அம்மாவை தொலைத்த பிள்ளையாய் பெருவளத்தான் அல்லாட தன் அப்பாவை அவனுக்கு துணையாக போக சொன்ன ஆதினி,
“கனிகா நீ எதை மனதுல வச்சுக்கிட்டு இந்த முடிவை எடுத்து இருக்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா அது இந்த ஜென்மத்துல நடக்காது” என்றவளை பார்த்த கனிகா ஏளனமாக சிரித்து,
“நான் நினைச்சது நடக்கும். நடத்திக் காட்டுவேன்” என்றாள் அவள் சவாலாக.
“அதுக்கு நான் என்னைக்கும் ஒத்துக்காவே மாட்டேன். உனக்கு மட்டும் தான் தற்கொலை செய்ய தெரியுமா...? ஏன் எனக்கு எல்லாம் தெரியாதா? நீ எதாவது செய்ய நினைச்சன்னா இப்போ கட்டிட்டு இருக்குற பில்டிங்கல இருந்து கால் தவறி விழற மாதிரி விழுந்துடுவேன். பிறகு நீ என்னை பொருக்கி தான் அள்ளனும்” என்றவளை முறைத்துப் பார்த்தாள் கனிகா.
“என்ன பார்க்கிற நாளைக்கு அங்க வா செம்பில் காட்டுறேன்.” என்று அவளுக்கு மட்டும் கேட்பது போல சொன்னவள்,
“ஒழுங்கா உன் ட்ராமாவை தூக்கி போட்டுட்டு போய் உன் புருசனோட குடும்பம் நடத்துற வழியை பாரு. இல்லன்னா நான் சொன்னது நாளைக்கு நடக்கும்” என்று கனிகாவை மிரட்டி விட்டு ஆதினி போய் விட்டாள்.
எல்லோரும் பிரம்மை பிடித்தது போல இருந்தார்கள். செல்வத்துக்கு இப்போது தான் வாழ்க்கை மீண்டும் துளித்து இருக்குன்னு மகிழ்வதா இல்லை இப்படி இன்னொருவரின் வாழ்க்கையை நம்மால் போய் விட்டதா என்று புரியாமல் செல்வத்தின் வீட்டில் இருந்தவர்கள் கலங்கிக்கொண்டு இருந்தார்கள்.
சஞ்சுவுக்கு நடப்பது எல்லாம் நன்மைக்கு என்று எடுத்துக் கொள்வதா இல்லை என்று எடுத்துக் கொள்வதா என்றே புரியவில்லை.
செல்வத்தின் அப்பாவும் அம்மாவும் ஆதினியை பார்த்து பேச முடிவெடுத்தார்கள். வீட்டில் அவளது சொல்லுக்கு தான் மதிப்பு அதிகம் என்று உணர்ந்திருந்தார்கள். எனவே அவளை பார்க்க சென்றார்கள். தங்களுக்கு பேரனும் மருமகளும் வேணும் என்று சுயநலமாக எண்ணியவர்கள் கனிகாவை தங்களிடமே விட்டுவிடுமாறு அடுத்த நாள் அவளிடம் போய் மடியேந்தி பிச்சை கேட்க,
“உங்களுக்கு ஏன் புரிய மாட்டிக்கிது அவ இன்னொருத்தரோட மனைவி. அந்த மனுசனை கொஞ்சம் நினைச்சி பார்த்தீங்களா...? அந்த ஆளும் மனுசன் தானே... ஏன் அந்த ஆளை மட்டும் கார்னர் பண்ணி சாகடிக்கிறீங்க” என்று ஆதங்கத்துடன் கேட்டவளை பார்த்து,
“நீ அவருக்கு வாழ்க்கை குடுக்கலாமே ம்மா. கனிகா எங்கக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா” என்று பேச தலையில் அடித்துக் கொண்டாள்.
