Notifications
Clear all

அத்தியாயம் 15

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 980
Topic starter  

அவன் காரை எடுத்துக் கொண்டு வெளியேப் போன அடுத்த நிமிடமே கேசவிடம் இருந்து போன் வந்து விட்டது ஆதிக்கு.

“நிம்மதியாவே இருக்க விட மாட்டியாடா” போனிலே அப்படி கத்தினான் ஆதி.

“டேய் ஏன்டா உன் நிலைமை பத்தி உனக்கு தெரியாதா?” என்று அவன் தவித்துப் போக,

“அவக்கூட இருந்தா நான் மூச்சு முட்டி செத்துப் போயிடுவேன் அப்போ பரவாயில்லையாடா உனக்கு?” கண்கள் சிவக்க ஆத்திரத்துடன் கேட்டவனின் கேள்வியில் கேசவனுக்கு உயிர் துடித்துப் போனது.

“ஏன்டா இப்படி எல்லாம் பேசுற... உன்னை வாரிக் குடுத்துட்டு நாங்க மட்டும் நிம்மதியா இருப்போம்னு நினைக்கிறியா?” ஆதங்கத்துடன் கேட்டவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் குமுறிக் கொண்டு இருந்தான் ஆதி.

“நான் சொல்றதை கேளு ஆதி.. உன்னால அவளை விட்டுட்டு இருக்க முடியாதுடா”

“ஆனா அவ இப்படி மயக்கம் போட்டு விழும் போதெல்லாம் நெஞ்சை கசக்கிப் பிழியுதே நான் என்னடா செய்வேன்..” ஆங்காரத்துடன் கத்தியவன்,

“நான் டிப்ரஷன்ல செத்துப்  போனாலும் பரவாயில்லை. அவளை மரியாதையா கூட்டிட்டுப் போ” என்றான் உறுதியாக.

“இல்ல ஆதி” கேசவ் சொல்ல வர,

“அப்ப அவ வீட்டை விட்டு போகும் வரை நான் அந்த வீட்டுக்குள்ள வர மாட்டேன்” உறதியாக சொன்னவன், போனை அணைத்துப் போட்டு விட்டு காரை எடுத்துக் கொண்டு எங்கோ சென்று விட்டான் ஆதித்யன்.

கேசவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல் ஆதியின் வீட்டுக்குப் போனவன், அங்கு மயக்கத்தில் படுத்து இருந்தவளை உலுப்பி எழுப்பியவன்,

“உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்க மகரி..” என்று கொதித்துப் போய் பேசியவனை கண்டு ஒன்றும் புரியாமல் “என்ன கேசவ் அண்ணா தூங்கிக்கிட்டு இருக்குறவளை பிடிச்சு எழுப்பி விட்டுட்டு திட்டுற.. நீ திட்டுற அளவுக்கு நான் என்ன பண்ணினேன்” அப்பாவியாய்  கேட்டவளை கண்டு பொங்கிக்கொண்டு வந்த ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அவளை முறைத்துப் பார்த்தான்.

“நீ தூங்கல மகரி அது முதல்ல தெருஞ்சுக்கோ..” என்றான்.

“ஹாங்” முழித்தவளின் இயலாமையை கண்டு உள்ளம் நொந்தவன்,

“நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மகரி..”

“பேசேன் அண்ணா அதுக்கு ஏன் இப்படி டென்ஷன் ஆகி இருக்க” கேட்டவளிடம் இருந்த பொறுமை கொஞ்சமும் கேசவனிடம் இருக்கவில்லை.

“நான் சொல்றதை கேளு மகரி. அதை கேட்டு டென்ஷன் ஆகாம, மயக்கம் போட்டு விழாம இருக்கணும் நீ” என்றான்.

“நான் எதுக்கு மயக்கம் போட போறேன்” புரியாமல் கேட்டவளை பார்த்து பெருமூச்சு விட்டவன்,

“உன் மனசை கொஞ்சம் திடப்படுத்திக்க மகரி.. நான் சொல்றது எல்லாம் உண்மை..” என்றவன் அவளின் புரியாமல் விழிக்கும் விழிகளில் ஆழ்ந்துப் பார்த்து,

“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு” என்றான்.

“வாட்” அதுவரை இயல்பாக இருந்தவள், கேசவன் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ந்து நெஞ்சை பிடித்துக் கொண்டாள்.

“என்னண்ணா சொல்ற? எனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?”

“ஆமாம் மகரி.. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. உன் புருசன்” என்று சொல்ல வரும் பொழுது,

“போதும் நிறுத்துடா..” வேகமாய் உள்ளே வந்த ஆதி கர்ஜித்து இருந்தான்.

“என்னை ஏன்டா சொல்ல விடாம தடுக்குற.. நான் சொல்லுவேன்” என்றவனின் சட்டையை கொத்தாக பிடித்தவன்,

“நீ சொன்ன நான் உன்னை கொன்னுடுவேன்டா” கேசவனை மிரட்டினான்.

“நீ என்னை கொன்னு போட்டாலும் பரவாயில்ல.. என் கண்ணு முன்னாடி நீ இப்படி கொஞ்சம் கொஞ்சமா செத்து போறதை பார்க்க என்னால பார்க்க முடியல. அதுக்கு நான் உன் கையாலேயே செத்துப் போறது மேல்” என்றான் அடங்காத ஆத்திரத்துடன்.

