“அவளை பூட்டி வச்சுட்டா மட்டும் எதுவும் மாறிடாது ஆதி” கேசவன் அடங்காத கோவத்தில் கொத்திதுப் போய் பேசினான்.
“எதுவும் மாறலன்னா கூட பரவாயில்லை முதலுக்கு மோசம் இல்லாம இருந்தாலே போதும்” என்ற ஆதியின் சொற்களில் ஏகத்துக்கும் விரக்தி நிரவி இருந்தது.
“ஏன்டா இப்படி விரக்தியா பேசுற..?” என்றவனுக்கு ராஜாவை வரவைத்தால் தான் சரியாக இருக்கும் என்று அவனுக்கு போனை போட்டு விட்டான்.
“டேய் நான் வந்தா என் தங்கச்சி நம்ம வீட்டுக்கு வந்திடுவாடா”
“அவளுக்கு கல்யாணம் ஆகி இருக்குன்னு சொல்லியாச்சு.. அதனால நீ கிளம்பி வா..” என்றான் விடாப்பிடியாய்.
“என்னடா சொல்ற?” என்று கேட்டவனுக்கு இங்கு நடந்த எல்லாவற்றையும் சொல்லிய கேசவன்,
“போதும்டா.. இவன் படுற கஷ்டத்தை பார்க்க முடியல.. டாக்டர்சை பக்கத்துல வச்சுக்கிட்டு நாம மகரிக்கு உண்மையை சொல்லிடலாம்” என்றான்.
“சரியா வருமாடா” தங்கையின் மீது இருந்த பாசம் அவனை நிதானிக்க வைத்தது.
“எல்லாம் சரியா வரும். நீ கிளம்பி வா. நான் நம்ம டாக்டர்ஸ் கிட்ட பேசுறேன்” என்ற கேசவ் அன்றைக்கே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்தான்.
அதை எல்லாம் வெறும் பார்வையாளராக பார்த்துக் கொண்டு இருந்த ஆதிக்கு அவனின் பழைய வாழ்க்கை கண் முன் விரிந்தது.
சின்ன சின்னதாய் சேர்த்து வைத்த மகரியின் காதல் ஆழமாக வேர்ப்பிடித்து இறுக்கமாகியது. ஆதியின் அன்னையிடம் வெளிப்படையாக தன் காதலை சொல்லி,
“உங்க மருமக நான் மட்டும் தான். என்னை தவிற வேற யாரையாவது பொண்ணு பார்த்தீங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன்” என்று பட்டா போட்டுவிட்டாள்.
“இது உன் அம்மா கிட்ட சொல்லேன்” என்று ஆதியின் அன்னை சீண்டி விட,
“எதுக்கு கட்டையை கொண்டே அடி பின்னி எடுக்கவா? அடி தாங்குற அளவுக்கு எனக்கு தெம்பு இல்லை அத்தை. அதனால நீங்களா வந்து பொண்ணு கேக்குற மாதிரி வந்து என்னை உங்க மருமகளா ஆக்கிக்கிவீங்கலாம். நானும் மிகுந்த காதலோட உங்க மகன் கூட குடும்பம் நடத்துவனாம். எப்படி என் ப்ளான்” என்று கேட்டவளின் தலையில் குட்டிய ஆதித்யன்,
“எரும எரும படிக்கிற வயசுல என்னடி கல்யாண பேச்சு வேண்டி கிடக்கு. முதல்ல டென்த் பாஸ் பண்ணு. அதையே ரெண்டு முறை அட்டெம்ட் பண்ணிட்டு இருக்கா. எல்லாம் உங்களை சொல்லணும் ம்மா.. படிக்கிற வயசுல கண்டதையும் அவ மனசுல விதைச்கிக்கிட்டு” என்று சொன்னவன் தான், சில வருடங்கள் கழித்து அவளை மனம் முழுக்க விரும்பி அவளின் கழுத்தில் தாலியை கட்டினான்.
பெற்றவர்கள் அனைவருக்கும் சம்மதம் தான். தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டார்கள். ஆதியும் கல்லூரி பருவத்தில் இருந்ததால் இதை பற்றி எதுவும் அழுத்தமாக பேச எண்ணாமல் இருந்தார்கள். ஆனால் இப்படி ஒரு பேச்சு வார்த்தை போகுது என்பதை மட்டும் பிள்ளைகளிடம் கோடிட்டு காண்பித்து இருந்தார்கள்.
