“என்னை தான் வியாபார பொருளா மாத்திட்டீங்க... என்ன பெத்த கடனுக்கு நான் அமைதியா போயிட்டேன். ஆனா உங்க பணத்தாசைக்கு என் மகனையும் வியாபார பொருளா மாத்துநீங்க பார்த்துக்கிட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று பிள்ளை பிறந்த இரண்டாவது மாதத்திலே பத்திரகாளி அவதாரம் எடுத்து இருந்தாள்.
அவளிடம் இப்படி ஒரு ஆக்ரோஷத்தை எதிர் பாராதவர்கள் மூவரும் சற்று அடக்கியே வாசிக்க ஆரம்பித்தார்கள். ஆனாலும் “அப்போ உன் செலவுக்கு நீ சம்பாரிச்சு குடு. இல்லன்னா உன் மகனுக்கும் ஒரு விலை பேசுவேன்” என்று அண்ணன் காரன் சொல்லி விட அதிலிருந்து வேலை தேட ஆரம்பித்தாள்.
அவள் இப்படி பொசுக்குன்னு பின்வாங்குவாள் தன் திட்டத்தில் மண்ணை அள்ளிப் போடுவாள் என்று எதிர் பார்க்காத கலாவுக்கு மிகுந்த ஏமாற்றமாகி விட்டது.
ஆனால் இவள் என்றைக்கு இருந்தாலும் பொன் முட்டை இடும் வாத்து என்பதால் அவர் அமைதியாகிவிட்டார். ஆனால் உள்ளுக்குள் வராளியின் மகனை காட்டி எப்படியாவது இன்னும் பல கோடிகளை வாங்கி விட வேண்டும் என்று மனதுக்குள் திட்டம் தீட்டிக் கொண்டார்.
அதோடு வராளி இன்னொரு காரியமும் செய்து இருந்தாள்.
“உங்க பார்வை என் மேலையோ என் மகன் மேலையோ படக்கூடாது.
எங்கும் வேலை கிடைக்கவில்லை. ஒருவழிசல் ஆள் மூலம் ஆட் ஒன்று கிடைக்க வேறு வழியில்லாது அதில் நடித்தால். கையில் வருமானம் வந்தது. ஆனால் கற்புக்கு பாதுகாப்பு இல்லாமல் போக பயந்து போய் வந்து விட்டாள் இன்னொரு ஷூட்டிங்கில் இருந்து.
அந்த நேரம் பாரதி சார் வந்து கையை கொடுக்க இறுக்கமாக பற்றிக் கொண்டாள். அன்றிலிருந்து இதோ இந்த நொடி வரை அவளுக்கு ஏதாவது ஒரு வாய்ப்பை வாங்கி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
வீட்டில் அந்த பணத்தை கொடுத்துவிட்டு தன் வாழ்நாட்களை நிம்மதியாக கழித்துக் கொண்டு இருக்கிறாள். அது பொறுக்காமல் இதோ மீண்டும் அவளின் வாழ்வில் உதயாதிபன் வந்து நிற்கிறான்.
என்ன புயல் வீசப் போகிறதோ என்று நெஞ்சம் நடுநடுங்க நிற்கிறாள் பெண்ணவள்.
“யாரு அது?” என்று கேட்டாள் புருவம் சுருக்கி.
“ஏய் என்னடி யாருன்னு கேக்குற? கிழவி சொன்னுச்சே அமைச்சர்னு” என்று படபடத்தார் தாய்.
“ம்மா நீங்க யாரை சொல்றீங்கன்னே எனக்கு தெரியல... சொல்றத தெளிவா சொல்லுங்க.. எந்த அமைச்சர்” என்றாள் எதுவும் அறியாதவளாய்.
“அடியேய் உன் கழுத்துல தாலி கட்டுனவனை கூடவா உனக்கு தெரியாது... சும்மா நடிக்காதடி. அவன் என்ன சொன்னான். மறுபடியும் உன்னை வாழ வர சொன்னானா?” என்று ஆர்வமாய் கேட்டார்.
“ப்ச் இரவுல மட்டும் அதுவும் இரண்டே நாள் ஒருத்தன் கூட இருந்தேன். அவன் சத்தியாமா யாரு என்னன்னு கூட எனக்கு தெரியாது. அவன் முகம் கூட எப்படி இருக்கும்னு தெரியாது. என் கழுத்துல அவன் தாலி கட்டும் போது பாதி தூக்கத்துல இருந்தேன். அடுத்து வந்த ஒரு வாரமும் ஒரு அறையில போட்டு அடைச்சு வச்சு இருந்தாங்க. இரவுல மட்டும் ஒருத்தன் வந்தான். அவன் படுக்க கூப்பிட்டான்.படுத்தேன். அவன் கருப்பா சிவப்பான்னு கூட தெரியாது. பிறகு எனக்கு எப்படி தெரியும் அவனை பற்றி?” என்றாள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
“ஏய் என்னடி சொல்ற?” என்று அதிர்ந்துப் போனார் கலா.
“உண்மைய தான் சொல்றேன். எனக்கு என் கழுத்துல தாலி கட்டுனவன் யாருன்னு தெரியாது” என்றாள்.
“சரி அவனை தெரியாது. ஆனா நான் உனக்கு தொழில்துறை அமைச்சர்னு சொல்லி இருக்கேனேடி” என்றார் ஆற்றாமையாய்.
