Notifications
Clear all

அத்தியாயம் 13

 
Admin
(@ramya-devi)
Member Admin

நெஞ்சை பிடித்து சில கணங்கள் நின்றாள். “இல்ல என்னால முடியும்” தனக்குள் உருப்போட்டவளின் கை வெங்காயத்தை தேடி எடுத்தது. தோசைக்கல்லில் தண்ணீரை விட்டு பிடித்து இருந்த எல்லாவற்றையும் சுரண்டி எடுத்து விட்டு எண்ணெயை விட்டு மறுபடியும் தண்ணீரை ஊற்றி தேய்த்தவள், வெங்காயத்தை நறுக்கி கல்லில் போட்டு வதக்கி எடுத்து வைத்தவள் மளமளவென்று தோசை வார்க்க, பட்டு போல கல்லில் கொஞ்சமும் ஒட்டாமல் வந்தது.

“வாவ்..” என்று அது வரை இழுத்துப் பிடித்து இருந்த இறுக்கங்கள் தளர இயல்புக்கு வந்தாள்.

ஆதி அவளின் பின்னோடு எப்பவோ வந்து நின்றுவிட்டான். அவளை தனியாக அடுப்படிக்கு விட மனமில்லை. அதனால் தானும் இடைவெளி விட்டு கீழே வந்து விட்டான். முதலில் அவள் தடுமாறியது, தனக்காக அவள் கண்ணீர் விட்டது, கலங்கி நின்றது என எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

இதோ இப்பொழுது மகிழ்ச்சியில் குதித்தவளின் உணர்வுகளையும் விழி எடுக்காது பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

முதலில் ப்ளையின் தோசை வார்த்தவள் அதன் பிறகு போடி தோசை, வெங்காய தோசை, முட்டை தோசை என அவளின் கை வரிசையை அவள் காட்டினாள்.

“ம்ம் பரவாயில்ல தோசை நல்லா தான் சுடுறேன்” தனக்கு தானே பாராட்டிக் கொண்டவள், “சரி அவரை சாப்பிட கூப்பிடலாம்” என்று அவள் திரும்ப, அவளுக்கு பின்னாடி தான் நின்று இருந்தான்.

“என்ன இங்க நிக்கிறீங்க?” லேசாய் அவள் அதிர,

“ம்கும் நான் வந்து  ஒரு மணி நேரம் ஆகுது.. இது தான் நீ எனக்கு தோசை சுட்டு குடுக்குற அழகா.. நீ கீழ வந்து எவ்வளவு நேரம் ஆச்சு தெரியுமாடி.. எவ்வளவு நேரம் பட்டினியா இருக்குறது” கடுப்படித்தான்.

“ஹலோ நானே இந்த கல்லோட போராடி இப்ப தான் ரெண்டு பேரும் பேசி ஒரு காம்ப்ரமைஸ்க்கு வந்து இருக்கோம் தெரியுமா? உங்களுக்கு என்ன ஈசியா சொல்லிட்டீங்க.. இந்த இரும்பு கல்லோட நான் போராடுன போராட்டம் எனக்கு மட்டும் தான் தெரியும்” என்றவளை அடிக்கண்களால் இரசித்துக் கொண்டே,

“சரி என்ன ரெடியா இல்லையா? சும்மா வளவளன்னு பேசிக்கிட்டு” முகத்தை காட்டினான்.

“ம்கும்.. ரொம்ப தான்” சிலுப்பியவள்,

“உட்காருங்க எடுத்துட்டு வரேன்” என்று வித விதமான தோசையை அவனின் தட்டில் கொண்டு வந்து வைத்தாள்.

“என்னடி வெறும் தோசை மட்டும் தான் இருக்கு சட்னி சாம்பார் ஒன்னத்தையும் காணோம்” ஆதி கேட்க,

“நீங்க அதை சொல்லவே இல்லையே..” சின்ன பிள்ளையாய் அவள் திருதிருக்க,

கடுப்பாக முறைத்தான் ஆதி. ஆனால் உள்ளுக்குள் அவளின் அறியாமையை கொஞ்சமும் கோவித்துக் கொள்ளவில்லை.