“ஒரு குடும்பத்தின் மானத்தை மொத்தமாக பிடுங்கி விட்டு அவங்களுக்கு உயிர் குடுக்க சொல்றீங்க நீங்க.. உயிரை விட மானம் பெரிதுன்னு தெரியாதா உங்களுக்கு. ப்ளீஸ் எங்க கனிகாவை எங்கக்கிட்ட குடுத்திடுங்க. இல்லன்னா நான் போலீஸ்க்கு போவேன். உங்க குடும்பத்தின் மீது மானநட்ட வழக்கு போடுவேன்” என்று ஆத்திரமாக சொன்னவளிடம் மேற்கொண்டு பேச முடியாமல் பெருவளத்தானிடம் போய் மடியேந்தினார்கள்.
இன்றும் கடையில் தான் இருந்தான். ஆனால் மிக நிதானமாக இருந்தான். ஒவ்வொரு முறையும் தாங்க முடியாத வேதனை மனதை சூழும் பொழுது எல்லாம் தேடும் மதுவை இந்த முறை அவன் தொடவே இல்லை. வேதனை உச்சபட்சம்.
அதை இந்த மதுவால் கூட போக முடியாது என்று எண்ணினானோ என்னவோ. அவன் கூட விதுலும் இருந்தான். ஆதினி தான் அவனை அனுப்பி வைத்தாள்.
அவரை தனியா விடாதடா. நான் போய் விசாகன் மாமாவை பார்த்துட்டு வரேன்” என்று அப்பொழுதே கிளம்பி இருந்தாள். அவர்களுக்கு என்ன பதிலை சொல்ல என்று தெரியாமல் வெறுமென அவர்களின் கையை பிடித்துக் கொண்டு இருந்து வந்துவிட்டாள்.
“வந்தா அடுத்த முறை உங்க மருமகளோட தான் வருவேன்” என்று சொல்லி விட்டு வந்துவிட்டாள். வந்தவளிடம் இவர்கள் மடியேந்தி கேட்க எங்கே முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை.
தன் முன் இருந்த பெரியவர்களை இரக்கத்துடன் பார்த்தான். கணவனிடமே அவனது மனைவியை கேட்டு வந்து இருக்கிறார்கள்... வேதனையை மீறி சிறு புன்னகை அவனது முகத்தில் தென்பட்டது.
“அவலை கம்பளைன்ட் குடுக்க விடாம நான் பார்த்துக்குறேன். நீங்க கவலை படாதீங்க. கனிகாவை நல்லா பார்த்துக்கோங்க அது போதும். எங்க மூலமா எந்த எதிர்வினையும் வராது. நீங்க திடமா இருக்கலாம்” என்று அவர்களுக்கு உறுதி கொடுத்தவன் மீண்டும் அந்த வெற்று தரையில் படுத்து விட்டான்.
விதுலுக்கு தன் மாமனை நினைத்து ஒரு பக்கம் பெருமையாகவும் இன்னொரு பக்கம் வேதனையாகவும் இருந்தது.
எல்லோரின் மனதையும் கலங்கடித்துக் கொண்டு இருந்த அந்த வாரம் ஓடியேப்போனது. இடையில் ஆதினி போலீஸ் கம்பளைன்ட் குடுக்க போறேன் என்று சொல்ல பெருவளத்தான் அவளை அடக்கி விட்டான்.
“என் மேல சத்தியம் இனி கனிகா சம்மந்தமான எந்த ஒரு முடிவிலும் நீ தலையிடக் கூடாது..!” என்று தன் மேல் சத்தியம் வாங்கிக்கொண்டான். இனி எங்கிருந்து கனிகாவை பெருவளத்தானோடு சேர்த்து வைக்க என்று சோர்ந்துப் போனாள்.
மாப்பிள்ளை வீட்டில் இருந்து சம்மந்தி பத்திரிக்கை வைக்க வர அப்பொழுது தான் ஆதினிக்கு கல்யாணம் வச்சு இருக்கோம் என்பதே நினைவுக்கு வந்தது. தன் பிறகு இவர்களும் பத்திரிக்கை குடுக்க தயார் ஆனார்கள். என்ன தான் ரெஜிஸ்டர் ஆபிசில் கல்யாணத்தை வைத்துக் கொண்டாலும் இவர்களுக்குள் மாற்றிக்கொள்ள சம்பிரதாயத்துக்கு என்று ஒரு பத்து பத்திரிகை அடித்துக் கொண்டார்கள்.