“நீங்க சொன்னீங்க தான். ஆனா எனக்கு அவன் மேல கொஞ்சம் கூட மரியாதை இல்லையே. பிறகு அவனை நினைவு வச்சு நான் என்ன பண்ண போறேன்...” என்று தோளை குளுக்கியவள் அன்றைக்கு எந்தெந்த இடத்துக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை வாட்சப்பில் பார்த்துக் கொண்டாள்.
இன்றைக்கு அதிக அலைச்சல் இல்லாமல் ஒரே இடத்தில் தான் வேலை. அப்பாடா என்று பெருமூச்சு விட்டு வேலம்மாளை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
அவள் போன பிறகு வீட்டில் இருந்த மூவரும் மாநாடு போட்டார்கள்.
“இவ என்னடி இப்படி சொல்லிட்டு போறா? ஒரு வேலை உண்மையாவே இவளுக்கு அவனை ஞாபகம் இல்லையா? இல்ல நடிக்கிறாளா?” என்று கலா தன் மூத்த மகளை பார்த்து கேட்டார்.
“எனக்கு என்னவோ அவ நடிக்கிறான்னு தான் ம்மா தோணுது” என்றான் தனுசு,
“இல்லம்மா அவளுக்கு நினைவு இருந்து இருந்தா அந்த கார்ல கூட ஏறி இருந்து இருக்க மாட்டா.. ரொம்ப சுயமரியாதை பார்க்கிறவ. அதனால அடிச்சு சொல்றேன் அவளுக்கு அவனை தெரியல” என்றாள் சிவா.
“நீ சொல்றதும் ஒரு வகையில ஒத்து போகுது தான். இல்லன்னா பிள்ளையை தூக்கிக்கிட்டு எப்பவோ அந்த அமைச்சர் முன்னாடி போய் நின்று இருப்பாளே..” என்று கலா சொல்ல,
“இல்லம்மா அவளுக்கு அந்த அமைச்சர் யாருன்னு தெரிஞ்சு இருக்கு. நம்மக்கிட்ட காட்டிக்காம இருக்கிறா...” என்று தனுசு விடாப்பிடியாக சொன்னான்.
“இல்லடா அவனை ஞாபகம் வச்சு இருந்து இருந்தா இந்நேரம் அவன் வர்ற சாலையில கூட இவ பயணம் பண்ண மாட்டா... அப்படிபட்டவ அவனோட கார்ல வந்து இருந்து இருக்கான்னா கண்டிப்பா அவளுக்கு அவனை நினைவு இல்லை. அது தான் உண்மை” கலா உறுதியாக சொன்னார்.
“அப்போ இப்போ என்ன பண்றது...” என்றான் தனுஷு.
“இவளுக்கே அவனை ஞாபகம் இல்லன்னா கண்டிப்பா அந்த அமைச்சருக்கும் ஞாபகம் இருக்காது இவளை..” என்றார்.
“அதுக்கு இப்போ என்னம்மா” என்று சிவா யோசனையாக தாயை பார்த்தாள்.
“நாமலே ஏன் ரெண்டு பேரையும் ஒண்ணா சந்திக்க வச்சு இது தான் நீ தாலி கட்டுன பொண்டாட்டின்னு அவன் முன்னாடி இவளை நிறுத்தணும். அதே போல இவன் தான் உன் புருஷன்னு அவக்கிட்ட அறிமுகம் செய்து வைக்கணும்” என்றார் கலா.
“லூசாம்மா நீ.. அந்த அமைச்சரோட உயரம் என்னன்னு தெரியுமா? கனவுல கூட அந்த ஆளை நம்மால நெருங்க முடியாது. இதுல எப்படி இவங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண வைக்கிறது?” கேள்வி கேட்டான்.
“அதுக்கு ஏதாவது ஒரு ஐடியா பண்ணனும் டா... அதோட பிள்ளையை வேற அவன் கிட்ட காண்பிக்கணும். காண்பிச்சு இன்னும் ரெண்டு கோடி ரூபாய் வசூலிக்கனும். அப்படி காசு குடுக்க மாட்டேன்னு சொன்னான் வச்சுக்க, மீடியாவுக்கு போய் அரசியல் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு இரகசியமா கல்யாணம் செய்ததை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியது தான்” என்றார் அசால்ட்டாக.
“கிரேட் ம்மா... ஆனா இப்படி பண்ணா நமக்கு காசு வருமா?” சிவா கேட்டாள்.
“குடுக்கணும்... நான் குடுக்க வைப்பேன்டி. நாம வச்சு இருக்குறது எவ்வளவு பெரிய துருப்பு சீட்டு தெரியுமா? இதை மட்டும் வெளியே மீடியாவுல விட்டோம்னா கண்டிப்பா அவனது அரசியல் வாழ்க்கை முடிந்து விடும். அதனால நாம என்ன சொன்னாலும் அவன் செய்த்து தான் ஆகணும். அவனை பொறுத்தவரை இரண்டு கோடி எல்லாம் பெருசே இல்லை. அசால்ட் பணம். நொடியில ஏற்பாடு செஞ்சிடுவான்” என்றாள் கலா.
“ஆனா இதுல வராளிக்கும் பிள்ளைக்கும் எதாவது ஆபத்து வந்தா என்ன செய்யிறது?” என்று தனுஸ் கேட்டான்.
“அப்பவும் நமக்கு இன்னமும் லாபம் தான்” என்றாள்.
“எப்படிம்மா சொல்ற” வியந்து போய் கேட்டான்.
“அதேல்லாம் ஒரு கணக்குடா” என்றவரின் கண்களில் பணத்தின் மீது இருந்த ஆசை வெறி அப்பட்டமாக தெரிந்தது.





