Notifications
Clear all

அத்தியாயம் 6

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 1004
Topic starter  

“என்ன பாட்டி சொல்ற? நல்லா தெரியுமா நீ பார்த்தது அமைச்சரை தானா? அதுவும் தொழில்துறை அமைச்சரா?” என்று வராளியின் அக்கா சிவாங்கி கேட்டாள்.

“ஆமா சிவா... எங்கிட்ட ரொம்ப நல்லா பேசுனாரு... கொஞ்சம் கூட அமைச்சர்ன்ற பந்தா எதுவும் இல்லாம நடந்துக்கிட்டாரு. பாப்பா கூட அடுத்த நிறுத்தத்துல இறங்கிக்கிறோம்னு பிடிவாதமா சொன்னுச்சு. ஆனா அவரு தான் விடாபிடியா எங்களை பாப்பா வேலை செய்யிற இடத்துக்கே கொண்டு போய் விட்டாரு” என்று அவனின் பெருமையை மூச்சு விடாமல் பேசிக்கொண்டே இருந்தார் அடுத்த நாள் காலையில்.

அடுப்படியில் நின்று தனக்கும் பிள்ளைக்கும் சமைத்துக்கொண்டு இருந்தவளுக்கு நெஞ்சில் ஆயிரம் படபடப்பு. எப்படியும் இன்னும் சிறிது நேரத்தில் புலன் விசாரணை ஆரம்பமாகி விடும் என்று அறிந்தவளுக்கு பெருமூச்சு தான் வந்தது.

அவள் எண்ணத்தின் படியே வீட்டு ஆட்கள் ஒருவர் விடாமல் அவளை ரவுண்டு கட்டினார்கள். ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் அவள் பாட்டுக்கு வேலை செய்வதை போல செய்ய,

“ஆனாலும் இவளுக்கு இவ்வளவு திமிர் ஆகாது... நாம அதை பத்தி தான் பேச வருவோம்னு தெரிஞ்சும் நம்மளை கண்டுக்காம இருக்கா பாருங்க” என்று வராளியின் அண்ணன் தனுசு(ஷ்) பல்லைக் கடித்தான்.

“சும்மா டென்ஷன் ஆகாதடா...” என்று சொன்ன சிவாங்கி, “ம்மா அவக்கிட்ட என்னன்னு கேளு...” என்று தாயை தூண்டிவிட்டாள்.

“என்னடி அந்த கிழவி என்னென்னவோ சொல்லிட்டு இருக்கு? நீ என்னவோ யாருக்கு வந்த விருந்தோன்னு இருக்க... இப்ப எதுக்கு அவன் வந்து இருக்கான். மறுபடியும் உங்க பழக்கத்தை புதுப்பிக்கப் பார்க்கிறானா?” என்று தாய் கண்கள் மின்ன கேட்டார்.

பின்ன உதயாதிபன் தங்க முட்டை இடும் வாத்தாயிற்றே.. அவனை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட அவர்களால் முடியவில்லை. ஏற்கனவே ஒரு கோடி சொத்தை ஆட்டைய போட்டு தங்களின் பெயருக்கு மூவரும் மாற்றிக் கொண்டு விட்டார்கள். இதில் மறுபடியும் அவனே வருகிறான் என்றால் சும்மா விட முடியுமா? அதனால் அவனுக்கு தூண்டில் போட எண்ணினார்கள். அதனால் தான் இந்த விசாரணை. மறுபடியும் ஏதாவது தேறுமே... ஒரு கோடி இல்லை என்றாலும் சில பல லட்சங்களாவது கிட்டுமே என்கிற நப்பாசை.

வராளிக்கு தந்தை கிடையாது. அம்மா மட்டும் தான். ஒரு அண்ணன் ஒரு அக்கா அவ்வளவு தான் அவளது குடும்பம். மிகச்சிறிய பெண் வராளி. அவளின் இருபது வயதில் ஒரு நாள் நடு இரவில் இருள் பிரியா நேரத்தில் அவசர அவசரமாக அவளை ஒரு கோயிலுக்கு கூட்டி சென்றார்கள் மூவரும்.

அவளுக்கு எங்க போகிறோம் என்று கூட தெரியவில்லை. கேட்டாள் தாயிடம். “கோயிலுக்கு போகிறோம்” என்று மட்டுமே அவர் சொன்னார்.

அங்கு போனதுக்கு பிறகும் கூட அவளுக்கு தெரியவில்லை. யாரும் தெரிவிக்கவில்லை. கல்யாண ஏற்பாடு செய்துக் கொண்டு இருந்தார்கள் ஒரு இடத்தில். அதை பார்த்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் அவளுக்கு முன்னாடி அண்ணனும் அக்காவும் இருக்கிறார்களே. அவர்களுக்கு பிறகு தானே தனக்கு என்பதால் மிகவும் அசட்டையாக இருந்தாள். கோயிலை சுற்றி பார்த்து விட்டு வருகிறேன் என்று போய்விட்டாள்.

தூங்கம் வேறு ஒரு பக்கத்துக்கு அவளை இழுக்க கோயிலை சுற்றி பார்த்து விட்டு ஒரு தூணில் சாய்ந்து தூங்க ஆரம்பித்து விட்டாள்.

கொஞ்சம் நேரம் கழித்து அவளை உலுக்கி எழுப்பி விட, பதறி எழுந்தாள்.

“ஏன்மா எழுப்புறீங்க.. தூக்கம் வருது” என்று சிணுங்கினாள்.