ஆதித்யன் மட்டும் பிடித்த பிடிவாதத்தை விட்டு கொஞ்சமும் இளகவே இல்லை. அதுவும் மூன்று பேரின் பெற்றவர்களும் விபத்தில் இறந்துப் போன பிறகு ஆதித்யனை கண்ட்ரோல் பண்ணவே முடியவில்லை. தனக்குள் அவ்வளவு இறுகிப் போய் இருந்தான்.
ஒற்றை பிள்ளையாக வளர்ந்ததில் அனைத்துக்கும் பிடிவாதம் தான். ஆனால் அந்த பிடிவாதம் எல்லாம் மகரியாளின் முன்பு நிற்கவில்லை.
காலையில் கிளம்பி ஆதியின் வீட்டுக்கு வந்து விடுவாள்.
“இங்க எதுக்குடி வந்த?” என்று வாசலிலே அவன் தடை போட்டு விடுவான்.
அவனின் கை சந்தின் இடையில் புகுந்து வீட்டுக்குள் வந்து விடுவாள் மகரி.
“ஏய்.. வெளில போடி.. வயசு பையன் மட்டும் இருக்குற வீட்டுக்குள்ள வந்தா நீ வந்தா பார்க்கிற ஆள்கள் என்ன சொல்லுவாங்க. முதல்ல இங்க இருந்து போடி” விரட்டியவனின் பேச்சை கொஞ்சமும் சட்டை செய்யாமல் அவனுக்கு தன் கையால் செய்த சாப்பாட்டை எடுத்து டைனிங் டேபிளில் வைத்தாள்.
“பசியோட இருந்தா இப்படி தான் கோவம் வரும். முதல்ல சாப்பிடுங்க மாமா. அப்புறம் மீதியை பேசிக்கலாம்” என்று சொன்னவளை முறைத்துப் பார்த்த ஆதி,
கடை விரித்து இருந்த சாப்பாட்டை எடுத்து சுவரிலே தூக்கி அடித்தான்.
வித விதமாய் செய்து வைத்திருந்த அத்தனை சாப்பாடும் வீணாகிப் போனது.
அதில் கண்கள் கலங்கிப் போன மகரி,
“ஏன் மாமா இப்படி பண்றீங்க? என் மேல தானே கோவம். அதை ஏன் உணவு மேல காட்டறீங்க. அத்தை மட்டும் இப்ப இருந்து இருந்தா இப்படி உங்களை பட்டினியா போட்டு இருப்பாங்களா?” என்று அதை கேட்டு முடிக்கும் முன்பே அவளின் குரல்வளையை இறுக்கி அந்தரத்தில் தூக்கி இருந்தான்.
“அவ்வளவு தான்டி உனக்கு சொல்லிட்டேன்” என்றவனின் கண்களில் ஏகத்துக்கும் சிவந்துப் போய் இருந்தது. அவன் தூக்கிப் பிடித்ததில் கண்கள் முழி இரண்டும் பிதுங்கி வெளியே வரத் தொடங்கிய நேரம்,
“டேய் என்னடா பண்ற?” ராஜா வேகமாய் உள்ளே வந்து அவனின் கையில் இருந்த தன் தங்கையை விடுவித்து விட்டான்.
அடைத்து இருந்த மூச்சை இழுத்து விட்டவள், தன் நெஞ்சை நீவி விட்டு கழுத்தை தடவி விட்டுக் கொண்டாள். கொஞ்ச நேரத்திலே தன்னை நிலை குலைய செய்து விட்டவனை அடி பட்ட விழிகளால் பார்த்தாள். கண்கள் எல்லாம் கலங்கிக் கொண்டு வந்தது.
“வர வர நீ ரொம்ப முரட்டுத் தனமா மாறிட்டடா..” சீறினான் ராஜா.
“நான் இப்படி தான். என் குணமே இது தான். இப்படி பட்டவனிடம் நீ ஒன்னும் நட்பு டேஷ் பாராட்ட வேணாம். போடா வெளில” என்று அவனையும் அவமானப் படுத்தினான் ஆதி.
“எனக்கு மட்டும் என்ன இங்க இருக்க ஆசையா? என் கிரகம் அந்த மாதிரி இருக்கு. இனி உன் வீட்டுக்கு வந்தா என்னை உன் செருப்பை கழற்றி அடி” என்ற ராஜா, அடுப்படிக்குள் நுழைந்து இரு க்ளாசில் தண்ணீர் எடுத்து வந்து ஒன்றை நண்பனிடமும் இன்னொன்றை தங்கையிடம் நீட்டி இருவரையும் பருக வைத்தான்.
