“கார் சென்டர் லாக்ல இருக்கு. நீ குதிக்கனும்னு நினச்சாலும் இப்போ உன்னால குதிக்க முடியாது. பெட்டர் நெக்ஸ்ட் டைம் ட்ரை பண்ணு. உனக்காக கார் டோரை திறந்து வைக்கிறேன்” என்றான் நக்கலாக. அவனது நக்கலில் இன்னும் வெகுண்டு எழுந்தாள்.
ஆனால் அவனிடம் தன் கோவத்தை காட்ட முடியாமல் பற்களை கடித்து தன்னை தானே அடக்கிக் கொள்ள பார்த்தாள். ஆனால் அது முடியாமல் அவளது கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது.
அவளின் இத்தனை நாள் போராட்டத்தை அவன் ஒன்றுமே இல்லாமல் செய்து விட்ட தோரனையை கண்டு உள்ளுக்குள் வெந்துப் போனாள். அதுவும் ஏதோ பணத்தை ஏமாற்றி விட்டது போல பேச்சு வேற... யாருக்கு வேணும் இந்த ஆளோட பணம்... என்று அவளின் மனம் வெந்தது.
அதோடு தனிமையில் அவள் பட்ட துயரங்கள் எல்லாம் வரிசையில் வந்து நிற்க உதயாதிபன் மீது அவ்வளவு கோவம் கனன்றது. அவனுக்கு என்ன மாப்பிள்ளை மாதிரி அழகாக ஊரை சுத்தி வருகிறான். பெயருக்கு ஏற்றார் போல ராஜாவா ராஜ பதவியில் இருக்கிறான்.
ஊரு உலகம் அவனை தலையில் வைத்து கொண்டாடுகிறது. ஆனால் அவள் வாங்கிய அவப்பெயர் எல்லாம் அவளுக்கு மட்டும் தானே சொந்தமானது. எவ்வளவு பேச்சு... காதும் உடம்பும் அப்படியே கூசிப் போகும். எத்தனை பேர் அவளை படுக்க கூப்பிட்டு இருப்பார்கள்.
கழுத்தில் தாலி இருந்தும் அவள் வாங்கிய பெயர்கள் ஏராளமாயிற்றே. பெற்ற தாய் கூட மதிக்க மாட்டார். கூட பிறந்த பிறப்புகள் அதற்கு மேல்...
“ஒழுங்கா புருசனை மடியில் மயக்கிப் போட்டு குடும்பத்தனம் செய்ய துப்பு இல்ல, இப்ப தான் பேச்சு பேசுறா பேச்சு... இவ மட்டும் ஒழுங்கா அவ புருஷனோட வாழ்ந்துட்டா அவ்வளவு தான் இவளை கையில பிடிக்க முடியாது. புருசன் கூட வாழாதப்பவே இவ இந்த பேச்சு பேசுறா. ஒருவேளை அவனோட நல்லா வாழ்ந்துட்டா நம்மளை எல்லாம் தூக்கி கணம் பார்த்துடுவா...” என்று வீட்டில் ஏதாவது ஒரு வார்த்தை பேசிவிட்டால் போதும்.
உடனே ஆளாளுக்கு டையலாக் பிடிச்சு கண்டபடிக்கு பேச ஆரம்பித்து விடுவார்கள். அவர்களின் ஏச்சு பேச்சை கேட்க முடியாமல் பல மாதங்களாக பேசா மடந்தையாகி போய் விட்டாள் வராளி.
இப்பொழுது கூட உதயாதிபனிடம் பேசி இருக்க மாட்டாள். ஆனால் அவளும் எவ்வளவு தான் உள்ளுக்குள்ளே அழுத்தி வைப்பது. அவளுக்கும் வெடிப்பு நிலை என்று ஒன்று இருக்கிறதே..
அது உரியவனிடம் மட்டும் தான் வெடிக்கும் என்று கூட யோசிக்காமல் தாலி கட்டிய கணவனிடம் வெடித்து நின்றாள். ஆனால் அவன் அதை எல்லாம் கொஞ்சமும் கண்டுக் கொள்ளவில்லை.
