“இன்னுமெவ்வளவு நேரம் தான் வராத போன் காலில் பேசுற மாதிரியே நடிக்கிறது... சீக்கிரம் மேக்கப் போட்டுட்டு வாடி” என்று அவன் சொல்ல, அவனை இன்னும் முறைத்துப் பார்த்தாள். அவன் அறைந்த விரல் தடம் என்ன மேக்கப் போட்டும் போவேனா என்று இருந்தது.
அதை கண்டவன் “ப்ச்” என்று சலித்துக் கொண்டான்.
“இன்னும் கொஞ்சம் பவுண்டேஷன் போட்டு கவர் பண்ணு” என்று விட்டு ஓரமாய் போய் அமர்ந்துக் கொண்டான். ஸ்க்ரீனுக்கு அந்தபக்கம் பாட்டி இருந்ததால் இவர்கள் இருவரின் பேச்சு வார்த்தையும் அவருக்கு தெரியவில்லை.
அவள் மேக்கப் போடுவதை பார்த்துக் கொண்டே இருந்தான் அமைச்சன். அவனது பார்வையில் கைகள் நடுங்கியது. ஐலைனர் சற்றே பிசிற,
“இப்படி பார்த்துக்கிட்டே இருந்தா நான் எப்படி மேக்கப் போடுறது?” வெடுக்கென்று கேட்டாள்.
“என்ன கேட்டா எனக்கு எப்படி தெரியும்? மேக்கப் கோர்ஸ் நானா படிச்சு இருக்கேன்” என்று வேண்டுமென்றே நக்கல் பண்ணினான்.
இவன் கிட்ட போய் பேசுனமே என்று தலையில் அடித்துக் கொண்டவள் தன் ஒட்டு மொத்த கவனத்தையும் கண்ணாடியில் வைத்து மேக்கப்பை முடித்துக் கொண்டாள். இடுப்பு சேலை சற்றே நெகிழ்ந்து இருக்க அதை தூக்கி விட்டுக் கொண்டே அவனை பார்க்க அவனது பார்வை மொத்தமும் அவளின் சிற்றிடையில் தான் குவிந்து இருந்தது.
அதை பார்த்தவளுக்கு இன்னும் கோவம் வர அவனை நெருங்கி அவனிடம் சண்டை போட வர,
“நீ காட்டுன நான் பார்த்தேன். தட்ஸ் ஆள்” என்று வெளியே போய் விட்டான். அவனது பேச்சில் கடுப்பானவள் “இடியட்” என்று திட்டிவிட்டு மகனையும் கிளப்பிக் கொண்டு வெளியே வந்தாள்.
அவளுக்காக ஒட்டுமொத்த யூனிட்டும் காத்திருந்தது. கொஞ்சம் கில்ட்டாக இருந்தது.
கேமராமென் ஆங்கில பார்த்தார். டைரெக்டர் டேக் போகலாம் என்று சொல்ல லைனில் வந்து நின்றார்கள் பெண்கள் குழந்தைகளோடு.
இவள் மட்டும் தான் தன் குழந்தையோடு வந்து இருந்தாள். மற்றவர்கள் எல்லோரும் வாடகை குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தார்கள்.
போலியோ ட்ராப்சை கையில் பிடித்தபடி உதயாதிபன் நின்று இருந்தான். அவனது முகத்தை அண்ணாந்து பார்த்தபடி இருக்கையில் அமர்ந்து இருந்தாள் வராளி.
அவளின் மடியில் இருந்த பிள்ளைக்கு உதயாதிபன் போலியோ ட்ராப்சை விடுமாறு வீடியோ போட்டோ என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டார் டைரெக்டர். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு பிறகு முதல் ஷாட் ஓகே ஆனது.
“ரொம்ப நல்லா வந்து இருக்கு சார்... அப்படியே இன்னும் கொஞ்சம் ஸ்டில்ஸ் மட்டும் எடுத்துக்கலாம்...” என்று சொல்லி குழந்தையை கையில் வைத்துக் கொண்டு வராளியை நிற்கவைத்து உதயாதிபன் மீண்டும் போலியோ ட்ராப்ஸ் விடுவது போல எடுத்துக் கொண்டார்கள்.
“வராளி சிரிச்ச மாதிரி முகத்தை வைங்க...”
