“யாரும்மா நீங்க? இங்க வேலை எதுவும் இல்லை. நீங்க முகவரி மாத்தி வந்து இருக்கீங்க” என்று குமுதா வந்த பெண்களை திருப்பி அனுப்ப,
அந்த நேரம் வீட்டுக்குள் வந்த விதுல் பெரிய பெரிய பைகளை கொண்டு வந்து உள்ளே வந்து வைத்து விட்டு,
“அக்கா தான் உங்களுக்கு சிரமம் இல்லாம இவங்களை வேலைக்கு வைத்து இருக்கா...” என்றவன்,
“நீங்க கேட்ட பொருட்கள் எல்லாம் இதுல இருக்கு. இன்னைக்கே பலகாரத்தை போட ஆரம்பிங்க” என்று அவர்கள் லிஸ்ட் போட்டு கொடுத்ததை கொடுத்து விட்டு,
“அடுப்பு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடும்” என்று வாடகைக்கு பெரிய அடுப்பை எடுத்துக் கொண்டு வைகுந்தனும் அவரோடு இன்னும் இரண்டு ஆண்களும் உள்ளே நுழைந்தார்கள்.
“யாருங்க இவங்க” என்று அவரிடம் ரகசியமாக கேட்டார் குமுதா.
“ஆதினி தான் விழா முடியும் வரை எனக்கு உதவிக்காக பணி அமர்த்தி இருக்கா” என்று பெருமையாக சொல்ல குமுதாவுக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. வைகுந்தனுக்கும் குற்ற உணர்வு இருக்கிறது தான். ஆனால் இந்த நேரம் வெளியே காட்ட முடியாதே... நெஞ்சை தடவி கொண்டு தலைக்கு மேல் இருந்த வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்.
பெரியவர்கள் இருவருக்கும் எந்த வேலையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள் வேலைக்கு வந்த நான்கு பேரும். இருக்கையில் அமர்ந்து அவர்களுக்கு வேலை சொல்வது மட்டும் தான் இவர்களுக்கு வேலையாக இருந்தது.
போதாதற்கு விதுல் வேறு இருக்க சுமையாக தெரிந்த விழா இப்பொழுது இலகுவாக தெரிந்து.
“புடவை எடுக்கணும் வரியா பாப்பா” என்று குமுதா சங்கடமாய் கேட்டார் ஆதினியிடம். போனில் தான். அடுத்த கொஞ்ச நேரத்தில் கனிகா வந்தாள் வீட்டுக்குள்.
“வாம்மா போய் புடவை எடுத்துட்டு வந்துடலாம்” என்று சொல்ல ஆதினி இன்னும் மனம் இறங்கவில்லை என்று புரிந்துப் போனது.
“ஆதினி உன்கிட்ட பேசினாளா” என்று நப்பாசையுடன் கேட்டார். எங்கக்கிட்ட தான் பேசல. ஒருவேளை கனிகாவிடம் பேசி இருப்பாளோ என்று.
“இல்லம்மா விதுல் தான் போன் பண்ணி வர சொன்னான்” என்று இவள் சொல்ல, பெருமூச்சு விட்டு வலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்துக் கொண்டார்.
கடைக்கு போய் மூவரும் இறங்க, அங்கே சஞ்சு அவளின் கணவனோடு வந்து இருந்தாள். கனிகா பெருவளத்தானுக்கு போன் போட அவனும் வந்தான். அவனது கடமையில் இருந்து எள்ளின் நுனியளவும் விலகாமல் இருந்தான்.
“வாங்க சகலை” என்று பிரபு பெருவளத்தானை கட்டிக் கொள்ள இவனும் அவனை கட்டிக் கொண்டான்.
“வாங்க மச்சான்” என்று விதுலையும் இருவரும் வரவேற்க புன்னகையை கொடுத்தான் அவன்.
இரு சகோதரிகளும் குசுகுசுவென்று பேசி கொள்ள குமுதாவுக்கு கண்களின் ஓரம் நீர் கசிந்தது. ஆதினியும் இவர்களோடு சேர்ந்து இருந்தால் பார்க்கவே எப்படி இருக்கும்.
ஒரு அம்மாவுக்கு அவரின் எல்லா பிள்ளைகளும் ஒத்துமையாய் இருப்பதை தான் விரும்புவார். இங்கு அதே போல குமுதாவும் விரும்பினார்.
எங்கே இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆதினியை தள்ளி வைத்து விடுவார்களோ என்று பயந்துப் போனார்.
அது அப்பட்டமாய் அவரின் முகத்தில் தெரிய விதுல், “ம்மா” என்று அவரின் கவனத்தை திருப்பினான்.
“இல்லடா என் குட்டி பிள்ளை மட்டும் தனித்து நின்னுடுமொன்னு பயமா இருக்கு” என்று சொன்னவரை தோளோடு அனைத்துக் கொண்டவன்,
“சில விசயங்கள் எல்லாம் தானா உருவாகணும் ம்மா. போர்ஸ் பண்ணி எல்லாம் வரவைக்க முடியாது. விடு நீ எதையும் போட்டு உலப்பிக்கமா வந்த வேலையை பாரு” என்று சொன்னான்.
அதன் பிறகு நேரம் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. கனிகாவோடு சஞ்சுவும் ஒரு பட்டுப்புடவை எடுத்துக் கொள்ள பணம் கொஞ்சமே கொஞ்சம் இடித்தது.
அவளை தடுக்கவும் முடியவில்லை. அவளே நாகரீகம் கருதி தவிர்ப்பாள் என்று பார்த்தார்கள் விதுலும் குமுதாவும். ஆனால் அவளிடம் சொல்லியும் கேட்காமல் புடவையை பில்லுக்கு அனுப்ப தவித்துப் போனார்கள்.