“திருடிட்டு ரொம்ப உத்தமி மாதிரி பேசுறா?” என்று ஏளனம் செய்தான். அதை கேட்டவளுக்கு உள்ளும் புறமும் எரிந்தது. ஆனால் தான் நிரபராதி என்று அவனுக்கு தன்னை நிரூபிக்க வேண்டும் என்று அவ்வளவு ஆவேசம் வந்தது. ஆனால் அதை செய்து விட்டால் மட்டும் நடந்த எதுவுமே இல்லை ஆகி விடுமா? இல்லை அவன் தான் தன்னோடு குடும்பம் நடத்துவானா? என்று எண்ணியவளுக்கு தன் சிந்தனை மீதே வெறுப்பு வர,
“ச்சீ போயும் போயும் இவனோட மீண்டும் வாழணுமா? அது நான் செத்தாலும் நடக்காது” என்று தனக்குள் உறுதிக் கொண்டவள்,
மௌனமாக அமர்ந்துக் கொண்டாள். இனி இவனது பக்கம் கூட தலை வைத்து படுக்கக் கூடாது என்று எண்ணியவள் தன் இடம் வரும் வரை அமைதியாக இருந்துக் கொண்டாள்.
“என்னடி பதில் சொல்லு... அடுத்த முறை குதிக்கிறியா?” என்று நக்கல் பண்ணினான். அவள் எதுவும் பேசவில்லை. கண்ணாடி புறம் திரும்பிக் கொண்டாள் காது கேட்காதவளாய். அவளது அலட்சியத்தில் பல்லைக் கடித்தவன், அவளது மோவாயை அழுத்தி பிடித்து தன் முகத்தை பார்க்க செய்தவன்,
“நான் பேசுனா பதில் பேசுடி” என்று உறுமினான். அவனது உறுமலில் அடி நெஞ்சில் பயம் எழுந்தது.
“தள்ளி விட்டு மொத்தமா முடிச்சு விட்டுடுங்க சார்... புண்ணியமா போகும்.. இங்க இருந்து பல பேர்க்கிட்ட ஏச்சு பேச்சு வாங்குறதுக்கு போய் சேர்றது பெட்டர். ஆனா ஒரே ஒரு ரெக்வெஸ்ட் தள்ளி விடும் பொழுது என் மகனையும் சேர்த்தே தள்ளி விடுங்க. சப்போஸ் தள்ளி விட விருப்பம் இல்லனாலும் உங்க கார் வர்ற பாதையை சொல்லுங்க நானும் என் மகனும் சாலையில வந்து நிக்கிறோம். ஒரே தூக்கா தூக்கிடுங்க... ப்ராப்ளம் சால்வ்” என்று சொன்னாள்.
அவளது பேச்சில் உதயாதிபனுக்கு கண்கள் சிவந்துப் போனது.
“ஏய்...” என்று அவளை அடிக்கப் பாய,
“தற்கொலைன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு தான் போவேன்... அதனால உங்களுக்கு பெருசா எந்த சிரமமும் இருக்காது...” என்றவள்
“தயவு செய்து இனிமே என் வழியில வராதீங்க... உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்” என்றாள்.
“அதை நீ முடிவு செய்யக் கூடாதுடி. நான் தான் முடிவு எடுப்பேன்” என்று சொன்னவன் அவளின் இடையை இறுக்கி பிடித்தான். அவனது கையை மிகவும் கடினப்பட்டு எடுத்து விட்டவள்,
“சார் நீங்க நினைக்கிற ஆள் நான் இல்ல... நீங்க வேற யாரோன்னு நினைச்சு என்கிட்ட நடந்துக்கிட்டு இருக்கீங்க. இனிமே என்னை தொடாதீங்க” என்று அவனை அலட்சியம் செய்தவள்,
“என் இடம் வந்திடுச்சு அமைச்சர் சார்... லிப்ட் குடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். இனி நான் எவ்வளவு கட்டல்(கஷ்ட்டப்) பட்டாலும் உங்க கருணையை என்கிட்டே காட்ட வேண்டாம். உங்க இரக்கம் யாருக்கு தேவை படுதோ அவங்களுக்கு குடுங்க... அதோடு இந்த நாட்டு மக்களுக்கு உங்க சேவை ரொம்ப தேவைப்படுது... அவங்களுக்கு செய்ங்க. எனக்கு சேவை செய்து உங்க ஓட்டுகளை வேஸ்ட் பண்ண வேண்டாம்” என்று முகத்தில் அடிப்பது போல சொன்னவள் தன் உடைகளை சரி செய்துக் கொண்டு காரை விட்டு இறங்கி சென்று விட்டாள்.