சொன்னால் தான் செய்வாள் என்கிற நிலையில் இருக்கும் பெண்ணவளை அவனால் கோவித்துக் கொள்ள முடியுமா?

“சரி இப்ப சொல்றேன்ல சட்னி ரெடி பண்ணு” என்றான்.

“ம்ம் என்ன வேண்டும். எப்படி வேணும்” அவனிடமே வரைமுறை  கேட்டாள்.

“ரெண்டு வான்காயம் ரெண்டு தக்காளி ஒரு பூண்டு, நாள் வரமிளகாய், உப்பு எல்லாத்தையும் போட்டு பச்சையா அரைச்சு தாளிச்சு விடு” என்று அவன் சொல்ல அவளும் அதே போல செய்தாள்.

தாளிக்கும் மனம் அவளுக்கும் பசியை தூண்டி விட,

“ப்பா.. என்னம்மா மணக்குது.. எனக்கும் பசிக்குதே.. ரெண்டு ஆனியன் தோசை சாப்பிடலாம்” என்று அவனுக்கு ஊற்றிக் கொண்டே தானும் உண்டாள்.

தோசை ஊற்றுகிறாள் ஊற்றிக் கொண்டே இருக்கிறாள். இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு என்கிற ரீதியில் அவள் திணறிப் போனாள்.

எவ்வளவு நாள் பசியோ ஒரே நாளில் தீர்த்துக் கொள்ளப் பார்த்தான் ஆதித்தியன்.

அதனால் அவள் சுட்டுப் போட போட அவன் சாப்பிட்டுக் கொண்டே இருந்தான்.

அவளே “ஆ..” என்று வாயை பிளந்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“இங்க என்னடி பார்வை.. போ போய் தோசைய பொன்னிறமா கருகாம எடுத்துட்டு வா” அதிகாரம் செய்தான்.

“தேவை தான் எனக்கு. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையா போயிடுச்சு என் கதை” நொடித்துக் கொண்டே அவள் தோசை சுட்டு அடுக்கியவள்,

“இதுக்கு மேல என்னால முடியாது.. ஆளை விடு சாமி” பெரிய கும்பிடு போட்டு வேலை செய்த அலுப்பில் சோபாவில் போய் சாய்ந்து விட்டாள்.

“சரி போ.. ஆனா நைட்டுக்கு நெய் தோசையோட மசாலா தோசை ரெடி பண்ணிடு” என்று ஆர்டர் போட்டு விட்டு அவன் போக,

“ஏதே மறுபடியும் முதல்ல இருந்தா.. போங்கடா எனக்கு ரெண்டு நாளைக்கு குளிர் காய்ச்சல்” இழுத்து போர்த்திக் கொண்டாள்.

அன்று மத்தியம் கேசவும் துளசிநாதனும் ஆதியை பார்க்க வீட்டுக்கு வந்தார்கள். வந்த உடனே ஆதியை கட்டிக்கொண்டு கண்கள் கலங்கினார்கள்.

“ப்ச் என்னடா ஆச்சு.. ஏன் இப்படி பொம்பளை மாதிரி அழற?” கேட்ட ஆதியை இன்னும் இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டவன்,

“நீ உணவை தொட்டு எவ்வளவு நாள் ஆச்சுன்னு தெரியுமாடா?” ஆதங்கத்துடன் கேட்டவனின் கண்ணீர் எதுக்காக என்று புரிந்துக் கொண்டவன்,

“போன் பண்ணாளா?” என்று கேட்டான்.

“ம்ம்” என்ற கேசவன்,

“பொலம்பி இருப்பாளே..” என்றவனின் சிரிப்பில் கேசவனுக்கும் புன்னகை வந்தது.

“ஆமா தோசை சுட்டு சுட்டு கை வலி, கால் வலி, இடுப்பு வலின்னு எல்லா வலியும் வந்திடுச்சாம்.. ஒரே புலம்பல். ரெண்டு எலும்பு விட்டு போய் இருக்காம். அதானால ஸ்கேன் பண்ண நாளைக்கு ஹாஸ்பிட்டல் போகப் போறாளாம்” என்றான் கேசவ்.

