதிபனுக்கும் வராளிக்கும் திருமணம் செய்து வைத்தார்கள் உதயாதிபனின் பெற்றவர்கள்.

உதயாதிபனின் குடும்பம் பாரம்பரியமான செல்வாக்கு மிகுந்த குடும்பம். வழி வழியாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். தாத்தா, தந்தை, இவன் என மூன்று தலைமுறையாக அரசியலில் கோலொச்சிக் கொண்டு இருக்கிறார்கள்.

அரசியல் பலம் செல்வத்தின் மூலமும், மக்கள் மனதில் தூவும் சலுகைகள் மூலமும் பெற்றுக் கொண்டு இருந்தவர்களுக்கு உதயாதிபனின் சாதகத்தை கொண்டு போய் பார்த்து விட்டு வந்தார்கள் அவனின் அப்பா அம்மா.

சாதகத்தை மிகவும் நம்புகிறவர்கள் அவர்கள். சாதகம் பார்க்கப் படும் பொழுது உதயாதிபனுக்கு பொருத்தமான சாதகம் வராளியின் சாதகம் மட்டும் தான். இந்த பெண்ணை திருமணம் முடித்தால் உறுதியாக முதலமைச்சர் பதவி தேடி வரும் என்று சொல்லிவிட, பிறகு இரவோடு இரவாக அவளை தூக்கி வந்து திருமணம் செய்து வைத்தார்கள்.

முதலிரவும் அன்றே நடக்க வேண்டும். இல்லை என்றால் இருவரும் சேரும் வாய்ப்பே இருக்காது. கூடிய சீக்கிரம் முதலிரவு நடந்தால் தான் உங்க மகனது வெற்றி கண்கூடாக பார்க்க முடியும்... என்று சொல்லி விட்டார் சாதகம் பார்ப்பவர்.

அதனாலே உதயாதிபனின் அன்னை தேனாண்டாள் இந்த திருமணத்தில் கொஞ்சம்கூட விருப்பம் இல்லை என்றாலும் சாதக பலனுக்காக திருமணத்துக்கு சம்மதித்து அன்றைக்கே முதலிரவு நடத்த ஏற்பாடு செய்தார்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top