கனிகா ஆதினிக்கு போன் போட்டு கல்யாணத்தை நிறுத்த சொன்னாள்.
“உன் விருப்பத்துக்கு எல்லாம் எதுவும் செய்ய முடியாது. விட்டுட்டு போனல்ல. அப்படியே போயிடுடி” என்று வைத்து விட்டாள் ஆதினி.
“உன்கிட்ட போய் பேசுனேன் பாரு” என்று முறைத்தவளிடம், “என்ன ஆச்சு? என்ன சொல்றா அவ” என்று கேட்ட சஞ்சுவிடம் உதடு பிதுக்க,
“பெட்டர் நாம அந்த மாப்பிளைக்கிட்டயே பேசிடலாம்” என்று செல்வம் சொல்ல,
“எனக்கும் அது தான் தோணுது...” பிரபுவும் சொல்ல
“அப்போ நாளைக்கு போய் நேர்ல பார்த்து பேசிடலாம்” என்று முடிவெடுத்துக் கொண்டார்கள் நால்வரும். ஆதினியையும் பெருவளத்தானையும் சேர்த்து வைக்க இவர்கள் நால்வரும் திட்டம் போட,
அங்கே பெருவளத்தான் கனிகா தன்னை விட்டு நீங்கியதில் கடலளவு வேதனை இருந்தாலும் ஒரு ஓரத்தில் சின்ன மகிழ்ச்சி இருந்தது. ஏனெனில் இனி ஆதினியை பற்றி எந்த குற்ற உணர்வும் இல்லமால் நினைக்கலாம் இல்லையா...? அந்த ஒற்றை மகிழ்ச்சி அவனுக்கு போதுமே..
அவனது கையில் இருந்த ஆதினியின் சின்ன டைரியை ஆசையாக வருடி விட்டான். எவ்வளவு காதல் தன் மீது கொண்டு இருந்தாள்.
“எனக்கு தெரியாமலே பள்ளி பருவத்தில் இருந்து என்னையவே சுத்தி வந்து இருக்கா... எனக்கு பிடிக்கும்னு தெரிந்து அந்த படிப்பை மேற்படிப்பாக எடுத்து படித்து இருக்கா.. லவ் யூ குட்டி...”
“நீ ஏன் கண்ணம்மா என்கிட்டே முன்னாடியே வரல.. உன் காதலை பார்க்க பார்க்க நெஞ்சு எல்லாம் பஞ்சா பறந்து போகுதுடி... உன் மடியில படுத்து எனக்கு தேவையான ஆறுதலை எல்லாம் தேட தவிக்குதுடி. என்கிட்ட வந்திடுடி” எண்ணியவனின் கரத்தில் ஆதினியின் கல்யாண பத்திரிக்கை அகப்பட அவனது உயிர் அப்படியே சுருண்டுப் போனது.
“உன்கூட இந்த பிறப்புல வாழ குடுத்து வைக்கலடி... உனக்கு வர்ற துன்பங்கள் எல்லாத்தையும் எனக்கு குடுக்க சொல்லி கடவுள் கிட்ட கேட்டுக்குறேன். நீ உன் கணவனோட நல்லா வாழனும் குட்டி...” எண்ணும் பொழுதே அவனது கண்களில் இருந்து நீர் இறங்கியது. அதை தன் சட்டை காலரை இழுத்து துடைத்துக் கொண்டவன்,
“உன்கூட ஒரே ஒரு நாள் மனசார வாழணும் குட்டி. அது போதும் எனக்கு. என் பிறப்புகள் எல்லாம் ஒட்டுமொத்தமாய் ஒரு முடிவுக்கு வந்திடும். ஆனா உன் நிழலை கூட என்னால தொட முடியாம இருக்கேன். என் பிறப்பு என்ன பிறப்போ போடி” என்றவனுக்கு தன்னவளின் பெயர் அருகில் வேறு ஒருவனின் பெயர் இருக்க கண்டு நெஞ்சு அப்படியே கருகிப் போனது.