ஆனால் ஆதி அவனின் கையில் இருந்த நீரை வாங்காமல் அவனை பார்த்து முறைத்தான்.
“எப்போ உன்னோட பார்ம் ஆனேனோ அப்பவே வெட்கம், மானம், ரோசம் எல்லாத்தையும் ஓட்ட காசுக்கு வித்துட்டேன்” என்று சொல்ல, ஆதியின் கண்களில் இருந்த சிவப்பு மெல்ல மறைந்தது.
ராஜா திரும்பி தங்கையை பார்த்து,
“வீட்டுக்கு போடா” என்றான்.
“அவரை சாப்பிட சொல்லு நான் கிளம்புறேன்” என்றாள்.
“எங்க இருந்து சாப்பிடறது அது தான் எல்லாத்தையும் தூக்கி செவுத்துல அடிச்சுட்டானே” என்றான் ராஜா.
“கொஞ்ச நேரம் இரு.. பொங்கல் செஞ்சு வைக்கிறேன்” என்றவள் அடுப்படிக்கு போக,
“டேய் இப்ப அவ கிளம்பல. அப்புறம் நடக்குறதே வேற” மீண்டும் கொதித்துப் போனான் ஆதி.
அவனின் கோவத்தை சட்டை செய்யாமல் அட்டுப்படிக்குள் நுழைந்து சமைக்க தொடங்கியவள், அடுத்த பதினைந்து நிமிடத்தில் கமகமவென்று மிளகு பொங்கலும், வருத்த நிலக்கடலை சட்னி வணக்கிய வெங்காய தாளிப்போடு ஆளை தூக்கியது.
இதற்கு இடையில் டைனிங் ஹாலை சுத்தம் செய்ய சொல்லி பணியாளர்களை பணித்து விட்டு சமைக்கத் தொடங்கி இருந்தாள்.
மீண்டும் மேசையில் புது விரிப்பு விரித்து ப்ளேட் வைக்க, ஆதி இன்னும் முறுக்கிக் கொண்டே இருந்தான்.
“ஆதி இழப்பு உனக்கு மட்டும் இல்லை.. உன்னை விட மகரிக்கு தான் அதிக இழப்பு..” என்ற ராஜாவை முறைத்துப் பார்த்தவன், எழுந்து வெளியேப் போக பார்க்க,
“மாமா” என்றாள் தவிப்புடன். அந்த வார்த்தையில் திரும்பிப் பார்த்த ஆதி,
“நீ சமைச்ச சாப்பாட்டுல விசம் கொஞ்சத்தை வச்சு குடு” என்றான். பொங்கி வந்த அழுகையை அடக்கிப் பார்த்தும் முடியாமல்
“அப்போ நான் செத்துப் போகவா?” கேட்டவளை இன்னும் முறைத்துப் பார்த்த ஆதி, ராஜாவை கடுப்புடன் பார்த்தான்.
“சொன்னது அவ.. என்னை எதுக்குடா முறைக்கிற?” சொன்னவன் ஆதியை கைப்பிடித்து அழைத்து வந்தான். மகரி இருவருக்கும் பரிமாறினாள்.
இப்படி அவனை பரமாறித்துக் கொள்ள அவனிடமே போராட வேண்டி இருந்தது அண்ணன் தங்கை இருவருக்கும். கேசவனும் துளசிநாதனும் அதற்கு மேல் அவனை தேற்றி வெளியே எடுத்து வருவதற்குள் அனைவருமே ஒருவழியாகி இருந்தார்கள்.
இதில் அபிராமி வேறு காதல் பார்வை வீச, ஓங்கி ஒரே ஒரு அரை.. அதோடு அவன் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கவில்லை.
“சரியான முரடன்டி. எங்க இருந்த வந்த காட்டு பயலோ தெரியல.. அம்மா நாலு நாள் வாயை வீங்க வச்சுட்டான்” கரித்துக் கொட்டினாள் மகரியிடம்.
இவளுக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் இந்த அளவுக்கு முரட்டு குணமாக இருக்கும் ஆதியை எண்ணி உள்ளுக்குள் கலக்கமாக இருந்தது.
அவனின் அப்பா அம்மா இருந்தவரை அவனின் முரட்டு குணமும் கோவமும் அதிகம் வெளியே தெரியவில்லை. ஆனால் அவர்கள் போன பிறகு அவனின் முழுமையான குணம் தெரிய ஆரம்பிக்க மகரியாளுக்கு உள்ளுக்குள் அத்தனை நெருடலாக இருந்தது.
நெருடல் என்பதை விட பயமாக இருந்தது.





