Notifications
Clear all

அத்தியாயம் 12

 
Admin
(@ramya-devi)
Member Admin

ஆதியின் அன்னை சொன்னது போலவே அவனால் மகரியின் முத்தத்தை மறக்க முடியாமல் போனது.

கண்மூடி தூங்கும் பொழுது டான் என்று “இச்” என்கிற சத்தத்துடன் மிதமான சூட்டுடன் மென்மையான இதழ்கள் அவனின் கன்னத்தில் அழுத்தமாக பதிந்த அந்த நொடியே மீண்டும் மீண்டும் வந்துப் போனது. அவள் முத்தமிட்டது என்னவோ ஒரு முறை தான். ஆனால் இவனுக்கு தான் ஓராயிரம் முறை அந்த நிகழ்வு வந்து வந்துப் போனது.

தலையை பிய்த்துக் கொள்ளாத குறையாக அவனை சுத்தலில் விட்டாள் மகரி.

“காட் பைத்தியம் பிடிக்க வைக்கிறா” இரவெல்லாம் தூங்காமல் கழிந்தது ஆதிக்கு.

“என்ன ஆதி கண்ணா கண்ணெல்லாம் சிவந்து போய் இருக்கு. என் மருமக தூங்க விடல போலையே” நக்கலாக கேட்ட அன்னையை முறைத்துப் பார்த்தவன்,

“அவளோட சேர்ந்து உங்களுக்கும் கொழுப்பு கூடி போயிடுச்சு.. டாடிட்ட சொல்லி நாலு தட்டு தட்ட சொல்றேன்” பல்லைக் கடித்து விட்டு கல்லூரிக்கு கிளம்பினான்.

அன்று மாலை கையில் பலகாரதுடன் ஆதியின் வீட்டுக்கு வந்தாள் மகரி.

“என்ன அத்தை வாசம் தூக்குது.. மருமக வரான்னு ஸ்வீட் எல்லாம் பண்றீங்களா என்ன?” கேட்டுக் கொண்டே உள்ளே வர, அங்கே ஆதியின் அப்பா நடு கூடத்தில் பேப்பர் படித்துக் கொண்டு அமர்ந்து  இருந்தார். அவருக்கு அருகில் நக்கலான புன்னகையுடன் ஆதி அமர்ந்து இருந்தான்.

“மருமகளா சொன்ன.. இப்ப பாருடி வசமா என் டேடிட்ட சிக்கிக்கிட்ட” பார்வையாலே நக்கல் செய்தான்.

அதை உணர்ந்தும் உணராதவளாய்,

“என்ன மாமா இந்த நேரம் ஆபிஸ்ல தானே இருப்பீங்க.. என்ன வீட்டுல இருக்கீங்க..” கேட்டவள்,

“உடம்பு எதுவும் சரியில்லையா மாமா.. உடம்பை பார்த்துக்காம எப்போ பாரு ஆபிஸ் ஆபிஸ்னே இருந்தா இப்படி தான். இந்த அத்தை உங்களை சரியாவே கவனிச்சுக்க மாட்டேங்குறாங்க. நான் மட்டும் உங்களுக்கு மருமகளா வந்தேன்னு வைங்க. உங்களை அப்படி பார்த்துக்குவேன்” என்றாள்.

“ஏதே.. மருமகளா?” என்று அவர் அதிர்ந்துப் போனாலும்,

“என்ன பண்றது கண்ணா உன் அத்தை சரியில்ல..” என்று அவரும் வம்பில் இறங்க, ஆதிக்கு தான் கடுப்பாகியது.

அவள் மருமகள் என்று உரிமை கொண்டாடியதில் கோவம் வந்து திட்டுவார் என்று எதிர் பார்த்து இருக்க, அவரோ அவளோடு இணை போட்டுக் கொண்டு அல்லாவா பேசுகிறார்.

“எல்லாம் எனக்குன்னு எங்க இருந்து தான் வருவாங்களோ..” கடுப்படித்து விட்டு எழுந்து போக,

“மாமா...” சத்தமிட்டு அவனை அழைத்தாள்.

“இங்க பாருடி மாமான்னு சொன்ன வாயை உடைச்சுடுவேன்” அடக்கப்பட்ட கோவத்தில் கொதித்தான்.

“நான் ஒன்னும் உங்களை கூப்பிடல.. உங்க அப்பாவை தான் கூப்பிட்டேன்” முகம் தொங்கிப் போனது அவளுக்கு.

“ஏன் ஆதி பிள்ளையை திட்டுற.. உன்னை மாமான்னு கூப்பிடுற உரிமை மகரியை தவிர வேற யாருக்கு இருக்காம்.. நாளைக்கு உனக்கு பொண்டாட்டியா வந்து மகரி நின்னாலும் இப்படி தான் மூஞ்சை காட்டுவியா?” கடிந்துக் கொண்டார்.

“ப்ச்..” என்று தோளை உதறிவிட்டு அவன் அறைக்குள் நுழைந்துக் கொண்டான் ஆதி.