“கேசவா” தழுதழுத்தான் ஆதி.

“ப்ளீஸ் ஆதி.. புலி வரும் புலி வரும்னு இன்னும் எத்தனை நாள் காத்துக்கிட்டு இருக்கிறது. எங்க கண்ணு முன்னாடி நீங்க ரெண்டு பேரும் புழுவா துடிச்சுக்கிட்டு இருக்குறதை பார்க்க முடியல. இதுக்கு ஒரு தீர்வு வரணும். அது மகரியாள மட்டும் தான் முடியும்.. அவளுக்கு உண்மை தெரிஞ்சா தான் எல்லாமே பழைய நிலைக்கு திரும்பும்” என்றான்.

“பழைய நினைவுகளை மீட்டுனா அவ உயிர் போயிடும்டா” கெஞ்சினான் ஆதி.

“ஒரு யூகத்துல தான் டாக்டர் சொன்னாரே தவிர அது நிதர்சனம் கிடையாது டா” என்றான் கேசவன்.

“ஒரு யூகதுக்குன்னே வச்சாலும் ஒரு வேலை தவறா போயிடுச்சுன்னா அவளை இழந்துட்டு நான் மட்டும் உயிரோட இருப்பேன்னு நீ நினைக்கிறியா?” விழிகளில் சிவப்பு ஏற கேட்டவனை காணுகையில் நெஞ்சில் சோக மேகம் மூண்டது கேசவனுக்கு.

“ஆதி அப்படி எல்லாம் எதுவும் ஆகாதுடா..”

“சப்போஸ் அப்படி ஆகிட்டா நான் என்னடா பண்ணுவேன்” கேட்டவனின் முகம் இயலாமையில் சிவந்து கிடந்தது.

“யூக்கத்துக்கே போகாதடா”

“ப்ளீஸ் கேசவ் இந்த விசயத்துல நீ தலையிடாத” என்ற நேரமே ஆதியின் மூக்கில் இருந்து உதிரம் சொட்டியது. மேல் மூச்சு வாங்க தொடங்கினான்.

“ஹேய் ஹேய் ரிலாக்ஸ்டா.. ரிலாக்ஸ்டா..” அதிகமாக பதறிப் போன கேசவன் தன் கைக்குட்டையை வைத்து அவனது உதிரத்தை துடைத்து விட,

அவனின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்ட ஆதி,

“என் உயிரே போனாலும் அவக்கிட்ட உண்மையை சொல்லக்கூடாது என் மேல சத்தியம் பண்ணு” என்றவனின் எதிரில் வந்து நின்றவள்,

“என்ன உண்மை எனக்கு தெரியக்கூடாது. எதை என்கிட்டே மறைக்க முயற்சி பண்றீங்க?” அவளின் முகம் சிவு சிவு என்று இருந்தது.

“உன்கிட்ட யாரும் எதையும் மறைக்கல.. முதல்ல இங்க இருந்து உன் வீட்டுக்கு போ..” என்றவனால் மேற்கொண்டு பேசவே முடியவில்லை.

“டேப்லெட் எடுத்துக்கிட்டியா இல்லையாடா” ஆதங்கத்துடன் கேட்ட கேசவ் வேகமாய் ஓடிப்போய் ஆதி போடும் டேப்லேட்டை எடுத்துக் கொண்டு வந்து அவனுக்கு புகட்டி விட்டு நெஞ்சை நீவி விட்டான்.

“இவருக்கு என்ன தான் அண்ணா பிரச்சனை. எதுக்கு உண்மை தெரியக் கூடாதுன்னு சொல்றாரு.. எனக்கு மண்டையே வெடிக்கிற மாதிரி இருக்கு. என்ன நடந்ததுன்னு எல்லா உண்மையையும் சொல்லுங்க” என்று சொன்னவளை கேட்டு முறைத்த ஆதி,

“உன்னை உன் வீட்டுக்கு கிளம்ப சொன்னேன்” என்றான்.

“அண்ணா நீ சொல்லு.. இங்க என்ன நடக்குது.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னியே ஆனா என் கழுத்துல தாலி இல்ல.. என் கணவன் யாருன்னும் சொல்லல. முதல்ல நான் கேக்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க” என்று தீயாய் நின்று இருந்த பெண்ணவளை கண்டு கோவம் கொண்டவன்,

“உனக்கு கல்யாணமும் ஆகல.. .... ஆகல. வாயை மூடிக்கிட்டு முதல்ல உங்க வீட்டுக்கு போடி” ஆத்திரத்தில் கத்தினான்.

“நீங்க என்ன சொல்றது.. நான் உங்கக்கிட்ட ஒன்னும் கேட்கல.. கேசவ் அண்ணா நீ சொல்லு. என் வாழ்க்கையில என்ன தான் நடந்துச்சு” என்றவளை கடுப்புடன் பார்த்த ஆதி தன் மூச்சு திணறலை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போய் வேறு ஒரு அறையில் அவளை அடைத்து கதவை வெளிப்பக்கமாக தாழிட்டவன், அடங்காத ஆத்திரத்துடன் கேசவனிடம் வந்து நின்றான்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top