அந்த நேரம் ஆதினியிடம் இருந்து குமுதாவின் கணக்குக்கு ஒரு தொகையை போட்டு இருந்தாள். கேட்காமலே தங்களின் தவிப்பை உணர்ந்து அவள் போட்டு விட்டதில் இன்னும் குமுதா நெகிழ்ந்துப் போனார்.
அதை பற்றி தன் கணவனிடம் சொல்லி சொல்லி பெருமை பட்டார்.
“அவக்கிட்ட அத்தனை முறை சொல்றேன். கொஞ்சம் கூட காதுலயே வாங்கிக்கலங்க ங்குறேன். அப்போ என்ன செய்யிறதுன்னு தெரியல. நம்ம முதல் மாப்பிள்ளை கிட்ட தான் கேட்கலாம்னு பார்த்தேன். வேணான்னு பெருசா அவர் குடுத்த பணத்தை அவர்கிட்டயே குடுத்துட்டு எப்படி வாங்குறதுன்னு தவித்துக்கிட்டு இருந்தேன். அப்போ கடவுளா ஆதினி பணத்தை போட்டு விட்டா பாருங்க. பெத்தா இவளை மாதிரி பெத்துக்கனும்னு நினைச்சேங்க” என்று சொல்லியவரை ஏளனமாக பார்த்த விதுல்,
“கொஞ்ச நாளுக்கு முன்னாடி உன்னை ஏன் பெத்தேன்னு கேட்டு அவளை அடிச்சீங்க. இப்போ பெத்தா அவளை மாதிரி பிள்ளை பெத்துக்கனுமாக்கும். படத்துல சொன்ன மாதிரி காலம் ரொம்ப வேகமா சுத்துது போல. எதை வேணான்னு சொல்லி தூக்கி எரிஞ்சிங்களோ இப்போ அதை தலையில வச்சி கொண்டாடுறீங்க” என்றவன் எழுந்து போய் விட்டான். இருவருக்கும் இதயம் துடிதுடித்து அடங்கிப் போனது. தலையை நிமிர முடியவில்லை.
விடிந்தால் வளைகாப்பு விழா... எல்லோருக்கும் ஆதினி விழாவுக்கு வருவாளா என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது. அப்படி அவள் வந்தால் எப்படி அவளை அவமானப்படுத்தலாம் என்று திட்டம் போட்டு இருந்தாள் சஞ்சு.
அடுத்த நாள் விடிந்தது. அனைவரும் விழாவுக்கு ஒன்று கூடி இருந்தார்கள். ஆதினி மட்டும் வரவில்லை. பெற்றவர்களுக்கு மட்டும் வேதனையாய் இருந்தது.
பெருவளத்தானுக்கு அந்த விழாவுக்கு போகவே மனமில்லை. ஆனால் போய் ஆக வேண்டுமே என்று நெருப்பில் நிற்பது போல நின்றுவிட்டு வந்திடலாம் என்று முடிவு செய்து கிளம்பினான்.
சஞ்சுவின் வீட்டு ஆட்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். விசாகன் பக்கத்து ஆட்கள் சபையில் தட்டு வைக்க, அவர்களோடு வந்து சஞ்சு வீட்டு ஆட்களும் தட்டு வைக்க எல்லோரும் திகைத்துப் போனார்கள்.
“நீங்க எதுக்குங்க?” என்று அனைவரும் அவர்களை அதிர்ந்துப் போய் பார்க்க,
வேதா அனைவருக்கும் முன்பாக வந்து சபையை வணங்கி, “கனிகா சுமந்துக்கிட்டு இருக்கிறது என் பெரிய அண்ணனோட கருவை. அதனால நாங்க தட்டு வைப்பது தான் முறை” என்று ஒரு குண்டை தூக்கிப் போட பெருவளத்தானுக்கு நெஞ்சு உடைந்துப் போனது. அடிபட்ட பார்வையை கனிகாவை பார்த்து வீசினான்.
கனிகாவுக்குமே இது அதிர்ச்சி தான். இங்க என்ன நடக்குது என்று அவள் திகைத்துப் பார்க்க,
“சாரி கனிகா நான் எவ்வளவோ சொல்லியும் அப்பாவும் அம்மாவும் என் பேச்சை கேட்கல.. அவங்களுக்கு அவங்களோட முதல் பேரக் குழந்தையை சீமந்தம் செய்து பார்க்கணும் ஆசை. அது தான் இப்படி” என்று வேதா சொல்ல முற்றிலும் உடைந்து சிதறினான் பெருவளத்தான்.
யாரோ ஒருவருடைய குழந்தை என்று எண்ணி இருந்தவன், இன்று அந்த குழந்தைக்கு உரிய தகப்பன் தங்களின் கண் முன்னாடி இருக்கவும் இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.
கனிகாவிடம் அவனது உரிமை கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து போவதை உணர்ந்தவன் முற்றிலுமாக நொந்துப் போனான். ஆனால் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் இரு கரத்தையும் நெஞ்சோடு கட்டிக் கொண்டு அழுத்தமாக நின்றுக் கொண்டான்.
அப்ப வேதா ஓட முதல் அண்ணனுக்கு கல்யாணம் ஆகலையா?????
இப்ப சஞ்சு கல்யாணம் பண்ணி இருக்கறது யாரை???? ரெண்டாவது அண்ணனையா என்ன???
இந்த குரங்கு சஞ்சுக்கு ஏன் இந்த கெட்ட எண்ணம்😏😏😏😏