பாட்டியும் பின்னாடி நடந்த சம்பாஷனை எதுவும் தெரியாமல், “ரொம்ப நன்றிங்க அமைச்சர் ஐயா.. உங்க தங்கமான குணத்துக்கு நீங்க கூடிய சீக்கிரம் முதல் அமைச்சர் ஆகிடுவீங்க” என்று வாழ்த்தி விட்டு போனார். அவரது வாழ்த்துதலை கொஞ்சமும் கண்டு கொள்ளாதவனுக்கு மனம் நெருப்பில் இட்டது போல எரிந்தது.
“என்னையவாடி அலட்சியப் படுத்திட்டு போற... இனி தான்டி இருக்கு உனக்கு. இந்த உதயாதிபன் யாருன்னு இனிமே தான் முழுசா பார்க்கப் போற” என்று கறுவியவன் தலைமை செயலகத்துக்கு வண்டியை விட சொன்னான்.
அவனின் முகத்துக்கு நேராக பேசிவிட்டு வந்தாலும் இங்க வராளிக்கு உடம்பு மொத்தமும் ஆடிப் போய் விட்டது. அவ்வளவு பயம் வந்தது அவனது முக மாறுதலில்.
“கடவுளே இனி அவரை பார்க்கவே கூடாது...” என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டவள் தன் வேலைகளில் கவனமானாள்.
அன்று இரவு வீடு திரும்பியவளுக்கு உடம்பெல்லாம் அவ்வளவு வலி எடுத்தது. ஆனால் அவளுக்கு சமைத்து வைக்க கூட அங்கு ஒருவருக்கும் மனம் வரவில்லை. கண்ணீர் திரை இட்டது விழிகளை.
தன் மகனுக்கு பால் வேண்டுமே என்று கால் கடுக்க அந்த நேரம் சமையல் அறையில் நின்று சமைத்து உண்டவள் தன் இடத்தில் சுருண்டுக் கொண்டாள்.
ஒரு அறை கூட அவளுக்கு என்று அந்த வீட்டில் இல்லை. தன் நிலை இவ்வளவு இழி நிலைக்கு போகும் என்று அவள் கொஞ்சமும் நினைக்கவில்லை. இந்த வீட்டில் சம்பாதிப்பவளே இவள் தான். ஆனால் இவளுக்கு என்று அந்த வீட்டில் எதுவும் இல்லை.
பெருமூச்சு விட்டவள் கண்களை மூடி படுத்துக் கொண்டாள். பிள்ளைக்கு மட்டும் மெத்தை வாங்கி போட்டு இருந்தாள். அவனை அணைத்துக் கொண்டு படுத்தவளுக்கு இவ்வளவு நாள் இல்லாமல் இன்றைக்கு ஏன் இவர் எனக்கு இரக்கப் படனும். எவ்வளவோ நாள் அவள் போகும் வழியில் அவனது கார் அவளை கடந்து போய் இருக்கிறது.. ஆனால் ஒரு நாள் கூட ஒரு பொழுது கூட அவளுக்காக அந்த சொகுசு வண்டி நின்றதே இல்லை.
இன்றைக்கு மட்டும் என்னவாம்? என்று எண்ணியவளுக்கு இந்த விசயம் தன் வீட்டுக்கு மட்டும் தெரிந்து விடக் கூடாது என்று எண்ணிக் கொண்டாள்.
ஆனால் பாட்டி மூலமாக இந்த விசயம் வீட்டுக்கு தெரிந்துப் போக தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது வராளிக்கு.