“அச்சோ மாமான்னா மாமா தான்” என்றவள்,

“இந்தாங்க மாமா உங்களுக்கு பிடிச்ச நெய் கேசரி.. அம்மாக்கிட்ட சொல்லி நானே செஞ்சு எடுத்துட்டு வந்தேன்” என்று அவரிடம் நீட்டினாள்.

“உள்ள அத்தை இருக்கா பாரு.. அவ நீ வருவன்னு முந்திரி கொத்தும், வெங்காய பக்கோடாவும் போட்டு வச்சு இருக்கா.. இதோட சேர்த்து அதையும் ப்லேட்டிங் பண்ணி கொண்டு வந்து குடு. அப்படியே ஒரு கப் காபி” என்றார்.

“உங்களுக்கு இல்லாததா.. சுகர் தூக்கலா அத்தைக்கு தெரியாம அதானே” என்று கண்ணடித்தாள்.

“சமத்து மருமக. என் ஓட்டு உனக்கு தான்” என்றார்.

“அது சரி.. சுகர் போட்டு குடுத்தா உடனே அவளுக்கு உங்க ஓட்டை போட்டுடுவீங்களோ..” முறைத்துக் கொண்டே ஆதியின் தாய் அருகில் வந்து நின்றார்.

“அத்தை, பாவம் மாமா என்னைக்கோ ஒரு நாள் தானே சுகர் சாப்பிடுறாரு.. அதுக்கும் முட்டுக் கட்டை போட்டா பாவம் இல்லையா?” சொன்னவள்,

“அதனால தான் கேசரில கூட சுகர் ரொம்ப கம்மியா போட்டு மாமாவுக்கு பிச்ச மாதிரி செஞ்சுட்டு வந்து இருக்கேன்”

“மாமனாரை நல்லா காக்கா புடி” முறைத்தவர்,

“அம்மா வரேன்னு சொன்னா வரலையா கண்ணா” கேட்டுக் கொண்டே கட்டி வைத்து இருந்த பூச்சரத்தை அவளின் நீள கூந்தலில் வைத்து விட்டார்.

“அம்மா நைட் டின்னர் செய்து எடுத்துட்டு வரேன்னு சொன்னாங்க அத்தை. அபியும் அம்மாவோடயும் பெரியம்மாவோடையும் சேர்ந்து வரேன்னு சொல்லிட்டா.. எனக்கு தான் இருக்க முடியல. அது தான் ஓடி வந்துட்டேன்” என்றாள் முகம் மலர.

அவளின் மலர்ந்த முகத்தை விரல்களால் சுற்றி நெட்டி முறித்தார்.

“நீ இப்ப மாதிரியே சிரிச்ச முகமா இருக்கணும் கண்ணா” என்று வாழ்த்தினார்.

“என்ன மாமியாரும் மருமகளும் ஒண்ணா கிட்டீங்களா?” சிரிப்புடன் கேட்டார் ஆதியின் அப்பா.

“இல்லையா பின்ன என்னைக்கா இருந்தா இருந்தாலும் மாமியாரும் மருமகளும் ஒன்னு தானே..” இருவரும் கோரசாக சொல்ல,

“அப்படி போடு.. அப்போ நம்ம வீட்டுல ஒரே உளை தானா” சத்தமாக சிரித்தார். மூவரின் பேச்சையும் மேலிருந்துக் கேட்டு பார்த்துக் கொண்டு இருந்த ஆதிக்கு தான் புசுபுசுவென்று வந்தது.

“எல்லாரையும் மயக்கியர்றா...” கடுப்படித்துக் கொண்டான். அன்றிரவு ஆதி வீட்டு மொட்டை மாடியில் மூன்று குடும்பமும் கூடி ஒன்றாக சாப்பிட்டு மகிழ்ந்த கதை எல்லாம் நினைத்துப் பார்த்தவனுக்குள் இன்று அந்த மகிழ்ச்சியை எல்லாம் தொலைத்து விட்டு வெறும் பாலைவனமாய் இருக்கிறோமே என்று வெந்துப் போனான்.

பெற்றவர்களை இழந்தது ஒரு பக்கம் வலி என்றாலும் அவர்களின் நினைவே வராமல் தன்னை பார்த்துக் கொண்டவளின் நினைவுகளில் தான் இல்லாமல் போனதில் அவனது வலியும் வெறுமையும் கூடிப்போனது.

தன்னை கட்டுப் படுத்திக் கொள்ள முடியாமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளின் மீது போய் படுத்துக் கொண்டான். அவளின் வாசம் நாசியில் ஏறி அவனை கொஞ்சமே கொஞ்சம் அமைதிப் படுத்தியது. அப்படியே அவனும் தூங்கிப் போனான்.

மறுபடியும் எழும் பொழுது இரவு எட்டு மணி ஆகி இருந்தது. அவளின் அசைவில் அவள் மீது இருந்த ஆதியும் முழித்துக் கொண்டான்.