“நக்கலை பாரு உன் தங்கச்சிக்கு” சிரித்தவனிடம்,

“ரொம்ப சந்தோசம்டா.. நீ சாப்பிட்டதுல இப்ப தான் நிம்மதியா இருக்கு..” சொன்னான்.

“ஆமா ஆதி.. இப்ப தான் என் நெஞ்சுல பால் வார்த்த மாதிரி இருக்கு” நாதன்னும் கண்கள் கலங்கினார்.

ஆவர்களை சமாதனம் செய்து இருவரையும் அலுவலகத்துக்கு கிளப்பி விட்ட நேரம் ராஜாவும் போனில் அழைத்து அவனிடம் பேசி தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டான்.

“ப்ச் தோசை தின்னதை போய் காலையில இருந்து பெருசா பேசிட்டு இருக்கீங்க.. அதை விடுங்கடா” என்று அவர்களை இவன் தான் தேற்ற வேண்டி வந்தது.

“உன் தங்கச்சிக்கு கால் வலிக்குதாம்.. போய் அழுத்தி விடணுமாம்.. ஆடர் போட்டுட்டு போறா” என்றான்.

“அதெல்லாம் உங்க புருசன் பொண்டாட்டி பிரச்சனை.. என்னை இழுக்காதீங்க” என்ற ராஜாவை முறைத்தவன்,

“நல்லா சேர்ந்தீங்கடா” கடுப்புடன் மொழிந்தவனின் மடியில் தன் காலை போட்டு நீட்டி அமர்ந்தாள் மகரி.

“அவன் கிட்ட என்ன வெட்டியா பேசிட்டு இருக்கீங்க.. மதியம் சாப்பாடு வேணும்னா கால் அழுத்தி விடுங்க. உங்களுக்கு வெரைட்டியா சுட்டு போட்டு கையெல்லாம் வலிக்கிறது” அவன் மீது ஏறி உட்காராத குறையாக அமர்ந்தவள் அவன் பேசிக் கொண்டு இருந்த போனை வாங்கி அணைத்துப் போட்டாள்.

“ரொம்ப பண்றடி” முறைத்த பொழுதும் அவளின் காலை பதமாக பிடித்து விட்டான். அதில் அவளது கண்கள் சொக்க,

“தூங்குனா அழுத்த மாட்டேன்” கையை எடுத்துக் கொண்டான்.

“சோகமா கண்ணை சொறுகுனது.. பொறுக்காதே” முணகியவள் விழிகளை கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். அவளின் விழி அழகை பார்த்தவன்,

“ஐ வான்ட் கிஸ்” என்றான்.

“காலையில ஒன்னு இரவு ஒன்னுன்னு தானே சொன்னீங்க.. இப்ப என்ன இடையில் எல்லாம் கேக்குறீங்க” சொல்லி முடிக்கும் முன்பே அவளை அப்படியே பின்னால் சரித்து அவள் மீது முழுமையாக பரவி படர்ந்தவன் அவளின் இதழ்களில் நச்சென்று ஒரு முத்தத்தை பதித்தான். அதில் அவள் தான் திணறிப் போனாள்.

அவளின் திணறலை இரசித்துக் கொண்டே அவளின் கழுத்தில் அழுத்தமாக முகம் புதைத்துக் கொண்டான் ஆதி. அதில் ஜெர்க்காகிப் போனாள் மகரி.

Loading spinner

Quote
Topic starter Posted : February 5, 2026 10:50 am
Sowmya reacted
(@gowri)
Reputable Member

Aww இவன் சரியான தோசை சைக்கோ 🤣🤣🤣🤣🤣🤣

அட ஒன்னும் பண்ண மாட்டான் மா....பயந்து போகாத

Loading spinner

ReplyQuote
Posted : February 5, 2026 3:21 pm
(@megalaveera)
Trusted Member

NICE

Loading spinner

ReplyQuote
Posted : February 11, 2026 12:11 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top