“சார் நீங்க அவங்கக்கிட்ட சிரிச்ச மாதிரி பேச்சு குடுங்க... குழந்தையை தட்டி குடுங்க... மென்மையா குழந்தையோட தலையை தடவி குடுங்க” என டைரெக்டர் சொல்லிக் கொண்டே போக வராளிக்கு கண்ணை கட்டியது.
வெறும் ஒரு வீடியோ நாலஞ்சு போட்டோவுக்கு சாயங்காலம் வரை இழுத்து அடித்தார்கள். அமைச்சரும் பொறுமையாக இருந்து செய்து குடுத்ததை கண்டு ஒட்டு மொத்த யூனிட்டும் பாராட்டி தள்ளியது. போதாதற்கு பாட்டி வேறு அவனின் கொள்கை பரப்பு செயலாளராக மாறி இருந்தார்.
“என்ன ஒரு இரக்க குணம். யாருக்கு வரும் இந்த நாள்ல இப்படியோரு குணம்... இந்த சின்ன வயசுலையே இப்படி ஒரு பொறுமையா? இப்படி ஒரு தாராள குணமா? நீங்க ரொம்ப நாளைக்கு உங்க பொண்டாட்டி புள்ளையோட நீண்ட காலம் நீடிச்சு வாழனும் ஐயா” என்று அவர் ஒருபக்கம் புகழ் பாட வராளிக்கு தான் கடுப்பு கடுப்பாய் வந்தது.
“எங்க போனாலும் ஓட்டுக்குன்னே நடிச்சு தள்ளுறாரு சாமி... எப்போ தான் இயல்பா இருப்பாரு... அப்படி நடிச்சு தான் ஓட்டு வாங்கனுமா?” என்று அவள் ஒருபக்கம் அவனை கரித்துக் கொட்டினாள்.
ஷூட்டிங் எல்லாம் முடிந்து பேக்கப் ஆக வராளி கேப் புக் பண்ண ஆரம்பித்தாள். அன்று போலவே இன்றைக்கும் மேகம் திரண்டு நொடியில் இருள் சூழ ஆரம்பித்து இருந்தது. மற்றவர்கள் எல்லோரும் அவுட் ஆப் போக்கஸ் என்பதால் இரண்டு மூன்று ஸ்டில்ஸ் ஒரு வீடியோ என எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்து விட்டார்கள். ஆனால் இவள் தான் மெயின் என்பதால் இறுதி வரை இருக்க வேண்டிய வேலை இருந்தது.
தமிழகம் எங்கும் இனி இவர்கள் மூவரது போட்டோ தான் போலியோ ட்ராப்சுக்கு. பட்டி தொட்டி எங்கும் பேனர்ஸ், டிவி விளம்பரம், சோசியல் மீடியாஸ், அரசு மருத்துவமனைகள், கிராமத்தில் இருக்கும் சின்ன சின்ன அரசு மருத்துவமனைகள், விளம்பரங்கள், சுவரொட்டிகள், பால்வாடி, அங்கன்வாடி என அனைத்திலும் இவர்கள் மட்டும் தான். எனவே எவ்வளவு கவனமாக எடுக்க வேண்டுமோ அந்த அளவுக்கு கவனமாக எடுத்தார்கள்.
அதனால் மிகவும் தாமதமாகி விட்டது. அதற்குள் மழையும் பிடித்துக் கொண்டது. பச்ச பிள்ளையை கையில் வைத்துக் கொண்டு கேப் வரும் வரை காத்திருக்க ஆரம்பித்தாள். சென்னையில் மழை நாளில் கேப் புக் செய்தால் அடுத்த நாள் தான் வரும். இல்லை என்றால் புக் பண்ணிய கேப் கேன்சல் ஆகிவிடும்.
எல்லா பக்கமும் நீர் சூழ்ந்து இருந்தால் ஓட்டுனர்களும் என்ன தான் செய்வார்கள். அவர்களின் சூழல் அவர்களுக்கு அல்லவா. யாரை நோவது.
வராளி புக் செய்த கேப்கள் அனைத்தும் கேன்சல் ஆகிக்கொண்டே இருந்தது. குழந்தை வேறு அழ ஆரம்பித்து விட்டான். அவளால் சமாளிக்கவே முடியவில்லை.