“நாளைக்கு சேர்த்து தூங்கிக்கலாம். இப்போ வா” என்று சொன்னவர் அவளை இழுத்துக் கொண்டு மணவளகங்காரம் போட்டு இருந்த இடத்துக்கு அழைத்து வந்தார்.

“இங்க எதுக்குமா?” என்று அவளதிர,

“கொஞ்ச நேரத்துக்கு வாயை திறக்காத. இங்க என்ன நடந்தாலும் வெளியே மூச்சு விடக் கூடாது” என்று கடுமையாக எச்சரித்தவர்,

“உனக்கு தான் கல்யாணம்” என்று அவர் சொல்ல, “ம்மா” என்று அதிர்ந்துப் போனாள் வராளி.

“ஏய் இப்போ எதுக்குடி கத்துற... சத்தம் வந்தது சங்கு அறுத்துவிடுவேன் சொல்லிட்டேன். வாழ்க்கையில முதல் முறை எனக்கு ஜாக்பார்ட் அடிச்சு இருக்கு உன் மூலமா. அதை விட முடியாது. ஒழுங்கா கழுத்தை நீட்டிட்டு, ரெண்டு நாள் அவனோட படுத்து எந்திருச்சிட்டு வந்திடு. அவ்வளவு தான் உன் வேலை... மீதி எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்” என்று வராளியை எவ்வளவு மிரட்ட முடியுமோ அந்த அளவுக்கு மிரட்டி அவளை இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வைத்து இருந்தார் அவளின் தாய் கலாவதி.

உதயாதிபன் தாலி அவளின் கழுத்தில் ஏறிய அடுத்த நொடி கலாவதியின் கையில் ஒருகோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. அதை பார்த்துக் கொண்டே உதயாதிபனின் காரில் சென்றாள் வராளி.

அவளின் நெஞ்சம் சுக்கு நூறாய் உடைந்து சிதறியது. காசுக்காக தன் வாழ்க்கையை அழித்த தாயின் மீது கொஞ்சம் கூட பாசம் வரவில்லை. அதற்கு உறுதுணையாய் இருந்த அக்கா மற்றும் அண்ணின் மீதும் இருந்த பாசம் சுத்தமாய் ஈரத்துணி வைத்து துடைத்தது போல துடைத்து எரிந்து விட்டாள். மூவரின் முகங்களிலும் இருந்த பணத்தாசை அவளை உயிரோடு வெட்டிப் போட்டது.

அதுவும் ஒரு வாரம் மட்டுமே அவளுக்கு இந்த மணக்கோலம். அதன் பிறகு அவளுக்கும் தாலி கட்டியவனுக்கும் எந்த சம்மந்தமும் இருக்காதாம். இருக்கக் கூடாதாம்.

ஏகப்பட்ட விதிமுறைகள். கட்டுப் பாடுகள். அத்தனைக்கும் தலையை அசைத்தாள். கையெழுத்து போட சொல்லி உதயாதிபனின் தாய் சில பல பத்திரங்களை காட்டி கேட்டார்.

எதற்கு ஏன் என்று எதையும் படிக்காமல் கையெழுத்து போட்டவளை உதயாதிபனின் தனி அறைக்கு அனுப்பி விட்டார்கள்.

சிறுபெண் மிரண்டு மிரண்டு விழித்தாள். அவளை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து உணர்ந்துக் கொள்ளும் முன்பே அவளை பிறந்த வீட்டில் தள்ளி விட்டு போய் விட்டார்கள் உதயாதிபனின் தாய்.

அதன் பிறகு அவளை யாரும் சீண்டவே இல்லை. தாலி கட்டியவனும் கைகழுவி விட்டான். வராளியின் தாய்க்கும் அவர் எண்ணிய பணம் கிடைத்து விட அவளின் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தை கவனிக்க அங்கு யாருக்கும் நேரமில்லாமல் போனது.

ஒருகோடியை வைத்து மூன்று அறைகள் உள்ள வீட்டை வாங்கிப் போட்ட கலா ஒரு தோப்பையும் வாங்கி போட்டு விட்டு அருகிலே சில கடைகளை வாங்கி வாடகைக்கு விட்டு சொகுசாக வாழ்க்கையை ஆரம்பித்து விட்டார். அதற்குள் இங்கே வராளியின் வயிற்றில் குழந்தை ஐந்து மாதம் வளர்ந்து விட்டது.

வராளிக்கு அது கூட தெரியவில்லை. வாந்தி மயக்கம் எதுவும் வரவில்லை. மாதந்திர வரவை பற்றி அவள் இருந்த நிலையில் யோசிக்கவே இல்லை. அதோடு முன்பு இருந்த ஊரை விட்டு சென்னைக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள் அனைவரும்.

அதனால் அவளின் படிப்பும் பாதியிலே நின்றுப்போனது. குழந்தை வளர்ச்சியை பார்த்த கலாதற்கும் ஒரு திட்டம் தீட்டினார். பிள்ளையை வைத்து இன்னும் கொஞ்சம் பணம் பார்க்கலாம் என்று இருந்தார். ஆனால் வராளி தன் உயிரையும் பிள்ளையின் உயிரையும் பணையம் வைத்து விட்டாள்.

“என்னை தான் வியாபார பொருளா மாத்திட்டீங்க... என்ன பெத்த கடனுக்கு நான் அமைதியா போயிட்டேன். ஆனா உங்க பணத்தாசைக்கு என் மகனையும் வியாபார பொருளா மாத்துநீங்க பார்த்துக்கிட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று பிள்ளை பிறந்த இரண்டாவது மாதத்திலே பத்திரகாளி அவதாரம் எடுத்து இருந்தாள்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top