முழித்தவன் அவள் மீது இருந்து எழுந்துக் கொள்ளாமல்,

“என் ஸ்ட்ரெஸ குறைக்கிறேன்னு சொல்லிட்டு இப்படியா கவிழ்ந்து அடிச்சு தூங்குவ.. மரியாதையா என் ஸ்ட்ரெஸ குறை” என்று அவளின் இதழ் நோக்கி குனிந்தான்.

“அச்சோ ப்ரஷ் பண்ணல” வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.

“பரவாயில்ல.. ஐ வான்ட் லிப் கிஸ்” சொன்னவன் மூடி இருந்த இதழ்களை விடுவித்து தன் இதழ்களை அவளின் வாயோடு பொருத்திக் கொண்டான்.

மூச்சும் முட்டும் அளவு அவளின் இதழ்களை உண்டவன், “போய் ரெண்டு தோசை சுட்டுட்டு வா” என்றான்.

“ஏதே நானா.. எனக்கு தோசை எல்லாம் செய்ய வராது” அவனிடம் இருந்து எழுந்துக் கொண்டாள்.

“நீ எடுத்துட்டு வந்தா சாப்பிடுறேன்” என்றான்.

“உண்மையாவா? சாப்பிடுறீங்களா?” விழிகளை விரித்துக் கேட்டவள்,

“ஆனா எனக்கு தோசை சுட வராதே..” பாவமாய் சொன்னாள்.

“நீ ட்ரை பண்ணு.. வந்தா சாப்பிடுறேன். இல்லன்னா வேணாம்” என்றான்.

என்னவோ அவனுக்காக ட்ரை பண்ண அவளின் மனம் உந்தித் தள்ள,

“சரி” என்று முகம் கழுவி விட்டு கீழே போனாள். அடுப்படிக்கு போனவளுக்கு தடுமாற்றமாக இருந்தது.

“என்னம்மா செய்யணும்” என்று வந்து நின்ற பணியாளரிடம், “தோசை செய்யணும்” என்றாள்.

“நீங்க போய் இருங்க ம்மா நாங்க சுட்டு எடுத்துட்டு வரோம்” என்றார்கள்.

“இல்ல.. எனக்கு எல்லாம் ப்ரிப்பேர் பண்ணி குடுங்க. நானே ஊத்துறேன்” என்று சொல்ல, மாவை எடுத்து தோசை பதத்துக்கு தயார் செய்து கல்லை எடுத்து அடுப்பில் வைத்து குடுக்க, கைகள் நடுங்க மாவை எடுத்து வார்த்தாள். ஆனால் தோசை ஒழுங்காக வரவில்லை.

“நீங்க நகருங்க ம்மா நான் சுட்டு தரேன்” என்று அவர்கள் மீண்டும் வர,

“இல்ல வேணாம்” என்றவள் பிடிவாதமாய் அடுப்படியில் நின்று கல்லில் ஊற்றிய மாவை திருப்பிப் போட, அது கல்லோடு பிடித்துக் கொண்டு வர மறுக்க கண்களை மூடிக் கொண்டு இழுத்து பிடித்த பொறுமையோடு கல்லோடு போராடி அதை எடுத்து வைத்தவள், மீண்டும் கல்லில் ஒரு கரண்டி மாவை அள்ளி தேய்க்க, அது மறுபடியும் வீணாகிப் போனது.

“ச்ச என்ன இது.. இதுக்கு தான் சொன்னேன் எனக்கு இதெல்லாம் வராதுன்னு சொன்னா யாரு கேக்குறா” என்று முணகியவளுக்கு விழிகளில் நீர் அரும்பியது. “தான் செய்தால் சாப்பிடுவேன் என்று சொல்லி இருக்கிறாரே.. ஆனா எனக்கு இப்படி சொதப்பி சொதப்பி வருகிறதே..” தன் மீதே கோவம் வந்தது.

அவள் தவித்துப் போய் நிற்பதை பார்த்த பணியாளர்கள், “எண்ணெய் விட்டு தேச்சு எடும்மா” என்றார்.

“ம்ம்” என்றாளே தவிர அதை செயல் படுத்தவில்லை. ஒரே ஒரு கணம் கண் மூடி நின்றாள். விழிகளில் நீர் நெகிழ்ந்தது.

“ஏன் என்னால ஒரு தோசை கூட சுட முடியல” பச்சை தாபத்தில் வெந்துப் போனவளுக்குள் என்னவோ பல உணர்வுகள் வெடிக்க தொடங்க, அதை தாங்க முடியாமல் நெஞ்சை பிடித்துக் கொண்டாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : February 4, 2026 2:29 pm
(@gowri)
Reputable Member

ஆதி அம்மா அப்பா எல்லாம் இறந்தப்ப கூட மகரி அவனை நல்லா தான் பார்த்து இருக்கா....

அப்பறம் என்ன ஆகி இருக்கும் ????

Loading spinner

ReplyQuote
Posted : February 4, 2026 3:33 pm
(@megalaveera)
Trusted Member

NICE

Loading spinner

ReplyQuote
Posted : February 11, 2026 12:05 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top