பாரதி சாரும் கிளம்பி இருந்தார். யாரிடமும் உதவி கேட்க முடியவில்லை. சரி வெளியே சென்று ஆட்டோ கார் ஏதாவது பேசலாம் என்று பார்த்தால் அதற்கும் மழை விடமாட்டேன் என்று கொட்டிக் கொண்டு இருந்தது.
தவிப்புடன் சாலையை பார்த்து நின்றுக் கொண்டு இருந்தவளின் அருகே வெள்ளை நிற கார் ஒன்று வந்து நின்றது.
பாட்டி குழந்தையுடன் முன் பக்கம் ஏறிக்கொண்டார் அதற்குள்.
“பாட்டி அது நம்ம வண்டி இல்லை” என்று கத்தியவளை கண்டுக் கொல்லாமல் ஏறி அமர்ந்தவர்,
“பாப்பா வா இது நம்ம அய்யா வண்டி... நமக்காக தான் நிறுத்தி இருக்காங்க. நான் தான் கேட்டேன். வா நம்மளை கொண்டு போய் நம்ம வீட்டுல விட்டுடுறேன்னு சொல்லி இருக்காங்க” என்று சொன்னவரை என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நின்றாள்.
“காலையில் தான் அவனிடம் ஜம்பமாக என் வாழ்க்கையில் வராதீங்கன்னு சொன்னேன். ஆனா அதுக்குள்ள இப்படி ஒரு சூழ்நிலை... கடவுளே உனக்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது?” என்று கலங்கினாள்.
“மழையில நனையாத பாப்பா.. அப்புறம் சளி பிடிச்சுக்கும். பிள்ளைக்கு பால் குடுக்க முடியாது. அவனுக்கும் சளி பிடிச்சுக்கும். உள்ள வா... வந்து உட்காரு” என்றார் பாட்டி.
பாட்டிக்கு முன்னாடி எதையும் காட்டிக் கொள்ளாமல் பின் இருக்கையில் வந்து அமர்ந்தாள். அவளுக்கு வெகு அருகில் உதயாதிபன் அமர்ந்து இருந்தான்.
நேற்றைக்கு தள்ளி அமர்ந்து இருந்தான். ஆனால் இன்றைக்கு அந்தபக்கம் ஒரு ஆள் உட்காரும் அளவுக்கு இடத்தை விட்டுட்டு அவள் அமரும் இடத்தை ஒட்டி அமர்ந்து இருந்தான். கொஞ்சமே கொஞ்சமாக இருந்த இடத்தை பார்த்து பத்திக் கொண்டு வந்தது அவளுக்கு.
“கொஞ்சம் தள்ளி உட்காருங்க” என்று சொல்லிக் கொண்டே ஏறி அமர்ந்தவள் கதவை சாற்றினாள். உடம்பை மட்டும் அசைத்தானே தவிர அவன் கொஞ்சம் கூட நகர்ந்து உட்காரவில்லை.
இறுக்கிப் பிடித்தது போல ஒட்டி உரசிக்கொண்டு இருவரும் மிக நெருக்கமாக அமர்ந்து இருந்தார்கள். போதாதற்கு பிள்ளை வேறு அழுக அவனை தூக்கி கொடுத்தார் பாட்டி. உதயாதிபன் தான் வாங்கி அவளிடம் கொடுத்தான்.
ரப்பர் நிப்பிளை வாயில் வைக்க சின்ன வாண்டு துப்பியது.
“கொழுப்பை பாரு” என்று பிள்ளையை திட்டியவள் திரும்பி கணவனை பார்த்தாள். அவனது கண்களில் லேசான குறும்பு தெரிந்தது. அதில் இவளுக்கு பத்திக் கொண்டு வந்தது.
“கண்ணை மூடுங்க” என்றாள்.
“முடியாதுடி” என்றான் அழுத்தமாய்...
“ப்ச்” என்று அலுத்துக் கொண்டவள் புடவையை சரிய விட்டு மகனை மூடிக் கொண்டாள். பெருமூச்சு விட்டவன் பிள்ளையின் காலை இறுக்கமாக பற்றிக் கொண்டான். அதில் பிள்ளை வீல் என்று கடித்து வைத்து அழுகவும் செய்ய, அதே நேரம் “அவுச்” என்று அவளின் சத்தமும் கேட்டது.





